பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் அரசிதழிலும் வெளியாகிவிட்டது. மக்களவையில் வெறும் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இந்த மசோதாவை எதிர்த்தனர். மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட சில கட்சியினரின் எதிர்ப்பைத் தவிர, பெரும் எதிர்ப்புகள் இந்தச் சட்டத்துக்கு எழவில்லை.
ராம ஜென்ம பூமி பிரச்சினை, ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி என்று அரசியல் பரபரப்புடன் ஒரு மதத்தையோ அல்லது இயக்கத்தையோ பொது எதிரியாகக் காட்டி, அதன் மூலம் தன் ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் காத்திருந்த மத்திய பாஜக அரசுக்கு, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
பாஜகவின் பலம்
வட இந்தியாவில் உயர் சாதிகள் முக்கிய வாக்கு வங்கியாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், மராத்தா, ஜாட் பிரிவினர், வைசியர் - பனியாக்கள், காயஸ்தர்கள், பிற முற்பட்ட சாதிகள் சுமார் 18% உள்ளனர். அவர்கள் மத்தியில் பாஜக செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இம்மக்களின் வாக்கு வங்கி தனக்குப் பலம் என்று பாஜக கருதுகின்றது.
ஏற்கெனவே, உத்தரபிரதேசத்தில் ஜாட் சமூகத்தை இஸ்லாமியருக்கு எதிராக நிறுத்தித் தனது வெற்றியைச் சாதகமாக்கியது பாஜக. அந்த வாக்கு வங்கியினைக் குறிவைத்து, ஏற்கெனவே ஜாட் சாதியினருக்காகக் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் கடந்த 17.3.2015-ம் தேதி ராம் சிங் என்ற வழக்கில் தடைசெய்திருந்தது. அதே போன்று, குஜராத்தில் படிதார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரிப் போராடியதால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரரீதியிலான 10% இட ஒதுக்கீட்டையும் நீதிமன்றம் தடுத்தது. மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டை ஆதரித்த பாஜக, அதையும் நீதிமன்றத் தடையால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
இயல்பாகவே உயர் சாதியினரின் நலனை அடையாளப்படுத்திவரும் பாஜக, தனது வாக்கு வங்கியைத் தக்க வைக்கவும், தனக்கு எதிரான வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முடிவுகட்டவும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் உயர் சாதி இட ஒதுக்கீட்டுச் சட்டங்களுக்கு எதிரான முந்தைய தீர்ப்புகளை நீக்கறவுசெய்யவும் அவசரகதியில் உயர் சாதி இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் அரசியல் வலையில் காங்கிரஸ், பகுஜன், சமாஜ்வாடி கட்சிகள் மட்டுமல்ல, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளும் சிக்கிக்கொண்டன.
பொருளாதார அளவுகோல்
இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீட்டை அளவுகோலாகக் கொண்டால், குறிப்பிட்ட உயர் சாதியினர் மட்டுமே அதிகாரம் பெறுவார்கள் என்றும் அதனால் சமூக அமைதி பாதிக்கும் எனக் குறிப்பிட்டு, பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாகக் கருதக் கூடாது எனக் குறிப்பிட்டதை அரசு புறக்கணித்துவிட்டது.
இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். அது மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய காலத்திலிருந்து இட ஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப்படும் என்ற அரசியலை முன்வைத்துவருகிறது. ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை. பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் தொடர்கின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சமாக இருந்தால், அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுப் பலன் மறுக்கப்பட்டுவருகின்றது. அதே போன்று, பதவி உயர்வில் பட்டியல் மற்றும், பழங்குடிச் சாதியினருக்கும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பொருளாதார வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமே பொருளாதார வரையறைகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிலும் புகுத்தப்பட்டால், பட்டியலினத்து, பழங்குடி மக்கள் நிலை மிக மோசமாகும். நாடாளுமன்றத்தின் மூலம் இல்லாவிட்டாலும் நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியே எதிர்காலத்தில் இந்த ஆபத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
மறுக்கப்படும் சமூகநீதி
இட ஒதுக்கீட்டுக்கு சாதி அளவுகோலாய் பார்க்கப்பட்டது. சாதியால் சமூக வளர்ச்சியில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு சாதி அளவுகோலின்படியே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதைப் பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிசெய்தன. இன்னமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தாலும்கூட, கோயில்களுக்குச் செல்லும் போது அவமரியாதைக்கு ஆளாகும் நிகழ்வு இங்கே தொடரும் நிலையில், பொருளாதார அளவுகோல் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தொடங்குவது இட ஒதுக்கீட்டு முறையை அழிக்கும் செயல். இந்தப் புதிய நடைமுறையினால் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்றுவரும் மக்கள், தங்களின் பங்கையும் பலனையும் இழக்க நேரிடும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பொருளாதார முன்னேற்றத் திட்டமாகவோ அல்லது ஏழ்மை ஒழிப்புத் திட்டமாகவோ சுருக்குவதன் மூலம், அதிகாரப் பங்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட , பழங்குடி மக்களுக்கு மறுக்கத் தொடங்கியாகிவிட்டது. இதன் நீட்சி, சமூக வளர்ச்சியைப் பின்னோக்கி நகர்த்தும். சமத்துவம் மறுக்கப்படும். சமூக வளர்ச்சியில் எல்லா கணங்களிலும் புறக்கணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து புறக்கணிக்க ஏதுவாகவே பொருளாதார அளவுகோல் என்ற உயர் சாதி இட ஒதுக்கீடு அமையும்.
ஏற்றத்தாழ்வுகளைப் போக்க ஏழைகள் மீண்டும் மீண்டும் ஏழைகளாக மாறுவதையும் பணக்காரர்கள் மீண்டும் மீண்டும் பணக்காரர்களாக மாறுவதையும் தடுத்து இருவரையும் இணைக்கும் பாலமாகத் திட்டமிடல் வேண்டும் என அரசமைப்பின் வழிகாட்டு நெறிமுறை கூறுகின்றது. அதனை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, பழமைவாதம், வெறுப்பு, அறிவியல் பார்வையற்ற போக்கு, ஊழல், அறமற்ற முறையில் பெரு முதலாளிகளுக்கான சலுகைகள் என, ஏழைகளின் புறக்கணிப்பு மட்டுமே காலங்காலமாய் அரசுகளின் பொருளாதாரக் கொள்கையாக உள்ள சூழலில் வறுமை ஒழிந்து விடாது.
வாக்கு வங்கி அரசியலுக்காகவும், பழமைவாத ஆதிக்கத்தை அதிகார அமைப்பில் நிறுவும் நோக்கிலும் மத்திய அரசு 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
- ச.பாலமுருகன், எழுத்தாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago