திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் சிறு விவசாயி ராமசாமி - முத்துலெட்சுமி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஜெயராமன். பத்தாம் வகுப்புத் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவரது பார்வை விவசாயத்தின் பக்கம் திருப்பியது. பின்னர் அச்சகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, தனது தந்தையின் விவசாயப் பணிக்கு உதவியாக இருந்தார். விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த திருத்துறைப்பூண்டி பகுதியில் எந்த ஒரு விஷயத்தையும் இடதுசாரிச் சிந்தனையோடு அணுகும் மனப்பாங்கு இயல்பாகவே ஜெயராமனிடம் இருந்தது.
ராஜீவ் காந்தி கொண்டுவந்த நுகர்வோர் உரிமைச் சட்டம் ஜெயராமன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. பள்ளிக்கல்வியைத் தாண்டியிராத அவர் நுகர்வோர் பிரச்சினைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர் ஆனார். நுகர்வோர் அமைப்பின் நிர்வாகியானவர் அதன் நீட்சியாக விவசாயிகள் பிரச்சினைகளையும் பேசுபவர் ஆனார். விவசாயிகளுக்கான போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தவர், இன்னொரு பக்கம் விவசாயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுயசீர்திருத்தத்தையும் யோசித்தார். நம்மாழ்வாரை அவர் தேடிச்சென்றது இப்படித்தான்.
நெல் பாதுகாவலர்
நுகர்வோர் நலனைக் காக்க ஜெயராமன் போராடிக்கொண்டிருந்த காலத்தில்தான் நம்மாழ்வாருடன் தொடர்பு ஏற்பட்டது. ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை வழி விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அப்போது பெரிய அளவில் தொடங்கியிருந்தார் நம்மாழ்வார். 2006-ல் கல்லணை முதல் பூம்புகார் வரை நம்மாழ்வார் நடைப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் ஜெயராமனும் சென்றார். தலைஞாயிறு என்ற ஊரை நடைப்பயணம் அடைந்தபோது அங்கு வயதான விவசாயி வடுகூர் ராமகிருஷ்ணனை நம்மாழ்வாரும் ஜெயராமனும் சந்தித்தனர்.
தன்னிடம் இருந்த காட்டுயானம் என்கின்ற பாரம்பரிய நெல் ரகத்தை நம்மாழ்வாரிடம் கொடுத்தார் ராமகிருஷ்ணன். ‘‘இதேபோல பல நெல் ரகங்கள் இப்பகுதியில் விவசாயிகளிடம் உள்ளன. அவற்றைப் பெற்றுக்கொண்டு, உற்பத்தி செய்து, அழிவின் விளிம்பில் உள்ள நெல் ரகங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார். அந்தப் பணியை ஜெயராமனிடம் ஒப்படைத்தார் நம்மாழ்வார். மீதமுள்ள தன் நடைப்பயணத்தில் பாரம்பரிய நெல் ரகங்களையும் சேகரிக்கத் தொடங்கியபோது, அங்கு கிடைத்த பால் குடவாலை, பூங்கார், குடவாலை, காட்டுயானம் உள்ளிட்ட 7 நெல் ரகங்களையும் ஜெயராமனிடம் கொடுத்த நம்மாழ்வார், “இன்னையிலருந்து ஒங்களுக்கு நெல் ஜெயராமன்னு பேரு வைக்கிறேன். நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிங்க” என்றார்.
புதிய ரக நெல் சேகரிப்பு அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க இதற்காக நடந்தார் ஜெயராமன். சிலரிடம் ஒரு மரக்கால் நெல்லைப் பெற ஏழெட்டு முறை வரை அவர் அலைந்த கதைகளும் உண்டு.
நம்மாழ்வாரின் வழிகாட்டலில் வளர்க்கப்பட்ட நெல் ரகங்களெல்லாம் அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளிடம் பரவலாக்கப்பட்டது. இதற்கெனவே நெல் திருவிழாக்களை நடத்தினார் ஜெயராமன்.
பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணர்
ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி விவசாயிகளும் வரும் நிகழ்வாக இருந்த இது விரைவிலேயே ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்று விரிந்து ஒடிஷா, வங்கம், பஞ்சாப், வட கிழக்கு மாநில விவசாயிகள் என்று பரவத் தொடங்கியது. திருவிழாவுக்கு வருபவர்களிடம் பாரம்பரிய ரக விதைநெல்லை இரண்டு கிலோ கொடுத்துவிட்டு, அடுத்த முறை அவர்கள் விளைச்சலிலிருந்து நான்கு கிலோ விதைநெல்லாக வாங்கிக்கொண்டார் ஜெயராமன். இதேபோல புதிய ரக விதைநெல் கொண்டுவருபவர்களிடமும் இரண்டு கிலோ விதைநெல்லைப் பெற்றுக்கொண்டு, பதிலுக்கு நான்கு கிலோ வழங்கினார். விவசாயிகளை அணுக விவசாயியாக இருந்து சிந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கான சான்று இது.
நம்மாழ்வாரின் நட்பைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரிய விவசாயிகளோடு இரண்டறக் கலந்த நெல் ஜெயராமன், திருத்துறைப்பூண்டி பகுதியில் தேசிய அளவிலான நெல் திருவிழாக்களை நடத்தி 41,000 விவசாயிகளுக்கு 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப் பெரும் சாதனை. 2017-ல் நடந்த தேசிய நெல் திருவிழா இவற்றின் உச்சமாக இருந்தது. ‘‘கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இயற்கை வழி விவசாயத்தை அங்கீகரித்துவிட்ட நிலையில் தமிழகமும் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை இந்தப் பெரும் கூட்டம் உணர்த்துகிறது” என்று அப்போது பேசுகையில் குறிப்பிட்டார் ஜெயராமன்.
இவ்வளவு முக்கியமான பணிகளுக்கு இடையே காவிரி நீரின் உரிமைக்காக, விதைகளை மரபணு மாற்றம் செய்வதற்கு எதிராக என்று பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் நெல் ஜெயராமன். ஜெயராமன் நடத்திய கருத்தரங்குகளும் அவற்றில் விவசாயிகள் பகிர்ந்துகொண்ட நேரடி அனுபவங்களும் விவசாயத்துக்கு வெளியே தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் இருந்த ஒரு புதிய கூட்டத்தை விவசாயம் நோக்கி இழுத்து வந்தது.
பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மருத்துவக் குணம் என்று கூறியவர் ஜெயராமன். புற்றுநோயாளிகளுக்கு குள்ளங்கார், நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம் ஆகிய நெல் ரகங்களை அவர் பரிந்துரைத்தார். உடல்நிலையில் மேம்பாட்டை அவை உருவாக்கியதை அனுபவ அடிப்படையில் பகிர்ந்துகொண்டார். மரபைப் பேசியதாலேயே ஜெயராமனைப் பழமைவாதி என்று கூறிவிட இயலாது.
நடைமுறைவாதி
“இன்றைக்கு நவீனக் கண்டுபிடிப்பாகப் பார்க்கப் படுவது நாளைக்குப் பழமையாக மாறிவிடலாம். இன்னும் நூறாண்டுகளுக்குப் பின் அது மரபாகப் பார்க்கப்படலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய நெல் ரகங்களுக்கும் இது பொருந்தும். இன்று நாம் அதைப் பாரம்பரிய நெல் ரகம் என்று சொல்கிறோம். ஆனால், நேற்றைய நவீனக் கண்டுபிடுப்புகள்தான் அவை. இந்த மண்ணில் நாம் எதிர்கொண்ட அதே பிரச்சினையை நம் முன்னோர்களும் எதிர்கொண்டிருப்பார்கள் - அதற்கான தீர்வையே கண்டுபிடிப்பாக மாற்றியிருப்பார்கள். சுனாமிக்குப் பின் இங்கே பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டது. வயல் செத்துவிட்டது; இனி விவசாயமே செய்ய முடியாது என்றிருந்த நிலங்களில் எல்லாம் பாரம்பரிய ரகங்கள் முளைத்தன. பெரும் விளைச்சலைத் தந்தன. நான் பழமையைப் பிடித்துக்கொண்டு தொங்கவில்லை. எது நிலைக்குமோ அது நிலைக்கட்டும், காலத்துக்குப் பொருந்தாதது தொலையட்டும். எனக்கு வியாதி வரும்போது கசாயம் குடிக்கிறேன், அது கேட்காதபோது நவீன மருத்துவத்தையும் நாடுகிறேன். ஆனால், இரண்டுக்குமான தேவைகள், இரண்டுக்குமான எல்லைகள் இருக்கின்றன என்றே நம்புகிறேன்” என்று சொன்னவர் ஜெயராமன்.
ஏழ்மை பலரிடமும் சமூக உணர்வை மழுங்கடித்துவிடும். ஆனால், ஜெயராமன் விதிவிலக்கு. புற்றுநோயோடு போராடிக்கொண்டிருந்த இறுதி நாட்களிலும் “எனக்கு என்னுடைய குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல. மக்களுக்காக ஓடுகிறோம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நிறைய வேலை இருக்கும்போது பாதியைக்கூட முடிக்கவில்லையே என்ற கவலைதான் என்னைக் கடுமையாக வருத்துகிறது!” என்று ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த கடைசிப் பேட்டியிலும்கூட குறிப்பிட்டிருந்தார். விதைநெல் அவர். இந்தச் சமூகத்தின் விருட்சமாவார்.
- எஸ்.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.siva@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago