கடல் மடியில் கூரிய அரிவாள்

By சமஸ்

அடுத்த நாள் அதிகாலையிலேயே ராமேஸ்வரத்திலிருந்து வண்டியைக் கிளப்பியாயிற்று. சுற்றுப்புற ஊர்களுக்குப் பயணமானோம். கடலுக்குச் சென்று விசைப் படகுகள் திரும்பும் நேரத்தில் படகுத் துறையில் இருந்தோம். படகுகளில் இறால்கள் தனியே, மீன்கள் தனியே எனத் தரம் பிரித்து, கூடை கூடையாக இறக்கப்படுகின்றன. அளவில் பெரிய இறால்களைக் கரையிலேயே தராசு வைத்து நிறுத்து, சில ஆட்கள் எடுத்துக்கொண்டிருக்க, மீன்களைத் தனியே கொண்டுபோய் வைக்கிறார்கள்.

“கரையிலயே நின்னு எல்லாத்தையும் பாத்துட முடியுமா, படகுல ஏறுங்க” என்று என்னைப் பார்த்துச் சொல்லிய வாறே, “ஏ... யப்பா, அந்தக் கயித்த கொஞ்சம் இப்பிடிப் போடுப்பா... தம்பி வெளியூர்லேந்து வந்திருக்காரு...” என்று படகில் உள்ளவர்களிடம் கயிற்றை இழுத்துவிடச் சொல்கிறார் வேலாயுதம்.

படகின் கூரையிலிருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு, படகைச் சுற்றிலும் தொங்க விட்டி ருக்கும் டயர்களில் ஒன்றில் கால்வைத்து ஏறினேன்.

“ஏ... யப்பா... சங்காயம் இவ்ளோதானா?” என்கிறார் அவர்களிடம்.

“அங்கெ வேற ஒதுக்கிக் கெடக்கு, பாருங்க... தேர்றது ஒரு பங்குன்னா, தேறாதது மூணு பங்கு. இதுக்கு மேலயும் வேற நட்டப்படணுமா?” என்கிறார்கள்.

படகின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் குவிக்கப்பட்டி ருக்கின்றன, இன்னவென்று பிரித்துச் சொல்ல முடியாத பல வகை மீன்கள். எல்லாம் சிறுசிறு பொடிகள். “இதாம் சங்காயம், பாத்துக்குங்க” என்று காதோரம் மெல்லக் கிசுகிசுக்கிறார்.

“ஏ... யப்பா... பாடு ரொம்பக் கம்மியாட்டு இருக்கே?” என்கிறார் அவர்களை நோக்கி.

“ஏம்டா கடலுக்குப் போறோம்னு இருக்கு… கஷ்டம்” என்றவாறே வேலையைக் கவனிக்கிறார்கள்.

“சரி, வாங்க, நாம அந்தப் படகுக்குப் போவலாம்...” என்று அந்தப் படகையொட்டி நிற்கும் அடுத்த படகுக்குத் தாவுகிறார். அங்கும் அதே கதை… அதே பேச்சு… அதே சங்காயம். படகுத் துறையிலிருந்து வெளியே வருகிறோம்.

மெல்லக் கரையையொட்டி நடக்கிறோம். தூரத்தில் மீன்கள் காயவைக்கப்பட்டிருக்கும் தளத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

“அந்தோ காயுதே என்னான்னு தெரியிதா?”

“கருவாடு...”

“ஆங்... கருவாடு இல்ல. சங்காயம். ஒங்களுக்குப் புரியிற மாரிச் சொல்லணும்னா, நீங்க கடல் வளம், மீனு வளம்னெல்லாம் சொல்லுறீங்களே அதாம் இந்தச் சங்காயம்” என்றவாறே அந்தப் பகுதியை நெருங்குபவர், காயவைக்கப்பட்டிருக்கும் சங்காயத்தில் ஒரு பிடி அள்ளு கிறார். என் கையில் கொடுக்கிறார். அப்படியே இடி இறங்கியதுபோல இருக்கிறது.

“பாருங்க... கடலு வளம் படுற பாட்டை... யய்யா, பாருங்க... என் குலமே எங்க ஆத்தாளைச் சீரழிக்கிறதை. சூறையாடுறானுவோய்யா கடலை, சூறையாடுறானுவோ. நாளைக்கு என் புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் தொழில் கொடுக்க வேண்டிய உசுருய்யா இதெல்லாம். உங்க புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் வயித்தை நெரப்ப வேண்டிய உசுருய்யா இதெல்லாம். ஆளா பெருக்க வேண்டிய உசுரையெல்லாம் இப்பிடிக் குஞ்சா இருக்கையிலேயே புடிச்சு அழிச்சா கடலு எப்படிச் செழிக்கும்?

இதுல என்னெல்லாம் இருக்கு தெரியுமா? காரப்பொடி, மீனு, நண்டு, எறா, கணவா, கடக்குச்சி, முச்சங்கு எல்லாம்… எல்லாம். நீங்க பேப்பர்ல அரிய உயிரினம்னு எதை யெல்லாம் எழுதுவீங்களோ அதையெல்லாம் இதுல தேடிக் கண்டெடுக்கலாம். ஆனா, படகுக்காரங்களுக்கு இது என்னா தெரியுமா? குப்ப. எதுக்கும் தேவப்படாத குப்ப.

எறா புடிக்கப் போகையில மடி அரிச்சிக்கிட்டு வர்றது இதெல்லாம். பெரும்புடி எறா, மீனுங்களைப் பொறுக்கிட்டு இதக் குப்பையாக் கொண்டாந்து கொட்டுதாம். கோழித் தீவனக் கம்பெனிங்களுக்கு இது போவும். என்னா வெல தெரியுமா? கிலோ ஏழு ரூவா தேறாது. வயிறு எரியுதய்யா… வயிறு எரியுது. கடக்கரையில ஆலைங்களைக் கொண்டாந்து வைக்கிறவங்க கடப் பொழக்கம் இல்லாதவங்க. இந்தக் கடலுக்கு உசுரு இருக்கு, இதுதான் நம்ம உசுர வளக்குதுங்கிறது அவங்களுக்குத் தெரியாது. ஆனா, இது அப்பிடியா? காலங்காலமா உசுரு வளக்குற ஆத்தாள இப்பிடிப் புண்ணாக்கலாமா? பவளப்பாற, கடக்கோர எல்லாம் உடச்சிக்கிட்டுப் போவுதய்யா.”

“தெரிஞ்சேதான் இதையெல்லாம் செய்யுறாங் களாய்யா?”

“தெரியாமலா பண்ணுதாம்? இதெல்லாம் எறாலுக்கான வேட்டையில சிக்குறதுங்க. கடத்தல் எவ்ளோ தெரியுமா? கீழக்கரைக்குப் போங்க. கப்ப கப்பலா கதை வரும். உண்டியக் கதையிலேந்து வஸ்துங்க கத வரைக்கும். தீவுல திரியுற குதுரக் குட்டியைக்கூடக் கடத்துதாம் தம்பி. ஆமைங்க, கடக் குதுர, ஆவுளியாவெல்லாம் எந்த மூல? எல்லாம் குறிவெச்சு வேட்டையாடுதாம். எல்லாத்துக்கும் வெளியில விக்க ஒரு கத வெச்சிக்கிதாம். கடக் குதுரயோட உடம்பு மருந்து, ஆவுளியாவோட பல்லு மருந்துன்னு கத. கம்பெனிக்காரங்ககிட்ட இவங்க தள்ளிவுடுறது. அவனுவோ டப்பியில வெச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுறது.”

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டி அடிபோல் விழுகிறது.

“அரசாங்கம் இதுக்கெல்லாம் தடை விதிச்சிருக்கு, இல்லையா?”

“ஆமா, அரசாங்கம்... அட, ஏன் தம்பி? எவ்வளவோ உசுருங்களைக் கடல்ல புடிக்கக் கூடாதுன்னு தட இருக்கு. அதெல்லாம் சட்டப் புத்தகத்துலதான தம்பி இருக்குது? எல்லாம் தூங்குது. அதிகாரிங்கதான் நெதம் கப்பத்துக்குக் கைநீட்டுறாங்களே? இங்கெ எல்லாம் நடக்கும். பல கதைங்க அரசாங்கத்துக்கே தெரியாது.”

“சரி, உங்க ஆளுங்களுக்கு இதனால ஏற்படுற பாதிப்புங்க தெரியும்ல, எல்லாம் தெரிஞ்சும் எப்பிடி இதையெல்லாம் செய்றாங்க?”

“அதாம் நேத்து சொன்னேனே தம்பி, ரெண்டு வர்க்கம். மொத வர்க்கம், அன்னாடப் பொழப்புக்கு ஓடுது. ரெண்டாவது வர்க்கம், பணத்தப் பெருக்க அலையிது. கடக்கரைக்கு மொதலீட்டோட வந்த இந்த ரெண்டாவது வர்க்கம், கடலுக்குள்ள போவாமலே சம்பாதிக்குது தம்பி. அதுக்குக் கைக்கூலிங்க இந்த மொத வர்க்கத்துலேந்து, எங்க வர்க்கத்துலேர்ந்து வெல போனவங்ங. பாரம்பரியக் கடலோடி அன்னியில எவனும் கடலுக்குள்ள நொழய முடியாது தம்பி. வெல போயிட்டாம். ஆனா, அப்படிப் போனவம் எண்ணிக்கை கம்மி.

இன்னிக்கும் மொத்தக் கடலோடிங்கள்ல விசைப்படகு, டிராலர எண்ணிக்க எவ்வளவு, கட்டுமரம் - நாட்டுப்படகுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க? பத்துல ஒரு பங்கு. அவ்ளோதாம். அதுல தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஆழ்கடலுக்குப் போயித் தொழில் செய்யிறவன் தானும் உசந்து, தான் தலமொறயயும் உசத்துதாம். காசுக்கும் குடிக்கும் ஆசப்பட்டு, ரெட்ட மடி இழுவ மடி போட்டுதவம் கடலையும் நாசம் பண்ணி, தான் தலமொறையயும் நாசம் பண்ணுதாம். இதுல நீங்க இன்னொரு கணக்கையும் பாக்கணும். ஓடுற படகுல பத்துல ஒண்ணுதாம் விசைப்படகுன்னேல்ல, ஆனா, புடி படுற மீனுல பெரும் பகுதி விசைப்படகு, டிராலருதாம். இந்த அக்கிரமத்த எதுத்து எவ்வளோ போராட்டம்கிறீங்க? ஒருகட்டத்துல விசைப்படகுங்களை அங்கைக்கு அங்க வச்சி எரிச்சதெல்லாம் கடக்கரையில நடந்தது. இப்பம் நீ மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போ, நான் மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, வாரத்துக்கு ஒரு நா படகைக் கரையில கட்டிப்போட்டு கடல பாத்துக்கிட்டிருக்கம்.

இழுவ மடி, ரெட்ட மடிக்கு அரசாங்கம் தட விதிச்சுப் பல வருசம் ஆவுது தம்பி. ஆனா, யாரும் தடுக்க இல்ல. ஏன்னா, கடலைச் சூறயாடுற கையி கடக்கரையில இல்ல. அது வெளியில இருக்கு. வெவ்வேற கம்பனி பேருல. கம்பனிக்குப் பின்னாடி இருக்குற வெள்ளைச் சட்ட சோக்கு மனுசங்க பேருல. நம்ம நாட்டுக் கடலேந்து எவ்வளவு ஏத்துமதி ஆவுது, எறா ஏத்துமதியில மட்டும் வருசத்துக்கு எவ்வளவு பொழங்குதுன்னு நீங்க விசாரிங்க. யாரு யாரு பினாமி பேருல கப்பலுங்க ஓடுது, கம்பனிங்க நடக்குதுன்னு, அந்தக் கப்பலுங்க, கம்பனிங்க பின்னாடி இருக்குற கைங்க எத்தன நீளம்னு உங்களுக்குப் புரியும்” என்றவாறு என் கையிலிருந்த சங்காயத்தை வாங்கிக் கீழே வைக்கிறார்.

“கடலம்மா, மன்னிச்சுக்க. தடுக்க முடியாத இந்தப் பாவிய... சூறையாடுதானுவோளேம்மா, அந்தப் பாவிய” - முணுமுணுத்தவாறே சங்காயத்தைப் பார்த்து நிற்கிறார் வேலாயுதம்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்