அரை நூற்றாண்டாகியும்கூட கீழவெண்மணி இன்னமும் அந்தத் தீயின் வெம்மையை வைத்திருக்கிறது. 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட குடிசை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்துக்குப் போனோம்.
தீக்கிரையான ஓலத்தின் தூரத்துப் பார்வையாளர்களான நம்மையே அது நிலைகுலையச் செய்கிறது என்றால், அதன் வாழும் சாட்சிகளுக்கு எப்படி இருக்கும்? வெண்மணியைச் சேர்ந்த பழனிவேல் அந்தக் குடிசையிலிருந்து தப்பி இன்னும் உயிர் வாழும் சாட்சியம். அவருடன் பேசியதிலிருந்து…
கீழவெண்மணி அப்போது எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?
வேட்டித் துணிமணி கட்டிக்க முடியாது. கௌஷணம்தான் கட்டிக்க முடியும். காலை சாப்பாடுங்கறது வயலுக்குப் போன பிறகுதான். வீட்டுல சாப்புட முடியாது. பண்ணைங்க சொல் மீறுனா கட்டிவெச்சு அடிப்பாங்க. அந்த மாதிரி கொடூரங்கள்லாம் இருக்குறப்பதான் இங்க கம்யூனிஸ்ட் கட்சி வந்துச்சு. இரண்டணா கட்டி கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்து, இந்தப் பகுதியில அதைக் கட்டியெழுப்புனோம். கட்சி வந்தப்புறம்தான் கேள்வி கேட்கிறது நடந்துச்சி. கூலிப் பிரச்சினை பெரிசா தலையெடுத்துச்சு.
பண்ணைங்க நெல் உற்பத்தியாளர் சங்கத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரா வளர்த்தாங்க. விவசாயிங்களையும் எங்களை மாதிரி விவசாயக் கூலிங்களையும் நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கு அடிபணியச் சொன்னாங்க. ஆலங்குடி, இருக்கை, இரிஞ்சியூர், பெருந்தலைக்குடின்னு பல ஊருங்க அவங்க பக்கம் சாய்ஞ்சுடுச்சு. நாங்க இதை எதிர்த்து நின்னோம். அபராதம் போடுவோம்னு மிரட்டுனாங்க. நாங்க மசியல.
அடுத்த கட்டமா எங்க ஆளுங்க ரெண்டு பேரைத் தூக்கிட்டுப் போய் அடிச்சாங்க. நாங்க போய் மீட்டோம். போலீஸும் அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு. இப்படிப் போய்க்கிட்டிருந்தப்போதான் அந்தப் படுகொலை நடந்துச்சு.
படுகொலை நாளில் என்ன நடந்தது?
கனமான ஆளுங்களோட படை தெரட்டிட்டு வர்றதப் பாத்து பொண்டுபுள்ளைங்கள்லாம் ஓடிப்போயி குடிசையில நொழைஞ்சாங்க. கோபாலகிருஷ்ணன் நாயுடுவின் ஆட்கள் எல்லாருட்டயும் கொக்கு மடையான் சுடுறதுக்காகத் துப்பாக்கி இருக்கும். எங்ககிட்ட இருந்தது கம்பும் செங்கல்லும்தான்.
நானே குண்டடி பட்டுதான் குடிசைக்குள்ளே ஓடினேன். எல்லாரும் உள்ள ஓடிப் பதுங்குன பிறகுதான் ஆளுங்க சூழ்ந்துகிட்டுத் தீயை வெச்சிட்டாங்க. குடிசைலருந்து தப்பிக்கப் பாக்குறப்ப எனக்குத் தொடையில வேற வெட்டு. வீடு முன் பக்கம் எரிஞ்சு வெளிய இருக்குற ஜனங்க உள்ளயும் ஓட முடியாது… உள்ள இருக்குற ஜனங்க வெளியிலயும் ஓட முடியாது. அப்படி ஒரு தீ. எரிஞ்சி உள்ளுக்குள்ள இருக்குறவங்க தலைமேல கொட்டுது.
அய்யோ... அம்மான்னு சத்தம் கேட்டதுக்குப் பின்னாடி ஒரு சத்தமும் கேக்கல… நெருப்பு முழுக்கப் பரவிடுச்சி! ராமச்சந்திரன்னு ஒருத்தரு எங்க ஊர்க்காரர். பண்ணையில் மேஸ்திரியாக இருந்தார். அவருதான் என்னையும் பெரியசாமியயும் கயித்துக் கட்டில்ல தூக்கிவச்சிக் கொண்டுபோனாரு. இதுல நானு, பெரியசாமி, ராமன்னு மூணு பேருதான் தப்பிச்சோம். நாகப்பட்டினம் பெரியாஸ்பத்திரியில சேத்தாங்க. அங்க நான் ஆறு மாசம் இருந்தேன்.
போலீஸ் வந்தபோது தீவைக்கப்பட்ட குடிசையைப் பார்க்கவில்லையா?
போலீஸ் வேன்ல போறப்பதான் போலீஸ் கேக்குது, “ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சி சிக்கியிருக்குமோயா?”ன்னு. நாங்க அரை மயக்கத்துல “இல்லங்கய்யா, ஜனங்கள்லாம் மாட்டிக்கிட்டு செத்துக்கிட்டு இருக்குங்க”ன்னு சொன்னதும்தான் சுதாரிப்பானாங்க. பண்ணையாரோட ஆளுங்கள்லாம் தப்பிச்சிட்டாங்க.
நம்மாளு கல்லடி, குண்டடி பட்டவன் அங்க பக்கத்துல இருக்குற பூரச மரம், தென்னமரத்துக்குப் பக்கத்துல கெடந்தாய்ங்க. அந்த மரங்க இல்லன்னா எல்லா குண்டுகளும் எங்க ஆளுங்க மேலதான் பாய்ஞ்சிருக்கும்.
படுகொலைக்குப் பிந்தைய காலம் எப்படி இருந்தது?
கோர்ட்டு கேசுன்னு நடந்துச்சு. தனி கோர்ட்டு போட்டு விசாரிச்சாங்க. பண்ணைங்களுக்குப் பத்து வருஷம் தண்டனை. ஆனா, அவங்க ஒரு மாசம்கூட உள்ள இல்ல. பக்கிரிசாமியை கோபால்ங்கிற எங்க ஆள் வெட்டியதாக ஆயுள் தண்டனை. இரண்டாவது எதிரி ராமையன், மூணாவது எதிரியா என்னைச் சேத்தாங்க. ராமையனுக்கு அஞ்சு வருஷம், எனக்கு ரெண்டு வருஷம். இன்னும் ஆறு பேருக்கு ரெண்டு வருஷம். அனுபவிச்சோம்.
ஆனா, படுகொலையைச் செஞ்ச தரப்பு பரோல்ல வந்துட்டாங்க. ‘பண்ணையார் வசதிவாய்ப்பு உள்ளவரு. இதுபோன்ற காரியமெல்லாம் அவரு பண்ணியிருக்க மாட்டாரு. அவரு பேரப் பயன்படுத்தி யாரோ இதெல்லாம் பண்ணியிருக்காங்க’ன்னு அவரை விடுதலை பண்ணினதைச் சிறையில பேப்பர்ல படிச்சப்போ அழுதோம். நாங்க தண்டனை அனுபவிச்சிட்டு வந்தோம்… அவங்க தண்டனை அனுபவிக்கல.
இதுல என்ன கொடுமைன்னா நான் கொடுத்த மரண வாக்குமூலத்தைத் தீர்ப்புல கணக்குலயே எடுத்துக்கல. எனக்கு ரத்தம் நிக்காம ஓடுனதப் பாத்துட்டு, நான் செத்துப்போயிடுவேன்னு நைட் டூட்டி பாத்த பொண்ணு மேசிஸ்ரேட்டுக்கு போன் பண்ணி வரவெச்சு வாங்குன வாக்குமூலம். மரண வாக்குமூலங்கிறதே அர்த்தமில்லாமப் போச்சு.
மருத்துவமனையில் உங்களைப் பார்க்க அரசுத் தரப்பில் யார் யாரெல்லாம் வந்தார்கள்?
கலைஞரு, சத்தியவாணி முத்து இவங்கல்லாம் வந்தாங்க. சத்தியவாணி முத்து அம்மா என் காமாட்டுல நின்னு கண்ணீர் விட்டாங்க. எனக்குக் காலு கீழ மடக்க முடியாது. ஹார்லிக்ஸ், குளுக்கோஸ், பழச்சாறுன்னு அஞ்சு மாசம் வரைக்கும் அரசாங்கம் செலவுசெஞ்சு பாத்துக்கிட்டுச்சி. இப்பவும் என்னால சரியா நடக்க முடியாது.
மறுவாழ்க்கை நடவடிக்கைகள் எப்படி இருந்தன?
தற்காலிகமா கீத்துவீடு, காலனி கட்டிக்கொடுத்தாங்களே தவிர, பொருளாதாரத்த முன்னேத்திவிடுறதுக்கு ஏதும் பண்ணலை. கம்யூனிஸ்ட் கட்சி, வழக்குல துணை நின்னாங்க. பி.ராமமூர்த்திதாங்க அப்போ எங்களுக்கு எல்லாமே. அப்புறம் சர்வோதயா இயக்கம் சில உதவிகள் செஞ்சதால நாங்க கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவந்தோம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்தாங்க பேப்பர்ல பாத்த கையோட வந்து அவங்களால என்னன்ன செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சாங்க.
‘என்ன செஞ்சா இவங்க வாழ்க்கையில முன்னேறுவாங்க’ன்னு ஒவ்வொரு மிராசுதாரர்கிட்டயும் பேசி நிலத்தை வாங்கிக்கொடுத்தாங்க. இந்த ஊர்ல மட்டும் அம்பது பேருக்கு நிலங்கள் வாங்கிக்கொடுத்தாங்க. இங்க மட்டுமில்லாம சுத்துப்பத்துல பல கிராமங்களுக்கு நிலம் வாங்கிக்கொடுத்துருக்காங்க. வீடும் கட்டிக்கொடுத்தாங்க.
இன்றைக்குப் பண்ணையார்கள் தரப்போடான உறவு எப்படி இருக்கிறது?
அந்த ஊர்லயே நிறைய மனமாற்றம் அடைஞ்சிருக்காங்க. நம்ம ஊருல துக்கம், கல்யாணம்னா சொல்லாமலேகூட வருவாங்க. நம்ம பையன் ஒருத்தன் டீக்கடை வச்சிருக்கான். அங்க நிலச்சுவான்தாரர்லாம் வந்து டீ சாப்பிடுவாங்க, பேசுவாங்க. இரண்டு சமுதாயங்களுக்கும் இடையில் கல்யாண சம்பந்தம்கூட நடந்துருக்கு. அதை, யாரும் எதிர்க்கலைங்கிறதே நல்ல விசயந்தானே!
- தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago