மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள், குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள், வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மூத்த தலைவர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி. அவரது பேட்டி:
தீவிரக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
தீவிரமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல் தலைவர்கள், வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தேர்தலில் ஈடுபடத் தடைவிதிக்க வேண்டும் என்று சிவில் சமூகம் மட்டுமல்லாது, தேர்தல் ஆணையமும் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறது. சட்ட ஆணையமும் இதை வலியுறுத்தியிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, சம்பந்தப்பட்டவர் அப்பாவி என்பதே அரசியல்வாதிகள் முன்வைக்கும் தற்காப்பு வாதமாக இருக்கிறது. மேலும், அரசியல் எதிரிகள் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் ஒருவரை அரசியல்ரீதியாக என்றில்லாவிட்டாலும் சட்டரீதியாக வீழ்த்திவிட முடியும் என்பதையும் அரசியல்வாதிகள் ஒரு வாதமாக முன்வைக்கிறார்கள். அது ஒருவகையில் சரியான வாதம்தான்.
இவ்விஷயத்தில் மூன்று முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம் தனது கருத்துகளை முன்வைத்திருக்கிறது. முதலாவதாக, எல்லா குற்ற வழக்குகளும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒருவரைத் தடைசெய்துவிடாது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கத்தக்க கொடும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குத்தான் அது பொருந்தும். இரண்டாவதாக, தேர்தல் சமயத்தில் தொடரப்பட்ட வழக்காக அல்லாமல், தேர்தலுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக, குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். கொடூர குற்றங்கள் தொடர்பான வழக்குகளைப் பொறுத்தவரை அது மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன். ஏனெனில், இப்போது விஷயம் நாடாளுமன்றத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது.
இதுதொடர்பாக, சட்டமியற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் தனியுரிமை அல்லவா?
நிச்சயமாக. அதேசமயம், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் அப்பாவியா என்பது தொடர்பாக நாம் சில விஷயங்களை ஆய்வுசெய்ய வேண்டும். இன்றைக்கு, இந்தியச் சிறைகளில் 4 லட்சம் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 71% பேர் விசாரணைக் கைதிகள். ஆனால், விசாரணைக் கைதிகளுக்குச் சுதந்திரத்துக்கான உரிமை, இடம்பெயர்வதற்கான உரிமை, பணிபுரிவதற்கான உரிமை, கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை ஆகிய நான்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அத்துடன், வாக்களிக்கும் சட்ட உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை என்று ஊகத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியும் என்றால், குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் உரிமையை மறுப்பதில் என்ன தவறு? இத்தனைக்கும், தேர்தலில் போட்டியிடுவது என்பது அடிப்படை உரிமைகூட இல்லை.
சொல்லப்போனால், இதுபோன்ற வழக்குகள் ஓராண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கவனத்துக்கு அதை எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் 2014-ல் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு உதவுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சட்ட அமைச்சர் கடிதம் எழுதினார். ஆனால், இது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
சமீபத்தில், ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டெடுக்கப்பட்டது. எம்எல்ஏ ஒருவர் வீட்டிலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டெடுக்கப்பட்டது. வாக்குச் சீட்டு முறைக்கு ஏன் நாம் திரும்பக் கூடாது?
வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியானவை. அவை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அதேசமயம், அவை இயந்திரங்கள். சில சமயம் கோளாறுகள் ஏற்படலாம். செயல்பாட்டில் இருக்கும் 20 லட்சம் இயந்திரங்களில், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான இயந்திரங்களில் கோளாறு ஏற்படலாம். இப்படிப்பட்ட சமயங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடைமுறை: அரை மணி நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றிவிட வேண்டும்.
ஆனால், நீங்கள் குறிப்பிடும் எண்ணிக்கையே அதிகம்தானே? தெளிவாகத் திட்டமிட்டால், ஒரு கட்சியின் எதிர்காலத்தையே மாற்றியமைத்துவிடக் கூடிய எண்ணிக்கை அல்லவா இது?
கோளாறு என்றால் மோசடி என்றோ, ஏமாற்று வேலை என்றோ அர்த்தமல்ல. கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால், தயாராக வைக்கப்பட்டிருக்கும் மாற்று இயந்திரங்கள் மூலம் அவை மாற்றப்படும். 20% இயந்திரங்கள் பதிலீடுக்காகக் காத்திருப்பில் வைத்திருக்கப்படும். நகரங்களைப் பொறுத்தவரை, இப்படியான புகார்கள் எழும்போது வாக்குச் சாவடிகளை அரை மணி நேரத்தில் சென்றடையும் வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் வாகனங்களில் கூடுதல் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளிலேயே கூடுதல் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இயந்திரமும் தனித்தனியாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கும். ஏமாற்று வேலைகளைத் தவிர்க்க, ஒவ்வொரு கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களும் தங்கள் கட்சிச் சின்னத்தில் வாக்களிக்கக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பின்னர், அது சரியாக வந்திருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். மூன்று முறை இது பரிசோதிக்கப்படும்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலையிலும், எம்எல்ஏ வீட்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டெடுக்கப்படுவது என்பது உறுத்தலாக இல்லையா? தேர்தல் ஆணையம் இது குறித்துக் கவலைப்பட வேண்டாமா?இவை காத்திருப்பில் வைக்கப்பட்ட இயந்திரங்கள். இவை பயன்படுத்தப்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அப்படியே திரும்ப வந்திருக்க வேண்டிய இயந்திரங்கள் அப்படி வராவிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். எஃப்ஐஆர்கூட பதிவுசெய்யப்படும்.
ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?
எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கின்றன. ஆனால், இதே வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாகத்தான அவை வெற்றி பெற்றிருக்கின்றன அல்லது தோல்வியடைந்திருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரமும் துணை ராணுவப் படை, மாநிலக் காவல் துறை, மாவட்டக் காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும். தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் இயந்திரம் இது. மேலும், தேர்தல் சமயங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல்வாதிகளைவிட யாரும் அக்கறை காட்டிவிட முடியாது எனலாம். அவர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியில்தான் தூங்குவார்கள்!
எவ்வளவு உத்தரவாதம் தந்தாலும் குளறுபடிகள் நடக்கத்தானே செய்கின்றன?
10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 1.1 கோடிப் பேர் தேர்தலை நடத்துகின்றனர். சிலர் திறன்வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் கடுமையான பதற்றத்தில் இருப்பார்கள். ஒரு தவறுகூட நிகழ்ந்துவிடாமல் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இருந்தும், தவறுகள் நடக்கும். உடனடியாக, அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எப்படிப் பார்த்தாலும், வாக்குப்பதிவுச் சீட்டுடன் இணைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் (விவிபிஏடி) அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த சர்ச்சைகள் ஓய்ந்திருக்க வேண்டும்!
ஆனால், அப்படி நடக்கவில்லையே?
இதை மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஒவ்வொரு இயந்திரத்துடனும் தற்போது ஒரு பிரிண்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பிரிண்டரில் ஒரு திரை இருக்கிறது. அதில், யாருக்கு வாக்களித்தோமோ அந்த வேட்பாளரின் முகம், பெயர், கட்சிச் சின்னம் தோன்றும். இது ஏழு நொடிகளுக்குத் தெரியும். அதற்குள் ஒருவர் பதிவுசெய்த வாக்கு சரியானதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள முடியும். பின்னர், சீல் இடப்பட்ட ஒரு பெட்டியில் அந்தச் சீட்டு விழும். தேவைப்படும்போது மீண்டும் சரிபார்த்துக்கொள்ள இந்தச் சீட்டு பயன்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் இப்படி 800 இயந்திரங்கள் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றில்கூட பொருத்தமின்மை இருந்ததாகப் புகார் எழுந்ததில்லை. இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்!
எனினும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சிறிய சான்றை வைத்துத் தேர்தல் ஆணையம் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் என்று சந்தேகங்கள் இருக்கின்றனவே?
ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு இயந்திரத்தைக் கணக்கிடுவது என்பது மிகச் சிறிய அளவீடுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு தொகுதிக்கு 5% விவிபிஏடி இருக்க வேண்டும் என்பேன். அதாவது, ஒரு தொகுதிக்கு 10 முதல் 15 இயந்திரங்கள் வேண்டும். நேர்ப் பேச்சின்போது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்திடம் இதைக் குறிப்பிட்டேன். 99.99% மக்கள் திருப்தியை அறிவியல்பூர்வமாக நிறுவ, எந்த மாதிரியான சான்றை முன்வைப்பது என்பது குறித்து கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்துக்கு இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருப்பதாக அவர் சொன்னார். ஆனால், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்திடமிருந்து என்ன பதில் வந்தது என்று எனக்குத் தெரியாது. அது வெளியிடப்பட வேண்டும்.
சமீபத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தல்களில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வகுப்புவாத அடிப்படையில் பேசியது பாதிப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
மூத்த தலைவர்கள் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். துரதிர்ஷ்டவசமாக, மூத்த தலைவர்கள் இவ்வாறு வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவது அதிகரித்துவருகிறது. முன்பெல்லாம், சுயக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நடத்தை விதிகளை அரசியல் தலைவர்களே உருவாக்கியிருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு அது சீரிய முறையில் பின்பற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கு அரசியல் தலைவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பொறுமையையே சோதித்துவிடுகிறார்கள். தேர்தல் ஆணையத்திடமிருந்து கடும் எதிர்வினை வரலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். அப்படி நடந்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்து!
தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?
இருந்த குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையையும் தேர்தல் நன்கொடைப் பாத்திரங்கள் காணாமல் செய்துவிட்டன. இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ரொக்கமாக வழங்கப்படும் நன்கொடை, தற்போது வங்கிப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும். கடந்த 70 ஆண்டுகளில், அரசியல் நன்கொடை நிதியில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதில் வெற்றி கிடைக்காத நிலையில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் சாத்தியமில்லை என்று தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் குறிப்பிட்டார். இதுபோன்ற அறிக்கைகள், தேர்தல் நன்கொடை நிதியில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. எந்த கார்ப்பரேட் நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்திருக்கிறது; இதன் கொடுக்கல் வாங்கல் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் மொத்த பரிமாற்றத்தையும் ரகசியமானதாகவும், மூடுமந்திரமாகவும் மாற்றிவிட்டன. எந்தக் கட்சிக்கு யார் நன்கொடை வழங்கியது என்று அரசுக்கு மட்டும்தான் தெரியும். க்ரோனி முதலாளித்துவம் சட்டபூர்வமாகிவிட்டது, நிறுவனமயமாகிவிட்டது.
- © ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago