வீழ்ந்த தென்னைகள்: அழிவின் குறியீடு!

By செல்வ புவியரசன்

கஜா புயலால் காவிரிப் படுகை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிர்ப்பலிகள், உயிரனைய கால்நடைகளின் பரிதாபச் சாவுகள், வீடுகள் சேதம் என்று ஏகப்பட்ட இழப்புகள். இந்த இழப்புகளோடு படுகை மக்களை நிலைகுலைய வைத்திருப்பது ஆயிரக்கணக்கான மரங்களின் வீழ்ச்சி. அதிலும், விவசாயிகளின் உற்ற ஆதாரமான தென்னை மரங்கள் கொத்துக் கொத்தாக முறிந்து விழுந்திருப்பது பேரிடியாய் இறங்கியிருக்கிறது. வேதாரண்யம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொடங்கி காவிரிப் படுகை நெடுகிலும் தென்னை மரங்களின் பேரழிவால் வீடுகளில் ஒப்பாரி ஓலங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

பேராவூரணியை மையமாகக் கொண்டது கடைமடையின் தென்னை சாகுபடி. மன்னார்குடி, வடசேரி, முத்துப்பேட்டை, அறந்தாங்கி என்று தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு தோப்பிலும் ஏறக்குறைய மூன்றில் இரு பங்கு மரங்கள் பலத்த காற்றின் தாக்குதலால் ஒடிந்து விழுந்திருக்கின்றன. சில தோப்புகளில் மரங்கள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டன. ஆயிரம், இரண்டாயிரம் என்று தோப்பிலுள்ள மொத்த மரங்களை இழந்தவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் எத்தனை தென்னை மரங்கள் வீழ்ந்திருக்கின்றன என்றும் அவற்றின் மதிப்பு என்ன என்றும் விரிவான கணக்கெடுப்பு நடத்தினால்தான் கஜா ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கும் பேரிழப்பு தெரியவரும்.

நெல்லுக்குப் பதிலாகத் தென்னை

காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதிகளில் கடந்த இருபதாண்டுகளாக வாய்க்கால் பாசனம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. நெல் சாகுபடி செய்துவந்த விவசாயிகள் அதைக் கைவிட்டு தென்னை மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தார்கள். கடற்கரையோரப் பகுதிகள் என்பதாலும் சற்றே மணல்சார்ந்த பகுதி என்பதாலும் தென்னை சாகுபடி கடைமடை விவசாயிகளுக்கு மறுவாழ்வைக் கொடுத்தது. ஏக்கருக்கு எழுபத்தைந்து  மரங்கள், ஆண்டுக்கு எட்டு வெட்டுகள், ஒவ்வொரு வெட்டுக்கும் குறைந்தபட்சம் 3,500 காய்கள் என்று விவசாயிகள் ஒரு கௌரவமான வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

தற்போது, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, மும்பை போன்ற பெருநகரங்களுக்கும்கூட  பேராவூரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து  பெருமளவில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. தேங்காய் எண்ணெய்க்காக கொப்பரைகளாகவும் விற்கப்படுகின்றன. இவை தவிர, கீற்றுக்காக தென்னைமட்டை, கயிறுக்காக தேங்காய்மட்டை, எரிபொருள் தேவைக்காக கொட்டாங்கச்சி என  தென்னையிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் விற்பனை மதிப்புள்ளது. எண்ணெய் ஆலைகள், தேங்காய் மொத்த வியாபாரிகள், அதை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் என்று தென்னையால் விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்களும் பயனடைந்துவந்தார்கள்.

கடந்துவந்த சோதனைகள்

தென்னை விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிலந்தி தாக்குதலால் தேங்காய் மட்டைகள் சிறுத்து தேங்காயின் அளவு குறைந்ததால் கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியிருந்தது. விளைச்சல் நன்றாக இருந்தாலும், அவ்வப்போது சந்தைக் காரணங்களினால் தேங்காய்க்குச் சரியான விலை கிடைக்காமலும் போவதுண்டு. ஆனாலும், ஒரு தென்னந்தோப்பு இருந்தால் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டுவிடலாம். வீட்டில் நடக்கும் ‘நல்லது கெட்டது’களுக்கும் அவசர மருத்துவத் தேவைகளுக்கும் சிரமமில்லாமல் கடன் வாங்கிவிட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுத் துறை வங்கிகளோ, தனியார் வங்கிகளோ விவசாயிகளுக்குக் கடன் வழங்க எதுவும் தயாராக இருப்பதில்லை. கடைமடைப் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்பவர்கள் தங்களது பணத் தேவைகளுக்கு தேங்காய் மொத்த வியாபாரிகளிடமிருந்து மொத்தமாகக் கடன் வாங்குவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள்.  விவசாயிகளின் அந்த நம்பிக்கையையும் வாய்ப்பையும் நிர்மூலமாக்கிவிட்டது கஜா.

தென்னைக்கு மாதத்துக்கு இரண்டு முறை நீர் பாய்ச்சினாலே போதுமானது. ஆனால், கடந்த ஆண்டு கடைமடைப் பகுதியின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடிகளுக்கும் கீழாகக் குறைந்தது. அதைவிட அதிக ஆழத்தில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து மட்டும்தான் தண்ணீர் கிடைத்தது.  10 ஆண்டுகளுக்கு முன்னால், ஓஎன்ஜிசி துளையிட்டு பெட்ரோலிய ஆய்வு நடத்திய இடங்களுக்கு அருகிலிருந்த ஆழ்துளைக் கிணறுகள் 70, 80 அடிகளில் இடிந்துநொறுங்கியிருந்ததும் அப்போதுதான் தெரியவந்தது. நல்ல நிலையிலிருந்த ஆழ்துளைக் கிணறுகள் பலவும் செயல்படாதவையாக மாறின. விவசாயிகள் பலரும் கடன் வாங்கித்தான் மீண்டும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினார்கள். அதற்கு வழியில்லாதவர்கள் பக்கத்திலிருந்த தோப்புகளிடமிருந்து கடன்சொல்லி தண்ணீர் பாய்ச்சினார்கள். பல இடங்களில் தண்ணீருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் குடங்களில் நீர் சுமந்து கொண்டுபோய் ஊற்றி தென்னைகளின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடினார்கள். இந்தப் பாடுபட்டும்கூட, பெரும்பாலான தோப்புகளில் கணிசமான அளவில் தென்னை மரங்களின் குலைகளும் மட்டைகளும் சரிந்து பட்டுப்போயின.

தண்ணீர் வந்தும் பயனில்லையே!

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழையால் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் நிரம்பி, கடைமடைப் பகுதிகள் வரைக்கும் தண்ணீர்வந்து சேர்ந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்ந்துகிடந்த வாய்க்கால்களையும்கூடத் தண்ணீர் எட்டிப்பார்த்தது. தண்ணீரின்றிக் காய்ந்துபோய் பட்டுப்போகும் நிலையிலிருந்த தென்னை மரங்களில் பச்சை முகிழ்த்தது. ஆனால், தண்ணீர் பாய்ச்சி முதல் வெட்டு முடிவதற்குள் மொத்த மரங்களையும் கஜா முறித்துப்போட்டுவிட்டுப் போய்விட்டது.

பள்ளியில் படிக்கும் மகனின் கல்லூரிச் செலவுக்கு, மகளின் திருமணத்துக்கு என்று கடைமடை விவசாயிகள் தென்னையைத்தான் நம்பியிருந்தார்கள். கடைசியில், அவர்களது கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போய்விட்டது. மீண்டும் தென்னைகளை நட்டு வளர்த்து பழைய நிலைக்கு மீள்வது என்றால் 15 ஆண்டுகள் கடந்துவிடும். ஒரு தலைமுறையின் உயர்கல்விக் கனவு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.  கடந்த வாரம் ‘இந்து தமிழ்’ திசைக்கு அளித்த பேட்டியில் சி.எம்.முத்து கூறிய வார்த்தைகள்தான் மனதில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. ‘முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால்தான் ஒருவன் விவசாயியாகப் பிறக்கிறானோ?’

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்