கமலின் அரசியல்தான் என்ன?

By வெ.சந்திரமோகன்

2014 நவம்பரில் தனது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள் இவை: “தயவுசெய்து அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் என்று அறிவுரை கூறும் அளவுக்கு எனது ரசிகர்கள் தெளிவுபெற்றுவிட்டார்கள்!” அதற்கு முன்னர், “நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது கடும் கோபம் கொள்வார்கள்” என்றெல்லாம் பேசியவர்தான் கமல். ஆனால், இன்றைக்கு அன்றாடம் செய்திகளில் அடிபடும் அரசியல் தலைவராகிவிட்டார்.

அரசியல் பிரவேசம் தொடர்பாக ஒருவர் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக்கொள்வது விமர்சனத்துக்குரியதல்ல. ஆனால், அரசியலில் நேரடியாகப் பங்கேற்பதிலிருந்து எப்போதுமே தன்னைத் தொலைவில் வைத்துக்கொண்டிருந்த ஒருவர், கட்சி தொடங்கி, தேர்தல் கூட்டணி வரை பேசிக்கொண்டிருக்கிறார், காட்டிக்கொண்டிருக்கிறார் என்றால், இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கு எத்தனை காத்திரமான அடித்தளம் அமைத்திட வேண்டும்? கமலிடமும் அவரது இயக்கத்திடமும் அப்படியொரு அடித்தளம் இருக்கிறதா? இவர்களுடைய அரசியலின் அசல் நிறம்தான் என்ன?

திரை அரசியல்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த பூடக அறிவிப்புகள், பின்வாங்கல்கள் என்று ரஜினி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த காலங்களில் கமல் தனது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். அதேசமயம், தனது படங்களில் மேலோட்டமாகவேனும் அரசியல் பேசுவதையும் தொடர்ந்தார். தொடக்க காலத்திலிருந்து தனது படங்களில் தன்னை ஒரு முற்போக்குவாதியாக முன்வைத்துவந்தவர் கமல்.

அரசியல்வாதிகளை விமர்சிக்கும் பாத்திரங்களை அவர் எப்போதுமே விட்டுவைத்தவர் இல்லை. ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சத்யா’, ‘சாணக்கியன்’ (மலையாளம்), ‘இந்தியன்’ என்று எத்தனையோ படங்களைச் சொல்லலாம். வெளிப்படையான அரசியல் கருத்துகளுடன் துணிச்சலாக அவர் உருவாக்கிய ‘ஹேராம்’ திரைப்படம் இந்துத்துவ அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்ட முக்கியமான படங்களில் ஒன்று. ‘அன்பே சிவம்’ இடதுசாரி அரசியலுக்கு இன்னொரு பரிமாணம் கொடுக்க விழைந்தது. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘விஸ்வரூபம்’ இரண்டும் முஸ்லிம்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன.

உண்மையில், அரசியல், சமூக நிகழ்வுகள் தொடர்பாக துணிச்சலான கருத்துகளைச் சொல்வதைத் திரைப்படங்களுக்கு வெளியிலும் அதிகமாகத்தான் செய்தார் கமல். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்ததாகப் பல முறை நினைவுகூர்ந்திருக்கிறார். ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தொடங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வரை கமல் குரல்கொடுத்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்ததுடன், இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் நேரடியாகவும் விமர்சனம் வைத்தவர் கமல்.

உடைந்த பிம்பம்

இன்றளவும் கமல் மீது அபிமானம் கொண்டிருப்பவர்களின் மனதில் அவர் அடைந்திருக்கும் உயரம் அவரது திரைச் சாதனைகளால் மட்டுமே உருவானதல்ல. பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. ஆனால், மேலோட்டமான அணுகுமுறை இன்றைய அரசியலில் எவரையும் வெளுத்துவிடும். சில மாதங்களுக்கு முன் ஸ்மிருதி இரானியுடன் அவர் பங்கேற்ற ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி இதைப் பட்டவர்த்தனமாக்கியது.

ஸ்மிருதி இரானியுடன் விவாதத்தில் ஈடுபட்ட கமல் ‘திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும்’ எனும் உத்தரவு, கும்பல் கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்று அவர் பேசிய எந்த விஷயத்திலும் வலுவான வாதங்களை முன்வைக்க முடியவில்லை. ஸ்மிருதி இரானி கமலை வார்த்தைகளால் பந்தாடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதன் பொருட்டு கமலைக் காட்டிலும் அதிக விஷயங்கள் அறிந்தவர் ஸ்மிருதி இரானி என்றோ, அவர் பேசியவை எல்லாம் நியாயமானவை என்றோ முடிவு கட்டுவதற்கில்லை. ஆனால், சரியோ, தவறோ தான் எந்தப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதில் ஸ்மிருதி இரானிக்கு தெளிவும் அதை வெளிப்படுத்துவதில் உறுதிப்பாடும் இருந்தது. கமலிடம் அது இல்லை. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்று அரசியலில் யாரும் இரட்டை விளையாட்டு விளையாட முடியாது.

மேலும், எந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையோடு அவர் தொடர்பில் இருக்கிறார் என்ற கேள்வியும் இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் தொடங்கி தூய்மை இந்தியா வரை மோடி அரசின் திட்டங்களை விமர்சனமின்றி வரவேற்றார். பசு குண்டர்கள் நிகழ்த்திய கும்பல் கொலைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் அறிவுஜீவிகள் படுகொலை போன்றவை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதிப்பதைக் கண்டித்து, விருதுகளைத் திருப்பி அளிக்கும் போராட்டத்தில் நயன்தாரா சேகல் தொடங்கி பலர் ஈடுபட்டபோது அதை விமர்சித்த வலதுசாரிகளின் குரலைக் கமல் எதிரொலித்தார். “விருதுகளைத் திருப்பி அளிப்பது அரசை அவமானப்படுத்தும் செயல்” என்று சொன்னார். கவுரி லங்கேஷ் படுகொலையை, “எதிர்க்கருத்து கூறுவோரின் குரலைத் துப்பாக்கி கொண்டு வெல்ல நினைப்பது மோசமான வழி” என்று விமர்சித்தவர், அதே படுகொலையைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, “வன்முறை இரண்டு தரப்பிலும் இருக்கிறது” என்றார்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டுக்கும் வெளியே அவர் நிற்பதில் பிரச்சினை இல்லை தனக்கென ஓரிடத்தை உருவாக்குதிலிருந்துதான் அவர் நிலைக்க முடியும். ஆனால், பேரலைபோல வரும் இந்த மக்களவைத் தேர்தலை - கூட்டணிக்கான அவரது அழைப்பை அரசியல் கட்சிகள் பொருட்படுத்தாத நிலையில் - பாஜக, காங்கிரஸ் இரண்டையுமே எதிர்க்காமல் எதிர்கொண்டுவிட முடியும் என்று அவர் நம்புவது அபத்தமாகவே படுகிறது. மக்களவைத் தேர்தலிலிருந்து அவருடைய நண்பர் ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கமலும் இந்தத் தேர்தலோடு அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டுவிடுவார் என்று யாரேனும் பேசினால் அதற்குப் பதில் சொல்லும் பலமாவது அவருக்கு வாய்க்கட்டும்!

- தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்