அமர்வுகளின் உச்சம்போல அமைந்தது ‘தமிழ் அரசியல்’. இன்றைய தமிழ்த் தேசிய அரசியலை விசாரணைக்குள்ளாவதாக அமைந்த இந்த அமர்வில் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியாவும், அரசியல் செயல்பாட்டாளர் ஆழி செந்தில்நாதனும் விவாதித்தனர். இந்த அமர்வை ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஒருங்கிணைத்தார்.
சமஸ்
தமிழ் அரசியலின் உச்ச முகிழ்வு என்று பேரறிஞர் அண்ணாவைச் சொல்லலாம். காந்தி எப்படி ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் கீழ் எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கனவு கண்டாரோ, அப்படி ‘தமிழர்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் கனவு கண்டவர் அண்ணா. இந்திய ஒன்றியம் என்ற வரலாற்றுப் போக்குக்கு முகங்கொடுக்கும் வகையில், தமிழரின் சுயாட்சிக் கனவை அண்ணா மாநில சுயாட்சி என்ற வழிமுறையின் கீழும் விஸ்தரித்தார்.
ஆனால், அண்ணாவின் மறைவுக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று தமிழ் அரசியல் பேசும் குழுக்களில் சில தமிழ்ச் சாதிகள் என்று சாதி தேசியம் பேசுகின்றன; பிராமணர் தொடங்கி அருந்ததியர் வரை அவை வெளியே நிறுத்துகின்றன; திராவிடக் கட்சிகளை எதிரிகளாக்கும் போக்கையும்கூடப் பார்க்க முடிகிறது. இவற்றை எப்படிப் பார்ப்பது? திராவிடக் கட்சிகள் தமிழ் அபிலாஷைகளிலிருந்து அந்நியப்பட்டுவிட்டனவா?
சாதி அடையாளத்தை ஏற்பது தற்கொலையாக இருக்கும்! - ஓவியா
தமிழ் ஒரு நீச மொழி என்ற கருத்தை எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம். திராவிட அரசியல்தான் தமிழ் அரசியலுக்கான அடிப்படை விதைகளைத் தூவியது. மொழி, இன உணர்வின் அடிப்படையில் மக்களைத் திரட்டிய அது சாதிக்கு எதிராகப் போராடியதன் விளைவாகவே ஒரு சமூகப் புரட்சி இயக்கமானது. தமிழ் மொழியின் மீது திராவிட இயக்கம் வைத்த விமர்சனமானது சுயவிமர்சனத்தின் ஒரு பகுதி.
oviyajpg‘தமிழன்’ என்ற அடையாளத்தால், எல்லா சாதிகளையும் கடக்கக் கற்றுக்கொடுத்தது திராவிட இயக்கம். எல்லோரையும் இணைக்கும் ‘தமிழ்’ அடையாளத்தையே சாதியால் பிளக்க முற்படும் ‘தமிழ்ச் சாதிகள்’ என்ற சொல்லாடலையே நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டியது, சாதி என்பது அவமானம் என்ற அடிப்படையில்தான் தமிழ் அரசியல் களம் இயங்கிவந்திருக்கிறது. ஆனால், தற்போது சாதியுடன் அடையாளப்படுத்தப்படும் தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் ஆபத்தானது.
நூறு ஆண்டுகளாகச் சாதியை எதிர்த்து இங்கே அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்புக்கு அது பேராபத்தை ஏற்படுத்தும். நிலப்பரப்பு, மொழி, இலக்கியப் பாரம்பரியம் போன்ற அடையாளங்களை விடுத்து, சாதியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தமிழ் அடையாளத்தை ஏற்பது தமிழினத்தின் தற்கொலையாகத்தான் முடியும்.
தமிழ் அபிலாஷைகளை முன்னெடுப்பதில் திராவிட இயக்கம் அந்நியப்பட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை; இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் குரல் திராவிட இயக்கமே. தமிழை முன்னிறுத்தி திராவிட இயக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலானது ஒன்று, அறியாமையாலும் மற்றொன்று, திட்டமிட்ட சதியாலும் நடப்பதாகும்.
திராவிடமும் தமிழ்த் தேசியமும் வேறுவேறல்ல! - ஆழி செந்தில்நாதன்
நூறு ஆண்டுகளாக இயங்கிவரும் எந்தவொரு அரசியல் இயக்கமும் சரிவைச் சந்திப்பது இயல்பானதுதான். ரஷ்யாவில் 1910-20-களில் எழுச்சிபெற்ற கம்யூனிஸ்ட் இயக்கம் பிற்காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதேமாதிரி, 1930-களில் இருந்த காந்திய இயக்க எழுச்சி இன்று வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. ஆகையால், திராவிட இயக்கம் தொடர் செயல்பாட்டில் முன்பிருந்த நிலையில் இன்றிருக்க வேண்டும் என்று கருத வேண்டியதில்லை.
aazhijpgrightஇன்று நாம் வந்தடைந்திருக்கும் தமிழ் அரசியலுக்கு, தமிழ் அடையாள உணர்வுக்கு நீண்ட ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ்ச் சமயச் சிந்தனையாளர் வள்ளலார், சமூகச் சிந்தனையாளர் அயோத்திதாசர், தனித்தமிழ் சிந்தனையாளர் மறைமலை அடிகள், நவீனச் சிந்தனையாளர் சிங்காரவேலர் என்று நீளும் அந்தப் பட்டியலில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியவர் என்று பெரியாரையும் 1925-களில் பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தையும் சொல்லலாம். அண்ணா அதன் உச்சம் நோக்கிச் சென்றார்.
எதற்காக இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், திராவிட இயக்கத்திலிருந்துதான் தொடங்கியது என்றோ, திராவிட இயக்கத்தோடு முடிந்துவிடும் என்றோவெல்லாம் பேசக்கூடிய விஷயம் அல்ல இது. மேலும், திராவிடம் வேறு; தமிழ் வேறும் அல்ல. ‘இங்கிலீஷ்’ மொழியை ‘ஆங்கிலம்’ என்கிறோம். அது புறப்பெயர். ‘நிப்பான்’ நாட்டை ஆங்கிலத்தில் ‘ஜப்பான்’ என்று குறிப்பிடுகிறோம். அது புறப்பெயர். அப்படிதான் ‘தமிழ்’ அன்று ‘திராவிடம்’ என்றழைக்கப்பட்டது.
தமிழின் புறப்பெயர்தான் திராவிடம். தமிழ் அரசியலின் வெளிப்பாடுதான் திராவிட இயக்கம். அது இன்று தேக்கத்தைச் சந்தித்திருந்தால், அதைக் கடக்க மேலும் முற்போக்காக, முன்னோக்கி நாம் செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி அல்ல. சாதி நம்மை பிளந்து அடிமைகளாக்கிவிடும்! தமிழால் நாம் இணைய வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago