கூட்டணி விஷயத்தில் குழம்பி நிற்கும் காங்கிரஸ்

By வெ.சந்திரமோகன்

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணிக்குச் சாத்தியமே இல்லை என்று முடிவானவுடன், ஆஆக தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட் இது: “மொத்த தேசமும் மோடி அமித் ஷா இணையை வீழ்த்த விரும்பும்போது, பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து அக்கட்சிக்கு உதவுகிறது காங்கிரஸ். பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறது.” உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடுவது அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் புதிதல்ல என்றாலும், கூட்டணி அமைப்பதில் காங்கிரஸின் அணுகுமுறையைப் பார்க்கும் யாரும், இவ்விஷயத்தில் அக்கட்சி காட்டும் மெத்தனத்தை விமர்சிக்கவே செய்வார்கள். இத்தனைக்கும் இது காங்கிரஸுக்கு வாழ்வா, சாவா போராட்டம்.

பாஜக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் அனைத்துக் கட்சியினர் ஒன்றுகூடிய நிகழ்வுகள், ஒரு மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகிறது என்ற தோற்றத்தை உருவாக்கின. காங்கிரஸ் ஆஆக கூட்டணி அமையும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியே நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், கூட்டணியை இறுதிசெய்வதில் தடுமாறி நிற்கிறது காங்கிரஸ்.

“மோடி எனும் ஒற்றை மனிதரை வீழ்த்த இத்தனைக் கட்சிகள் ஒன்று சேர்கின்றன” என்று சொல்லிக்கொண்டே 29 கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணியை அமைத்துவிட்டார் மோடி. இந்த முறை ஆறு கட்சிகளைக் கூட்டணியில் புதிதாக சேர்த்திருக்கிறது பாஜக. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஐந்தே இடங்கள், மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 23-ஐ சிவசேனைக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறது. இத்தனைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாஜகவையும் மோடியையும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்.

வட கிழக்கிலும் இதே அணுகுமுறையைக் கையாண்டது பாஜக. சிக்கிமின் எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவு இருப்பதைக் கருத்தில் கொண்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. “எங்களுக்கு மோடி பெரும்பலம் என்றாலும், நாங்கள் எந்த வாய்ப்பையும் தவறவிட தயாராக இல்லை” என்பதில் அமித் ஷா முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை உறுதியாக இருக்கிறார்கள்.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19.6% வாக்குகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 22.2% வாக்குகளும் இருக்கின்றன. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 7.5% வாக்குகளையே பெற்ற காங்கிரஸ், இன்றைக்கு எந்த நம்பிக்கையில் அந்தக் கட்சிகளைக் கைவிட துணிகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். பிரியங்காவின் வருகை கைகொடுக்கும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்பலாம். ஆனால், தேர்தல் கணக்குகள், கள நிலவரங்கள் என்று பல்வேறு காரணிகள்தானே முடிவுகளைத் தீர்மானிக்கும்!

பாஜகவோ கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்புகளைத் தீர்ப்பதில் மிகுந்த கவனம் காட்டியது. அதிருப்தியில் இருந்த அப்னா தளம், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளைச் சரிகட்டி கூட்டணியிலிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொண்டது. பல்வேறு வாரியங்களில் இரு கட்சியினருக்கும் பதவிகளை அள்ளித்தந்தது. குறிப்பாக, உத்தர பிரதேச அரசியலைத் தீர்மானிக்கும் குர்மி சமூகத்தினரின் ஆதரவு பெற்ற அப்னா தளத்தை எளிதாக விட்டுத்தர பாஜக தயாராக இல்லை.

ஆனால், பகுஜன் சமாஜ் சமாஜ்வாதி கூட்டணியில் சேரும் விஷயத்தில் காங்கிரஸ் அலட்சியமாக நடந்துகொண்டது. உண்மையில், அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்று வெளியில் பேசப்பட்டாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டுதானிருந்தன. காங்கிரஸ் அதிகத் தொகுதிகள் கேட்டதாகவே சொல்லப்படுகிறது. இதை ஏற்க மாயாவதியும் அகிலேஷ் யாதவும் விரும்பவில்லை. அமேதியையும் ராய் பரேலியையும் காங்கிரஸுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்று இருவரும் சொல்லிக்கொண்டிருக்க, மறுபுறம் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டது. மேலும்,

நான்கு முறை சமாஜ்வாதி சார்பாக நின்று வென்ற சலீம் இக்பால் ஷெர்வானியை பதாயூன் தொகுதியில் நிறுத்துகிறது. இதெல்லாம் சமாஜ்வாதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதோ, காங்கிரஸுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என்று மாயாவதி கூறிவிட்டார்.

தமிழகத்தில்தான் கூட்டணியை முதலில் இறுதிசெய்தது காங்கிரஸ். 10 தொகுதிகள் கிடைத்தாலும் தொகுதிப் பங்கீட்டிலும்கூட இன்னும் குழப்பத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. டெல்லியைப் பொறுத்தவரை ஆஆகவை நம்ப முடியாது என்று கைவிரித்துவிட்டனர் காங்கிரஸ் தலைவர்கள். இத்தனைக்கும் பாதிக்குப் பாதி தொகுதிகளை விட்டுத்தர ஆஆக தயாராக இருந்தது.

வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்னமும் கூட்டணி முடிவாகவில்லை. இப்போதைக்கு ஆறு தொகுதிகளில் பரஸ்பரம் போட்டியிட்டுக்கொள்வதில்லை என்று இரு கட்சிகளும் முடிவெடுத்திருக்கின்றன. மற்ற 36 தொகுதிகள் குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது எனினும், இருக்கும் ஆறு தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் தொடக்கத்திலிருந்தே குழப்பம்தான்.

திரிபுராவில் சிபிஎம்முடன் கூட்டணி இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் உறுதியாகத் தெரிவித்துவிட்டது. கேரளத்தைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை. மும்முனைப் போட்டிதான். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி இறுதியில் அதிலிருந்து வெளியேறிவிட்டது. ஒவைஸியின் மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் கட்சியுடன் வஞ்சித் பகுஜன் அகாதி ஏற்கெனவே கூட்டணியில் இருந்துவந்த நிலையில், அந்த இரு கட்சிகளின் ஆதரவையும் காங்கிரஸ் இழக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும்பட்சத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடியும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் இந்தி ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் கூறின. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி உள்ளிட்ட காரணிகள் பின்னணியில் இருந்தன. இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு பாஜகவுக்குப் புதிய பலம் வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துகொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. இரண்டே தொகுதிகளைக் கொண்ட திரிபுரா முதல் 80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசம் வரை கூட்டணி விஷயத்தில் இருக்கும் குழப்பத்தைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை அக்கட்சி எடுப்பதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர், டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், “பாஜகவையும் ஆஆகவையும் விட்டுவைக்காதீர்கள். காங்கிரஸ்தான் டெல்லிக்கும் இந்தியாவுக்கும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். நம்பிக்கை மட்டும் போதுமா என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்