சம்மாட்டியார். கடல்புறத்தில் இந்த வார்த்தை தரும் அங்கீகாரத்துக்கு இணையாக, சந்தோஷத்துக்கு இணையாக, போதைக்கு இணையாக ஒரு வார்த்தை தருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஒரு மனிதனின் பெயருக்குப் பின் சம்மாட்டியார் என்ற வார்த்தை சேரும்போதுதான் அவன் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றும்கூடச் சொல்லலாம். சம்பான் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை சம்மாட்டியார். சம்பான் என்றால், வள்ளம். சம்மாட்டியார் என்றால், வள்ளத்தின் உரிமையாளர் என்று அர்த்தம்.
சொந்தப் படகு எனும் வாழ்நாள் ஆசை
நகர்மயச் சமூகத்தில் பிறந்த நமக்குச் சொந்த வீடு எனும் ஆசை எப்படி வசீகரமானதோ, அப்படி ஒரு வசீகரத்தைக் கடலோடிகளுக்குத் தருவது சொந்த வள்ளம்.
பொதுவாக, கடலோடிகள் சொத்துக் குவிக்கும் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினால், “ஒரு கடலோடிக்குச் சொத்து இந்தக் கடலு. இந்தக் கடலுக்கு அவன் பிள்ள. இந்தக் கடலுக்கே இளவரசன். அவன் ஏன் சொத்து சேர்க்கணும்? அம்மாவ வுட்டுப் பிரிஞ்சி, தனிச்சிப் போவவா? அம்மா சகிக்க மாட்டா’’ என்று சொல்வார்கள். அன்றைய வருமானம், அன்றைய செலவு. இதுதான் வாழ்க்கைமுறை. நமக்கும் ஒரு வீடு வாசல் வேண்டும்; நாமும் நாலு காசு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ரொம்பத் தாமதமாக உருவானது. அந்தக் காலம் தொட்டு, கடலோடிகள் கொஞ்சம் காசு எடுத்துவைக்கிறார்கள், ஏதாவது ஒரு சொத்து வாங்கலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றால், அது ஒரேயொரு கனவுதான்: சொந்த வள்ளம்.
மன்றாடியார் எனும் தகுதி
ஒருவர் சொந்த வள்ளம் வாங்கிவிட்டால், சம்மாட்டியார் ஆகிவிட முடியுமா? முடியாது. பெயருக்கு வேண்டுமானால் நானும் சம்மாட்டியார் என்று சொல்லிக்கொள்ளலாம். யார் மன்றாடியார் தகுதி பெற்றவர்களோ அவர்கள் வள்ளம் வாங்கினால்தான் முழுமையான சம்மாட்டியார் ஆக முடியும்.
மன்றாடியார் என்பவர், ஒரு வள்ளத்தின் சுக்கானைப் பிடிப்பவர். அவர் வெறும் படகோட்டி மட்டும் இல்லை; வள்ளத்தையும் அந்த மீன் பிடியையும் தலைமையேற்று நடத்தும் தலைவரும்கூட. ஒரு வள்ளத்தில் ஏழெட்டுப் பேர் போகலாம். ஆனால், மன்றாடியார் வைத்ததுதான் சட்டம். மன்றாடியாருக்குப் பல கலைகள் தெரிய வேண்டும். காற்றோட்டம், நீரோட்டத்துக்கு ஏற்ப சுக்கான் பிடித்து வள்ளத்தை ஓட்டுவதில் தொடங்கி, மீன் கூட்டம் எங்கே குவியும் என்பதைக் குறிகளை வைத்துக் கணிப்பதுவரை. இப்படிப் பல கலைகளிலும் தேறி, தேர்ந்த ஒரு மன்றாடியாக அறியப்பட்ட ஒருவர் சொந்தமாக ஒரு வள்ளத்தை வாங்கும்போதுதான் அவர் சம்மாட்டியார் ஆகிறார். சம்மாட்டியார் ஆகிவிட்டால், உங்கள் கையில் ஒரு வள்ளம்... எப்போது வேண்டுமானாலும் கடலுக்குள் போகலாம். ஆக, சம்மாட்டியார் கனவு வெறும் பணம், வசதி சம்பந்தப்பட்டது அல்ல. தொழில் தேர்ச்சியின், தொழிலில் இலக்கைத் தொடும் மகிழ்ச்சியின் அடையாளம்.
ஒரு மன்றாடியாரின் வாழ்க்கை எப்படி இருக்கும், ஒரு சம்மாட்டியாரின் வாழ்க்கை எப்படியிருக்கும்? பாம்பனில் சுரேஷ் மன்றாடியாரையும் அருளானந்தம் சம்மாட்டியாரையும் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன்.
மன்றாடியாரின் பொறுப்புகள்
சுரேஷ் மன்றாடியார்: “எங்களோடது,மோட்டார் வள்ளம் (இயந்திரப் படகு). ஏழெட்டுப் பேர் போவோம். அஞ்சு நாள் கடல்ல தங்குவோம். இந்த அஞ்சு நாள் சாப்பாட்டுக்கான அரிசி, மளிகைச் சாமான் செலவு, மீனுக்கு வைக்கிற ஐஸ் செலவு, வள்ளம் போறதுக்கான டீசல் செலவுன்னு ஒரு தடவ கடலுக்குப் போற செலவே பதினஞ்சாயிரம் ஆகிரும். இதுக்கு மேல கிடைக்குற தொகையைத்தான் தொழிலுக்குப் போற எட்டுப் பேரும், வள்ளத்துச் சொந்தக்காரரும் பகிர்ந்துக்கணும். மொத்தம் கெடைக்குற தொகையில, போற செலவைக் கழிச்சுக்கிட்டு, மிச்சம் படுற தொகையில சரி பாதி வள்ளத்துக்காரருக்கு. சரி பாதி ஆளுங்களுக்கு. இப்பம் பத்துப் பேர் போறோம், இருபத்தஞ்சாயிரம் ரூவாய்க்கு மீன்பாடு கெடைக்குதுன்னு வெச்சுக்குங்க. செலவு பதினஞ்சாயிரத்தைக் கழிச்சுடுவோம். மிச்சம் பத்தாயிரத்துல சரிபாதி வள்ளத்துக்காரருக்கு. மிச்சம் அஞ்சாயிரத்தைப் பத்துப் பேரும் பங்கிட்டுக்குவோம். இதுல எல்லாருக்கும் ஒரு பங்குன்னா, மன்னாட்டியான எங்களுக்கு ஒண்ணரைப் பங்கு கொடுப்பாங்க.
கடலுக்குப் போற வள்ளம் மட்டும் இல்ல; கானா கம்பு, வலையிலேர்ந்து வள்ளத்துல இருக்குற ஆளுங்க வரைக்கும் மன்னாட்டியோட பொறுப்பு தான். சம்மாட்டியாருங்க நம்மளை நம்பித்தான் வள்ளத்தை அனுப்புறாங்க. அதனால, வள்ளத்தை எடுத்துக்கிட்டுப் பாதுகாப்பா போய்த் திரும்புனா மட்டும் போறாது. கடல்லேர்ந்து திரும்பும்போது அவங்க செஞ்ச செலவுக்கு மேல சம்பாதிச்சுக்கிட்டும் வரணும்.
கடல்ல எத்தனை கடல் மைல் தொலைவு போறோம், எந்தெந்த ஆழத்துல என்னென்ன மீன் கெடைக்கும், ஒரு எடத்துல கெடைக்காட்டி வேற எங்க போனா, என்ன மீன் கெடைக்கும் இப்புடி எல்லாத்தையும் காத்து, நீவாடு, திசை போக்குக்கேத்த மாரி ஊகிச்சுக்கிட்டே கெடக்கணும் ஒரு மன்னாட்டி.
பொதுவா, கடலோடிங்க யாருக்குமே கடல்ல தூக்கம் கெடைக்காது. ராத்திரில வள்ளத்துல அரைத் தூக்கம்தான் அசந்து எந்திரிப்பாங்க. இதுல மன்னாட்டியான எங்களுக்கு அந்தத் தூக்கமும் கெடைக்காது. ஏன்னா, எல்லாரும் தூங்கும்போது நாங்களும் தூங்கிட்டா, ஒரு மாசா பெருசா வந்து தூக்குனாலும் தெரியாது; காத்து வாக்குல வேற ஒரு வள்ளம் வந்து மோதுனாலும் தெரியாது. ஒரு சாமி சொல்லுவாங்களே... கண்ணை மூடிக் கிடப்பாரு, ஆனா, அப்பவும் உலகத்துல நடக்குற எல்லாம் அவரு கண்ணுக்குள்ள காட்சியா ஓடிக்கிட்டே இருக்கும்னு. அப்படித்தான் போவும் எங்க பொழப்பு.”
சம்மாட்டியாரின் கடமைகள்
அருளானந்தம் சம்மாட்டியார்: “வள்ளம் போய் வந்த செலவு போக, மீதி கிடைக்குற மிச்ச பங்குத்தொகைதான் ஒரு சம்மாட்டி போட்ட முதலீட்டுக்கான வருமானம், அந்த வள்ளத்தைப் பராமரிக்குற செலவு, தொழில்ல நடக்குற நல்லது கெட்டதுங்களைச் சமாளிக்கிற தொகை எல்லாத்துக்குமானது.
வள்ளமும் வள்ளத்துல போறவங்க உசுரும் மன்னாட்டியார் பொறுப்புன்னா, கரையில அந்த மன்னாட்டியார் குடும்பத்துல ஆரம்பிச்சு வள்ளத்துல போறவங்க குடும்பத்துல ஒவ்வொருத்தரோட பாதுகாப்பும் சம்மாட்டியார் கடமை. கடல்ல போறவங்க எந்த நம்பிக்கையில போறாங்க? ஒரு ஆத்திரம் அவசரம்னா, நம்ம குடும்பத்தைக் கரையில இருக்கிற சம்மாட்டியார் குடும்பம் பாத்துக்கும்கிற நம்பிக்கையிலதான போறாங்க. அந்த நம்பிக்கையை நாம காப்பாத்தணும். நல்லது கெட்டதுக்கு உதவணும். நாள் கெழமையில நம்ம வள்ளத்துல போறவங்களுக்கு ஒரு புத்தாடை எடுத்துக் குடுத்து, ஐநூறு ஆயிரம் கொடுக்கணும். முக்கியமா, அவங்க, ‘நமக்கு ஆதரவா நம்ம சம்மாட்டி இருக்காரு'னு நெனைக்குற மாரி நடந்துக்கணும்.”
ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டே பேசி முடிக்கும் சுரேஷ் மன்றாடியாரும், அருளானந்தம் சம்மாட்டியாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள்: “இந்தத் தொழில்ல மொதலாளி - தொழிலாளி கணக்கெல்லாம் கெடையாது சார். நல்லா ஓடுனா, எல்லாரும் ஒரு நா மன்னாட்டி ஆவலாம்; பொறுப்பா நடந்துகிட்டா ஒரு நா சம்மாட்டியும் ஆவலாம்; எல்லாரும் ஒரு நா ஒண்ணுமே இல்லாமயும் போவலாம்!”
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago