ஆட்டத் திருப்பர்கள்: எங்கே போகிறது ஆம் ஆத்மி?

By செல்வ புவியரசன்

தேசிய அரசியலில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கு குறைந்து பாஜக தனிப்பெரும் கட்சியாகத் தலையெடுத்த சமயத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வருகை ஒரு புத்தெழுச்சியாகப் பார்க்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் பெருவெற்றிபெற்றது ஆஆக. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் ஆஆகவும் இணைந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. காங்கிரஸ்-ஆஆக கூட்டணிப் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்ததற்குப் பரஸ்பரம் இரண்டு கட்சிகளுமே ஒன்றையொன்று குற்றம்சாட்டிக்கொள்கின்றன. எனினும், ஆஆக தன் மீது கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான அசட்டுத் தன்னம்பிக்கையும் அதற்கு ஒரு காரணம்.

டெல்லியில் மட்டுமே ஆஆகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வந்தது காங்கிரஸ். டெல்லியில் மட்டுமின்றி பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் கோவாவிலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது ஆஆக. கடைசியில், இரண்டு கட்சிகளும் தனித்தனியாகவே மே-12 அன்று நடக்கவிருக்கும் டெல்லி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கப்போகின்றன.

கூட்டணிக்குத் தேவை என்ன?

2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. 2015 சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை ஆஆகவும் 3 இடங்களை பாஜகவும் கைப்பற்றின. காங்கிரஸுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. டெல்லியில் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்துவிட்டது. பாஜகவை காங்கிரஸால் தனித்து வெல்ல முடியாது. தொங்கு சட்டமன்றம் முடிவுக்கு வந்ததையடுத்து நடந்த தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை ஆஆகவும் மக்களவைத் தேர்தலில் எதிர்பார்க்க முடியாது. இரண்டு கட்சிகளும் இணைந்து நின்றால் எளிதாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆஆக 4 தொகுதிகளிலும் பங்கிட்டுக்கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஹரியாணாவில் உள்ள பத்து தொகுதிகளையும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. ஹரியாணாவில் காங்கிரஸுக்கு 7 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 2 இடங்களும், ஆஆகவுக்கு 1 இடம் என்றும் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தது காங்கிரஸ். ஆனால், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவரான துஷ்யந்த் சௌதாலா, ஆஆகவுடன் மட்டும்தான் நாங்கள் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறோம், காங்கிரஸுடன் அல்ல என்று அறிக்கை விடுத்தார். துணைப் பிரதமராக இருந்த தனது பாட்டனார் தேவிலால் 1971-ல் காங்கிரஸிலிருந்து விலகினார். அப்போதிருந்து ஹரியாணாவில் காங்கிரஸை எதிர்ப்பதுதான் எங்கள் முதன்மையான அரசியல் கொள்கை என்று அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூட்டணியிலிருந்து விலகி நின்றதற்கு உண்மையான காரணம், மேலும் கூடுதலாக 2 இடங்களைக் கேட்டார் என்பதுதான்.

டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே ஆஆக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. வேட்புமனு தாக்கலையும் செய்துவிட்டது. ஆனாலும், ஆஆகவின் டெல்லி தலைவர் கோபால் ராய், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துத் தங்களது நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டதாக காங்கிரஸைக் குற்றம்சாட்டியிருக்கிறார். பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

டெல்லியில் ஒரு இடம்கூட இல்லாத காங்கிரஸ், எங்களோடு பாதி இடங்களை மட்டும்தான் பகிர்ந்துகொண்டிருக்கிறது. இதே தர்க்கத்தை பஞ்சாப் ஹரியாணாவுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டும். பஞ்சாபில் எங்களுக்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோசிடியா. உண்மையிலேயே அவர் சொல்வது சரிதானா? ஆம் ஆத்மிக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா?

பஞ்சாபில் ஆஆக

ஆஆகவை ஆரம்பித்த குறுகிய காலகட்டத்தில் டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவரது அடுத்த இலக்கு, பஞ்சாப் என்று கூறப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியது ஆஆக. காங்கிரஸ் - அகாலி தளம் கூட்டணியின் செல்வாக்கு மிக்க பஞ்சாபில் 24% வாக்குகளையும் பெற்றது. ஆனால், அந்த வெற்றி 2017-ல் நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தொடரவில்லை. 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆஆக 20 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

டெல்லியிலிருந்தே கட்சியை இயக்கலாம் எனும் ஆஆகவின் உத்தியே பஞ்சாபில் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையிலும் பஞ்சாப் ஆஆக தலைவர் சூச்சா சிங் சோட்டேபூரைப் பதவியிலிருந்து நீக்கியது ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2018 ஆகஸ்ட்டில் ஆஆகவின் 20 சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் சுக்பால் சிங் கைராவின் தலைமையில் பிரிந்துபோய்விட்டார்கள். பஞ்சாப் மாநிலக் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதான் அவர்கள் ஆஆக மீது வைத்த குற்றச்சாட்டு. பஞ்சாப் ஏக்தா கட்சியைத் தொடங்கியிருக்கும் கைரா, ஆஆக வேட்பாளர்களை எதிர்த்துத் தனது கட்சி வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை இப்படியென்றால் ஆஆகவின் நான்கு மக்களவை உறுப்பினர்களில் இரண்டு பேர் கட்சிக்கு எதிராகவே போட்டியிடப்போகிறார்கள். அதில் ஒருவர் பாஜகவிலேயே சேர்ந்துவிட்டார். இந்நிலையில், மே 19 அன்று பஞ்சாபில் இறுதிகட்டமாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனக்கு இருக்கும் நான்கு இடங்களை ஆஆக தக்கவைத்துக்கொள்ளுமா என்பதே சந்தேகம்தான்.

பஞ்சாபில் இப்படியொரு அரசியல் நெருக்கடியைச் சந்தித்திருக்கும் நிலையிலும் டெல்லியில் ஆட்சியில் இருப்பதைக் காரணம்காட்டி மற்ற மாநிலங்களிலும் தனக்கு சம மரியாதை வேண்டும் என்கிறது ஆம் ஆத்மி. டெல்லி சட்டமன்றத்திலோ டெல்லி மக்களவைத் தொகுதிகளிலோ ஓரிடம்கூட இல்லையென்றாலும் காங்கிரஸின் நிலையைப் பூஜ்ஜியம் என்று முடிவுகட்டிவிடவும் முடியாது. பாஜக எதிர்ப்புதான் எங்கள் கொள்கை என்று சொல்லும் ஆஆக, காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடுகளில் விட்டுக்கொடுத்து வெற்றிபெறுவதற்குத் தயாராக இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்