தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லையா?

By செல்வ புவியரசன்

தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், முடிவுகள் குறித்துப் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன. ‘பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளைத்தான் அதிமுக கொடுத்திருக்கிறது.

திமுகவோ காங்கிரஸுக்கு பத்து தொகுதிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறதே’ என்று பரவலாகப் பேச்சுகள் எழுந்தன. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதியானபிறகும்கூட அந்தக் கருத்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பாஜகவும் காங்கிரஸும் தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது விவாதத்துக்குரிய விஷயம்தான். அதைவிடவும் முக்கியமானது கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அக்கட்சிகள் பெற்றிருக்கும் இடங்கள் மிகவும் குறைவு என்பது.

மக்களவைக்கு நடந்த முதல் மூன்று தேர்தல்களிலும் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு நேரவில்லை. காங்கிரஸை எதிர்க்கும் கட்சிகளுக்கு இடையில்தான் கூட்டணி அவசியமாக இருந்தது. ஒருகட்டத்தில், செல்வாக்கு மிக்க ஒற்றை தேசியக் கட்சியாக இருந்த காங்கிரஸோடு முதலில் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டவர் திமுக தலைவர் கருணாநிதி.

1971 மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் இணைந்து சந்திக்க முடிவெடுத்த கருணாநிதி, இந்திரா காங்கிரஸுக்கு ஒதுக்கியது, (புதுச்சேரியையும் சேர்த்து) 10 இடங்கள் மட்டுமே. ராஜாஜி, காமராஜர் இருவருமே இந்திரா காந்திக்கு எதிராக இருந்த காலம் அது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகள் அளித்த கருணாநிதி, சட்டமன்றங்களில் போட்டியிடுவதற்கு காங்கிரஸுக்கு ஒரு தொகுதியைக்கூட ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய அதே நிலைதான் மீண்டும் திரும்பியிருக்கிறது!

எம்ஜிஆர் ஃபார்முலா

திமுகவை எதிர்த்து அதற்காக நெருக்கடி நிலையை ஆதரித்து காங்கிரஸுடன் கைகோத்துக் கொண்டார் எம்ஜிஆர். 1977 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸுக்கு 15 இடங்களை ஒதுக்கித்தந்தது. திமுக மீண்டும் காங்கிரஸ் பக்கம் நெருங்கியது.  திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது அந்தத் தேர்தலில் மட்டும்தான்.

மத்தியில் ஆளும் காங்கிரஸை பகைத்துக் கொண்டுவிடாமல் பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்வதிலேயே அதிமுக உறுதியாய் இருந்தது. பழனிசாமி ஆட்சியில் மட்டுமல்ல, எப்போதுமே இந்த அணுகுமுறையைத்தான் பின்பற்றிவந்திருக்கிறது அதிமுக.  தனது முயற்சியில் வெற்றியும் கண்டது.

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, எம்ஜிஆர் உடல்நலம் மோசமாகி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த சமயத்தில் நடந்த 1984 தேர்தலில் ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ அறிமுகமானது. காங்கிரஸுக்கு மக்களவைத் தேர்தலில் 66% தொகுதிகள், சட்டமன்றத்தில் 33% தொகுதிகள் என்பதுதான் அந்தச் சூத்திரம். 1991 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அதை விரும்பியோ விருப்பமின்றியோ அதிமுக தொடர வேண்டியிருந்தது.

1967 வரையில் தமிழகத்தில் ஆட்சியையும் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளையும் கையில் வைத்திருந்த காங்கிரஸ் மீண்டும் அந்த நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாமலும் இல்லை. 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவையும் அதிமுகவின் இரு பிரிவுகளையும்  எதிர்த்து நின்று வெற்றி

பெறுவதற்கான முயற்சிகளையும்கூட செய்துதான் பார்த்தது. தமிழகத்தில் இனி வேரூன்ற முடியாது என்ற நிலையில்தான் அதிமுகவின் எம்ஜிஆர் ஃபார்முலாவே போதும் என்று திருப்திப்பட்டுக்கொண்டது.

தேயத் தொடங்கிய தேசியக் கட்சிகள்

1991 மக்களவைத் தேர்தலில் அதிமுக 11 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட்டது. சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 66 இடங்களில் போட்டியிட்டது. மக்களவையில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வென்றது காங்கிரஸ். 1996-ல் மீண்டும் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொள்வதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கினார் ஜி.கருப்பையா மூப்பனார்.

தமாவுக்கு 20, தனக்கு 17 என்று தொகுதிகள் ஒதுக்கியது திமுக. இந்தத் தொகுதிப் பங்கீடு அடுத்துவந்த 1998 மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. காங்கிரஸிலிருந்து பிரிந்தது என்றாலும் மாநிலக் கட்சியாகத்தான் இயங்கியது தமாகா. 1999-ல் பாஜக கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தாலும் பாஜககக்கு ஒதுக்கிய இடங்கள் வெறும் 6 மட்டும்தான். 19 தொகுதிகளில் திமுகவே போட்டியிட்டது.

2004 தேர்தலில் காங்கிரஸுக்கு 10 இடங்களை ஒதுக்கித் தந்த திமுக 16 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. மற்ற தொகுதிகளைக் கூட்டணிக்கட்சிகளுடன் பகிர்ந்துகொண்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அதிமுக, அக்கட்சிக்கு ஆறு இடங்களை மட்டுமே ஒதுக்கியது. 2009 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட திமுக, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்கள் 15 மட்டும்தான்.

2014 மக்களவைத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்துத்தான் தேர்தலைச் சந்தித்தன. அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. உதிரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்ட பாஜக கூட்டணிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதிலும் பாமக ஒரு தொகுதியில் வென்றது. பாஜகவுக்குக் கிடைத்தது ஒரு தொகுதி மட்டுமே. இந்தியாவெங்கும் அடித்த மோடி அலை தமிழகத்தில் எடுபடவே இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் படிப்படியாகத் தனது பலத்தையும் செல்வாக்கையும் இழந்து இன்று திமுக கூட்டணியில் இடம்பெறும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று என்ற அளவுக்குச் சுருங்கி விட்டது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழகத்தில் தனக்கு ஒரு கணக்கு இருந்தால் போதும் என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.

திராவிடக் குரல்

கடந்த காலங்களில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்போதைய சூழலுக்கு ஏற்றபடி தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜகவும் கூட்டணிக்குப் பரிசீலிக்கத்தக்க தேசியக் கட்சியாக மாறியிருக்கிறது.

ஆனாலும், அதிமுகவைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளில் எம்ஜிஆர் ஃபார்முலா என்பது ஜெயலலிதா காலத்திலேயே கைவிடப்பட்டுவிட்டது. அதிமுகவும் இப்போது பின்பற்றுவது கருணாநிதி ஃபார்முலாவைத்தான்.

“காங்கிரஸ் பல மாநிலங்களில் மாநிலக் கட்சியாக மாறிவிட்டது. பாஜக தேசிய கட்சி என்று சொன்னாலும் அவர்களும் சில மாநிலங்களில் வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. தேசியக் கட்சிகள் எங்களை மீறி வெற்றிபெற முடியாது” என்று கூறியிருக்கிறார் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை. அவருடைய குரல் அதிமுகவின் குரல் மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளின் குரலும்தான்!

- தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்