உயிரியல் ஆய்வாளர் காரட் ஹார்டின் ‘பொது வளங்களின் துயரம்’ என்ற முக்கியமான ஒரு கட்டுரையை 1968-ல் ‘சயின்ஸ்’ இதழில் வெளியிட்டார். நிலத்தடிநீர் போன்ற பலருக்கும் பொதுவான வளங்கள் நமக்கு இயற்கை அளித்த மகத்தான மூலதனங்கள். அவ்வளங்கள் சுயநலக்காரர்களின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதால் ஒரு நாள் இவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு மனிதகுலத்தையே மீளாத்துயரில் ஆழ்த்திவிடும் என்பதுதான் அந்தக் கட்டுரையின் செய்தி. ஹார்டினின் கூற்றை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் சம்மந்தப்பட்ட சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பு நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.
உரிய அனுமதியின்றி லாப நோக்குடனும் வணிகரீதியாகவும் செயல்படும் தனியார்க் கிணறுகளை மூட வேண்டும் என்று 2014-ல் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். நிலத்தடிநீர் நமது தேசத்தின் சொத்து எனவும் அதை உரிய அனுமதியின்றி எடுப்பது திருடுவதற்கு ஒப்பாகும் எனவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவைக் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் மீண்டும் உறுதிசெய்தது. இதையடுத்து, சென்னையைச் சுற்றியுள்ள அனுமதியின்றி இயங்கிய சுமார் 130 கிணறுகள் அரசு அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தண்ணீர் விற்பனையாளர்கள் சுமார் 4,500 தண்ணீர் லாரிகளை இயக்காமல் போராட்டத்தில் குதித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்று உறுதியளித்ததன் மூலம் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை ஏறத்தாழ 80% மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக தனியாரையே சார்ந்துள்ளனர். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 50-60% தண்ணீர்த் தேவையை தனியார் லாரிகளே பூர்த்தியாக்குகின்றன. திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் தனியார் விற்கும் நீரையே 100% நம்பியுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி மதிப்புள்ள தண்ணீர் தனியாரிடமிருந்து வாங்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது பலதரப்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைத்திருக்கப்போவதில்லை.
நிலத்தடிநீரின் நிலை
தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் நிலத்தடிநீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஏரி, குளங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததும் நிலத்தடிநீர் மோசமாகக் குறைவதற்கு மிக முக்கியக் காரணம். உதாரணமாக, சென்னை மாநகரில் உள்ள பள்ளிக்கரணை ஏரி சுமார் 35 வருடங்களுக்கு முன்பு 5,000 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடந்தது. ஆனால், இன்று அதன் பரப்பளவு வெறும் 635 ஹெக்டேர் மட்டுமே. தென்சென்னையில் தினந்தோறும் உருவாகும் சுமார் 7,000 டன் திடக்கழிவுகள் பள்ளிக்கரணை ஏரியில் கொட்டப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு திரவக்கழிவுகளும் இங்கே கலக்கின்றன.
1990-களில் தனியார் லாரிகள் வரைமுறையற்ற வகையில் நிலத்தடிநீரை உறிஞ்சியதால், மீஞ்சூர்-மாமல்லபுரம் இடையே நிலத்துக்கடியில் கடல் நீர் புகுந்துவிட்டது. இறால் பண்ணைகள், சுனாமி, கடல்நீர் உட்புகுதல் ஆகியவற்றால் கடலோர நிலத்தடிநீரின் தன்மை மிக மோசமடைந்துவிட்டது. புவி வெப்பமடைவதால் கடல்நீர் மேலெழும்போது மேலும் கணிசமான அளவு நிலத்தடிநீர் உப்பாகும். நொய்யல், பாலாறு போன்ற ஆறுகளின் நிலத்தடிநீர் ஆலைக்கழிவுகளால் அடியோடு பாழ்பட்டுவிட்டது. ஆக மொத்தத்தில், நிலத்தடிநீரின் துயரம் நமது மாநிலத்தை முன்னரே பீடித்துவிட்டது. பருவநிலை மாற்றத்தால், வருங்காலங்களில் நீண்ட காலத்துக்கு வறட்சி நிலவும் என்பதால் தமிழகத்தில் நிலத்தடிநீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இப்பெருந்துயரை எவ்வாறு போக்குவது?
தனியார் நீர்ச்சந்தை அபரிமிதமாகப் பெருகக் காரணம், அரசாங்கத்தால் போதிய நீரை அளிக்க முடியாமல் போனதுதான். தேவையான தண்ணீரை அரசாங்கமே மக்களுக்கும் மற்றைய நடவடிக்கைகளுக்கும் அளிப்பதன் மூலம் நீர்ப் பகிர்ந்தளிப்பில் தனி நபர்களின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும். நன்னீர் என்பது மிகவும் அரிதாகிவிட்டபடியால் அதை செலவில்லாமல் இனிமேலும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது சாத்திய மில்லை.
நீரை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பகிர்ந்தளிக்கும்போது அதை ஏற்கெனவே உபயோகித்த மக்களுக்கு அது இழப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீரைத் திருப்புவதால் வீராணம் நீரால் பயனடைந்த உள்ளூர் மக்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பும் ஈடுசெய்யப்பட வேண்டும். அரசாங்கம் பகிர்ந்தளிக்கும் தற்போதைய நீரின் விலையைக் கொண்டு அதைச் செய்ய முடியாது. நீருக்கான உண்மையான விலையை நிர்ணயம் செய்தாக வேண்டும். நீர்ச் சுத்திகரிப்பு, பகிர்ந்தளிப்பு, கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும். நீருக்காக குறைந்த அளவு தொகையேனும் மக்கள் அளிக்கும் பட்சத்தில்தான் அவர்களால் அரசாங்கத்திடம் தங்களுடைய நீருக்கான உரிமையை நிலைநாட்ட முடியும்.
இனி வரும் காலங்களில் நீர்நிலைகளின் ஒட்டுமொத்த மேலாண்மையையும் விவசாயிகள், நீர்ப்பாசன சங்கங்கள், மக்கள் மன்றம், அரசு சாரா நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுப்பணித் துறை போன்ற அரசுத் துறைகள் இணைந்த ஒரு மேலாண்மை வாரியமே நிர்வகிக்க வேண்டும். இந்த அமைப்புக்கு ஒவ்வொரு ஆற்றுப் பெருநிலத்தையும் நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எவ்வளவு நீர் யாருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், எவ்வளவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அதில் வரும் வருவாயை எவ்வாறு நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் நீரை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும் போன்ற அனைத்து முக்கிய முடிவுகளும் இந்தக் கூட்டமைப்பின் மூலமே நிர்வகிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நடைமுறைப்படுத்தினால்தான் நிலத்தடிநீருக்கான துயரங்களிலிருந்து விடுபட முடியும்.
- எல்.வெங்கடாசலம், பேராசிரியர்,
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.
தொடர்புக்கு: venkatmids@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago