அடக்குமுறைக்கு அஞ்சாத போராளி

By வா.ரவிக்குமார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் நம் சமகாலத்தில் வாழ்ந்த அரசியல் போராளி. மங்களூரில் பிறந்து மும்பையில் தொழிற்சங்க இயக்கத்தில் தடம் பதித்து, டெல்லி அரசியலில் முத்திரை பதித்தவர். நாற்பது வயது ஆகும் முன்பே பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்னாண்டஸ், இடதுசாரி கட்சிகளுக்கு அப்பால் இந்திய தொழிற்சங்க இயக்கத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தியவர்.

அவர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோதுதான் இந்திய வரலாறு அதுவரை கண்டிராத மாபெரும் ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டம் 1974-ம் ஆண்டு நடைபெற்றது. அதனால் நாடே முடங்கியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி உள்நாட்டு அவசரநிலையை அறிவிப்பதற்கு அந்த வேலைநிறுத்தப் போராட்டமும் ஒரு காரணமாகும். அவசரநிலைக் காலத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். ஆனால்,  ஓராண்டு காலம் வரை பெர்னாண்டஸைக் கைதுசெய்ய முடியவில்லை. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அவர் தலைமறைவாக இருந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்தார்.

 1976 ஜூன் மாதத்தில் அவர் கைதுசெய்யப்பட்டபோது அவரை சங்கிலியால் பிணைத்து வீதிகளில் இழுத்துச் சென்றது போலீஸ். கைகளில் சங்கிலியோடு அவர் காட்சியளிக்கும் புகைப்படம் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக அவரை மாற்றியது. கலைந்த தலையும், கசங்கிய உடையும் அவர் ஒரு கலகக்காரர் என்பதன் அடையாளங்களாகக் கொண்டாடப்பட்டன. ‘பரோடா டைனமைட்’ வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அவர் சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். நெருக்கடிநிலைக்குப் பிறகு அமைந்த ஜனதா கட்சி அரசில் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர்  அமெரிக்க நிறுவனங்களான ஐபிஎம், கோகோ கோலா ஆகியவற்றை நாட்டைவிட்டே வெளியேற்றினார்.

அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி

1991-ல் நிகழ்ந்த ராஜீவ் காந்தியின் படுகொலையை முன்வைத்து அன்றைய அதிமுக அரசு தமிழ்நாட்டில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்த நேரம். விடுதலைப் புலிகளோடு தொடர்புகொண்டவர் எனச் சொல்லி எவரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்ற சூழல். அப்போதுதான் 1992 ஜனவரியில் ‘எண்பதுகளில் அரசியலும் பொருளாதாரமும்’ என்ற இரண்டு நாள் மாநாட்டை நானும் சில நண்பர்களும் இணைந்து நடத்திவந்த ‘நிறப்பிரிகை’ என்ற ஆய்விதழின் சார்பில் திருச்சியில் ஒருங்கிணைத்தோம். அதில் சிறப்புரையாற்ற வந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதன் பிறகுதான் இங்கு நிலவிவந்த அரசியல் இறுக்கம் தளர்ந்தது.

மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் அவர். ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், பியுசிஎல் முதலான மனித உரிமை அமைப்புகளில் அங்கம் வகித்தவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்துவந்த தேசிய இன உரிமைகளுக்கானப் போராட்டங்களை ஆதரித்தவர். ஈழத்தமிழர் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றவர்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ உதவிகளை அவர் செய்திருக்கிறார். எளிமை என்பது அவரது இயல்பாக அமைந்திருந்தது.இனிமையும் பொறுப்புணர்வும் கொண்டவர். அவருக்குக் கடிதம் எழுதினால் உடனடியாக ஒரு அஞ்சல் அட்டையில் அவரிடமிருந்து பதில் வரும். அவர் அமைச்சராக இருந்த நேரத்திலும்கூட அந்த கடமையுணர்வில் அவர் தவறியதே இல்லை.

காங்கிரஸ் எதிர்ப்பு... ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு!

நெருக்கடிநிலைக் காலத்து அனுபவங்கள் அவரது காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டை இறுகச் செய்திருந்தன. அவையே அவர் பாஜகவுடன் நெருங்கிச் செல்வதற்கும் காரணமாக அமைந்தன. தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் இரண்டு முறை பாஜக ஆட்சி கவிழ்ந்த நிலையில் அது மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த கூட்டணியை அமைப்பதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முக்கிய பங்காற்றினார். அதனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் ஆக்கப்பட்டதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஜனதா கட்சி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்களாகத் தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிரச்சினை எழுப்பியவர்களில் ஜார்ஜ் பெர்னாண்டசும் ஒருவர். இரண்டே ஆண்டுகளில் ஜனதா அரசு கவிழ்வதற்கு அந்தப் பிரச்சினையும் ஒரு காரணமாகும். ஆனால் அதே பெர்னாண்டஸ்தான் 2002-ல் குஜராத் கலவரம் நடந்தபோது நரேந்திர மோடியை ஆதரித்து நின்றார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ராணுவ துருப்புகள் குஜராத் வீதிகளில் அணிவகுப்பு நடத்தியபோது அவரும் ராணுவ ட்ரக் ஒன்றில் வீதிகளில் பயணம் செய்து பார்வையிட்டார். அவர் உடனடியாக ராணுவத்தை அனுப்பியதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று சிலர் அவரைப் பாராட்டுகின்றனர்; ராணுவ வீரர்கள் பயணிப்பதற்கு வாகனங்களை மோடி அரசு ஏற்பாடு செய்யாததால் ராணுவ வீரர்கள் ஒருநாள் முழுவதும் காத்திருக்க நேர்ந்தது. அதனால் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பல பேர் கொல்லப்பட்டனர். அப்படியிருந்தும் பெர்னாண்டஸ் குஜராத் முதல்வராக இருந்த மோடியை ஆதரித்தார் எனச் சிலர் விமர்சிக்கின்றனர். அதில் எது உண்மை எனத் தெரியாவிட்டாலும் அன்றைய பிரதமர் வாஜ்பாயியே விமர்சித்த குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சிக்கு பெர்னாண்டஸ் நற்சான்று வழங்கியது தகிக்கும் நிஜமாக இருக்கிறது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் அன்றைய பிரதமர் வாஜ்பாய் பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனைகள் நடத்த அனுமதியளித்தார். அந்த சோதனை நடக்கும்வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கே அது தெரியாது எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் எந்தவொரு அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை.  ‘‘அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் (சிடிபிடி) என்ற பெயரில் அமெரிக்கா செலுத்திவந்த மேலாதிக்கத்துக்கான பதிலடி’’ என அதற்கு அவர் விளக்கம் தந்தார்.

வினோதமான விளக்கம்

பாஜகவுக்கு அவர் வழங்கிவந்த நிபந்தனையற்ற ஆதரவைப் பார்த்தவர்கள் மதச்சார்பின்மை குறித்து உங்களது நிலைபாடு என்னவென்று கேட்டபோது “இந்தியர்களை மதச்சார்பற்றவர்கள், சாதாரணமானவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். நான் சாதாரணமானவர்களின் பிரிவைச் சேர்ந்தவன்” என வினோதமான விளக்கம் ஒன்றை அவர் அளித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராக இருந்து பல்வேறு கட்சிகளையும் ஒற்றுமையோடு வைத்திருக்க முடிந்த அவரால் தனது கட்சியில் அந்த ஒற்றுமையை நிலைநாட்ட முடியவில்லை. அதன் உச்சகட்டமாக 2009 பொதுத் தேர்தலில் அவரது கட்சியே அவருக்கு ‘சீட்’ தர மறுத்தது.

கட்சித் தலைவராக, மத்திய அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் விமர்சிக்கப்படலாம். ஆனால் எழுத்தாற்றல், பேச்சாற்றல், பன்மொழி ஆற்றல் நிறைந்த ஒரு ஆளுமையாக, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளியாக அவர் என்றென்றும் இந்திய அரசியலில் நினைவுகூரப்படுவார்.

- ரவிக்குமார், விசிக பொதுச்செயலாளர்,

தொடர்புக்கு: adheedhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்