கடந்த பதினைந்து ஆண்டுகளாக, விவசாய உற்பத்திச் செலவு வேகமாக அதிகரித்ததாலும், சந்தையில் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தாலும், போதிய வருவாய் கிடைக்காமல், கடனில் சிக்கிப் பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்துவருகிறார்கள். ஒருமுறை வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்வதால் மட்டும் வேரூன்றிக் கிடக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க முடியாது.
விவசாயிகள் அனைவரும் வங்கிகளிலிருந்து மட்டும் கடன் வாங்கி விவசாயம் செய்வதில்லை. வட்டிக் கடைக்காரா்களிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் பெற்றுப் பெரும்பாலானவா்கள் விவசாயம் செய்யும் நிலை இன்று வரை நிலவுகிறது. உதாரணமாக, டாக்டா் ரெங்கராஜன் தலைமையின் (2008) கீழ் அமைக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய நிதி வழங்கல் குழுவானது, ஏறக்குறைய 66% குறு மற்றும் சிறு விவசாயிகள் வங்கிக் கடன் கிடைக்காமல், வட்டிக் கடைக்காரா்களிடம் கடன் பெறுவதாகக் கூறியுள்ளது. அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டத்தால் இது போன்ற விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஒருபோதும் கிடைப்பதில்லை.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நடப்பு நிலைமையைக் கண்டறிய 2012-13-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வெறும் 23% விவசாயிகள் மட்டும் வங்கிகளிலிருந்து கடன் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள விவசாயிகள் வங்கியல்லா தனியார் வட்டிக் கடைகளில் கடன் வாங்கியுள்ளார்கள் எனக் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால், வெறும் 14% குறு விவசாயிகளும் 24% சிறு விவசாயிகளும் மட்டுமே வங்கி சார்ந்த துறைகளிலிருந்து விவசாயக் கடன் பெற்றுள்ளார்கள். இதே போன்று, நபார்டு வங்கியால் இந்தியா முழுவதும் 2016-17-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வெறும் 30.3% விவசாயிகள் மட்டுமே வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
‘ரயத்து பந்து’
கடன் தள்ளுபடி செய்வதால் பல ஆண்டுகளாக விவசாயிகள் சந்தித்துவரும் போதிய வருமானமின்மை மற்றும் கடன் சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தீா்க்க முடியாது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிறது. ஏறக்குறைய அனைத்து விவசாயிகளும் தற்போது பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். எனவே, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வருமான உதவித் திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு, கடந்த 2018 முதல் தெலங்கானா மாநில அரசு, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ‘ரயத்து பந்து’ என்ற நேரடிப் பணவரவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், ஒரு ஏக்கா் நிலத்துக்கு, ஒரு பயிர்க் காலத்துக்கு ரூ.4,000 வீதம், ஆண்டுக்கு இருமுறை விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுவருகிறது. அதாவது, ஒரு ஏக்கர் நிலமுள்ள விவசாயிக்கு, ஆண்டுக்கு ரூ.8,000 இத்திட்டத்தினால் நேரடியாக அவருடைய வங்கிக் கணக்கில் சோ்ந்துவிடுகிறது. இத்திட்டம் அனைத்து தெலங்கானா விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், நடந்து முடிந்த தோ்தலில் ஆளும் கட்சியின் வெற்றிக்கு உதவியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுபோன்ற நேரடிப் பணவரவுத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதன் மூலமாகக் கடன் தள்ளுபடித் திட்டம்போல் அல்லாமல், அனைத்து விவசாயிகளும் பயன்பெறச் செய்ய முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. இந்தியாவின் தற்போதைய நிகர சாகுபடிப் பரப்பு ஏறக்குறைய 140 மில்லியன் ஹெக்டோ்களாகும். தெலங்கானா மாநிலத் திட்டத்தைப் போல, ஒரு ஹெக்டேருக்கு (சுமார் இரண்டரை ஏக்கா்) ரூ. 20,000 வீதம் நேரடிப் பணவரவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், இத்திட்டத்தை ஓர் ஆண்டுக்கு அமல்படுத்த ஏறக்குறைய ரூ. 2.80 லட்சம் கோடி தேவைப்படும்.
உச்சவரம்பு தேவை
இவ்வளவு பெரிய தொகையை ஒரு திட்டத்துக்காக ஒதுக்குவதற்கு அரசுக்குப் பொருளாதாரச் சுமை ஏற்படலாம். ஆனால், இத்திட்டத்தைச் சிறிது மாற்றியமைத்து, பணவரவுத் திட்டத்துக்கு உச்சவரம்பாக ஒரு விவசாயிக்கு ரூ.40,000 என நிர்ணயித்து, இதற்குத் தேவைப்படும் தொகையைக் கணிசமாகக் குறைக்க முடியும். இப்படி உச்சவரம்பு கொண்டுவருவதால் பொருளாதாரச் சிக்கலில் கடுமையாகச் சிக்கியுள்ள அனைத்து குறு மற்றும் சிறு விவசாயிகளும் (86%) இத்திட்டத்தால் முழுப் பயன் பெற முடியும், மற்ற விவசாயிகள் அதிகபட்சமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைப் பெற முடியும். மற்ற வளா்ச்சித் திட்டங்களைப் போல, மத்திய மற்றும் மாநில அரசுகள், இத்திட்டத்துக்குத் தேவைப்படும் நிதியைப் பங்கிட்டுக்கொள்வதன் மூலம் மத்திய அரசுக்குத் தேவைப்படும் நிதியைக் குறைக்க முடியும்.
நேரடிப் பணவரவுத் திட்டம், கடன் தள்ளுபடித் திட்டதை விட விவசாயிகளுக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும். இத்திட்டத்தால் வங்கி மற்றும் வங்கியில்லா வட்டிக் கடைக்காரா்களிடமிருந்து கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உதவும். பணவரவுத் திட்டத்தை ஒவ்வொரு முறையும் பயிர்செய்யும் காலத்தில் கொடுப்பதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருட்களை வட்டிக் கடைக்காரா்களிடம் நிற்காமல் தங்கு தடையின்றி வாங்கி உபயோகிக்க முடியும். இது மொத்த சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தனியாரிடம் கடன் பெற்று விவசாயம் செய்வதால், அறுவடை முடிந்தவுடன் பொருட்களை விற்றுக் கடன்கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தால், குறைந்த விலைக்குப் பொருட்களை விற்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். இது போன்ற விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளை, இத்திட்டத்தால் கணிசமாகக் குறைக்க முடியும். தள்ளுபடித் திட்டத்தால் வங்கிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படுகின்ற தேவையில்லா பிணக்கத்தையும், இத்திட்டத்தின் மூலமாகக் குறைத்து, விவசாயிகளுக்கான வங்கிச் சேவையையும் செம்மைப்படுத்த முடியும். வங்கிக் கடன்களை வட்டியுடன் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திய விவசாயிகளும் இத்திட்டத்தால் பயன் பெறுவர்.
நிரந்தர நேரடி வருமான உதவித் திட்டங்கள் இல்லாமல், தற்போது விவசாயிகள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடினம். விவசாயச் சந்தையின் போக்கு ஒருபோதும் விவசாயிகளுக்குச் சாதகமாக இருந்ததில்லை. எனவே, விவசாயிகள் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கு அவா்களால் சந்தையில் எப்போது விலை நிர்ணயம் செய்யும் சூழல் ஏற்படுகிறதோ, அதுவரையிலும் நிரந்தர நேரடி வருமான உதவித் திட்டங்கள் இல்லாமல் அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவது கடினம். தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ள நேரடிப் பணவரவுத் திட்டம்போல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளின் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
- அ.நாராயணமூர்த்தி, இந்திய அரசின் விவசாயச் செலவு மற்றும் விலை ஆணைய உறுப்பினர்.
தொடர்புக்கு: narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago