சமஸ்பிரிட்டன் அரசு மருத்துவமனைகளைப் பார்வையிடச் சென்ற நாளில், ஹெலன் சேர்ந்துகொண்டார். “பிரிட்டனின் பெருமிதம் என்ஹெச்எஸ் (National Health Service – தேசிய சுகாதார சேவை). குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான, கட்டணமற்ற, உயர்தரமான சிகிச்சை. லண்டனிலேயே ஏராளமான என்ஹெச்எஸ் மருத்துவமனைகள் இருக்கின்றன. நீங்கள் எங்கே விரும்புகிறீர்களோ அங்கே செல்லலாம்.”
நாங்கள் அப்போது ஃபிட்ஸ்ரோவியாவில் நின்றிருந்தோம். காந்தி படித்த லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைப் பார்த்துவிட்டு, நாடாளுமன்றச் சதுக்கத்தில் புதிதாக நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையைப் பார்ப்பதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சன்னமாக வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. “நாம் கடக்கும் பாதையைச் சுற்றி எங்கெல்லாம் மருத்துவமனைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் செல்வோம். அப்புறம், ராயல் லண்டன் மருத்துவமனையையும் நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும்.”
இந்த யோசனை ஹெலனுக்கும் பிடித்திருந்தது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்றது ராயல் லண்டன் மருத்துவமனை. அவசர சிகிச்சைக்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவையின் தாயகமும் அது.
“என்ஹெச்எஸ்ஸுக்கும் ஒரு வரலாறு உண்டு. ராட்சதன் வாயிலிருந்து தப்பி வந்த நகரம் என்று லண்டனைச் சொல்வார்கள். கொள்ளைநோய்கள் துரத்திய நகரம் இது. 1948-ல் என்ஹெச்எஸ்ஸை ஆரம்பித்தார்கள். அதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த சூழலோடு ஒப்பிடுவது பிரிட்டன் இன்று சுகாதாரத் துறையில் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்பதை விளக்குவதாக அமையும். 1918-ல் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில் ‘இன்புளுயன்ஸா’ காய்ச்சல் தாக்கியது. உலகம் முழுக்க இரண்டு கோடி முதல் நான்கு கோடிப் பேர் வரை இறந்தனர். உலகப் போரில் கொல்லப்பட்டவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இந்த எண்ணிக்கை. பிரிட்டனில் முதலில் கிளாஸ்கோவில் ‘இன்புளுயன்ஸா’ நுழைந்தது. அடுத்து அது லண்டனுக்குள் புகுந்தது. பிரிட்டனில் மட்டும் இரண்டேகால் லட்சம் பேர் ‘இன்புளுயன்ஸா’ தாக்குதலில் இறந்துபோனார்கள்.”
“போர் மரணங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் நோய் மரணங்களுக்குக் கொடுக்காததற்கும், ராணுவத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கல்வி – சுகாதாரத்துக்குக் கொடுக்காததற்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறது?”
“உண்மைதான். வரலாற்றில் சாமானிய மக்களுடைய பாத்திரம் எப்போதும் விளிம்பில்தான் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் பிரிட்டன் சமூகமும் இதை உணர்ந்தது என்று சொல்ல வேண்டும். ‘நீங்கள் உலகையே ஆண்டு எங்களுக்கு என்ன பயன்?’ என்று மக்கள் கேள்வி கேட்டார்கள். நாடு முழுக்க ஒரே மாதிரியான சிகிச்சை – உயர்தர சிகிச்சை பெற ஏழைகளுக்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்த ஒரு அரசியல் தலைவர் - அனேய்ரன் பெவன் - சுகாதாரத் துறை அமைச்சராக அப்போது இருந்தார். ‘மக்கள் அற்ப ஆயுளில் மடிவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; உலகப் போருக்குப் பின் உருவாகிவந்த பொருளாதார யுகத்துக்கு ஈடுகொடுப்பதற்கேற்பத் தொழிலாளர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்’ – இந்த இரு நோக்கங்களின் அடிப்படையில்தான் என்ஹெச்எஸ்ஸை ஆரம்பித்திருக்கிறார்கள். மனித வளத்தைத் தாண்டிய மூலதனம் ஏதுமில்லை என்ற செய்தியை உலகெங்கும் உள்ள ஆட்சியாளர்களுக்கு என்ஹெச்எஸ் மருத்துவமனைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.”
எங்கள் டாக்ஸி அடுத்தடுத்த என்ஹெச்எஸ் மருத்துவமனைகளைக் கடந்து வைட்சாப்பலை வந்தடைந்திருந்தது. அங்கு நான் கண்ட ராயல் லண்டன் மருத்துவமனையின் தோற்றம், அதன் உள்கட்டமைப்பு, அங்கிருப்பதாகச் சொல்லப்பட்ட வசதிகள் இவற்றையெல்லாம் உருவகப்படுத்துவதற்கு நம் நாட்டுச் சூழலில் உள்ளபடியாகவே எனக்கு ஒரு முன்னுதாரணம் இல்லை. தன்னுடைய சொந்த வீட்டைக் காட்டுவது போன்ற ஒரு பேரானந்தம் ஹெலனிடமிருந்து வெளிப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மருத்துவமனையைத் தன்னுடைய அரசாங்கம் நடத்துவது எந்த ஒரு குடிமகளையும் பெருமிதத்துக்குள்ளாக்கும் என்று தோன்றியது.
“கிராமப்புற பிரிட்டனில் மருத்துவமனைகள் எப்படி இருக்கும் ஹெலன்?”
“நாம் இப்போது நகரத்தில் கடந்து வந்தோம் இல்லையா, அப்படியான மருத்துவமனைகளைச் சின்ன அளவில் கிராமங்களில் பார்க்கலாம். எப்படியும் ஏழை – பணக்காரர், கிராமம் – நகரம் இடைவெளிகள் காரணமாக இந்நாட்டில் ஒரு நோயாளி உயிரிழக்க மாட்டார்.”
“ஆறரைக் கோடி மக்களுக்கும் எல்லா சிகிச்சையுமே இலவசம்தானா?”
“கிட்டத்தட்ட. சில விஷயங்களுக்குக் கட்டணம் வசூலிப்பார்கள். எனக்குத் தெரிய மூக்குக் கண்ணாடிக்கு, கார் நிறுத்துமிடத்துக்கு இப்படி. ஆனால், எல்லாவற்றையும் சேர்த்தாலும் என்ஹெச்எஸ்ஸை நடத்த ஆண்டுக்கு ஆகும் செலவில் 1% மட்டுமே இப்படியான வரவுகள் மூலம் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆண்டுக்கு 12,470 கோடி பவுண்டுகள் என்ஹெச்எஸ்ஸுக்குச் செலவாகிறது. இதில் 99% அரசினுடையதுதான். இங்கே யாரும் இதை இலவசமாகக் கருதுவதில்லை. மக்கள் செலுத்தும் வரியிலிருந்துதானே மக்களுக்கு அரசு திரும்பத் தருகிறது?”
“ஆனால், மக்களுக்கான தேவைகளை அரசாங்கம் நிறைவற்றுவதை ‘இலவசம் – வெகுஜன அரசியல்’ என்று கொச்சைப்படுத்தி முடக்க முற்படும் சக்திகளும் உலகெங்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்? என்ஹெச்எஸ்ஸுக்கு முட்டுக்கட்டை ஏதும் வரவில்லையா?”
“இங்கேயும் அதெல்லாம் உண்டு. என்ஹெச்எஸ் விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே, மருத்துவர்களைத் துருப்புச்சீட்டாக்கி, காப்பீட்டு நிறுவனங்கள் அதைச் செய்துவந்திருக்கின்றன. சின்ன அளவில் அமெரிக்க லாபியும் உண்டு. ஏனென்றால், உலகின் முதல்நிலைப் பொருளாதாரச் சக்தியாக இருந்தும் அமெரிக்காவால் தன்னுடைய மக்களுக்கு முழுமையான சுகாதாரச் சூழலைக் கொடுக்க முடியவில்லை. தனியார் மருத்துவமனைகள் - காப்பீட்டு நிறுவனங்கள் கையிலும், மருந்து நிறுவனங்களின் கையிலும் அமெரிக்க மருத்துவத் துறை சிக்கியிருக்கிறது. அமெரிக்க அரசு ஆண்டுக்கு ஒரு குடிமகனுக்கு 6,000 டாலர் செலவழித்தும் சாமானியர்கள் அங்கே மருத்துவச் செலவுகளால் சீரழிகிறார்கள். அமெரிக்காவை ஒப்பிட பிரிட்டன் ஒரு குடிமகனுக்குச் செலவிடுவது பாதிக்கும் குறைவுதான். என்ஹெச்எஸ் இன்று உலகுக்கே முன்னோடியாக பிரிட்டன் சுகாதாரத் துறையை நிறுத்தியிருக்கிறது. நீங்கள் பிரிட்டனின் என்ஹெச்எஸ்ஸுடன் ஒப்பிட வேண்டும் என்றால், இன்று இதைக் காட்டிலும் சிறப்பான மருத்துவ சேவையை எல்லோருக்கும் அளிக்கும் நாடு ஸ்பெயின். அங்கே குடிமக்களைத் தாண்டி, சட்ட விரோதக் குடியேறிகள், சுற்றுலாப் பயணிகளும்கூட முழுமையான சுகாதாரச் சேவையைக் கட்டணமின்றிப் பெற முடியும். இந்தியாவில் சூழல் எப்படி?”
“நாடு முழுக்க ஒரே சூழல் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, நான் சார்ந்திருக்கும் தமிழ்நாட்டின் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது. கிராமங்களைக்கூட வலைப்பின்னலாக இணைத்திருக்கும் சுகாதாரக் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உண்டு. வசதிகளை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட முடியாது. ஆனால், அதற்குள்ளேயே கல்வி – சுகாதாரத்துக்கான அரசின் செலவுகளைக் குறைப்பதற்கான சக்திகள் வேகமெடுத்திருக்கின்றன. இந்தியாவை மாபெரும் சந்தையாகவே எல்லோரும் பார்க்கிறார்கள்.”
“ஆமாம், பெரிய மக்கள்தொகை இல்லையா? கிட்டத்தட்ட இருபது பிரிட்டனுக்குச் சமம். இங்கும் பெருநிறுவனங்கள் கைகளில் மருத்துவத்தைக் கொண்டுசெல்ல வசதியாக என்ஹெச்எஸ்ஸைக் குலைக்க முயற்சிகள் நடப்பதுண்டு. ஆனால், பிரிட்டன் மக்களைத் தாண்டி அது நடப்பது சாத்தியமில்லை. ஏனென்றால், நவீன பிரிட்டிஷ் வாழ்க்கையின் ஓர் அங்கம் இது. என்ஹெச்எஸ்ஸில் நிறைய குறைகளும் இருக்கின்றன. பெருகும் மக்கள்தொகை, உயரும் முதியோர் எண்ணிக்கை, உருவெடுக்கும் புதுப்புது நோய்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத்தக்க போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. அறுவைசிகிச்சை போன்றவற்றுக்கு நோயாளிகள் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்ற புகார்களும் உண்டு. எனினும், என்ஹெச்எஸ் இல்லாத பிரிட்டன் இல்லை.”
“நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இங்கே மருத்துவர்களை நோயாளிகள் அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாதோ?
“ஆமாம். அவசியத் தேவைப்பட்டால் ஒழிய பார்க்க முடியாது. பெரும்பாலான பிரச்சினைகளை நீங்கள் இணையம்/செல்பேசி வழியாகப் பேசியே முடித்துக்கொள்ளலாம். ஆலோசகர்கள் இருப்பார்கள். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளோடு வருபவர்களை செவிலியர்களே பார்த்து அனுப்பிவிடுவார்கள். மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேவையில் நோயாளியின் உடல்நிலை இருந்தால் மட்டுமே அவர்கள் மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்கள். அதேபோல், சிறப்பு மருத்துவர்களையும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நீங்கள் நேரடியாகப் பார்த்துவிட முடியாது. எங்களைப் பொறுத்தளவில் இந்த நடைமுறைகள் சரி என்றே நினைக்கிறோம். அமெரிக்கர்களைப் போல் எடுத்த எடுப்பில் மருத்துவர்களைச் சந்திப்பது, எல்லாவற்றுக்கும் பரிசோதனைகள், எல்லாவற்றுக்கும் மருந்துகள் என்று எங்கள் உடம்பை நாங்கள் கெடுத்துக்கொள்வதில்லை. தனியார் மருத்துவ சேவையும் இங்கு உண்டு. பத்தில் ஒருவர் அதை அணுகினால் அதிகம்”
“சரி, இங்குள்ள மருத்துவ சமூகம் இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறது?”
“நிறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். சம்பளம் நல்ல சம்பளம். அரை லட்சம் பவுண்டுகள் தொடங்கி ஒரு லட்சம் பவுண்டுகள் வரை வாங்குவார்கள். மருந்து வியாபாரிகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் முகவராக இருக்க வேண்டிய தேவையோ, குற்றவுணர்வோ அவர்களுக்கில்லை. நோயாளிகளுடன் ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது. வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தை ஆய்வுகளுக்கோ, குடும்பத்துடன் பொழுதுபோக்கவோ செலவிடுவதால், இங்குள்ள மருத்துவர்களுக்கு மன நெருக்கடிகள் குறைவு.
ராயல் லண்டன் மருத்துவமனையிலிருந்து நாங்கள் வெளியே வந்தபோது, ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அங்கு வந்தடைந்தது. “விபத்துகள் என்றால், சாலைப் போக்குவரத்தை அப்படியே நிறுத்திவிட்டு, ஆட்களை அங்கிருந்து தூக்கிக்கொண்டுவருவதில் எங்கள் ஆட்கள் நிபுணர்கள். சரி, அடுத்து எங்கே, காந்தி சிலையைப் பார்க்கத்தானே போகிறோம்?”
“இல்லை. அனேய்ரன் பெவன் கல்லறை எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அங்கே போவோம்.”
டாக்ஸி புறப்பட்டது.
வரலாறு நெடுக சாமானிய மக்கள் தங்கள் தேவைகளுக்காக ஆட்சியாளர்களை நோக்கிக் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த ஒரு பெரும் காரியமும் நடக்க யாரோ ஒரு மனிதன் தன்னுடைய உயிரிலிருந்து கொஞ்சத்தைக் கொடுத்து அந்தக் காரியத்துக்கான ஆன்மாவை உருவாக்க வேண்டியிருக்கிறது. என்ஹெச்எஸ்ஸின் ஆன்மாவில் அனேய்ரன் பெவனின் உயிர் இருப்பதாகத் தோன்றியது. காந்திக்காக வாங்கிய மலர்க்கொத்தை பெவனின் கல்லறையில் வைப்பதைக் காட்டிலும் சிறந்த அஞ்சலியை பிரிட்டனில் காந்திக்கு எப்படிச் செலுத்த முடியும்?
(பயணிப்போம்)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago