ஜார்ஜ் பெர்னாண்டஸின் அவதாரங்கள்

By நிஸ்துலா ஹெப்பர்

கர்நாடக மாநிலம், மங்களூருவில் 1930-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த பெர்னாண்டஸ் கத்தோலிக்கத் துறவியாகப் பயிற்சி பெறுவதற்காக மும்பைக்கு 1946-ம் ஆண்டு அனுப்பப்பட்டார். ஆனால், அவரோ அதற்குப் பதிலாக தனது திறனை வறிய மக்களை ஒருங்கிணைப்பதில் கண்டு தொழிற்சங்கங்களை உருவாக்கினார்.

மும்பையில் கப்பல்களைப் பழுது பார்க்கும் பட்டறைப் பகுதியின் ராஜாவாக அறியப்பட்டிருந்த தொழிற்சங்கத் தலைவர் ப்ளேசிட் டீ மெல்லோவும் ராம் மனோகர் லோகியாவும் அவர் மீது தாக்கம் செலுத்தியவர்கள். சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளராக, 1976-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் சக்தி வாய்ந்த எஸ்.கே. பாட்டீலைத் தோற்கடித்த தருணம் மிகப் பெரியது. தேர்தலுக்குப் பிறகு அவருக்கு அது ‘ஜெயன்ட்-கில்லர்’ என்ற செல்லப்பெயரையும் பெற்றுத்தந்தது.

காங்கிரஸுக்கு எதிரான அரசியல் எழுச்சி நாடு முழுவதும் காலூன்றிய காலகட்டத்தில் அவரது தொழிற்சங்கவாத அரசியல் அவரை இயல்பான எதிரியாக மாற்றியது. 1976-ல் பரோடா வெடிகுண்டு சதி வழக்கில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு 1974-ல் அவர் ஒருங்கிணைத்த ரயில்வே தொழிலாளர் போராட்டம் தான் இன்றுவரை இந்தியாவில் நடந்ததிலேயே பெரிய ரயில் தொழிலாளர் போராட்டமாகும். கைவிலங்குகளுடன் முஷ்டியைத் தூக்கி தன் எதிர்ப்பைத் துணிச்சலாகக் காட்டியபடி போலிஸுடன் செல்லும் அவரது புகைப்படம் நெருக்கடிநிலை காலகட்டத்தின் மிகச் சக்தி வாய்ந்த சித்திரமாக மாறியது. அப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருந்த தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த வழக்கு தொடர்பான பணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டார். தேசிய அரசியலில் அவரது முழுமையான நுழைவு 1977- ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிஹாரின் முஸாபர்பூர் தொகுதியில் வென்றதன் மூலம் நிகழ்ந்தது. அதே இடத்தின் பிரதிநிதியாக பலமுறை வென்றிருக்கிறார். கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரேயொரு முறை போட்டியிட்ட 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

சோஷலிஸ்ட்டிலிருந்து பாஜக நோக்கி

மொர்ராஜி தேசாயின் தலைமையிலான ஜனதா கட்சி அரசில் பெர்னாண்டஸ் தொழில் துறை அமைச்சராக்கப்பட்டார். குறுகிய கால ஜனதா அரசு கவிழ்ந்த பிறகு நடந்த தேர்தலில் 1980-ல் முஸாபர்பூர் தொகுதியை அவரால் தக்கவைக்க முடிந்தது. அத்துடன் 1980-கள் முழுவதும் ஜனதா கட்சி எதிர்கட்சியாக எடுத்த பல்வேறு அவதாரங்களில் முக்கியமானவராக இருந்தார்.

1989-ல், புதிதாகத் தொடங்கப்பட்ட ஜனதா தளத்தின் வேட்பாளராக இருந்து வென்ற பெர்னாண்டஸ் வி.பி.சிங் தலைமையிலான அரசில் ரயில்வே துறை அமைச்சராக்கப்பட்டார். கொங்கண் பிராந்தியத்தையும் மலபார் கடற்கரைப் பாதையையும் இணைத்த கொங்கண் ரயில் திட்டம் அவரது பிரமாண்ட சாதனையாகும். மண்டல் சீர்திருத்தங்களின் வாயிலாக புதிதாக எழுச்சி பெற்ற லாலு பிரசாத்தின் ஒதுக்குதல் தாளாமல், பெர்னாண்டஸும் இன்றைய பிஹாரின் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ஜனதா தளத்தை உடைத்து

1995-ம் ஆண்டு சமதா கட்சியை உருவாக்கினார்கள். அரசியல் ரீதியான ஒதுக்கலைத் தவிர்ப்பதற்காக பிஹாரின் இன்னொரு பெரிய சக்தியான பாஜகவுடன் தந்திரமான கூட்டணி அமைக்கப்பட்டது. “அவரது வாழ்க்கையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தியலில் சமரசம் செய்துகொண்டதேயில்லை, சூழ்நிலைகள் பாஜகவுடன் எங்களைக் கூட்டணி சேரச் செய்தன, அப்படியும் நாங்கள் எங்கள் கருத்தியலை உயிர்ப்புடன் வைத்திருந்தோம்” என்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஹார் தலைவரான வசிஷ்ட நாராயண் சிங். தேசிய ஜனநாயக கூட்டணிக்கான அவரது ஆதரவு நிலைப்பாடும் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்பட்டதும் சங் பரிவாரத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு உதவி செய்த முக்கியமான செயல்பாடுகளென்பதில் சந்தேகமேயில்லை.

பிராந்தியம், மத எல்லைகள் மட்டுமின்றி தன் பிம்பத்தையும் உடைத்த மனிதராக விளங்கிய  சோஷலிஸ்டான ஜார்ஜ் பெர்னாண்டஸின் இந்த அவதாரத்தால் சமாதானமாகாதவர்கள் வாஜ்பாய் அரசு சந்தித்த பிரச்சினைகளையெல்லாம்  ‘தீர்க்கும் தலை’ யாக மாறியபோது காங்கிரஸுக்கு எதிரான புதிய வேடமென்று வேண்டுமானால் சமாதானப்பட வேண்டியிருந்தது. பெர்னாண்டஸ் ஒருபோதும் நண்பர்கள் அல்லது எதிரிகளிடம் விளக்கம் சொன்னதோ பின்வாங்கியதோ இல்லை. பாஜக அணியைத் தழுவியதோடு மட்டுமின்றி, அணுசக்திவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக இருந்தாலும் பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் இருந்த போதுதான் பொக்ரான்-2 சோதனைகள் நடத்தப்பட்டன. அவரால் வெவ்வேறு அடையாளங்களில் சுழன்றமர முடிந்தது. மங்களூரைச் சேர்ந்த கத்தோலிக்கரான பெர்னாண்டஸை சாதி அரசியலில் ஊறித்தேய்ந்த பிஹாரில் பல முறை வெற்றியடையச் செய்ததே அதற்குச் சாட்சி.

கடைசி ஆண்டுகள்

பாதுகாப்புத் துறை அமைச்சராக பெர்னாண்டஸ் இருந்தபோது, உலகிலேயே உயரமான சியாச்சின் மலைப்பகுதிக்கு 18 தடவைகள் சென்று சாதனை படைத்தவர். சில சமயங்களில் கிறிஸ்துமஸ் கேக்குகளைச் சுமந்துகொண்டு படை வீரர்களுடன் அந்த நாளைக் கழிப்பதற்காக மட்டுமே போயிருக்கிறார். அதே பாதுகாப்புத் துறை அமைச்சர் தான் படைவீரர்களுக்கான சவப்பெட்டி ஊழலில் சிக்கினார். 2004-ல் வாஜ்பாய் அரசு வீழ்ந்த பிறகு, ஐக்கிய ஜனதா தளத்தில் புதிய நட்சத்திரமாக உருவான நிதீஷ் குமாரின் நிழலில் பெர்னாண்டஸ் தாம் ஒதுக்கப்படுவதை உணர்ந்தார். 2009 மக்களவைத் தேர்தல்களில் அவருக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு அவரது உடல்நிலை காரணமாகச் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால் மரணம் வரை அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேர்ந்தது.

அவரைப் பராமரிப்பதற்கான உரிமை கோரி அவரிடமிருந்து பிரிந்துபோன மனைவியான லீலா கபீரும் அவரது மகனும் பெர்னாண்டஸின் நெடுநாள் துணைவியான ஜெயா ஜேட்லியை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். குளிர்மிகுந்த ஜனவரி காலையில் நடந்த அவரது மரணம்,  கைவிலங்கை ஏந்தி நின்ற ஒரு பிம்பத்தால் வரையறுக்கப்பட்ட இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான ஒரு அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

- ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்