பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

By சமஸ்

படுகொலை செய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ... இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’

பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் கேள்விக்கான பதிலையும் சொல்கிறார் பிரதமர் நேரு. அதே நேரத்தில், நாடு முழுக்க கலவரங்களைத் தடுக்கும் விதமாகச் செல்வாக்குள்ள தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்திலுள்ள சன்னாநல்லூரில் திராவிடர் கழகக் கூட்டம். வழக்கம்போல பிராமணியத்தை வெளுத்து வாங்கும் ஒரு இளம் பேச்சாளர் காந்தி படுகொலைச் சம்பவத்தை நோக்கி நகர்கிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதைச் சொல்லும் அவர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தோடு கோட்ஸேவின் மேலாதிக்கக் குணத்தைப் பொருத்த முற்படுகிறார். மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார் தன் கையிலுள்ள தடியைத் தட்டுகிறார். பெரியார் இப்படி தடியைத் தட்டினால், அது ஒரு சமிக்ஞை. அதற்கான அர்த்தம் திராவிடக் கழகத்தினருக்குத் தெரியும்: இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!

இளைஞர் பேச்சை முடித்துக்கொள்கிறார். கூட்டம் முடிகிறது. இளைஞரின் முகம் வாடியிருக்கிறது. பிராமணியம், வைதீகத்தின் அபாயத்தை மக்களிடம் உணர்த்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதை ஏன் பெரியார் தடுக்கிறார் என்பது இளைஞரின் முறைப்பாடு. பெரியார் சொல்கிறார், “நமக்கு பார்ப்பனியத்தோடதான் சண்டை. தனிப்பட்ட பார்ப்பனர்களோட இல்லை. அப்புறம், நாடு இப்போ இருக்கிற சூழல்ல இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்புல இருக்கிறப்போ அதைத் தூண்டிவிடுற மாதிரி பேசுறது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துறதா நம்ம நோக்கம்?”

என்னிடம் நிறைய இளைஞர்கள் கேட்பதுண்டு. “ஒரு காந்தியர் எப்படி பெரியாரை ஏற்க முடியும்? காந்தியைக் கடுமையாக விமர்சித்தவர் பெரியார். காந்தியும் பெரியாரும் எந்தப் புள்ளியில் சந்திக்க முடியும்?” இன்னும் ஒருபடி மேலேபோய் “பெரியாரைப் போன்ற இனவெறியரை எப்படி ஒரு காந்தியர் தூக்கிப்பிடிக்க முடியும்?” என்று கேட்பவர்களும் உண்டு. இரண்டு பதில்களைச் சொல்வேன். “இருவருமே சமத்துவத்துக்காகப் போராடியவர்கள். பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்று. இருவருமே வெளிப்படுத்தல் முறைமையில் ஒரு நாட்டுப்புறத்தன்மையைக் கொண்டவர்கள். இருவரையுமே நவீனப் பார்வையில் வார்த்தைகள் வழி கொண்டு மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பெரியார் இன்னும் கூடுதல் சிக்கலானவர்.”

பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவர், பல நூறு கூட்டங்களைப் பேசியவர் காந்தி. ஏன் ‘‘என்னுடைய வாழ்க்கையே நான் விட்டுச்செல்லும் செய்தி’’ என்று அவர் சொன்னார்? ஏன் தன்னுடைய எழுத்துகளையோ, உரைகளையோ தன்னுடைய செய்தி என்று அவர் குறிப்பிடவில்லை? எல்லோரையும் நேசிப்பது, எல்லாத் தரப்புகளையும் புரிந்துகொள்வது, மனிதர்களை அவர்களுடைய வார்த்தைகளைத் தாண்டி அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் வழியாகப் புரிந்துகொள்ள முற்படுவதே சரியான வழி என்பதே காந்தியைக் கற்பவர்கள் கற்கும் அடிப்படைப் பாடம்.

ஒரு சந்தர்ப்பத்தில், “அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது” என்று பாதுகாப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளச் சொல்லிக்கூடப் பேசியிருக்கிறார் பெரியார். இந்த வார்த்தைகளின் வழி மட்டும் பார்க்கும் ஒருவரால், காலமெல்லாம் பெரியார் நடத்திய இயக்கமும் வாழ்க்கையும் எப்படி வன்முறைக்கு நேரெதிராக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? நக்ஸல்பாரி இயக்கத் தாக்கத்தின் தொடர்ச்சியாக, தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கலாமா என்ற குரல் அமைப்புக்குள் வந்தபோது, “வன்முறை நோக்கம் கடுகளவு மனதில் இருந்தாலும், அவர்கள் எவருக்கும் கழகத்தில் இடம் இல்லை” என்று அப்படிப் பேசியவர்களை உடனே ஏறக்கட்டியவர் பெரியார். மரபைக் கடுமையாகச் சாடியவர் பெரியார். ஆனால், பெரியார் மொழியைப் புரிந்துகொள்ள சித்தர் மரபுதான் நமக்கு நெருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பிராமணியத்தையும் பிராமணர்களையும் பெரியார் எப்படிப் பகுத்தார் என்பதற்கும், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது, கருத்து முரண்பாட்டைத் தனிமனிதர்களிடத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி என்பதற்கும் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் பெரியார் முன்னெடுத்த செயல்பாடுகளை ஒரு உதாரணமாகச் சொல்ல முடியும். காந்தி இறந்தவுடனேயே பெரியாரிடமிருந்து வந்த அறிக்கையிலேயே ‘இங்கு எந்த வன்செயலும் நடந்துவிடக் கூடாது’ என்கிற அக்கறையும் பதற்றமும் வெளிப்படலாயிற்று. 1948 ஜனவரி 31 ‘விடுதலை’ ஏடு சொல்கிறது, “காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறியிருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து... இப்பெரியாரின் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் - மதயியல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.”

அடுத்து, 7.2.1948 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதுகிறார், ‘காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்து சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டு திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்.’

இதனூடாகவே சென்னை மாகாணத்தின் அன்றைய ஆட்சியாளரான ஓமந்தூராருடனான கலந்தாலோசனையின்படி, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, 22.2.1948 நாளைய ‘விடுதலை’யில் விரிவாகவே இந்த விஷயத்தை அணுகுகிறார். “பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது. நான் கூறுகிறேன்: சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத்துப்பாக்கி. அதற்காகப் பார்ப்பான் மீது கோபித்துக்கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும்; அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும். காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும். அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான்.

மதத்தின் பேரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளும் சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்க வேண்டும். அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்காலிக சாந்தியாகத்தான் இருக்க முடியும். இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது. இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒரு சாதியையோ அப்படியே அழித்துவிடுவதால் இக்கொடுமை மறைந்துபோகாது…

காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சித்தானந்தரைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அல்ல, முஸ்லிமோ தனியாகத் தோன்றி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டதாக நாம் கூறிவிட முடியாது. இம்மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்பதற்குச் சரித்திர ஆதாரங்களே இன்றும் இருந்துவருகின்றன. மதுரை மாநகரில் 8,000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காகக் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன். முஸ்லிமும் அல்லன். பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான். ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது; அவன் தழுவியிருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற்றும்படி அவனைத் தூண்டியது. நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்...

திராவிடர் கழகம் கலகத்திற்கோ கொள்ளைக்கோ பலாத்காரத்திற்கோ இருந்துவரவில்லை. அதுவும் திராவிடர் கழகம் எனது கைக்கு வந்தது முதற்கொண்டு, அதில் நான் சேர்ந்து தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் அதை எந்தவிதமான பலாத்காரத்திற்கோ பழிவாங்குவதற்கோ உபயோகப்படுத்தியவன் அல்லன். அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்தவனுமல்லன். திராவிடர் கழகத்தில் பலாத்காரத்திற்கு இடமில்லை. பலாத்கார உணர்ச்சி வேண்டுமென்று கருதிய சிலரையும்கூட திராவிடர் கழகத்தைவிட்டு நீக்கித் தண்டித்திருக்கிறோம். பலாத்காரத்திற்கு மட்டுமல்ல, நடத்தைக் குறைவுக்காகவும், ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக் கழகத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறோம். கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு நான் அதை நடத்திவருகிறேன்... எங்கள் கழகம் யாரையும் விரோதிகள் என்று நினைப்பதில்லை. காரணம், இன்று நமக்கு எதிர்ப்பாயுள்ளவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதை நாங்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறோம்!”

அடுத்து, 11.03.1948 நாளைய ‘விடுதலை’ ஏட்டில் எழுதுகிறார், “காந்தியார் மறைவுக்கு நான் துக்கப்பட்டது, பெரும்பாலானோருக்கு முதலைக் கண்ணீராகவே தோன்றியது. தோன்றினால் தோன்றட்டும். அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு வேண்டுமானால் அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சிகூட அடைந்தது. ஆனால், அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. தலைவலி வந்துவிட்டது. என்ன செய்கிறேன் என்பதுகூடப் புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தேன். காரணம் என்னவென்றால், அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவைகளே. அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்ராய பேதம் பலமாக இருந்தது உண்டு. ஆனால், அவரது முக்கியக் கொள்கையில் அதாவது சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவைகளில் அபிப்ராய பேதம் இல்லையே!”

இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்றும், ‘காந்தி சகாப்தம்’ என்ற பெயரில் நமக்கென ஒரு ஆண்டு முறையை உருவாக்க வேண்டும் என்றும் கோரியவர் பெரியார். காந்தி சிலைகளைத் தெருவில் போட்டு உடைக்க வேண்டும் என்று பேசியவரும் பெரியார். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? சிக்கல்தான்.

பல்வேறு தருணங்களில் பிராமணர்களுடனான உறவையும் பிணக்கையும் பற்றிப் பெரியார் பேசியிருக்கிறார் என்றாலும், ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய உரையையும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையையும் இங்கே குறிப்பிடலாம். 1953-ல் ஒரு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய பிராமணர்கள் சிலர் இதை ஆட்சேபிக்கின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அவர் பேசியது 8.1.1953 ‘விடுதலை’யில் வெளியாகியிருக்கிறது.

“யாரோ சில பிராமணர்கள், ‘பெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறிவருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்’ என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்கவழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றமடைந்துவிட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில், நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு. காலம் எப்போதுமே ஒன்றுபோல இருக்க முடியாது.

நம் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்துவருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின்சந்ததிகளும், பிராமணர்களின் பின்சந்ததிகளும் இந்தப்படியே நடந்துகொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரணமானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளங்கியிருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இருதரப்பினரும் கவனிக்க வேண்டியது.”

அடுத்து, 1962 ‘விடுதலை’யில் பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை ‘பார்ப்பனத் தோழர்களுக்கு!’ என்ற தலைப்பிட்ட அறிக்கை:

‘‘பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும்கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையைவிட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்!”

பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரியாரின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருதரப்புமே அவருடைய வார்த்தைகளைத் தாண்டி அவருக்குள் நுழைய வேண்டும். பெரியாரின் வலியை உணர்தல் வழியாகவே அது சாத்தியம். காந்தி - பெரியார் இருவரையும் இணைக்கும் புள்ளி சுயவதை. தான் கனவு கண்ட சமத்துவ சமூகத்தில் எல்லாத் தரப்புகளையும் உள்ளடக்குவதையும், அதற்கான வழிமுறையாக வன்முறையை வெளித்தள்ளிய மாற்றுத்தரப்புடனான தொடர் உரையாடலையும் தார்மிக நெறியாக்கியவர் காந்தி. பெரியாரின் தார்மிகமும் அதுவென்றே நினைக்கிறேன்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்