பிரியங்காவின் வருகை கை கொடுக்குமா?  

By ஜூரி

பிரம்மாஸ்திரம் – காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேச பகுதிக்கு பொதுச் செயலாளராக, ஜனவரி 23-ல் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தியை காங்கிரஸ்காரர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காங்கிரஸ் இல்லா இந்தியா என்று மேடைக்கு மேடை முழங்கிவரும் மோடி – அமித் ஷாவின் வியூகங்களை முறியடிக்க பிரியங்காதான் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நம்புபவர்களுக்கு அவரது வருகை உற்சாகத்தைத் தந்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், பிரியங்கா எனும் அஸ்திரம் உண்மையில் கைகொடுக்குமா?

மிகத் தாமதமாக நேரடி அரசியலுக்குள் நுழைந்திருந்தாலும், தாய் சோனியாவுக்காகவும் அண்ணன் ராகுலுக்காகவும் ராய் பரேலியிலும் அமேதியிலும் பிரச்சாரம் செய்த அனுபவம் கொண்டவர் பிரியங்கா. கட்சிப் பணிகள், சுற்றுப்பயணங்களில் ராகுலுக்கு உதவுவதைத் தொடர்ந்து செய்துவந்தார். இந்தத் தேர்தலிலும் பின்னணியிலிருந்து பணிபுரிவது, தேவைப்பட்டால் பிரச்சாரம் செய்வது என்று களமிறக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் பொறுப்பை அவருக்குக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் ராகுல். பிரியங்காவின் பொறுப்பில் உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 42 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இந்திரா நினைவு எனும் பலம்

1972-ல் பிறந்த பிரியங்கா, டெல்லியிலேயே பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர். உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பெளத்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர். ‘விபஸ்ஸனா’ தியான முறையைப் பயிற்சி செய்கிறவர். நடிகர் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சனிடம் இந்தி பயின்றதால், உத்தர பிரதேசத்தின் அயோத்தி பகுதி மக்களுடைய உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்களோடு பேசக்கூடியவர். மிக முக்கியமாக, இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் தோற்றம் அவரது மிகப் பெரிய பலம்.

பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசத்தைத் தொடக்கத்தில் பாஜக சற்றுப் பதற்றத்துடன்தான் பார்த்தது. அவரைப் பற்றித் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும்கூட சில பாஜக தலைவர்கள் முன்வைத்தனர். ஆனால், இது பிரியங்காவுக்கே சாதகமாகிவிடும் என்பதை பாஜக தலைமை விரைவில் உணர்ந்துகொண்டது. இன்றைக்கு, பிரியங்காவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்ப்பது என்றே முடிவுக்குவந்திருப்பதுபோலத் தெரிகிறது.

அரசியல் அனுபவம் இல்லாத பிரியங்காவைப் பற்றிப் பேசி அவருக்கு முக்கியத்துவம் ஏற்படுவதை பாஜக விரும்பவில்லை. ரஃபேல் பேர விவகாரம் தொடங்கி, பல்வேறு விஷயங்களில் பாஜகவுக்குத் தலைவலியாக இருக்கும் ராகுலை மட்டும் குறிவைத்தால் போதும் என்பதை அது வியூகம் ஆக்கிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதேசமயம், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதான நில மோசடி வழக்குகள், அமலாக்கத் துறை விசாரணைகள் என்று மறைமுக அஸ்திரங்களைக் கையில் எடுத்திருக்கிறது.

கவனிக்கப்படும் பேச்சும் எதிர்கொள்ளும் சவாலும்

அரசியல் களத்தில் ஓங்கிக் குரல் எழுப்பிப் பேசாமல், இயல்பான உடல் மொழியில் புன்னகை தவழும் முகத்துடன் தனிப்பட்ட வகையில் யாரையும் தாக்காமல் பேசும் பிரியங்காவை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எங்கே போயின என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் பிரியங்கா சாமானியர்களின் மொழியில் பேசுவது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

உத்தர பிரதேசத்தைப் பிடித்தால் நாடாளுமன்றத்தையே பிடித்துவிடலாம் என்பார்கள். எட்டு பிரதமர்களைத் தந்த மாநிலம் அது. ஒருகாலத்தில், காங்கிரஸுக்குப் பெரும் வெற்றிகள் தந்த மாநிலம். 1984 தேர்தலில் 51% வாக்குகளைப் பெற்று 83 தொகுதிகளில் (அப்போது உத்தர பிரதேசம் பிரிக்கப்படவில்லை) வென்ற காங்கிரஸ் அடுத்தடுத்த மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்தது. 1985 சட்டமன்றத் தேர்தலில் தோற்ற பின்னர், அம்மாநிலத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறது காங்கிரஸ்.

இன்றைய சூழலில், ஒருபக்கம் பாஜக கொடுக்கும் அழுத்தம், மறுபக்கம் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியால் உருவாகியிருக்கும் அழுத்தம். இந்தச் சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுவது என்பது காங்கிரஸுக்கு மிக முக்கியம். பிரியங்காவின் வருகையின் பின்னணி இதுதான்.

கணக்குகள் சொல்வது என்ன?

உத்தர பிரதேச வாக்காளர்களில் பிராமணர்கள் 13%, தலித்துகள் 22%, முஸ்லிம்கள் 9%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40% உள்ளனர். மேல் சாதியினரில் பிராமணர்கள், தாக்கூர்கள் உள்ளனர். முதல்வர் ஆதித்யநாத் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக பாஜகவைச் சேர்ந்த பிராமணர்கள் கருதுகின்றனர். எனவே முஸ்லிம்கள், குர்மிகள், ஜாதவ்கள் அல்லாத தலித்துகள், யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிராமணர்கள் ஆகியோரைத் தங்கள் வசம் திருப்ப பிரியங்காவைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயல்கிறது காங்கிரஸ்.

பகுஜன் சமாஜ்- சமாஜவாதி கூட்டணி தங்களுடைய வாக்கு வங்கியான பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், சிறுபான்மையோர் உதவியுடன் 2019 மக்களவைத் தேர்தலிலும், பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு காயை நகர்த்துகின்றன. காங்கிரஸை ஒற்றை இலக்க தொகுதிகளுக்குள் முடக்க முற்படும் அவற்றின் திட்டத்துக்கு ராகுல் பதிலடி தர விரும்புகிறார். காங்கிரஸை எப்போதும் ஆதரித்துவந்த முற்பட்ட வகுப்பினர், குறிப்பாக பிராமணர்கள், தாக்கூர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோரைத் தங்கள் பக்கம் திருப்ப அவர் திட்டமிடுகிறார்.

உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கட்சியினரின் வார்த்தைகளுக்கு பிரியங்கா காது கொடுக்கிறார். அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசுகிறார். அத்துடன், கள நிலவரம் குறித்து கட்சியினர் சொல்லும் விஷயங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

2007-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபோதும் இதே அணுகுமுறையைக் கையாண்டார். அண்ணனின் பாதையைத் தங்கை பின்பற்றுகிறார். கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பருடனும், மேற்கு உத்தர பிரதேசத்தின் 38 தொகுதிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஜ்யோதிராதித்யா சிந்தியாவுடனும் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்.

இப்போதைக்கு காங்கிரஸ் தனியாகவும் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் ஆகியவை தனியாகவும் இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு இவ்விரண்டு அணிகளும் கூட்டணி அல்லது தொகுதி உடன்பாடு செய்துகொண்டுவிடும் என்ற பேச்சும் அடிபடத்தான் செய்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால்,  பாஜகவுக்குப் பெரிய சவாலாகிவிடும்; அப்படி நடக்காவிட்டால், காங்கிரஸுக்கு உயிர்ப் போராட்டமாக மாறிவிடும். அந்தச் சுமை முழுமையும் பிரியங்காவின் தோள்களில் இறங்கும். இவ்வளவுக்கு இடையில்தான் பிரியங்கா களம் இறங்கியிருக்கிறார்; ஒருவகையில் இந்தத் தேர்தல் அவருடைய அரசியல் வாழ்வையும் சேர்த்து தீர்மானிக்கும் தேர்தலாகிவிட்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்