சின்னத்தம்பி பிடிபட்டுவிட்டான். இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையைப் பிடித்த வனத் துறையினர், டாப் ஸ்லிப் அருகில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமில், ‘க்ரால்’ எனப்படும் வேலித் தடுப்பில் அடைத்துவைத்திருக்கிறார்கள். இந்த யானை, கும்கியாக மாற்றப்படாது என்று வனத் துறை உறுதியளித்திருக்கிறது. எனினும், வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என்றே தெரிகிறது. சின்னத்தம்பிக்கு முன்னர் இப்படிச் செய்திகளில் அடிபட்ட யானைகளின் கதையைப் பார்ப்போம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு கொம்பில்லாத மக்னா ரக ஆண் யானை ஒன்று கேரள, கர்நாடக, தமிழகக் காடுகளான முத்தங்கா, பந்திப்பூர், கூடலூர்க் காடுகளை அச்சுறுத்துவதாகச் செய்திகள் வெளியாகின. மூன்று மாநிலங்களிலும் சுமார் 23 பேரை அந்த யானை கொன்றதாக அரசு சொன்னது. இதையடுத்து, அந்த யானையைப் பிடித்து க்ராலில் அடைத்தது வனத் துறை.
அந்த யானையின் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்தன. எல்லாமே மனிதகுலம் தந்த வக்கிரப் பரிசுகள். அந்த யானை மூர்க்கமானதற்கு அது ஒரு காரணம். பிடிபட்ட பின்னர், அதை அடக்கி, சாதுவாக்கி, ‘மூர்த்தி’ என பெயரிட்டு, பாகன்கள் வழிக்குக் கொண்டுவந்தனர்.
குரல்கொடுத்த சூழலியலாளர்கள்
ஆனால், ‘மூர்த்திக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை. அதன் கால்களில் புண்கள் புரையோடி உள்ளன. சீக்கிரமே விழுந்து இறந்துவிடப்போகிறது. அதற்கு சிகிச்சையளிப்பவர்கள் யானை மருத்துவர்களே அல்ல’ என்று குரல்கள் எழுந்தன. நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. ஒரு காட்டு யானைக்காக முதன்முதலாகப் பரவலாக எழுந்த ஆதரவு அது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த யானைக்குச் சிகிச்சையளிக்க அயர்லாந்து மருத்துவர் மகோன்னி வரவழைக்கப்பட்டார். இன்றைக்கு மூர்த்தி உயிரோடு முதுமலையில் உழைக்கிறது என்றால் அன்றைக்கு எழுந்த உரிமைக் குரல்களே முக்கியக் காரணம்! சில ஆண்டுகள் முன்னர் கோவை மதுக்கரை காடுகளில் இதேபோன்ற நிகழ்வு. கட்டையன் என்று மக்களால் அழைக்கப்பட்ட ஒரு யானை விவசாயப் பயிர்களை அழிக்கிறது; ஆட்களைக் கொல்கிறது என்று புகார்கள் எழுந்தன. அந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, மகாராஜ் என்ற பெயர்சூட்டி வரகளியாறு முகாமில் க்ராலில் வைத்தார்கள் வனத் துறையினர். மறுநாளே மகாராஜ் பிடிபட்ட இடத்தில் ஒரு பெண் யானை ரயிலில் சிக்கி உயிரிழந்தது. ‘வனத் துறை பிடித்தது கட்டையன் யானையை அல்ல. கூட்டத்து யானை. அதைப் பிடித்ததால் அதன் கூட்டத்தைச் சேர்ந்த மற்ற யானைகள் வழி தவறியிருக்கின்றன. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த யானைதான் ரயிலில் அடிபட்டுவிட்டது!’ என்று புகார்கள் எழுந்தன.
அதற்கு அடுத்த நாள் க்ராலில் அடைக்கப்பட்டிருந்த யானையும் மரணமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘மயக்க ஊசி ‘டோஸ்’ அதிகம்’ என்று சிலரும், ‘கூட்டத்தைப் பிரிந்ததால், தடுப்பில் தலையை முட்டிக்கொண்டு இறந்தது’ என்று சிலரும் காரணம் சொன்னார்கள்.
இதற்கிடையே, அசலான ‘கட்டையன்’ யானை அதே மதுக்கரை பகுதிகளில் உலாவந்தது. உடனே, அந்த யானையைப் பிடிக்க வேண்டும்; கொல்ல வேண்டும் என்றெல்லாம் விவசாயிகள் தரப்பிலிருந்து மீண்டும் குரல்கள் எழுந்தன. சூழலியலாளர்களோ, ‘மதுக்கரை காடுகளில் யானைகளுக்கான உணவு, தண்ணீர் இல்லை. கல்குவாரி, சிமெண்ட் தொழிற்சாலை, கல்வி நிலையங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், துணை நகரங்கள் அதிகரித்துவிட்டன. யானைகள் புகாதிருக்க மாபெரும் அகழிகள், மின் வேலிகளும் அதிகமாகிவிட்டன. அதை முறைப்படுத்தாமல் யானைகளைப் பிடித்து அடைப்பது, கொல்வது என்பது நியாயமல்ல’ என்று சுட்டிக்காட்டினர்.
எனினும், அந்த யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு வனத்தில் விடப்பட்டது. ‘அது உயிருடன் உள்ளதா, இல்லையா?’ என்ற கேள்விகளும் கால ஓட்டத்தில் காணாமல்போயின. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ மூர்த்திகள், மகாராஜாக்களின் கதைகள் உண்டு.
இன்றைக்கு விநாயகன், சின்னத்தம்பி என்ற இரண்டு ஆண் யானைகள் மீது கொடும் பழிகள் போடப்படுவதையும், மக்கள் மத்தியிலேயே அந்த யானைகளுக்கு ஆதரவு இருப்பதையும் தமிழகம் பார்க்கிறது. ‘சின்னத்தம்பி நல்லவன். அவனை இம்சைப்படுத்துவது மனிதர்கள்தான். யானைகளின் வாழ்விடம் சுருங்கிவிட்டது. காடுகள் இல்லை. தண்ணீர் இல்லை. எல்லாம் செங்கல்சூளைகளாக, கல்குவாரிகளாக மாறிவிட்டன’ என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சின்னத்தம்பி இப்போது க்ராலுக்குப் போய்விட்டான். ஆனால் அவனுக்காக எழுந்த குரல்களின் நியாயங்கள் அப்படியே இருக்கின்றன. இங்கே நிலம் மனிதகுலத்துக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது.
ஆக்கிரமிக்கப்படும் வழித்தடங்கள்
யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது இப்பிரச்சினையின் முக்கியக் கண்ணி. நீலகிரி மசினக்குடி - மாயார் யானை வழித்தடங்களுக்கான வழக்கு மிக முக்கியமானது. 13 ஆண்டுகளுக்கு முன்னர், சில தொண்டு நிறுவனங்கள் முன்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பின்னர் அது உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நாடு முழுக்க, 12 மாநிலங்களில் 96 யானை வழித்தடங்கள் உள்ளதாகவும், அது குறித்த விரிவான ஆய்வறிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் 27 ‘ரிசார்’ட்டுகள், 821 பெரிய கட்டிடங்கள், பல பழங்குடி கிராமங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கட்டிடதாரர்கள் 48 மணி நேரத்தில் காலிசெய்யுமாறு அறிவிக்கை கொடுக்கப்பட்டது. ‘ரிசார்’ட்டுகள் சீல் வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, பழங்குடி கிராம மக்கள், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்பகுதியில் யானை வழித்தடம் என்பது மத்திய அரசின் யானைகள் வாரியத்தின் கணக்கெடுப்பின்படி 510 ஏக்கர்தான். ஆனால், 6,000 முதல் 7,000 ஏக்கர் பரப்பளவை யானை வழித்தடமாகக் குறிப்பிட்டுள்ளது எப்படி என்பது அவர்களின் கேள்வி. ஆனால், வழக்கம்போல், ‘பழங்குடிகள், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது’ என்று அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. “யானை வழித்தடத்தில் வராத கட்டிடங்களுக்கும் ஏன் ‘சீல்’ வைத்தீர்கள்?” என அரசுத் தரப்பை கேள்வி கேட்டுள்ளது நீதிமன்றம். இது பற்றிப் பேசிய கூடலூர் விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் எம்.எஸ்.செல்வராஜ், “இங்கே அசலான யானை வழித்தடம் என்பது 510 ஏக்கர்தான். அதை எடுப்பதிலேயே இவ்வளவு கோளாறுகள். இவ்விஷயத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இந்த அளவுக்காவது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எதுவும் நடந்ததாக இதுவரை தகவல் இல்லை. இவர்கள் எப்படி எப்போது அசலான யானை வழித்தடத்தை மீட்கப்போகிறார்கள்?’’ என்று கேட்கிறார்.
இங்கே முன்னைவிட காடுகள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன. குடியிருப்புகள் பெருகுகின்றன. கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. மனிதர்கள் திருந்தாதவரை சின்னத்தம்பிகளின் சோகக் கதைகள் முற்றுப்பெறப் போவதேயில்லை!
- கா.சு.வேலாயுதன்,
தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago