அடிமை ஏற்றுமதியை எப்போது தடுக்கப்போகிறோம்?

By கவிதா முரளிதரன்

குறைவான சம்பளம், கடுமையான வேலை நேரங்கள், ஓய்வெடுக்க முடியாத சூழல், பாலியல் சீண்டல்கள்…

“குவைத் தெருக்கள்ல கார்ல வெச்சு என்னை ரெண்டு லட்ச ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்தாங்க மேடம். என்னால மறக்க முடியல… ஏதாவது பண்ணணும் மேடம்” - இறுகப் பற்றியிருந்தபோதும் கைகளின் நடுக்கம் குறையவில்லை நதியாவுக்கு.

“நீங்கதான் தப்பிச்சு வந்துட்டீங்களே…” கேள்வியை மிக அவசரமாக இடைமறிக்கிறார் நதியா.

“ஆமா! ஆனா, அங்க இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. எல்லாரும் தப்பிக்கணும் இல்ல?”

வெளிநாடுகளில் வீட்டு வேலை பார்க்கும் பெண்களின் பிரச்சினைகள்பற்றிய அந்தக் கருத்தரங்கில் நதியா போலப் பல கண்ணீர்க் குரல்களைக் கேட்க முடிந்தது. மிக மோச மான சூழலிலிருந்து தப்பித்து வந்து ஒரு மாதமே ஆன நிலையில், இப்போதும் பானுமதியால் நிதானமாகப் பேச முடியவில்லை. “குவைத்துக்குத்தான் என்னை முதலில் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து எப்படி சவுதி அரேபியா போனேன்னு எனக்கே தெரியல. சவுதி போனதிலிருந்து பிரச்சினைதான். எனக்குக் கடுமையான கை வலி வந்துச்சு. அப்பவும் என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகாம, ஏதோ மாத்திரை கொடுத்தாங்க. அதைச் சாப்பிட்டும் சரியாகல. வலி மோசமானவுடனேயே என்னை ஊருக்கு அனுப்பச் சொல்லிக் கெஞ்சினேன். என்னை அந்த வீட்டுல இருக்கிறவங்க மாறி மாறி செருப்பாலயே அடிச்சாங்க. பக்கத்து வீட்டுல டிரைவர் வேலை பார்க்கிற அண்ணன்கிட்ட ரகசியமா போன் வாங்கி ஜோசபைன் மேடத்துக்குப் பேசினேன். அவங்கதான் எனக்குத் தப்பிக்க உதவுனாங்க. அவங்கதான் என் தெய்வம்” என்று நெகிழ்கிறார் பானுமதி.

புலம்பெயர் வீட்டுத் தொழிலாளர் அறக்கட்டளை (Migrant domestic workers trust) என்கிற அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஜோசபைன் வளர்மதி. அவர் சொன்ன இதுபோன்ற சோகக் கதைகள் எண்ணற்றவை.

வெளிநாட்டில் வேலை, கவர்ச்சியான சம்பளம், சொகுசான வாழ்க்கை என்று முகவர்களின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து, முதல்முறையாக விமானத்தில் ஏறும் பலர், அடித்துப் பிடித்து ஒரு வருடத்துக்குள்ளாகவே மீண்டும் தமிழகம் வந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காயங்களிலிருந்து மீள்வதற்குப் பல வருடங்கள் ஆகின்றன.

பெரும்பாலான சமயங்களில் உறுதியளிக்கப்பட்டதைவிடக் குறைவான சம்பளம், கடுமையான வேலை நேரங்கள், ஓய்வெடுக்க முடியாத சூழல், மோசமான சித்திரவதை, சமயங்களில் பாலியல் சீண்டல் என இந்தப் பெண்கள் தொடர்ச்சியாகக் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். தப்பிக்க முடியாத படி இவர்களது கடவுச்சீட்டைப் பறித்து வைத்துக்கொள்கிறார்கள் வேலை தருபவர்கள். எப்படியோ தப்பித்துத் தூதரகம் சென்றடைந்த பின்னரும் கடவுச்சீட்டு இல்லாததால் இவர்கள் திரும்ப வருவது கேள்விக்குறியாகிறது.

வேலை பார்க்கும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பெண்கள் அந்த வீட்டிலிருந்து திருடிவிட்டதாகப் புகார்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவர்களது பயணத்தை மேலும் சிக்கலாக்கு கிறது. “பல சமயங்களில் வேலை கொடுப்பவர்களுடன் பேசி கிட்டத்தட்ட பஞ்சாயத்து செய்துதான் இந்தப் பெண்களை மீட்க வேண்டியிருக்கிறது” என்கிறார் மத்திய அரசு அதிகாரி ஒருவர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமா?

வீட்டு வேலை செய்யும் பெண்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டும்தான் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பது வெறும் கட்டுக்கதை. சமீபத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் என்கிற சர்வதேச மனித உரிமை அமைப்பு லண்டனில் ஆய்வு நடத்தியது. இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து லண்டன் வந்து வேலை பார்க்கும் பெண்களின் கண்ணீர்க் கதைகளைத் தொகுத்துத் தருகிறது அந்த ஆய்வறிக்கை. அதில் ஒரு பெண் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “கடுமையான வேலை நேரங்கள் தாண்டி எனது அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டன. நான் பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தையின் சோப்பை எனது எஜமானர்களுக்குத் தெரியாமல் உபயோகிக்க வேண்டியிருந்தது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக அந்தக் குழந்தையின் டயபர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில்தான் நான் இருந்தேன்.”

2012-ல் இங்கிலாந்து ‘டைடு விசா' விதியை அமல் படுத்தியது. இதன்படி, வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டினரை எந்தக் குடும்பம் அழைத்து வருகிறதோ அந்தக் குடும்பத்துக்குத் தவிர, வேறு யாருக்கும் வேலை பார்க்க முடியாது. வேலை கொடுப்பவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை, வேலை செய்பவர்களின் உரிமைகளுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 2011-ல் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, வெளிநாடுகளில் வீட்டுப் பணி செய்பவர்களுக்காகச் சில உரிமைகளை வகுத்தது. குறைந்தபட்சக் கூலி, ஓய்வு நேரம், குறிப்பிட்ட பணி நேரங்கள் போன்ற பல உரிமைகளை ஏற்படுத்திய இந்தச் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கையை இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்புறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சட்டரீதியான பாதுகாப்பு இல்லை என்பது இவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை. வீட்டு வேலை களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பற்றிய தரவுகள்கூட இந்திய அரசாங்கத்திடம் முறையாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. அதற்குக் காரணம், இவர்கள் தங்களைத் தூதரகங்களில் முறையாகப் பதிவுசெய்து கொள்வதில்லை என்பதே. அதுபற்றி அவர்களுக்குத் தெரிவதுகூட இல்லை.

குவைத்துக்கு விசா வாங்கி குவைத்திலிருந்து சவுதிக்கு அனுப்புவது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது போன்ற திரிபு வேலைகள் முகவர்களாலேயே நடக்கின்றன. முகவர்களுக்கான சட்டங்களோ நடைமுறைகளோ சரியாக வகுக்கப்படவில்லை என்பதும் மிகப் பெரிய பிரச்சினை.

தங்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையும், முறையாகச் சட்டப் பாது காப்பு இல்லாத நிலையும் சேர்ந்துதான் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச் செல்லும் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றன.

தீர்வு என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ராமநாதபுரம், புதுகோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்துதான் அதிக அளவில் பெண்கள் செல்வதால், இந்த மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அரசாங்கமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்வது அவசியமாகிறது. ஆனால், தேசிய அளவில் உறுதியான சட்டங்கள் இருந்தாலொழிய, இந்தப் பிரச்சினை தொடர்கதையாக, சமூகப் பிரச்சினைகளில் உதிரியாக மட்டுமே நிற்கும். இந்தப் பிரச்சினை குறித்த சமூகப் பார்வையையும் உருவாக்க வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, பேசப்படாத ஒரு விஷயம், வீட்டு வேலைக்கென்று வெளிநாடுகளுக்குச் செல்பவர் களில் கிட்டத்தட்ட 90% பேர் பெண்கள். இந்தப் பிரச்சினையைப் பெண்களின் பிரச்சினையாக அரசியல் தளத்தில் கொண்டுசென்று அரசியல் பிரச்சினையாக மாற்றாத வரையில், பெண்கள் அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் கையில் எடுக்காத வரையில் நிரந்தரத் தீர்வுக்குப் பெரிய அளவில் சாத்தியங்கள் இல்லை!

- கவிதா முரளிதரன், தொடர்புக்கு: kavitha.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்