நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றிருக்கும் எழுச்சி வெற்றியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம், காங்கிரஸ் கட்சிக்குள் நடந்திருக்கும் மாற்றங்கள். கட்சியின் பொறுப்புகளை இளைஞர்களிடம் ஒப்படைத்ததன் மூலம் ராகுல் முன்னெடுத்திருக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. சச்சின் பைலட்டும், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் ராகுலுக்கு நெருக்கமானவர்கள், ராஜ குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் மகன்கள் என்ற விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இருவருமே தங்களை அரசியலில் அழுத்தமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
சச்சின் பைலட், மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகன். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவின் மருமகன். அமெரிக்காவில் வணிக மேலாண்மை படித்தவர். பிபிசியின் டெல்லி பிரிவிலும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். 2009-ல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சச்சின் பைலட், தொழில் நிறுவன விவகாரத் துறை அமைச்சராகப் பதவிவகித்தவர்.
2013 சட்ட மன்றத் தேர்தலில் அசோக் கெலாட் ஆட்சியைத் தவறவிட்டதும், 2014-ல் மாநிலக் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார் சச்சின் பைலட். 2013-ல் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்திருப்பதற்கு சச்சின் பைலட் ஒரு முக்கியமான காரணம். கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், ஐந்து மடங்கு வெற்றி. நரேந்திர மோடியின் பிரச்சாரங்கள், அமித் ஷாவின் தேர்தல் உத்திகள் அனைத்தையும் தாண்டி சச்சின் பைலட் வெற்றிபெற்றிருக்கிறார்.
கவுண்ட்-டவுன் கடிகாரம்
வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி தன்னுடைய நான்காவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கவுண்ட்- டவுன் கடிகாரத்தை வைத்தார் சச்சின் பைலட். அப்போதே காங்கிரஸ் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்கள், உழவர் சந்தை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கத் தேர்தல்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் நேரடிக் கவனம் செலுத்தினார் பைலட். காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த அது உதவியாக அமைந்தது. அதேபோல இந்த ஆண்டு நடந்த சட்ட மன்ற மற்றும் மக்களவை இடைத்தேர்தல்கள் சட்ட மன்றத் தேர்தலுக்கு ஒத்திகை பார்க்கும் வாய்ப்பாகவும் அமைந்தன. ‘பாஜக தேர்தல் களத்தில் என்ன செய்யும் என்று நன்றாகவே தெரியும். அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்’ என்றார் பைலட்.
அதேநேரத்தில், வசுந்தரா ராஜேவை நோக்கியும் அவரது அமைச்சரவை சகாக்களை நோக்கியும் அரசியல்ரீதியான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தில் தனிப்பட்டவகையில் எந்தத் தாக்குதலும் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவருடைய பேட்டிகளில், வசுந்தராஜி என்று மரியாதையோடு குறிப்பிட்டார். மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின்போது நகர்ப்புறங்களில் சாலை வசதிகள், பாதாளச் சாக்கடை வசதிகள் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார். நகர்ப்புற அடிப்படை வசதிகள் பற்றிய பைலட்டின் பிரச்சாரம் ஜெய்ப்பூரில் பாஜக சரிந்துவிழுவதற்கு முக்கியக் காரணமாயிற்று. பாஜக ஆட்சியின் மீதான அதிருப்தி, விவசாயிகளின் கோபம் ஆகியவற்றுடன் பைலட்டின் தனிப்பட்ட ஆளுமையும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குக் காரணம். முதலாவது, இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக அவர் உருவெடுத்திருக்கிறார். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றிய அவரது வாக்குறுதிகள் இளைஞர்களைக் கவர்ந்திருக்கின்றன. ராஜஸ்தானில் இந்தத் தேர்தலில் 65 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 40 பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் 26 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். காங்கிரஸின் இந்த அணுகுமுறை, இளம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இரண்டாவதாக, தன் மீதான குஜ்ஜார் சாதி அடையாளத்தை உடைத்தெறிந்திருக்கிறார் சச்சின் பைலட். மீனாக்கள் அதிகம் நிறைந்திருக்கும் பரத்பூர் பகுதியில் இரண்டு மீனா சமூகத் தலைவர்கள் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு பைலட்தான் காரணமாக இருந்தார். பரத்பூர் பகுதியில் 15 இடங்களில் 14 காங்கிரஸ் வசமாகியிருக்கிறது. காங்கிரஸ் சாதி, மத அடையாளங்களைக் களைத்தெறிந்த இந்த அணுகுமுறை அனைத்து சமூக மக்களிடமும் அவருக்கு வரவேற்பைத் தந்திருக்கிறது.
ஒற்றை முழக்கத்தின் வெற்றி
குவாலியரை ஆண்ட சிந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்த மாதவ ராவ் சிந்தியாவின் மகன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் பயின்றவர். 2002-ல் மாதவ ராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு, குணா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், 2009-ல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார்.
2012-ல் மின்சாரத் துறைக்கு தனிப்பொறுப்பு வகித்த இளம்வயது இணையமைச்சர். ஜூலை 2012-ல் வட இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மின்தடைக்குப் பிறகு, மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதில் ஜோதிர் ஆதித்யாவுக்கு முக்கியப் பங்குண்டு.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2013 தேர்தலில் 58 இடங்களை மட்டுமே வாங்கியிருந்த காங்கிரஸ், இந்த முறை 114 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்திருக்கிறது. சட்ட மன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் ஒவ்வொரு நாளும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள் என்ற வேகத்தில் மாநிலம் முழுக்கச் சுற்றி வந்தார் ஜோதிர் ஆதித்யா. தேர்தல் பிரச்சாரம் முடிந்த நவம்பர் 26-ம் தேதி மாலை 5 மணி வரைக்கும் காங்கிரஸ் பிரச்சாரம் அதே வேகத்தோடு தொடர்ந்ததற்கு சிந்தியா ஒரு முக்கியமான காரணம். தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக, அவர் வைத்த ஒற்றை முழக்கம் ‘பரிவர்த்தன்’. மாற்றம் என்ற அந்த முழக்கம் முழு வீரியத்தோடு மாநிலம் முழுக்க எதிரொலித்தது.
‘முற்றுப்புள்ளி இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை’ என்று தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார். மாநிலம் முழுக்கச் சுழன்றாடிப் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார். தொண்டை அலர்ஜிக்கான மாத்திரைகளையும் கையோடு கொண்டுபோனார். கடைசி நேரத்தில் வெளிவந்த சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றியைத் தவறவிடக்கூடும் என்றபோது, கருத்துக் கணிப்புகள் பொய்யானதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு என்று கட்சித் தொண்டர்களிடம் அவநம்பிக்கை உண்டாகாமல் பார்த்துக்கொண்டார்.
நீங்கள்தான் முதல்வர் வேட்பாளரா என்று தன்னை நோக்கி வந்த கேள்விக்கணைகளுக்கு ‘கட்சி முடிவுசெய்யும். எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் எனது நோக்கம். 35 வயதில் காங்கிரஸ் கட்சி என்னை மத்திய அமைச்சராக்கியது. தற்போது, தலைமைக் கொறடாவாக நியமித்திருக்கிறது.
கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் நான் அதற்காக 300 சதவீதம் உழைத்திருக்கிறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சிந்தியா. காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி சண்டை என்ற நிலைமையை மாற்ற ராகுல் தீவிரமாக முயற்சிக்கிறார். கட்சி நிர்வாகத்தை இளைஞர்களிடம் அளிப்பது, ஆட்சியை மூத்த தலைவர்களிடம் அளிப்பது என்ற ராகுலின் பகிர்ந்தளிப்பு உத்திக்கு வெற்றி கிடைத்திருக்கிறது!
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு:
puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago