தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கு ஒரு தவிர்க்க இயலாத தன்மையும், முடிவுத்தன்மையும் வந்துவிடும். தேர்தல் முடிவுகளின் கணக்குகள், பாரபட்சமற்ற, பூடகத்தன்மை கொண்ட சிந்தனைக்கு வழிவகுக்கும். தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பில்லியர்ட்ஸ் விளையாட்டின் ஸ்கோரைப் பார்ப்பதுபோல் இருந்தது. ராஜஸ்தானில் அதிகமான இடங்களில் வென்றிருக்கும் காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி இருந்தாலும் ஒருவழியாகக் கரைசேர்ந்திருக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் பற்றிய செய்திகளை வாசிப்பதும், தொலைக்காட்சியில் அதுதொடர்பான செய்திகளைப் பார்ப்பதும் தனித்தனியான இரண்டு பார்வையை உங்களுக்கு அளிக்கும்.
என் நண்பர் ஒருவர், சாமானிய வாழ்க்கையின் தத்துவவாதி. கற்கள், கடிகாரங்கள், அட்டவணைகள், நாட்காட்டிகள்.. ஏன் தேர்தல் சடங்குகள் என்று பல்வேறு சாமானிய விஷயங்களில் சிந்தனையைச் செலுத்துபவர் அவர். தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் தொடர்பான விரிவான தகவல்களை அவர் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் அருகில் அமர்ந்திருந்தேன். எனது நண்பர் தொந்தரவுக்குள்ளானவரைப் போல் காணப்பட்டார். விரிவான அலசலைத் ‘திசைதிருப்பும் தகவல்கள்’ என்றார். தேர்தல் என்பது ஒரு கதைசொல்லல் செயல்பாடு; தேர்தல் முடிவுகளால் சிதைக்கப்படுவது என்று வாதிட்டார். யார் யாருடன் மோதினார், யார் வென்றார் என்பதைச் சொல்லும் தேர்தல் முடிவுகளின் தன்மையானது ஒருவகையான நாடகம், வழக்கமான விஷயம், உடனடியாகத் திருப்தி தரக்கூடியது.
நாடாளுமன்றத் தேர்தல் அதிகத் தொலைவில் இல்லாத ஒரு சூழலில், நடக்கும் சட்ட மன்றத் தேர்தல் என்பது இந்தியா தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்வதைப் போன்றது. வாக்காளர் தனது தெரிவுகளையும் சாத்தியக்கூறுகளையும் மனதில் வைத்துச் செயல்படுகிறார். உரத்த சிந்தனையுடன், புதிய தெரிவுகளைச் சேகரிக்க முயல்கிறார். சிந்தனை, மறு சிந்தனை எனும் இந்தச் செயலானது மூன்று மட்டங்களில் நிகழ்கிறது. ஓட்டு என்பது பரிமாற்றத்தின் சிறிய அடையாளம். காங்கிரஸ் இந்தத் தேர்தலின் மூலம் எதிர்காலத்தின் மீது பந்தயம் கட்டுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலானது, 2019 மக்களவைத் தேர்தலுக்கான பந்தயம். பிற எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல பந்தயம் என்று இந்தியாவை நம்பவைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
கூட்டணி விஷயத்தைப் பொறுத்தவரை, தற்காலிகமான வாய்ப்புகள் வரை முயற்சித்துப் பார்க்கப்பட்டது – தெலுங்கு தேசத்துடனான காங்கிரஸின் கூட்டணிபோல. ஆக, இந்தத் தேர்தலின் முதல் பந்தயம், எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் காங்கிரஸின் எதிர்காலம். காங்கிரஸுடன் சேர்வதா, பாஜகவுடன் சேர்வதா அல்லது நாசம் செய்யும் வகையில் மூன்றாவது அணியை உருவாக்குவதா என்பதை, பின்னர் எதிர்க்கட்சிகள் முடிவுசெய்யும்.
இதேநேரத்தில், இரண்டாவது காட்சியும் அரங்கேறியது. அது வாக்குக் கணிப்பு (எக்ஸிட் போல்). இது தேர்தலின் சிறிய மாதிரிதான் என்றாலும், தனது அசல் தன்மையை இந்தத் தேர்தலில் பெற்றுவிட்டது. வாக்குக் கணிப்பு முடிவுகள் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட, வசிப்பறையில் ஒவ்வொருவரும் செய்தித் தொகுப்பாளராகிவிடுகிறார்கள். இந்த வரவேற்பறை ஜனநாயகமானது, இன்றைய அரசியல் வியூகங்களில் மிக முக்கியமான அங்கமாகிவிட்டது. ஒவ்வொரு செய்தி சேனலும் ஒரு தேர்தல் வியூகத்தை உருவாக்கின. மக்கள் அசல் தேர்தலைவிட ஆர்வமாக இவற்றைக் கண்டுகளித்தனர். ஒரு கட்சிக்கு வாக்களிப்பதையும் தாண்டி, எந்த சேனல் சிறந்த வியூகத்தைத் தருகிறது என்று விவாதிக்கத் தொடங்கினர். அத்தனைக் குறைபாடுகளையும் தாண்டி, வாக்குக் கணிப்பு என்பது, ஜனநாயகத்தின் வரவேற்பறை விளையாட்டு என்றே சொல்வேன்.
மூன்றாவதாக, ‘அரையிறுதித் தேர்தல்’ என்று ஊடகங்களால் அழைக்கப்படும் இந்தத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதான கடைசி முன்னோட்டம். இங்கு, மையத்தில் இருப்பது பாஜக. வெற்றியை நோக்கிய பயணம் என்று அக்கட்சியால் கருதப்படும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தன் மீதான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க அக்கட்சி தொடங்கியிருக்கிறது.
தேர்தலைப் பகுப்பாய்வது என்பது பாணிகளையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கிய விஷயம். தேர்தல்களுக்கு ஒரு தந்தை மரபுத் தன்மை இருப்பதை உணர முடியும். இங்கு, ஏழ்மையும் வளர்ச்சித் திட்டங்களும் புதிய தேர்தல் விளையாட்டின் சந்தைப் பொருட்களாகின்றன. சித்தாந்த அடிப்படையிலான வாக்குறுதி அல்ல, தேர்தல்களில் செல்லுபடியாவது நடைமுறைச் சாத்தியமுள்ள வார்த்தைகள்தான். ‘வளர்ச்சி’, ‘திட்டம்’ போன்ற வார்த்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையைப் போன்ற எதிர்பார்ப்பை வாக்காளர்களுக்கு உருவாக்குகின்றன. தனக்கான பரிசுகளுக்காக வாக்காளர் காத்திருக்கத் தொடங்குகிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பதவியிழக்கும் ஷிவ்ராஜ் சிங் செளஹானாகட்டும், வசுந்தரா ராஜேயாகட்டும் அல்லது மீண்டும் தெலங்கானாவின் முதல்வராகவிருக்கும் சந்திரசேகர் ராவாகட்டும் ஏகப்பட்ட வாக்குறுதிகள் தந்தவர்கள்தான். “இதில் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று ஒவ்வொரு சாதியினரும் கேட்கும் அளவுக்கு, தேர்தல்களை ஒரு ஆதாயக் கணக்காக்கியிருக்கிறார்கள் பலர். தேர்தலுக்குப் பின்னர், ஏடிஎம்களில் ரொக்கமாக மாற்றிக்கொள்ளும் கரன்ஸி எனும் அளவுக்குத் தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒரு விஷயம் தெளிவானது. பிராந்திய ஆட்சியாளர்கள் தங்கள் கோட்டையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கப்போவதில்லை. ஷிவ்ராஜ் சிங் சவுஹான் விஷயத்திலும் சரி, 2003-லிருந்து சத்தீஸ்கர் முதல்வராக இருந்த ரமண் சிங் விஷயத்திலும் இதுதான் நடந்தது. ராஜஸ்தானில் காங்கிரஸுக்குப் பிரம்மாண்டமான வெற்றி கிடைத்திருக்கிறது. கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியிலும் வசுந்தரா ராஜே மீதான ஏமாற்றத்தின் வெளிப்பாடு இது. வசுந்தரா ராஜேவுக்குக் கிடைத்த தோல்விக்குக் காரணம், கட்சிக்குள் எழுந்த அதிருப்தியின் விளைவா அல்லது காங்கிரஸின் வியூகங்களா என்று யாருக்கும் புரியவில்லை. வசுந்தரா ராஜேயிடம் இருந்த தயக்கம், காங்கிரஸுக்கு நம்பிக்கையையும் செயலூக்கத்தையும் அளித்தது என்பது மட்டும் நிச்சயம்.
காங்கிரஸ் கட்சி நாம் நினைத்ததைவிடவும், உயிர்ப்புடன் காணப்படும் இந்தச் சூழலில், ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மேலும் அதிக வெறித்தனத்தை அடையும் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம் இதுதான். தவிர்க்க முடியாத வகையில் பாஜக மீது விழுந்திருக்கும் அடையாளம் திருப்திகரமானதாக இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் மாநில அளவில் திறனுடனும் உறுதியுடனும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும்கூட, தங்களிடம் ஒரு உயிர்ப்பான திட்டம் கையில் இருக்கிறது என்பதைத் திடீரென்று உணரத் தொடங்கியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையானது எதிர்கால அரசியலின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வாய்ப்பைக் கொண்டது என்பதையும்!
இரண்டாவது விஷயம், மாநில அளவிலான அரசியலானது, தேசிய அளவிலான திட்டங்களைவிடவும் வித்தியாசமான மாற்றத்தையும் தர்க்கத்தையும் அடைந்திருக்கிறது. இன்றைய தேதியில், மாநில முதல்வர்கள்தான் பிரதானம். தேசியத் தலைவர்கள் தற்காலிகமாகக் கடைசி இருக்கையில் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிலியேற்படுத்துவது, இன்றைய அரசியல் சூழலின் மந்தத் தன்மையும், ஆட்சிக்கு எதிரான மனநிலையும்தான்.
தேர்தல் முடிவுகளில் இருக்கும் கடும் போட்டியின் ஆபத்து தெளிவானது. குறைந்த வித்தியாசத்தில் கிடைக்கும் வெற்றிகள், அரசியல் பொருளாதாரத்தில் குழப்பமான சூழலை உருவாக்குகின்றன. இதுபோன்ற சூழல்களில், தரகர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இதுபோன்ற சூழல் உருவாகாமல் வாக்காளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குகள் வீணாகாத வகையில், கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகள் என்பவை எதிர்காலத்துக்கான திட்டங்கள்.
ஜனநாயக இந்தியா, மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு விளையாட்டாகத் தேர்தல்களைப் பார்க்க வேண்டும் என்று இவை கோருகின்றன. பெரும்பான்மைவாதமும், வெல்ல முடியாத தன்மையின் முத்திரையும் தேர்தல் விளையாட்டை மந்தமடையச் செய்கின்றன. இந்திய ஜனநாயகம் இந்த அளவுக்குத் தன்னைத்தானே புரிந்துவைத்திருக்கிறது!
- ஷிவ் விஸ்வநாதன், பேராசிரியர்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago