இந்திய அரசமைப்பின் மறுவரையறையாளர் அண்ணா!

By ஆழி செந்தில்நாதன்

சாம்ராஜ்யங்களின் கல்லறை என்று வர்ணிக்கப்படும் புது டெல்லியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அஸ்தமித்த 1947-ல் நடந்த ஆட்சி மாற்றக் காட்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அண்ணா. திராவிட இயக்கப் பார்வையில், இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களிடமிருந்த ஆட்சி இந்தியாவில் உள்ள பிராமணர் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரின் கைகளுக்கு மாறிய ஒரு சம்பவம்

தானே ஒழிய, அது ஜனநாயகத்தின் வருகை அல்ல; பிராமணிய நாயகத்தின் வெற்றி என்று வர்ணித்த பெரியார், ஆகஸ்ட் 15, 1947-ஐ ஒரு துக்க நாள் என்றும் அழைத்தார். அண்ணா தன் சமகால உலக அரசியல் போக்குகளோடும், தான் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் கட்டத்தோடும் அந்த நிகழ்வைப் பொருத்தினார். அந்த விஷயத்தில் பெரியாரிடமிருந்து அவர் வேறுபட்டார். இந்தியாவில் உருவாகும் புதிய அரசு பெரியார் சொன்ன பிராமணநாயகமாக மட்டுமல்ல, ஒரு பனியா ஏகாதிபத்தியமாகவும் இருக்கிறது என்று 1946-லேயே ‘பணத்தோட்டம்’ என்கிற தன் புகழ்பெற்ற நூலில் அண்ணா வர்ணித்திருந்தாலும், புதிய அரசை அவர் முற்றிலும் நிராகரிக்கவில்லை. இரண்டு எதிரிகளில் ஒரு எதிரி ஒழிந்தான் (ஆங்கிலேயர்கள்), மற்றுமொரு எதிரி இருக்கிறான் (வடவர்கள்) என்று கூறிய அண்ணா, மீதிச் சுதந்திரத்துக்கான போராட்டம் தொடர்கிறது என்று கருதினார். எனவேதான், 1947 ஆகஸ்ட் 15-ஐ அவர் இன்ப நாளாகவும் கருதினார்.  உலகம் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான சம்பவமாக அந்த நாளை அண்ணா பார்த்தார்.

இந்தியாவை எப்படிப் பார்த்தார் அண்ணா?

புதிய இந்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்பிருந்தே அதன் குணாம்சங்களை வர்ணிக்கத் தொடங்கிய அண்ணா, (அன்றைய உலகச் சூழ்நிலையில்) இந்தியாவின் சுதந்திரம் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு என்பதை அறிந்து, திராவிட இயக்கத்தின் மூலாதாரக் கோட்பாடுகளான திராவிட நாடு உள்ளிட்ட கோரிக்கைகளை அதற்கேற்பப் புதுப்பிக்கத் தொடங்கினார் அண்ணா பிற்காலத்தில் அவரது வெற்றிக்கும் தோல்விக்கும், தோல்வியிலிருந்து பெற்ற பாடத்துக்கும் காரணமாக இருந்த பல பார்வைகள் இந்தப் புள்ளியிலேயே அண்ணாவிடம் கருக்கொண்டன.

1947 ஆகஸ்ட் 15-ஐ மறுவியாக்கியானம் செய்யத் தொடங்கியது முதல் வாழ்வின் இறுதி நாள் வரை, அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்ட ஒரு போராட்டக் களம் உண்டென்றால், அதை இந்தியா என்னும் அரசோடும்,

இந்தியா என்னும் எண்ணத்தோடும், இந்தியாவின் அரசமைப்போடும் அவர் மேற்கொண்ட அரசியல் சித்தாந்தப் போராட்டமே ஆகும்.

பெரியாரைப் போலவே அண்ணாவும் இந்தியாவை ஒரு தேசமாகப் பார்க்கவில்லை. அவர் முன்மொழிந்த திராவிட நாடுகூட அவரைப் பொறுத்தவரை ஒற்றை தேசமல்ல. தமக்குள் பொதுத்தன்மைகள் கொண்ட தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களின் தேசங்களின் கூட்டமைப்பே திராவிட நாடு என்பதே அவரது கருத்து. ஒரு மத்திய அரசுகூடத் தேவைப்படாத கூட்டமைப்பு அது என்று சொல்லலாம்!

அண்ணாவின் தேசியப் பார்வை

1947-க்கு முன்பு, இந்தியாவை நெகிழ்வான கூட்டமைப்பாகக் கண்ட காபினட் மிஷன் யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது, இந்தியாவை ஒரு பாதுகாப்புக் கழகமாக - வட்டார ஐ.நா. சபை அல்லது நேட்டோபோல - அண்ணா கற்பிதம் செய்து பார்த்திருக்கிறார். தமிழ்நாடு என்பது தேசம், திராவிட நாடு என்பது ஒரு கூட்டரசு, இந்தியா என்பது ஒரு பாதுகாப்புக் கழகம். இதுவே அவரது தேசியம் குறித்த பார்வை என்று சொல்லலாம்.

1950-களில் அண்ணா மிகத் தீவிரமாக திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், 1956 மொழிவாரி மாநிலங்களின் பிரிவினை, தேர்தல் பங்கேற்பு, நேரு-காமராஜர் ஆட்சிக்காலத்தின் சமூக

மாற்றங்களை உற்றுணர்ந்தமை ஆகியவற்றுக்குப் பிறகு, தனது விடுதலை நிறைவேறுவதற்கு வழியற்ற கனவாக மாறிக்கொண்டிருந்ததை அண்ணா உணரவும் செய்தார். இந்தக் காலகட்டத்தில், தன்னளவில் விடுதலைக் கோரிக்கையைக் கைவிடாத நிலையிலேயே, அண்ணா மாநிலங்களவைக்குச் சென்றார். இந்தியத்தையும் அதன் சவாலையும் டெல்லியிலேயே எதிர்கொண்டார்.

1962 ஏப்ரலில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, அண்ணா தன்னுடைய முதல் உரையை ஆற்றினார். அந்தக் கன்னிப் பேச்சிலேயே இந்தியா என்கிற கட்டமைப்பைப் பற்றிய தனது மிக முக்கியமான கேள்விகளை முன்வைத்துவிடுகிறார் அண்ணா. இந்தியாவிலுள்ள புனிதப் பசுக்களிலேயே ஆகப் பெரிய புனிதப் பசுவான தேசிய ஒருமைப்பாடு என்கிற கருத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. “ஐயா, நான் கூறுவது தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுமோ என்கிற சிக்கல் இருந்தாலும், தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லே தன்னளவில் முரண்பாடு கொண்ட ஒன்று என நான் சுட்டிக்காட்டலாமா?  மக்கள் ஒருமைப்படுகிறபோதுதான் தேசம் என்ற ஒன்றே உருவாகிறது. அவர்கள் தேசமாக ஒருமைப்பட்டுவிட்ட பிறகு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்த என்ன அவசியம் எழுகிறது? எனவே, நம்மைத் தடுத்து

நிறுத்திவைத்திருக்கும் எண்ணங்களின் வறுமையைத்தான் இந்தத் தேசிய ஒருமைப்பாடு என்கிற சொல் காட்டுகிறது” என அண்ணா கூறினார். அந்த அவையில் அந்தச் சொற்களை எவ்வாறு இந்தியா எதிர்கொண்டிருக்கும் என ஊகிப்பது கடினமல்ல. செவிட்டுக் காதுகளில் தொடர்ந்து ஊதினார் அண்ணா: “எனவே, நான் விரும்புவதெல்லாம் இதுதான்: மாற்றி யோசிப்போம். நம்மிடம் ஒரு அரசமைப்பு இருக்கிறதே! இந்த நாட்டின் ஜாம்பவான்கள் உட்கார்ந்து அதை வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், தேசம் என்ற ஒரு சொல்லை ஒரு மறு-சிந்தனை, மறு-சீர்தூக்கல், மறு-மதிப்பீடு, மறு-வியாக்கியானம் செய்வதற்கான காலம் வந்துவிட்டது!”

பிரிவினை என்பது எதிரித்தன்மை அல்ல

அண்ணா இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள தேசிய இனங்களின் வித்தியாசங்களைத்தான் பேசினாரேயொழிய, அதை வெறுப்பாகவும் பகைமையாகவும் முன்வைத்தது இல்லை. நான் வேறு இனத்தைச் சேர்ந்தவன், ஆனால், அது பகை இனமாகத்தான் இருக்க வேண்டும்

என்று அதற்குப் பொருளல்ல என்றார். “எங்களுக்கென்று சில தனித்தன்மைகள் உள்ளன, இந்த நாட்டுக்கு அல்லது இந்த உலகத்துக்கு அளிப்பதற்கென சில சிறப்பம்சங்கள் உள்ளன. அதற்காகவே சுயநிர்ணய உரிமையை நாங்கள் கேட்கிறோம்” என்று அவர் வாதாடினார். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமானது, இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய இனங்கள் சகவாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பை மறுத்துவிடவில்லை என்பது அண்ணாவின் வாதங்களின் சாராம்சம்.

அண்ணாவின் மறுவரையறைகள் தொடர்ந்தன. திராவிட நாடு கோரிக்கையைத் தொடர முடியாமல் அண்ணாவை முடக்கிய, இந்திய அரசமைப்பின் 16-வது சட்டத் திருத்தம் தொடர்பான மாநிலங்களவை விவாதங்களில் (டிசம்பர் 1963) அதைப் பார்க்க முடியும். பேச்சுரிமை, கருத்துரிமை குறித்த அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசமைப்பின் கூறு 19-ஐத்தான் அப்போது அரசு திருத்தியது.

அதன்படி சுயநிர்ணய உரிமையைக் கோரும் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது, பிரிவினை குறித்துப் பிரச்சாரம்கூடச் செய்ய முடியாது எனப் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

திமுகவைத் தடைசெய்வதற்கான அறிகுறி அது என்று சரியாகவே கணித்திருந்தார் அண்ணா. சுயநிர்ணய உரிமையைப் பெறுவது ஒருபக்கம் இருக்கட்டும், அதைப் பற்றிப் பேசுவதற்கே உரிமை இல்லையா எனக்

கேள்வி எழுப்புகிற நிலையில் அவர் இருந்தார், அப்போது இறையாண்மை என்கிற கருத்தாக்கத்துக்கும் ஒரு மறுவிளக்கம் தந்தார்.  “எங்கள் கோரிக்கை இறையாண்மையை அபாயத்துக்குள்ளாக்குகிறது என்று ஏன் நினைக்கிறீர்கள்? இதற்குப் பதில் அளிக்கும் முன்பு, இறையாண்மை என்றால் என்னவென்று பொருள் கொள்கிறோம் என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இறையாண்மை மக்களிடமே தங்கி இருக்கிறது என அரசமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறையாண்மை, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் அதன் உறுப்பு அலகுகளுக்கும் (மாநிலங்கள்) பிரித்தளிக்கப்பட்டுள்ளன. எங்களுடைய

திட்டம் மாநிலங்களை மேலும் கூடுதலான, திறன்மிக்க இறையாண்மை உடையவையாக ஆக்குவதுதான் என்று ஏன் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது? இறையாண்மை என்பது ஒட்டுமொத்தமாக ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருக்கவில்லை” என்று வாதிட்டார்.

இந்த சட்டத் திருத்தம் கொண்டுவந்த தடைக்குப் பிறகு. திமுக பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது. ஆனால், மாநிலங்களின் இறையாண்மையை ‘அதிகரிக்கிற’, இந்தியாவை ஒரு ‘பாதுகாப்புக் கழக’மாக (மட்டுமே) பார்க்கிற தன் மறுவியாக்கியானத்தை அண்ணா கைவிடவில்லை.

தாய்க்குப் பெயரை மீட்டளித்த தனயன்

‘திராவிட நாடு’ எனவும் ‘ஹோம்லேண்ட்’ எனவும் இதழ்களை நடத்திய அண்ணாவின் மனத்திலிருந்த பொன்னுலகம் என்பது, தேசியத்தைவிட மிக ஆழமான உணர்வை வெளிப்படுத்தும் ‘தாயகம்’ என்கிற கருத்தாக்கமாகும் - அவருடைய வீட்டின் பெயரும் அதுதான். சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில், அவரது நீண்ட நெடிய பங்களிப்பு அதை உணர்த்தும். அவர் தாயின் பெயரை மீட்டளித்த தனயனாகப் பார்க்கப்பட்டதில் வியப்பில்லை.

திராவிட நாட்டை அடையாதபோதும் அவர் சுடுகாட்டை அடையவில்லை. மாறாக வேறு ஒரு பாதையில் பயணத்தைத் திருப்பினார். அந்தச் சித்தாந்தத் திருப்பம் மிக முக்கியமானது, காலப் பொருத்தம் உடையது. ஏனென்றால், அவர் பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டார், ஆனால், பிரிவினைக்கான காரணங்களோ தொடர்ந்து நிலவின என்றார். எனவே, அவர் தன் சுதந்திர வியூகத்தைக் கூட்டாட்சிக்கும் தன்னாட்சிக்குமான வியூகமாக மாற்றியெழுதினார். நூறு ரூபாயை இரண்டு ஐம்பதாக மாற்றிக்கொண்டார் என்று அவரது உரையாடல் பாணியில் இதைச் சொல்லலாம்!

தொடர்ந்து அரசமைப்பு மாற்றத்தை வலியுறுத்தியவர்

இந்தியாவில் மொழிவாரி அமைக்கப்பட்ட மாநிலங்கள் ஒருவகையில் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை என்பதாலேயே, மாநிலங்களைப் பிரதானப் படுத்தி இந்திய அரசமைப்பைத் திருத்தி எழுத வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார் அண்ணா. “மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப்பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல; மத்திய அரசின் வலிவு அசாமுக்கு அச்சமூட்ட, தமிழ்நாட்டைத் தத்தளிக்கவைக்க, கேரளத்துக்குக் கலக்கமுண்டாக்கத்தான் என்றால், நமது சுதந்திரச் சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத்தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்!”

அண்ணாவின் இறுதிக் கட்டுரைகளில் ஒன்று 1969 ‘காஞ்சி’ பொங்கல் மலரில் அவர் எழுதியது - இதற்குப் பின் சில வாரங்களில் அவர் மறைந்துவிடுகிறார். அதில் அண்ணா கூறுகிறார்: “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக்கூறிவருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி.”  அப்பணியை  அவர் தொடர முடியாமலானது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே ஒரு பேரிழப்பு.

தேசிய இன உரிமைக் களத்தில் அவர் முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டுவிட்டுச் சென்றார் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் ஒரு சில மாநிலங்களிலும் மட்டுமே இருந்த இனப் போராட்ட ஈட்டிகளை

இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அத்தனை தேசிய இனங்களுக்குமான கூட்டாயுதமாகவும் அவர் மாற்றி விட்டார். அது ஒரு நாள் துணைக்கண்ட அரசியலை முகம் மாற்றவும் கூடும்!

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்