குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியை பிற நாடுகள் பின்பற்ற முற்படலாம்.
உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும், மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனிதான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு, செவ்வாய் நோக்கிச் செல்ல வேண்டுமானால், அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.
ஆகவே, மங்கள்யான் திட்டம்பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை மேலும் சில முறைகள் செலுத்தி, அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானைச் செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பிரச்சினை இருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தைச் செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கும் நிலைகளைப் பொறுத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பயன்படுத்த முடிவுசெய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.
கிராவிட்டி அசிஸ்ட் உத்தி
மங்கள்யானை செவ்வாயை நோக்கிச் செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்புவிசையையே பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது. அந்த உத்திக்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர். இது ஒன்றும் புதுமையானது அல்ல. 2008-ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்டபோது இதே உத்திதான் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமானபோது அவற்றின் வேகத்தை அதிகரிக்க ‘லாம்’ (LAM) எனப்படும் இன்ஜின் இடம்பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித இன்ஜின் இடம்பெற்றிருந்தது. 2013 நவம்பர் கடைசி வரை மங்கள்யான் பூமியை ஆறு முறை சுற்றியது. அந்த ஆறு முறைகளிலும் மங்கள்யானில் இருந்த இன்ஜின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே, ஒவ்வொரு முறையும் பூமியை நெருங்கும்போது மங்கள்யானின் வேகம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. மங்கள்யான் ஏழாவது முறை சுற்ற முற்பட்டபோது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாவது முறை இன்ஜினை இயக்கியபோது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி செவ்வாயை நோக்கிப் பயணித்தது.
வட்டப் பாதைக்கு மாறுதல்
சூரியனைப் பூமி சுற்றுவதுபோல மங்கள்யான் அதன் பின்னர் இன்ஜின் உதவியின்றி விண்வெளியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. பூமி சூரியனை மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே, மங்கள்யான் நான்காவது வட்டப் பாதைக்கு மாற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரங்கட்டுவதுபோல மங்கள்யானின் பயணப் பாதையை அவ்வப்போது ஓரங்கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.
முன்னுதாரணம் இல்லை
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், கிராவிடி அசிஸ்ட் உத்தியைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே நாடு இந்தியாதான்.
சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன. வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால், எந்த நாடும் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.
அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.
புல்லும் ஆயுதம்
இனி, இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருப்பது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவேதான், இந்தியாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது என்று உலக நாடுகள் வியந்து நிற்கின்றன.
இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டபோது சுமார் இரண்டு டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில முறை சோதிக்கப்பட இருக்கிறது. அடுத்தபடி யாக நாம் புதிதாக உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி-3 வகை அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்திச் சோதிக்கப்படவிருக்கிறது. அது, மூன்று டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. அது வெற்றிபெற்றுவிட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்துவிடும்.
அடுத்து, 2018-ம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தைச் செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் நிறைய ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய பெரிய விண்கலத்தை அதனுடன் அனுப்ப இயலும்.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago