பிரிவினையை வென்ற பன்மைத்துவம்!

By தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

இந்த வாரம் மிகவும் உற்சாகமாகக் கழிந்தது. முதலில் பிரிட்டனுக்குச் சென்று ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் எப்படி செவிசாய்க்கிறார்கள் என்று நேரில் பார்த்தேன். அதன் பிறகு, கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு நாளன்று ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் நகருக்குச் சென்று, பிரிவினை கோரும் அந்த நாட்டு கேடலான் ஆதரவாளர்களின் ஏமாற்றத்தையும் நேரில் கண்டேன். தனி நாடு கோரிக்கையைப் பெரும்பாலான ஸ்காட்லாந்துக்காரர்கள் நிராகரித்தது எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் அப்படி நிராகரித்திருக்காவிட்டால், உலகில் அமெரிக்காவின் உற்ற நண்பனின் சிறகு ஒடிக்கப்பட்டிருக்கும்.

நம்முடைய பலத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாயது நம்முடைய பன்முகத்தன்மை. வெவ்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், மதங்களைக் கொண்ட மக்களைக் கொண்டு அற்புதமான ஒரு நாட்டை உருவாக்கியிருக்கிறோம். வெவ்வேறு கலாச்சாரங் களையும் நடைமுறைகளையும் கொண்ட மக்களாக இருப்பதால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பலமும் இணைந்து செயல்பட்டு நாட்டை வலுமிக்கதாக மாற்றியிருக்கிறது.

பன்மைத்துவத்தின் வெற்றி!

வேறு எந்த மேற்கத்திய நாட்டில் ஒரு கருப்பினத் தவரைத் தொடர்ந்து இரண்டு முறை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், அதுவும் அவருடைய பெயரின் நடுவில் உசைன் என்று வரும்போது, அதுவும் அவருடைய தாத்தா முழுக்கமுழுக்க ஒரு முஸ்லிமாக இருந்தவர் என்று தெரிந்தும்? பாகிஸ் தானிலிருந்து வந்து குடியேறியவர் பிரிட்டனில் பிரதமர் ஆவதையோ, மொராக்கோவிலிருந்து வந்து குடியேறியவர் பிரான்ஸில் அதிபராவதையோ என்னுடைய வாழ்நாளில் பார்க்க முடியும் என்று எனக்கு நிச்சயம் நம்பிக்கையில்லை. பன்மைத் துவத்தின் வெற்றி இது.

பன்மைச் சமூகம்தான் இன்றைய உலகில் அதிகம் சாதகமானது, ஒரு சமூகம் வெவ்வேறு இனக் குழுக்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பது யதார்த்தம்தான். உதாரணம்: சிரியா, இராக். ஒரு சமூகத்தில் பன்முகத் தன்மை என்பதே ஒரு சாதனைதான். உதாரணம்: அமெரிக்கா.

பன்மைச் சமூகம் என்பதால், நம்முடைய தனித் தன்மையையும் லட்சியங்களையும் இழந்தே தீர வேண்டும் என்ற அவசியமில்லை; நம்முடைய மத வேறுபாடுகளையும்கூடக் கைவிட்டுவிடாமல், அதே சமயம் ஒரு மதம் இன்னொன்றைப் புரிந்து கொண்டு ஆதரிப்பதாக மாற்றிக்கொள்ளலாம். பன்மைத் தன்மையை முழுமையாக அடைய வெவ்வேறு பிரிவு

களுக்கு இடையே பேச்சு நடக்க வேண்டும், விமர் சிக்க வேண்டும், தங்களுடைய பிரிவின் குறைகளை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும், ஒருவர் கருத்தை மற்றவர்கள் விட்டுக்கொடுத்து ஏற்க வேண்டும். பேச்சுவார்த்தை என்பது பேசுவது மட்டு மல்ல, எதிர்த் தரப்பு பேசுவதைக் கேட்பதுமாகும்.

மத்தியக் கிழக்கு

பன்மைத்தன்மை என்பது முன் எப்போதையும்விட இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளைப் பாருங்கள். இராக்கும் சிரியாவும் பல சமூகங்களைக் கொண்ட நாடுகள் தான். ஆனால், அவற்றில் பன்மைத்துவம் இல்லை. சன்னிகள், ஷியாக்கள், குர்துகள், துருக்கியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், யஜீதுகள், ஆலவைட்டுகள் என்று பல பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஒற்றுமை நிலவாதது

தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

இதற்கு மாறாக, டுனீசியா, குர்திஸ்தான் ஆகிய இரண்டு மத்தியக் கிழக்கு நாடுகள் நல்ல உதாரணங்கள். அங்கே பன்மைச் சமுதாய வாழ்க்கை முறை முழுமை பெற்றுவிடவில்லை என்றாலும், சுயாட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவிட்டனர். லெபனானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர 1989-ல் இந்தக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டது. இராக் இந்த நிலையை நோக்கிச் செல்ல முயல்கிறது. சிரியாவோ இராக்கின் இடத்தைக்கூட நெருங்காமல் இருக்கிறது.

பன்மைச் சமூகத்தின் பலன்கள்

சமூக வலைதளங்களும் உலகமயமாக்கலும்கூட பன்மைச் சமூகங்களுக்குப் பொருளாதாரப் பலன்களை வாரி வழங்குகின்றன. புதிய கண்டு பிடிப்புகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? வெவ்வேறு மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள், அணுகுமுறைகளை இணைக்கும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் முகிழ்க்கின்றன. லாரி பேஜ், செர்கெய் பிரின் என்ற இருவரின் கூட்டுப் பங்களிப்புதான் கூகுள். சமுதாயம் பன்மைச் சமுதாயமாக இருந்து, அங்கே பரஸ்பர நம்பகத் தன்மை அதிகமிருந்தால் புதிய சிந்தனைகள், புதிய வியாபார உத்தி ஆகியவை தோன்று

கின்றன. உலகின் அதிர்ஷ்டக்கார நிறுவனங்கள் 500-ல் சுமார் 40%, ஒரு நாட்டில் சென்று குடியேறி

யவர்கள் அல்லது அவர்களுடைய குழந்தைகளால் ஏற்பட்டவைதான் என்று எகானமிஸ்ட் பத்திரிகை ஏப்ரல் 2013-ல் சிறப்புக் கட்டுரையில் தெரிவித் திருக்கிறது.

ஜனநாயக நாடான ஸ்பெயின் கடந்த 10 ஆண்டுகளில், 40 லட்சம் மக்கள் ஈக்வடார், ருமேனியா, மொராக்கோ ஆகிய நாடுகளிலிருந்து வந்து குடியேற அனுமதித்தது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் மட்டும் இப்போது 10% இருக்கின்றனர். அந்நாட்டில் பொருளாதாரம் உச்ச நிலையில் இருந்தபோது வந்ததால் அவர்களை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் கொடிபிடிக்கவில்லை. எனவே, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிராக 55% பேர் வாக்களித்தனர் என்று தெரிந்ததும் ஸ்பெயின் ஆட்சியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், கேடலானில் உள்ள மாநில அரசோ வரும் நவம்பர் மாதம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் என்று பிடிவாதமாக இருக்கிறது. ஸ்பெயினிலிருந்து பிரிந்துசெல்ல கேடலானில் பலர் விரும்புகின்றனர்.

வலதுசாரியும் இடதுசாரியும்

அரசியலில் வலதுசாரி, இடதுசாரிக் கட்சிகள்தான் இருக்க வேண்டும், இன அடிப்படையிலான பிரிவினைவாதக் கட்சிகள் இருக்கக் கூடாது என்கிறார் மாட்ரிட் நகரில் உள்ள ஐரோப்பிய கவுன்சிலுக்கான வெளியுறவுத் துறைத் தலைவர் ஜோஸ் இக்னேஷியோ டோரிபிளான்கா. வலதுசாரிக் கட்சிகள் வந்து நாட்டின் செல்வ வளத்தையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கும். அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும். இதுதான் ஐரோப்பிய வரலாறு. ஆனால், பிரிவினைவாதி களாலோ நாட்டின் பொருளாதாரம் நாசமடையும், எப்போதும் மோதல்களும் பூசல்களும்தான் நிகழ்ந்துகொண்டிருக்கும். இராக்கும் சிரியாவும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

அமெரிக்கா என்பது பன்முகத்தன்மையை உள்வாங்கிக்கொண்டு இயற்கையாகவே ஒற்று மைப்பட்டுவிட்ட நாடு. ஐரோப்பிய ஒன்றியம் என்பது வெவ்வேறு நாடுகளின் கூட்டுக்கலவை. எல்லா நாடுகளையும் இணைத்து, மிகப் பெரிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியும் மேற்கொள் ளப்பட்டிருக்கிறது. பொதுவான பொருளாதாரக் கொள்கை, பொதுவான செலாவணி, தனித்தனி இறையாண்மையை விட்டுக்கொடுத்தல் மட்டுமே பல நாடுகள் இணைந்து ஒரே நாடாக மாறுவதற்குப் போதாது. சிரியாவிலும் இராக்கிலும் இப்போது தேசம் என்ற அடையாளமோ மக்கள் என்ற அமைப்போ இல்லை. வெவ்வேறு குழுக்கள், பழங்குடிகள் என்று சமூகம் பிளவுபட்டு நிற்கிறது.

ஸ்காட்லாந்துவாசிகள் தங்களுடைய ஒற்றுமையைப் பாதுகாக்கும் தைரியம் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள், ஸ்பெயினில் அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இராக்கியர்கள் இதை அடையத் தத்தளிக்கிறார்கள். அமெரிக்கர்களாகிய நாம், குடியேற்றச் சீர்திருத்த மசோதாவை நிறை வேற்றும் முதிர்ச்சியைப் பெற்றாக வேண்டும்.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்