பாடலின் ஊடாக ஒலிக்கும் இசையால் பல பாடல்கள் உயிர்ப்புடன் துள்ளுகின்றன.
பாடல்கள், குறிப்பாக சில திரைப்பாடல்கள் தரும் இன்பத்தை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு பாடல், காற்றில் மிதந்து வந்ததும், உள்ளம் அதில் தோய்ந்து அதனோடு பயணம் செய்யத் தொடங்குகிறது. இன்ன இன்ன இடத்தில், இந்த இந்த இசைக் கருவி ஒலிக்கும், பாடல் தொடரும், பல்லவி முடிந்து, தாளக் கட்டு இப்படியாக மாறும் என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் நம் மனதுக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள். பாடலுடன் இணைந்து ஒலிக்கும் இசையையும், அதுதரும் சுகானுபவத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?
மெல்லிசை மென்மையாக உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. மழையோ, வெயிலோ, பனிக் காற்றோ, இளம் தென்றலோ அந்தந்தப் பாடலுக்கு ஏற்றவாறும், கேட்பவர் மனநிலைக்குத் தக்கவாறும் உணர்வுகளைக் கிளர்த்துகிறது. கேக் துண்டின் மீது நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கும் செர்ரிப் பழம் போலவோ, மயிலின் கொண்டை அழகாகவோ பாடலின் மீது சிலபோது மிதக்கிறது இசை.
ஊடுபாவாக…
‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு' (படம்: நாடோடி) என்ற அருமையான பழைய பாடலில்
டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இருவரின் குரல்களோடு மூன்றாவது குரலாகவே ஒலிக்கும் ஹார்மோனியம் இசையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அடடா... என்ன இன்பம் அந்த இசைக் குறுக்கீடு! நெசவுத்தறியில் ஊடுபாவாகக் குறுக்கும் நெடுக்கும் அந்த இசை துள்ளித் துள்ளிச் செல்லும். அதே படத்தில் இடம் பெறும் ‘அன்றொரு நாள் இதே நிலவில்' பாடலில் வரும் இசையும் அத்தனை இனிமையானது.
சர்க்கஸ் ‘பார்' விளையாட்டில் இந்த முனையிலிருந்து தாவிச் செல்லும் ஒருவரை அடுத்த முனையில் இருப்பவர் தாவித் தன்னோடு இணைத்துச் செல்வதுபோல, இசையின் ஒரு முனையில் விடுபடும் சொற்கள் அதே இசையின் அடுத்த முனையில் வந்து பற்றிக்கொண்டு தொடரும் சாகசத்தை எத்தனை பாடல்களில் பார்த்திருக்கிறோம்.
பழைய தலைமுறை மனிதர்கள், ‘குங்குமப் பூவே கொஞ்சு(ம்) புறாவே' (மரகதம்) என்கிற திரைப்பாடலுக்கு ஈடாக என்னவும் தரத் தயாராக இருப்பார்கள். சந்திரபாபு – ஜமுனா ராணி குரல்களில் துள்ளத் துள்ள இசைக்கும் அந்தப் பாடலின் பல்லவியில்,போக்கிரி ‘ராஜ்ஜா....’ என்று ஜமுனா இழுக்கும்போது ‘போய்ங்... போய்ங்…’ என்று இழைக்கும் இசைக் கருவியை தவிர்த்து அந்தப் பாடலை யோசித்துப் பார்க்க முடியுமா?
வயலினுக்கு வாழ்க்கைப்பட்ட பாடல்கள்
‘வான் நிலா நிலா அல்ல' (பட்டினபிரவேசம்) பாடலும், ‘கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' (புன்னகை மன்னன்) பாடலும் வயலின் கருவியோடு வாழ்க்கைப்பட்ட ரசம் ததும்பும் கீதங்கள் அல்லவா? அந்த இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு யார்தான் இந்தப் பாடல்களை ரசிக்க முடியும்?
பக்திப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மதுரை சோமுவின் புகழ்பெற்ற பாடலான ‘மருதமலை மாமணியே முருகய்யா’ தரும் பக்திப் பரவசம் சாதாரணமானதா! அதன் ஒரு சரணத்தில், ‘பனி அது மலை அது நதி அது கடல் அது’ என்று அவர் மூச்சு விடாது பட்டியல் போட்டு வரும் ராகத்தின் கம்பியைப் பிடித்தபடி புல்லாங்குழல் ஓசை ஒரு பாம்பைப் போல இசைத்து நழுவிச் செல்லும் அந்த ரசனை மிக்க இடத்தை யார்தான் இழக்கச் சம்மதிப்பார்கள்? ‘உயிரே... உயிரே…' (பம்பாய்) என்று ஹரிஹரன் குரலெழுப்பும்போது அந்தக் காதல் ஏக்கத்தைச் சிந்தாமல் சிதறாமல் மூங்கிலில் சேகரித்துக்கொள்ளும் குழலோசை பின்னர், நேயர்களின் உயிரையே உருக்கி வார்த்துவிடுவதில்லையா?
‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' (அவளுக்கென்று ஒரு மனம்) என்ற எஸ். ஜானகியின் இனிமை கொஞ்சும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலில் திருமண நிகழ்வைக் குறிக்கும் வாத்திய இசை புறப்பட்டு, அப்படியே மென்மையாக ஆர்கெஸ்ட்ரா இசையோடு கலந்து, கடைசி சரணத்தை எடுத்துக் கொடுக்கும் இடம், கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் விரும்பித் தேடுவதாக இருக்கும் அல்லவா?
வாணி ஜெயராம் பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' (தீர்க்க சுமங்கலி) என்ற பாடலின் சரணத்தில், ‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது' என்ற இடத்தைத் தபேலா தாளக்கட்டு தன்னுள் வாங்கி வெல்வெட் மெத்தை போல இதப்படுத்தி உருட்டி, திரும்ப விடை கொடுக்கும் இடத்தில் பாடகி, 'குளிர்க் காற்றிலே தளிர் பூங்கொடி' என்று அடுத்த அடியை எடுத்துப் பாடவும் உள்ளம் எவ்வளவு கிறக்கம் கொள்கிறது!
ஜேசுதாஸின் ‘என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) பாடலில், அப்படியே கிடாரின் கம்பியாக மாறும் அவரது குரலும், அவரது குரல்நாணாக உருமாறும் கிடார் இசைத் தந்தியும் போட்டி போட்டு நடத்துவது ஒரு ரசவாதமே! ஜாகிங் ஓட்டத்துக்கு ஏற்ப இளையராஜா இசையமைத்த ‘பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே) பாடலில் கால்களின் ஓட்ட ஜதியை ஒலிக்கும் தாளக் கட்டு எத்தனை பிரிக்கவியலா பந்தம் கொண்டிருப்பது!
மெல்ல மெல்லச் சுழன்று இசைக்கும் இசைத் தட்டு அதே சுழற்சியின் அதிராத தேய்தலில் ஒரு கட்டத்தில் இயல்பாக அமைதி நிலையை வந்தடைகிறது. அதே போன்று நிறைவடையும் வாழ்க்கை அமையுமானால் அதுவும்கூட ஓர் இசைத்தட்டுதானே!
- எஸ்.வி. வேணுகோபாலன், தொடர்புக்கு: sv.venu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago