திட்டமிடத் தவறுகிறவர்கள், தவறுசெய்யத் திட்டமிடுகிறார்கள் என்ற பொன்மொழி தற்போதைய தமிழக அரசுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். கஜா புயலை எதிர்கொள்வதை ஒரு நாள் கூத்தாகக் கருதிய தமிழக அரசு, அதற்காகத் தன்னைத்தானே பாராட்டியும் கொண்டது. ஆனால், பெரும் புயல் கொண்டுவந்து சேர்த்திருக்கும் துயரத்தில் அரசாங்கத்தின் சாயம் வெளுத்துவிட்டது. ‘கஜா புயல் தமிழக அரசிடம் கூஜா புயலாகிவிட்டது’ என்றும், ‘தமிழக அரசின் வேகத்துக்கு முன்னால் புயலின் வேகம் தோற்றுவிட்டது’ என்றும் அமைச்சர்கள் பேசிய பேச்சுகளும், முதல்வர் சொன்ன ‘ஜீபூம்பா’ உதாரணமும் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தை நினைவூட்டுகின்றன.
இயற்கை ஏற்படுத்தும் பேரிடரைவிடப் பெருந்துயரை அளிக்கக்கூடியது, ஆட்சியாளர்கள் ஏற்படுத்தும் பேரிடர். இயற்கையின் சீற்றம் உருவாக்கும் பாதிப்பைவிட, அரசாங்கத்தின் அலட்சியமும், ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனமும் அதிகமான ஆபத்தை உருவாக்கும். கஜா புயல் நிவாரணப் பணிகளின் களநிலவரங்கள், அந்தப் புண்ணின் ஆழத்தையும் ஆபத்தையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
2004 டிசம்பர் 26 அன்று சுனாமி என்கிற ஆழிப் பேரலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த பிறகே நமக்கு ‘இயற்கைப் பேரிடர்’ என்ற வார்த்தை அறிமுகமானது. அதுவரை புயல், மழை, பூகம்பம் போன்ற அனைத்துமே நமக்கு ‘இயற்கைச் சீற்றம்’தான். சுனாமிக்குப் பிறகு 2005-ல் தாக்கிய ‘ஃபானூஸ்’ புயல், 2008-ல் டெல்டா பகுதிகளில் பாதிப்பு உருவாக்கிய ‘நிஷா’ புயல், 2010-ல் உருவான ‘ஜல்’ புயல் போன்ற ‘இயற்கைப் பேரிடர்கள்’ ஏற்படுத்திய சேதம் குறித்த முறையான மதிப்பீடும் கணக்கீடும் நம்மிடம் இல்லை. 2011 டிசம்பர் 28 அன்று 135 கி.மீ. வேகத்தில் வீசிய ‘தானே’ புயல் கடலூர், புதுச்சேரி மக்களைச் சூறையாடியபோது, தமிழக ஊடகங்கள் உரிய கவனம் அளித்தபோதும், தேசிய ஊடகங்கள் நம் பக்கம் திரும்பவே இல்லை.
இத்தகைய பேரிடர் காலங்களில் அரசு இயந்திரம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் ஒரே புகலிடம். ‘நிவாரணப் பணி’களை அரசு இயந்திரம் மட்டுமே அதிக அளவில் மேற்கொண்டபோது, அரசாங்கம் சொல்கிற சேத மதிப்பீடே இறுதியாக இருந்தது. நிஜத்தை மதிப்பிட அரசு இயந்திரத்தைவிட நமக்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. 2015 டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம், தமிழகத்தைத் தட்டி எழுப்பியது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தினர். ‘நிலைமை கைமீறிப்போன சூழ்நிலை’யை அம்பலப்படுத்தி, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து உதவிகளைக் கொண்டுசேர்த்ததில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு மகத்தானது. இப்போதும் சமூக ஊடகங்கள் அதைச் செய்கின்றன. அதனால்தான் ‘எல்லாம் சுமுகமாக இருக்கிறது’ என்று ஆட்சியாளர்களால் முன்புபோல ஏமாற்ற முடியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தர முடிகிற நிவாரணத்தை, தன்னார்வலர்களோ, தனியார் அமைப்புகளோ தந்துவிட முடியாது. ஆனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் காவிரிப் படுகை மக்கள், உதவிக்கு வருகிற சக மனிதர்கள் மீது வைக்கிற நம்பிக்கையைக்கூட அரசாங்கத்தின் மீதோ, அதிகாரிகள் மீதோ வைக்கவில்லை.
புயல் பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும், ஏறக்குறைய 20 அமைச்சர்கள் பொறுப்பேற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே தவித்துப்போய் நிற்கிற மக்கள், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விரட்டியடிக்கிறார்கள். ஏற்கெனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி நீர்ப் பங்கீடு போன்ற விவகாரங்களில் மாநில அரசால் புறக்கணிக்கப்பட்டு மனம் வெதும்பியிருந்தவர்கள் இப்போது மேலும் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மக்கள் ஏன் கோபத்தோடு எதிர்கொள்கிறார்கள் என்பது விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இயற்கைப் பேரிடர் காலங்களில் பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கே பணம் கொடுப்பார்கள். இந்த முறை நடிகர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும், தொண்டு நிறுவனங்களுக்கும், களப் பணியாளர்களுக்கும் தங்கள் உதவியை அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஏன்? யாரோ அனுப்பிய பொருட்களில் தங்கள் கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டியதைப் பார்த்த பிறகு அவர்களுக்கு நம்பிக்கை எப்படி வரும்?
ஆளும் அரசாங்கம் இப்படி என்றால், களத்தில் சிலருடைய வன்முறைச் செயல்பாடோ ‘செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட குழந்தைகளின் செயல்பாடுகளைப் போல’ மேலும் இடைஞ்சலாக இருக்கிறது. ‘‘எங்கள் வீட்டுக்கு வந்து சேதாரத்தைக் கணக்கெடுங்கள்’’ என்று மூத்த அதிகாரிகளிடம் வலியுறுத்துகிற மக்களிடம், ‘ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்ப்பது சாத்தியமில்லை’ என்று நடைமுறைச் சிக்கலை அவர்கள் விளக்கினாலும், அதை ஏற்கச் சிலர் தயாராக இல்லை. “ஓட்டுக்குக் காசு கொடுக்கும்போது மட்டும் வீடுவீடாக வர்றாங்கள்ல?” என்பதாகவும் சேதாரங்களை முறைப்படி கணக்கெடுக்க முயற்சி செய்யும்போது, ‘எல்லாருக்கும் பொதுவாகக் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, கணக்கெடுப்பு நடத்தச் சிலர் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ‘‘இத்தகைய இடையூறுகளுக்குப் பின்னால் அரசியல் கட்சியினரின் தூண்டுதலும் இருக்கிறது’’ என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
பொதுவாக, இதுபோன்ற சீரமைப்புப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளை வைத்துச் சீர்செய்வதே முறையானது. ஆனால், தேர்தலையே நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிவைத்ததன் விளைவு இப்போது மோசமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஆட்சியில் இருப்பவர்களோ, தங்களின் நலனுக்காக ஒட்டுமொத்த மாநில மக்களையும் இடர்பாடுகளில் சிக்கவைப்பதில் குற்றவுணர்ச்சி அற்றவர்களாக இருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தின் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் மக்களுக்கு இருக்கிற கோபத்தில் அவநம்பிக்கையின் கங்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. அந்தத் தீ உடனடியாக அணைக்கப்பட வேண்டும். பேரிடர் காலத்திலும் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்துகொள்பவர்களிடம் ‘மக்கள்நல செயல்பாடு’களை எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், ஆசை யாரைத்தான் விட்டது?
- த.செ.ஞானவேல், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago