மாநில வரலாறு
தனித் தெலங்கானாவுக்கான கோரிக்கைகள் சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன.
1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் உருவாக்கப்பட்டது. தெலங்கானாவை ஆந்திரத்துடன் சேர்ப்பதில் தங்களுக்கு இருந்த ஆட்சேபத்தைத் தெலங்கானா பகுதி மக்கள் 1955-ல் மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடம் முன்வைத்தனர். அது புறந்தள்ளப்பட்டது. 1969-ல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தனித் தெலங்கானா போராட்டத்தைத் தொடங்கினர். அது மக்கள் போராட்டமாக மாறியது. 2014-ல் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வடமேற்கு ஆந்திரத்தின் 10 மாவட்டங்களை இணைத்து, 2014 ஜூன் 2-ல் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
புவியியல் அமைப்பு
இந்தியாவின் மத்திய தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் தெலங்கானா, நாட்டின் 12-வது பெரிய மாநிலம். பரப்பளவு 1.12 லட்சம் சதுர கிமீ. தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ. இந்தியாவின் பரப்பளவில் தெலங்கானா 3.40%. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 312 (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). மக்கள்தொகை 3.50 கோடி. இந்துக்கள் 85.09%. முன்னேறிய சாதியினர் பட்டியலில் பிராமணர்கள், ரெட்டிக்கள், கம்மா சமூகத்தினர் வருகிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 112 சமூகத்தினர் இருக்கிறார்கள். பட்டியலின சமூகத்தினர் 16%, பழங்குடியினர் 9%. முஸ்லிம்கள் 12.7%, கிறிஸ்தவர்கள் 1.3%. பிற சமூகத்தினர் 0.9%.
சமூகங்கள்
தெலங்கானா அரசியலில் ரெட்டி சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகம். வெலமா சமூகத்தினரும் அரசியல் முக்கியத்துவம் கொண்டவர்கள். ஆந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது தெலங்கானா அரசியலில் தொடக்கத்திலிருந்தே பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 1950-களிலிருந்து அந்த நிலைமை மாறியது. 1972-க்குப் பின்னர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. சந்திரபாபு நாயுடு வசம் தெலுங்கு தேசம் கட்சி வந்த பின்னர், ரெட்டிக்கள் அக்கட்சிக்கு எதிராகவும், கம்மாக்கள் காங்கிரஸுக்கு எதிராகவும் திரும்பினர் என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆறுகள்
கோதாவரியும் கிருஷ்ணாவும் பிரதான ஆறுகள். ஆந்திரத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் ஓடுகிறது கிருஷ்ணா நதி. தெலங்கானாவில் கோதாவரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி 79%, கிருஷ்ணா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதி 69%. பீமா, மஞ்சிரா, முசி, திண்டி, கின்னரசானி போன்ற சிற்றாறுகள் இங்கு உண்டு. சுமார் 40 ஆயிரம் குளங்களைக் கொண்ட மாநிலம்.
காடுகள்
காடுகளின் பரப்பளவு 29,242 சதுர கிமீ. இது மாநிலப் பரப்பளவில் 25.46%. காப்புக் காடுகள் 21,024 சதுர கிமீ, பாதுகாக்கப்பட்ட காடுகள் 7,468 சதுர கிமீ. வகைப்படுத்தப்படாத காடுகள் 750 சதுர கிமீ. கோதாவரி ஆற்றின் கரையில் நிஜாமாபாத் தொடங்கி ஆதிலாபாத், கரீம் நகர், வாரங்கல், கம்மம் மாவட்டம் வரை தேக்கு மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மூன்று தேசியப் பூங்காக்கள், 11 சரணாலயங்கள் உள்ளன.
நீராதாரம்
கோதாவரியிலிருந்து 912 டிஎம்சி நீரையும், கிருஷ்ணாவிலிருந்து 298 டிஎம்சி நீரையும் பெறுகிறது தெலங்கானா. கம்மம், நளகொண்டா மாவட்டங்கள் நாகார்ஜுனா – சாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கின்றன. பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 29, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் 39, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 45,531. சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைப் புனரமைக்கும் காகதியா திட்டத்தின் மூலம் 46,531 குளங்கள், ஏரிகள் புனரமைக்கப்பட்டுவருகின்றன. சந்திரசேகர் ராவ் அரசு தொடங்கிய முதல் திட்டம் இதுதான்.
பொருளாதாரம்
தெலங்கானாவைச் சேர்ந்த ஹைதராபாத் நகரம் ‘சைபராபாத்’ என்று அழைக்கப்படும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பில் புகழ்பெற்றது. உயிரித் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது. 2013-14-ல் 6.8% ஆக இருந்த ஜிடிபி, 2017-18-ல் 10.4% ஆக உயர்ந்தது. இதில் சேவைத் துறையின் மதிப்பு 65%. விவசாய உற்பத்தியின் மதிப்பு 18%. தொழில் துறை 16%. 2018-19-ல் ஜிடிபி 14.1% ஆக உயர்ந்தது. 2017-18-ல் தனிநபர் வருமானம் ரூ.1,75,534. அந்த ஆண்டின் தேசிய சராசரியைவிட (ரூ.1,12,764) இது அதிகம்.
கனிம வளம்
ஆதிலாபாத், கரீம்நகர், கம்மம் மாவட்டங்களில் நிலக்கரி, சுண்ணாம்புக் கல், மாங்கனீசு போன்றவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மேடக், நளகொண்டாவில் கிரானைட், வெண் களிமண், மைக்கா, பெல்ட்ஸ்பார் அதிகம் கிடைக்கின்றன. நிலக்கரி அதிகம் கிடைக்கும் மாநிலம். மத்திய அரசுடன் இணைந்து தெலங்கானா அரசு நடத்தும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனம், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% பங்கு வகிக்கிறது.
அரசியல் சூழல்
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளில் இருந்தவரும், ஆந்திரத்தின் முன்னாள் அமைச்சருமான சந்திரசேகர் ராவ், 2001-ல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியைத் தொடங்கி தனித் தெலங்கானாவுக்காகப் போராடியவர். 2014-ல் தெலங்கானா உதயமானபோது முதல்வர் பதவியில் அமர்ந்தவர். ஆந்திரத்துடன் பல்வேறு விஷயங்களில் முரண்பாடு, மோதல்களுக்கு மத்தியில் மாநில வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார். 2018 தேர்தலிலும் அபார வெற்றி. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இறங்கினார். எனினும், பல்வேறு அரசியல் போக்குகளால் அது சாத்தியமாகவில்லை. பிரச்சாரங்களில் இரு கட்சிகளையும் வெளுத்து வாங்கினார். பாஜக வேர் பதிக்க தன்னாலான முயற்சிகளை எடுக்கிறது.
முக்கியப் பிரச்சினைகள்
சந்திரசேகர் ராவ் அரசு பல நலத் திட்டங்களைக் கொண்டுவந்திருந்தாலும் அவற்றில் பல திட்டங்கள், மக்களிடம் முறையாகச் சென்றுசேரவில்லை; எதிர்பார்த்த பலனளிக்கவில்லை எனும் அதிருப்தி நிலவுகிறது. தனித் தெலங்கானாவுக்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மை பிரச்சினையிலும் அரசு குறிப்பிடும்படியான முன்னேற்றம் காணவில்லை. கம்மம், மேடக், நிஜாமாபாத் மாவட்டங்களில் வசிக்கும் ஆந்திரர்கள் பல்வேறு விஷயங்களில் அரசு மீது அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago