நீலம் திறந்துவைத்திருக்கும் வானம்!

By சந்தனார்

“இங்க சடங்கு நடக்கப் போவுதே” என்று தழுதழுக்கும் குரலில் அந்த இளைஞர் தொடங்கும் ஒப்பாரிப் பாடலுடன் அதிரும் பறையிசை பார்வையாளர்களின் நரம்பை நெளியச் செய்கிறது.   “கள்ள மெளனி நீ” என்று தொடங்கும் ராப் பாடல் அரசுகளின் அதிகார வெறியை எள்ளலுடன் சுட்டுகிறது. சென்னையின் கலை விழாக்களின் நிறத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பின் சார்பில், டிசம்பர் 29,30,31 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்ட ‘வானம்’ கலைத் திருவிழா புறக்கணிக்கப்பட்ட கலைகளுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வாகக் கவனம் ஈர்த்திருக்கிறது. சென்னையின் டிசம்பர் சீசனுக்கு ஒரு புது வருகை வானம்!

சாதிய ஒடுக்குமுறை, பாலினரீதியான ஒடுக்குமுறை என பல்வேறு சமூக நிகழ்வுகள் மீதான எதிர்வினை, பயிற்சிப் பட்டறை, ஓவியக் கண்காட்சி, புத்தகக் காட்சி என களைகட்டிய இந்நிகழ்ச்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகள் எந்தக் கலைக்கும் கீழானவையல்ல என்பதை உரக்கப் பதிவுசெய்திருக்கிறது. 1,000 கலைஞர்களின் பறையிசையுடன் தொடங்கி நிகழ்ச்சியில்  குஜராத் சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கவிஞர்கள் என்.டி.ராஜ்குமார், ஆதவன் தீட்சண்யா, கபிலன், சின்னப் பொண்ணு, நடிகர்கள் கலையரசன், ரித்விகா, ஹரி கிருஷ்ணன் என்று பலர் கலந்துகொண்டனர்.

சமூக நிகழ்வுகள், முரண்கள் குறித்த உரையாடலுக்கும், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகிய மூன்று மிக முக்கியத் தலைவர்களின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் கருத்து வெளிப்பாட்டுக்கும் முக்கியமான தளமாக இந்நிகழ்வு அமைந்தது. ரஞ்சித்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக் குழுவின் முதல் ஆல்பமான ‘மகிழ்ச்சி’ வெளியிடப்பட்டிருக்கிறது. ஒப்பாரிப் பாடல்கள், கானா பாடல்கள், ராப் பாடல்கள் என்று களைகட்டிய நிகழ்ச்சி இது. பேசப்படாத தலித் தலைவர்கள், செயல்பாட்டாளர்களின் சிலைகள், பகத் சிங், ரோசா பார்க்ஸ், மார்ட்டின் லூதர் கிங், பாப் மார்லி என்று பல்வேறு ஆளுமைகளின் ஓவியங்கள் மேடைகளிலும் பிற இடங்களிலும் தென்பட்டன.

மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட ஜிக்னேஷ் மேவானி, ரஞ்சித்துடன் இணைந்து நடனமாடினார். “இது யாருக்கும் எதிரானதல்ல, அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி” என்று பா.ரஞ்சித்தால் முன்வைக்கப்பட்ட நிகழ்வு, சாதி ரீதியாக, பாலினரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கலைஞர்களும் உத்வேகம் தரும் நிகழ்வாக அமைந்தது புத்தாண்டை நம்பிக்கையுடன் தொடங்கிவைத்திருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்