மிச்சமிருக்கும் விடுதலைப் போராட்டம்... காந்தி இருக்கிறார்; காந்தியர்கள் இருக்கிறார்களா?

By சமஸ்

இந்த இலையுதிர்காலத்தின் தொடக்க நாட்களில் ‘குறுங்காடு’ தங்கசாமி உதிர்ந்துபோனார். தன்னுடைய சொந்த ஊரான சேந்தங்குடியில் ஒரு சின்ன காட்டையே உருவாக்கியவர் தங்கசாமி. ஐம்பதாண்டுகளில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்ததோடு அல்லாமல், ஊர் ஊராகச் சென்று மரங்களை வளர்க்கப் பிரச்சாரம் செய்தார். கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், விதைகளைத் தன் கை வழியே பரிமாறியவர் தங்கசாமி. தொடக்கத்தில் விவசாயத்திலிருந்து கரைசேர பொருளாதாரரீதியான ஒரு ஏற்பாடாக மரம் வளர்ப்பைப் பார்த்தவர், பிற்பாடு சுற்றுச்சூழலில் அது உண்டாக்கிய மாற்றங்களைப் பார்த்து வியந்து தன்னை ஒரு சூழல் பாதுகாப்புச் செயல்வீரராக மாற்றிக்கொண்டார். ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் மூன்றில் ஒரு பங்கையேனும் மரம் வளர்க்க வேண்டும் என்பார் அவர். ஒரு வானொலி உரைச்சித்திரத்தைக் கேட்டு, மரம் வளர்ப்பை நோக்கித் திரும்பிய தங்கசாமியை மரபுவழி வேளாண்மையை நோக்கித் திருப்பியவர் நம்மாழ்வார்.

திருச்சியில் இருந்த நாட்களில் ஒரு காலகட்டம் நெடுகிலும் நம்மாழ்வாருடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஸ்ரீரங்கத்தில் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். நல்ல பனிக்காலம். அதிகாலையில் ததும்பத் ததும்ப நீர் செல்லும் காவிரியைக் கடந்து அவர் வீட்டுக்குச் செல்வேன். மொட்டை மாடியில் சின்ன குடிலில் இருப்பார். அதுவுமே அவருக்கு முகாம் அலுவலகம் மாதிரிதான் இருந்தது. சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். அடுத்து, கூட்டங்களுக்கு அவரை அழைத்துச்செல்ல விவசாயிகள் வருவார்கள். இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், அதிகபட்சம் நூறு பேர். பெரும்பாலான கூட்டங்களில் இவ்வளவு பேர்தான் பார்வையாளர்கள். தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகப் போய் பேசினார். இது போக ஓரிருவராகவோ நான்கைந்தராகவோ பார்க்க வருபவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். “எண்ணிக்கை முக்கியம் இல்ல. விதை ஆழமா விழணும். நல்ல விதை ஒண்ணு பிடிச்சுக்கிட்டா போதும். மொத்த சமுதாயத்துக்கும் அது இருக்குற வரைக்கும் நிழல் தந்துடும்!”

தனி ஒரு மனிதராகக் கடந்த கால் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உணவுப் பண்பாட்டில் நம்மாழ்வார் நிகழ்த்திய மாற்றம் வேறு யாரும் செய்திராதது. தமிழ்நாடு முழுக்க இன்று சாலையோரங்கள் பழச்சாறுக் கடைகளாலும் கரும்புச்சாறு கடைகளாலும் இளநீர் வண்டிகளாலும் நிரம்பியிருக்கின்றன. சர்வதேச அளவில் குளிர்பானத் துறையில் கோலோச்சும் இரு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விற்பனைச் சரிவை ஈடுகட்ட வழி தேடி கள ஆய்வு நடத்துகின்றன. மதுக்கடைகள், பேரங்காடிகள், பெருந்திரையரங்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களைத் தாண்டி தமிழ்நாட்டில் குளிர்பானம் விற்பதில்லை. தமிழில் தங்களுடைய குளிர்பானத்தின் பெயரை மாற்றிப்பார்த்தாலேனும் விற்க முடியுமா என்று நிறுவனங்கள் கையாண்டுபார்த்த உத்தியெல்லாம்கூட பலித்தபாடில்லை.

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பாரம்பரிய வணிகச் சமூகங்கள், உள்ளூர்க்காரர்களிடம் இருந்த சமையல் எண்ணெய், உலகமயமாக்கச் சூழலில் அவர்களுடைய கையிலிருந்து நழுவி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாக மாறி புட்டிகளில் அடைத்து விற்கப்பட்ட சூழல் இன்று படிப்படியாக மாறுகிறது. ஊர்கள்தோறும் மரச்செக்கு எண்ணெய்க் கடைகள். நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காண்ணெயை அங்கைக்கு அங்கேயே செக்கில் ஆட்டி விற்கிறார்கள். பெரிய நிறுவனங்களால் பாலிதீன் பைகளிலும் பிளாஸ்டிக் புட்டிகளிலும் அடைக்கப்பட்டுவந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வியாபாரம் ஸ்தம்பித்து நிற்கிறது.

மூன்று தலைமுறைகளாக அற்றுப்போயிருந்த சிறுதானிய உணவுக் கலாச்சாரம் மீண்டிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் தினை, சாமை, கேழ்வரகு, கம்பு கிடைக்காத ஊர்கள், அங்காடிகள் இல்லை. இவை ஒவ்வொன்றின் பின்னாலும் நம்மாழ்வார் சிரிக்கிறார். நம்மாழ்வாரின் ஆன்ம சக்தி காந்தி. தங்கசாமியும் காந்தியோடு தன்னைப் பொருத்திக்கொண்டவர்தான்.

காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் எவ்வளவு உயிர்ப்போடு சமூகத்தில் இயங்குகிறார்; அவருடைய கனவுகளும் பாதைகளும் நவீன உலகில் நாளுக்கு நாள் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கதாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால், இவர்களெல்லாம் தங்களுடைய வாழ்க்கையின் வழியே காந்தியைக் கண்டடைந்தவர்கள். தங்களுடைய களச்செயல்பாடுகளின் வழி காந்தியை அர்த்தப்படுத்துபவர்கள். தத்துவார்த்தமாகவோ, அமைப்புரீதியாகவோ காந்தியர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

இந்தியா பரிபூரண சுதந்திரத்தை அடைந்துவிட்டதா? ஒரு காந்தியர் அப்படிக் கருத முடியுமா? காந்தியின் பார்வையில் சுயராஜ்ஜியம் என்பது எது? அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் காந்தியின் பிரதான இலக்குகளை அவரிடம் கேட்டார். காந்தி சொன்னது, “முதலாவது, இந்து முஸ்லிம் ஒற்றுமை. இரண்டாவது, தீண்டாமை ஒழிப்பு. மூன்றாவது, சுதேசி.” பிரிட்டிஷாரை வெளியேற்றுவதை காந்தி இலக்காகச் சொல்லவில்லை. இவை மூன்றும் நடந்தால் பிரிட்டிஷாருக்கு இந்தியாவில் வேலை இருக்கப்போவதில்லை என்பது போக, இந்தியாவின் உண்மையான சுயராஜ்ஜியம் - இந்தியாவின் அக விடுதலை இவற்றினூடாகவே சாத்தியம் என்றே காந்தி நம்பினார் என்று சொல்லலாம்.

காந்தியின் மூன்று இலக்குகளையும் திரும்பத் திரும்ப வாசித்தால் ஆழமாக அவை ஒன்றோடொன்று பிணைந்திருப்பது புலப்படும். இந்தியாவை எவ்வளவு ஆழமாக அவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதும் புலப்படும். எந்தவொரு தேசியத்துக்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள குறைந்தது இரண்டு பொது அம்சங்கள் தேவைப்படுகின்றன. 1. ஒரு சமூகத்தின் பெரும்பான்மையின மக்களை ஒரே அடையாளத்தின் கீழ் திரட்ட, அதன் புவியியல் எல்லைக்குட்பட்ட இன்னொரு குறிப்பிட்ட இனத்தை எதிரியாகக் கட்டமைத்தல். 2. ஒரு மையப்படுத்தப்பட்ட தேசிய அரசின் இருப்பை நியாயப்படுத்த பொது எதிரியாக மற்றொரு நாட்டைக் கட்டமைத்தல்.

காந்தியின் காலத்திலேயே இந்திய தேசியவாதம் முஸ்லிம் மக்களையும், தொடர்ந்து பாகிஸ்தானையும் தனக்கான இலக்காகக் கொண்டுவருதை அவர் உணர்ந்தார். விளைவாகவே தன்னுடைய செயல்திட்டங்களில் முதன்மையானதாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அவர் குறிப்பிட்டார். சமத்துவரான அவருடைய இதயத்தில் ஆழமான ரணத்தை இந்தியாவின் தீண்டாமை உருவாக்கியிருந்தது. “நம்மில் ஒரு பகுதி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக வைத்திருக்கும் நமக்கு சுயாட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை” என்று அவர் சொன்னது இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை சாத்தியமாகாத வரை, இந்தச் சமூகம் அடுத்த நிலை நோக்கிச் செல்ல வழியே இல்லை என்பதன் வெளிப்பாடு. காந்தி முன்வைத்த சுதேசி கோட்பாடு இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சூழல் பயங்கரவாதத்துக்கான உறுதியான பதிலீடு. காந்தியின் சுதேசி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதல்ல; இந்த மண்ணின் மரபுவழி எளிய வாழ்க்கைதான் அது.

காந்தி உருவாக்க நினைத்த இந்திய தேசியம் வேறு. இன்றைய தேசியக் கொடியின் மையத்தில் இருக்கும் தர்மச் சக்கரத்தைக்கூட வன்முறையின் வடிவமாகக் கருதி மறுதலித்தவர் அவர். நாட்டை வரைபடமாகக் கற்பிதம் செய்யும் தேசியத்துக்கு மாற்றாக, நாட்டை மக்களாகப் பார்க்கும் பார்வையைக் கொடுத்தவர். பிரிட்டிஷார் வெளியேறிய வேகத்தில் காந்தி கொல்லப்பட்டுவிட்ட சூழலில், நேரு அரசும் அடுத்தடுத்து வந்த அரசுகளும், அராஜகரான காந்தியை இந்திய அரசின் முத்திரையாக்கியது அவர்களின் ஆகச் சாதுரியமான செயல்திட்டங்களில் ஒன்று. ஆனால், உண்மையான காந்தி கலகக்காரர்.

விடுதலைக்கான போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. இன்றைய நாளில் இதை எழுதுகையில் காந்தியின் செயல்திட்டங்கள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. ஒரு காந்தியனாக, காந்தியர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இன்று இந்நாட்டில் முஸ்லிம்கள், தலித்துகள், விவசாயிகள் நிலை என்ன? கண் முன்னே அவர்கள் இந்நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாகப் படிப்படியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் தரப்பில் நின்றல்ல; இந்துக்களில் ஒருவனாகவே இதை எழுதுகிறேன். தலித்துகளின் தரப்பில் நின்றல்ல; ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவனாகவே இதை எழுதுகிறேன். குடியானவர்களில் ஒருவனாக அல்ல; அவர்களுக்கு வெளியே நிற்கும் கும்பலில் ஒருவனாக நின்றே இதை எழுதுகிறேன். காந்தியின் பிரதான மூன்று செயல்திட்டங்களுமே இன்று திக்கற்று நிற்கின்றன. காந்தியர்களும், காந்தி அமைப்புகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? போராட்டத் தருணங்களில் காந்தியர்கள் இன்று யார் பக்கம் நிற்கிறார்கள்?

இந்திய அரசு எப்படி காந்தியை ஒரு அரச முத்திரையாக மாற்றியதோ, காந்தியைப் பேசும், காந்தியைத் தங்களோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் காந்தியர்களும் அப்படியே காந்தியை ஒரு சாதுவாக, சோம்பியாக மாற்றிவிட்டார்கள். தங்களுடைய கோழைத்தனத்தால், சுயநலத்தால் - ஆம் திட்டவட்டமாக அது கோழைத்தனமும் சுயநலமும்தான் - மிகப் பாதுகாப்பான ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு தங்கள் வசதிக்கேற்றபடி காந்தியை வெற்று அடையாளமாக மாற்றிவிட்டார்கள். வெறுப்பு எப்போதெல்லாம் தலை தூக்கிறதோ அப்போதெல்லாம் அச்சம் தலைதூக்கிறது என்பதுதான் பொருள். காந்திதான் சொல்வார், “அச்சம்தான் முக்கியமான எதிரி. நாம் வெறுப்பு என்று எண்ணுகிறோம், அது அச்சம்தான்!” இந்தியா இன்று வெறுப்பால், சனாதனிகளால் கலங்குகிறது என்றால், காந்தியர்களின் தோல்வியும் அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

மக்களிடம் என்றும் காந்தி இருப்பார். காந்தியர்கள் மக்களிடம் இருக்கிறார்களா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்