பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம்.
சமீபத்தில், ஒரு தமிழ்க் கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கிவந்தேன். கல்லூரியிலிருந்து களைத்து வந்த மகள் என் முன் வந்து உட்கார்ந்தாள். கவித்தொகுதியைக் கொடுத்து நான் வட்டமிட்டிருந்த கவிதை களையாவது படித்துக் கருத்துச் சொல்லும்படி கெஞ்சினேன். அட்டையையும் பின்னட்டையையும் பின்னட்டைக் குறிப்பையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பிறகு புத்தகத்தைப் புரட்டினாள். இதென்ன எழுத்துரு, குழந்தைகள் புத்தகம் மாதிரி என்றாள் எரிச்சலுடன். என் கெஞ்சல் கொஞ்சமும் பலனளிக்கவில்லை. புத்தகம் மீண்டும் என் கைக்கு வந்துவிட்டது.
இளம் தலைமுறையினரிடம் பாரதியைக் கொண்டு செல்வது எப்படி என்று நண்பர் ஒருவர் துக்கம் ததும்பக் கேட்ட கேள்வி மூளையில் அலைந்துகொண்டிருந்தது. பாரதி பாடலை இளம் தலைமுறையிடம் கொண்டு செல்லும் முயற்சி, தொகுப்பின் புற வடிவத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது என்பதையே மேற்குறிப்பிட்ட சம்பவம் உணர்த்துகிறது. ஆங்கில இலக்கியம் பயிலும் என் மகளை இக்காலத் தலைமுறையின் பிரதிநிதி யாகக் கொள்ளலாம். புத்தகத்தின் வடிவமைப்பை அடுத்து, கவனம் செலுத்த வேண்டியது அதன் எழுத்துரு. பாரதிக்காக, கவரும் தன்மையுடைய புதிய எழுத்துருவைக்கூட உருவாக்கலாம். மருது போன்ற நவீன ஓவியர்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அக்காலத்தில் காந்தி நூல்களைப் பதிப்பிக்கவென்றே அச்சு எழுத்துகளை உருவாக்கிய நெல்சன் மாணிக்கத்தின் முன்மாதிரியும் நம்மிடம் உண்டு. நூல்தான் அச்சிட வேண்டும் என்பதில்லை, இணையத்தில் படிக்கும் வடிவில்கூட பாரதியை அழகான எழுத்துருவில் நல்ல இணையதள வடிவமைப்பில் ஏற்றிவைக்கலாம். இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது. புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கும் சொற்கள்மீது சொடுக்கினால் அந்தச் சொற்களுக்கான பொருள் கிடைக்கும்படியும் வடிவமைக்க முடியும். அச்சுப் பிரதியோ இணையமோ, இளைஞர்களைக் கவரும் விதத்தில் அமைய வேண்டும், துரத்தும் பழைய முறையில் அல்ல.
எழுந்து நின்றே…
பாரதி பாடலைப் படிக்க வைக்கச் செய்ய வேண்டிய இன்னொரு வேலை, உள்ளடக்கம் சமகாலத்தன்மை கொண்டது என்பதை எளிமையான சான்றுகளைக் கொண்டு நாம் உணர்த்த வேண்டும். உடனடியாகச் சில சான்றுகள் தோன்றுகின்றன. இன்றைக்கு எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும் பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுவதைப் பார்க்கிறோம். தமிழ் மரபில் நின்றகோலப் பாராட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மகிழ்ச்சியை, பாராட்டை வெளிப்படுத்த மார்புறத் தழுவுவதும் (ஆலிங்கனம்), காலில் விழுவதும் (சாஷ்டாங்க நமஸ்காரம்) நடந்திருக்கின்றன. கூட்டமாக எழுந்து நின்று பாராட்டும் உணர்வும் பழக்கமும் மேற்கத்திய முறையாய் இருக்கக் கூடும்.
பாஞ்சாலி சபதத்தில் பார்த்தனும் பாஞ்சாலியும் சூரிய அஸ்தமனத்தைக் காண்கிறார்கள். அந்தக் காட்சியின் எழிலை 48 வரிகளில் பார்த்தன் அற்புதமாக எடுத்துரைக்கிறான். அதன் இறுதிப் பகுதி:
‘அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே, பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
சமையுமொரு பச்சை நிற வட்டங் காண்பாய்,
தரணியில் இங்குஇது போலோர் பசுமை உண்டோ?
இமை குவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லாது இடைஇடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத்திடுவாய் பல்லாண்டு வாழ்க என்றே'.
எழுந்து நின்று பாராட்டை உரைக்கச் சொல்கிறார் பாரதி. சமீப காலத்தில்தான் தமிழில் பிரபலமான ‘ஸ்டேண்டிங் அவேஷன்’ என்ற நடைமுறையைப் பாரதி ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியி ருக்கிறார். இன்றைய இளைஞர்கள் பாரதியைப் படித் தால் இன்னும் இப்படி நிறைய கண்டு ரசிக்க முடியும்.
காணாததைக் கண்டவர்
அடுத்து இன்னொன்று. எரிமலை வெடித்து மலை யொன்று நெருப்பு ஆறாய் உருகி ஓடும் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாம் நேரில் பார்க்காத பல காட்சிகள், தொலைக்காட்சியின் விளைவால் இன்று நம் மூளையில் பரந்துகிடக்கின்றன. ஆனால், பாரதி காலத்தில் அது சாதாரணம் இல்லை. எனினும், இத்தகைய காட்சியொன்றை பாரதி கவிதையாக்கியிருக்கிறார். துரியோதனனின் கோபத்தை வர்ணிக்கிறார் பாரதி:
குன்றம் ஒன்று குழைவுற்று இளகிக்
குழம்பு பட்டு அழிவு எய்திடும் வண்ணம்
கன்று பூதலத்து உள்ளுறை வெம்மை
காய்ந்து எழுந்து வெளிப்படல்போல்
(பாஞ்சாலி சபதம்).
கல்லைப் பிசைந்து கனியாக்கினார் மாணிக்கவாசகர் என்றால் குன்றம் ஒன்றைக் குழையச் செய்து இளக்குகிறார் பாரதி. அசாதாரணக் காட்சி அல்லவா இது! எரிமலைகள் இல்லாத நாட்டில் பிறந்த பாரதியார், எரிமலைகள் தீ கக்கும் நாடுகளுக்கும் பயணம் போகாத பாரதியார், எரிமலைக் குழம்புகளைத் தொலைக்காட்சிகளில் பார்க் காத பாரதியார், வெறும் பத்திரிகை அலுவல்களை மட்டும் கொண்டு நாடு விட்டு நாடு சென்று காணாத காட்சியெல்லாம் காட்டுகிறாரே! வெளிநாடுகளிலேயே காலம்கழிக்கும் நமது இளைஞர்கள் பாரதியைப் படித்தால் இன்னும் என்னென்ன கண்டு அறிந்தன காண்பரோ!
சாதாரண வருஷத்து தூமகேது
பத்திரிகையோடு பிணைந்திருந்ததால் காலமும் தொழில்நுட்பமும் சந்திக்கும் முனையில் பாரதி இருந்தார். இன்னும் சொன்னால் வருங்கால நிகழ்வுகளையும் ஊகித்திருந்தார். ஜப்பான் நாட்டு ஹைக்கூ பற்றி பாரதி பேசியிருப்பது ஒரு பருக்கை. ஹாலீயின் வால்நட்சத்திரம் பற்றி பாரதி பாடியிருந்தது இரண்டாவது பருக்கை. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அந்த வால்நட்சத்திரம் (பாரதியார் மொழியில் சொன்னால் தூமகேது), 1986-ல் பூமிக்குக் காட்சிதந்தது. அப்போது பாரதியார் பாடல் பிரபலமாகப் பேசப்பட்டது. பாரதியார் அந்த தூமகேதுவைப் பற்றி அதன் முந்தைய வருகை நிகழ்ந்த 1910-ல் பாடியிருந்தார். ‘சாதாரண’ என்ற பெயர் கொண்ட தமிழ் ஆண்டு அது. அதனால் ‘சாதாரண வருஷத்து தூமகேது’ என்று அந்தப் பாடலுக்குப் பெயர் சூட்டினார் பாரதி. ஆண்டுடன் தொடர்புடைய ஒன்றுக்கு ஆண்டின் பெயரைச் சூட்டியது எவ்வளவு நவீனம்! தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் பொருள்படுத்திப் பதிவுசெய்திருப்பது ஆச்சர்யம் தரும் செய்தி அல்லவா! அறிவியலில் ஆர்வமுள்ள இன்றைய இளைஞர்கள் இதைப் போல இன்னும் பல அம்சங்களைப் பாரதியிடம் காணக்கூடும்.
பாரதியின் நடையும் சொல்லாட்சியும்
இவை எல்லாம் சாதகமாக அமைய, இளைய தலைமுறையின் வாசிப்புக்குச் சவாலாக நிற்பது பாரதி நடை! ‘ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி’ எழுதுவதாகக் குறிப்பிட்டு எழுதப்பட்ட பாஞ்சாலி சபதத்திலேயே கடினமான பழந்தமிழ்ப் பதங்கள் இருக்கின்றன. ஆனால், கவிதையின் உள்ளோடும் ஒரு இழையைப் பிடித்துவிட்டால் போதும் அதைப் பற்றிக்கொண்டு வாசகர்கள் வெகுதூரம் பயணப்பட்டுவிட முடியும். சொற்களைப் போலவே, யாப்பு போற்றிய சந்தியுடன் கூடிய பாரதியின் பாடல்கள் சிலருக்குச் சிரமம் தருபவையாக இருக்கலாம். ஒரே ஒரு சான்றைப் பார்ப்போம்:
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
பார்மிசை நின்னொளி காணுதற் கலந்தோம்
சுருதிநின் சேவடி யணிவதற் கென்றே
கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம்
(பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி)
இதில் ‘காணு தற்கலந்தோம்’ என்ற தொடரை இளைய வாசகர்கள் பொருளுணர்ந்து படிக்க இயலாது. ‘காணுதற்கு அலந்தோம்’ எனப் பிரித்து வாசிக்க வேண்டும். ‘காண் பதற்காகத் துன்பப்பட்டோம்’ என்பது பொருள். கொஞ்சம் கூரிய வாசகருக்கு ‘பருதி’ என்ற சொல்லும் குழப்பம் தரும். ‘பரிதி’தானே சூரியன் என அவர் எண்ணுவார். பரிதிதான் சூரியன். ஆனால், சுருதி, (கருதி, நிருதர்) எனத் தொடர்ந்து வரும் எதுகை நோக்கி பரிதி– பருதி என்றானது என்று யோசித்தால் புரியவரும்.
அடுத்தது, பாரதியின் பழந்தமிழ் சொற்களின் ஆட்சி. அகராதியின் துணையின்றி இன்றைய வாசகர் புரிந்துகொள்ள சிரமம் தரும் சொற்களில் சில. ‘எம்பி, ஓதை, கவறு, சிலை (அதாவது, ‘வில்’ என்ற பொருளில்), சீரை’ என்பன அவை. இவ்வகையில் 500-க்கு மேற்பட்ட சொற்கள் பாரதியிடம் உள்ளன. தாயுமானவரைப் போல வடசொல் பொழிவு பாரதியிடம் இல்லை. எனினும் சித்தாந்தக் கலைச்சொற்கள் பல உண்டு. இவற்றின் பொருள் அறியும் வகையில் பாரதி பாடல் அமையுமானால் அவை இளைஞர்களை ஈர்க்கலாம்.
இளைய தலைமுறையினர் பயில்வதற்கேற்ற பாரதி பிரதியை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. ‘இங்குச், அங்குச்’ என்று இருக்க வேண்டும் என்று பக்கத்துக்குப் பக்கம் குறிப்பிடும் ஆய்வுப் பதிப்புகள் ஆய்வாளர்களுக்கானவை. கால வரிசையில் அமையும் பதிப்பில் பாஞ்சாலி சபதத்தின் இரண்டு பாகங்களுக்கும் இடைவெளி பல ஆண்டுகளில் அமையும். அதுவும் இளைஞர்களுக்கு ஏற்றதல்ல. இளைஞர்களுக்கு ஏற்ற பாரதி பிரதியைத் தயார்செய்ய வேண்டும். இல்லையெனில் நண்பர் சொன்ன மாதிரிதான் நடக்கும். “என் மகனுக்கு பாரதியைப் பிடிக்காது. சுக்கு நூறாக பாரதி கவிதைகளைக் கிழித்துப் போட்டு விட்டான்” என்றார் நண்பர். “மகனின் வயது என்ன?” என்றேன். “இரண்டரை!” என்றார். ஆம், பாரதியை இளைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு அவர் களிடம் கொண்டுசெல்லவில்லை என்றால், இந்தக் குழந்தையைப் போலவே அவர்கள் பாரதியைக் கிழித்துப் போடுவார்கள் அல்லது கடந்துபோவார்கள்.
- பழ. அதியமான், எழுத்தாளர் - ஆய்வாளர், தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago