லண்டன்: ஒரு கல்வி நிறுவனம் யாரை உருவாக்க வேண்டும்?

By சமஸ்

நானும் ராஜும் பேடிங்டன் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தோம். “பிரிட்டனின் கிராமப்புறங்களைப் பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று சொன்னீர்கள் இல்லையா? நாம் நாளைக்கு அங்கு செல்வோம். அதற்கு முன் கூடுதலாக இன்னும் இரண்டு விஷயங்களை மட்டும் இந்தப் பயணத்தில் நீங்கள் இணைத்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். பிரிட்டனின் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு. இது அவசியம் நம் மக்களுக்குச் சென்றடைய வேண்டியது. நாம் இப்போது ஆக்ஸ்ஃபோர்டு செல்கிறோம்.”

பிரிட்டனின் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் பயணத்தில் அதுகுறித்து எழுதுவதற்காக ஏற்கெனவே ஹெலனுடன் பலரையும் சந்தித்திருந்தேன். கல்விப்புலம் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக கிங்ஸ் கல்லூரி, வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம் இரண்டுக்கும் சென்றிருந்தேன். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்லும் திட்டத்தை வேறொரு சந்திப்பின் நிமித்தம் கடைசி நிமிடத்தில் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது ஆக்ஸ்ஃபோர்டு பயணம் தானாக வந்தமைந்தது ஒரு திளைப்பை உண்டாக்கியது.

“இலங்கை தமிழரான பொன்னம்பலம் ராமேஸ்வரன் ஆக்ஸ்ஃபோர்டில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார். என் நண்பர் வழி நண்பர் அவர். ஆக்ஸ்ஃபோர்டு செல்லும் வழியிலும் நாம் கிராமப்புற பிரிட்டனைப் பார்க்க முடியும். மேலதிகம் நீங்கள் தெரிந்துகொள்ள நாளைக்கு உங்கள் தோழியோடு ஒரு சுற்று சுற்றிவாருங்கள்.”

ஐந்தாறு பெட்டிகளைக் கொண்ட சின்ன ரயில் அது. தேம்ஸ் நதியை ஒட்டியும் வெட்டியும் அமைந்திருந்த பாதை நெடுகிலும் நிலம் பச்சை பூரித்திருந்தது. நீரோடைகள், பச்சை வயல்கள், அடர்ந்த, உயர்ந்த மரங்கள், இடையிடையே கிராமங்கள். நல்ல மழை பெய்ந்துகொண்டிருந்தது.

“இங்கே தொடக்கக் கல்வி எப்படி இருக்கிறது?”

“பிரிட்டனில் தொடக்கக் கல்விக்குப் பெரிய முக்கியத்துவம் தருவார்கள். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள்தான் பெரும்பான்மை. ‘கல்வி அரசின் பொறுப்பு. தொடக்கக் கல்விக்குக் கட்டணம் கூடாது; அது இலவசமாகத் தரப்பட வேண்டியது’ என்று

1918-ல் சட்டம் இயற்றினார்கள். ஆக, தொடக்கக் கல்வியை பிரிட்டிஷார் ஜனநாயகப்படுத்தி முழுமையாக நூறு வருஷங்களாகின்றன. ஒரு முரண்பாடு என்னவென்றால், இங்கே ‘பப்ளிக் ஸ்கூல்’ என்று சொல்லப்படுபவை சுயநிதிப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளை ‘ஸ்டேட் ஸ்கூல்’ என்று சொல்வார்கள்.”

“நீங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? சுயநிதிப் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்குமான வேறுபாடு எப்படி இருக்கும்?”

“என்னுடைய நண்பர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். பிரமாதமாக இருக்கும். பள்ளிக்கூடத்தில் குழந்தைக்குக் கொடுக்கும் உணவைக்கூட பெற்றோரின் விருப்பத்தைக் கேட்டுதான் ஆசிரியர்கள் முடிவுசெய்வார்கள் என்று என் நண்பர் சொல்வார். பெற்றோர்கள் விருப்பப்பட்டால், நீச்சல் பயிற்சி, களச் சுற்றுலா போன்ற படிப்புக்கு அப்பாற்பட்ட கூடுதல் பயிற்சிகளுக்குப் பணம் கொடுக்கலாம். அதுகூட கட்டாயமல்ல. தனியார் பள்ளிகள் இங்கே பெருஞ்செலவு பிடித்தவை. உயர் வர்க்கத்தினரைத் தாண்டி இங்கே தனியார் பள்ளிகளை விரும்புவோரும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கும் பிரிட்டன் மாணவர்களில் கிட்டத்தட்ட அறுபது சதவீதத்தினர் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்தவர்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அப்படியென்றால், தரம் நன்றாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?”

உலகின் பழைமையான பல்கலைக்கழகத்தைத் தன்னுடைய அடையாளமாக்கிக்கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்டு நகரத்தை ஒன்றே கால் மணி நேரத்தில் அந்த ரயில் சென்றடைந்தது. ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார் பொன்னம்பலம் ராமேஸ்வரன். கூடவே பேராசிரியர் மகரனும். கம்பளி உடையையும் தாண்டி அன்றைய குளிரில் பேராசிரியருடைய உடல் வெடவெடத்துக்கொண்டிருந்தது. குடைக்குள் இழுத்துக்கொண்டு கார் நோக்கி எங்களை அழைத்துச்சென்றார். காரில் அமர்ந்ததும், “ஒரு பெரியவரை இந்தக் குளிர் நாளில் நாம் தொந்தரவுக்குள்ளாக்கிவிட்டோம்” என்று என் காதில் கிசுகிசுத்தார் ராஜ். ஏதோ புரிந்துகொண்டவராக “தமிழாட்கள் இங்கே வருவது என் உயிருக்கு உற்சாகம் கொடுப்பது. உங்களுக்கு உதவ வாய்ப்பளிப்பதன் மூலம் என்னை நீங்கள் உயிர்ப்பிக்கிறீர்கள்” என்று சொன்னார் பேராசிரியர். அந்த நாள் முழுவதுமே அந்த உற்சாகத்தை அவர் வெளிப்படுத்தினார்.

ரயில் நிலையத்தைக் கடந்து ஆக்ஸ்ஃபோர்டு நகருக்குள்  கார் நுழைந்தபோது மனம் திகைப்பில் ஆழ்ந்தது. வேறு ஒரு யுகத்துக்குள் நுழைவதுபோல் இருந்தது. “இந்தச் சிறிய நகரம் ஆயிரம் வருஷங்களை அப்படியே தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகம்தான் ஊர். ஊர்தான் பல்கலைக்கழகம். நீங்கள் விமானத்திலிருந்து ஆக்ஸ்ஃபோர்டைப் பார்த்தால், இதன் புராதன அழகு புரியும். சுற்றிலும் பச்சை. நடுவே இந்தப் பழுப்பு நகரம். கனவுகளின் நகரம் இது.”

அபாரமான காதலுடன் பேசிக்கொண்டிருந்தார் பேராசிரியர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைப் பற்றி நாளெல்லாம் பேசியவர் அதை அணுஅணுவாக அறிமுகப்படுத்தினார்.

“உலகத்தில் இன்றுள்ள பல்கலைக்கழங்களிலேயே பழைமையானதும், தொடர்ந்து செயல்படுவதும் மட்டுமானதல்ல ஆக்ஸ்ஃபோர்டு. தலைசிறந்தவற்றுள்ளும் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ‘டைம்ஸ்’ உயர் கல்வி நிறுவனத் தரவரிசையில் உலகப் பல்கலைக்கழங்களில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை இங்கே பயிற்றுவிக்கிறார்கள். 24,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட சரிபாதியினர் வெளிநாட்டினர். உலகின் ஆறு கண்டங்களைச் சேர்ந்த, 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்குமிடம் இது. அப்படியென்றால், இங்கே படிக்கும் ஒரு மாணவனுக்கு எப்பேர்ப்பட்ட கலாச்சார வளம் கிடைக்கும் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.”

ஆக்ஸ்ஃபோர்டின் ஆரம்பகாலக் கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும் அழைத்துச் சென்றார். “இங்கே எல்லாம் நம்மாட்கள் கால்கள் பட வேண்டும். நம் தமிழ் மக்களின் எண்ணங்கள் விசாலப்பட்டு, கனவுகள் விரிபட வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் இங்கே வர வேண்டும். நீங்கள் அப்படி எழுத வேண்டும்” என்று சொன்னபடியே அவரும் ஒவ்வொரு கட்டிடமாக ஏறி இறங்கினார். கடுமையாக அவருக்கு மூச்சிரைத்தது. இறுதிவரை அதை அவர் பொருட்படுத்தவே இல்லை.

“இந்தப் பல்கலைக்கழகம் இதில் அங்கம் வகிக்கும் 38 கல்லூரிகளால் ஆனது. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளாகவே சுயேச்சையாக இயங்குபவை. ஒவ்வொரு கல்லூரியின் நிர்வாகம், உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாவற்றையும் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்தக் கல்லூரிகளிடமே இருக்கிறது. இந்த அதிகாரப் பரவலாக்கம், தன்னாட்சி செயல்பாடு இதைத்தான் நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா? கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் உண்டாகவும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர்கள்தான் காரணம்.

1209-ல் இங்கே சின்ன கலவரம். அப்போது இங்கிருந்து சென்ற ஆசிரியர்கள்தான் கேம்ப்ரிட்ஜ் சென்று அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள்.”

இடையிடையே கட்டிடங்களின் உச்சிப் பகுதியைச் சுட்டிக்காட்டினார். “அடிக்கடி நீங்கள் இப்படி மேல் நோக்கிப் பார்க்க வேண்டும். இங்குள்ள கட்டிங்கள் முழுவதிலும் மேலிருந்து நீரை ஊற்றுவதற்கான ‘காகோய்ல்’கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் உருவத்தைப் பாருங்கள்.” அங்கிருந்த உருவங்களில் சில மனித முகமும், சில விலங்கு முகமும் கொண்டிருந்தன. மூக்கை நோண்டிக்கொண்டிருக்கும் உருவம், சிறுநீர் கழிப்பது போன்ற உருவம் என்று விநோதமான அவற்றைச் சுட்டிக்காட்டும் தருணங்களில் அவர் சிறுபிள்ளையாக மாறினார்.

“பிரிட்டனைக் கைப்பற்றினால் ஆக்ஸ்ஃபோர்டைத்தான் தலைநகரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தேசிருந்தாராம் ஹிட்லர். ஆக்ஸ்ஃபோர்டு மீது அவரது படைகள் குண்டு வீசாததற்கு இதுவும் ஒரு காரணம்.”

உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் முன் நாங்கள் நின்றோம். உலகிலேயே பெரியதான பல்கலைக்கழகப் பதிப்பகமும் பிரிட்டனின் மிகப் பெரிய கல்வி நிலைய நூலகமும் அதற்குள்தான் இயங்குகின்றன. “நமக்குப் பெரிய கனவுகள் வேண்டும் சமஸ், என்ன சொல்கிறீர்கள்?” என்றார். பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை.

“இப்போதைய பிரதமர் தெரஸா மே, முந்தையவர்கள் டேவிட் கேமரூன், டோனி பிளேர், மார்க்கரெட் தாட்சர்… பிரிட்டனின் 27 பிரதமர்கள் இங்கே படித்தவர்கள். இது தவிர, சர்வதேச தலைவர்கள் குறைந்தது 30 பேர் இங்கு படித்தவர்கள். ஆஸ்திரேலியாவின் ஐந்து பிரதமர்கள் இங்கு படித்தவர்கள். இந்தியக் கணக்கிலேயே இரண்டு உண்டே? இந்திரா காந்தி, மன்மோகன் சிங். 2017 வரையிலான கணக்குப்படி நோபல் பரிசு வென்றவர்களில் 69 பேர் இங்கே மாணவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ வருகைதரு பேராசியர்களாகவோ இருந்திருக்கிறார்கள். விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், 160 ஒலிம்பிக் பதக்கங்களோடு தொடர்புடைய இடம் இது. கலைஞர்கள், இலக்கியவாதிகள் பட்டியலை நாம் இன்றைக்குள் பேசி முடிக்கவே முடியாது. நம் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒரு பட்டியலை நாமும் உருவாக்க வேண்டும் என்று எண்ண வேண்டுமா, இல்லையா?”

நாங்கள் மூவருமே அவரை உன்னிப்பாகக் கவனித்திருந்தோம்.

“இதுவும் ஒரு நிறுவனம்தான். இங்கேயும் பணம் பண்ணாமல் இல்லை. 30,000 பேருக்கு வேலையளிக்கும் நிறுவனம் இது. ஒவ்வொரு வருடமும் 200 கோடி பவுண்டுகள் – இந்திய மதிப்பில் சுமார் இருபதாயிரம் கோடி - பிராந்தியப் பொருளாதாரத்துக்கு இந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கிறது. உலகப் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்குமிடம் இது. ஆனால், இங்கே படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வரும் ஒரு மாணவன் உணவு விடுதியில் வேலை செய்துகொண்டேனும் இங்கு படித்துவிட முடியும். அதற்கான வாய்ப்புகளையும் ஒரு ஓரத்தில் வைத்திருக்கிறார்கள். நான் முதன்முதலில் இங்கே வந்தபோது ஒரு பேராசிரியர் சொன்னார், ‘பட்டதாரிகளை அல்ல; ஒவ்வொரு துறை வழியாகவும் உலகை ஆளும் தலைவர்களை நாம் இங்கே உருவாக்குகிறோம்!’ இந்த எண்ணம் எத்தனை ஆசிரியர்களிடம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?”

அவருக்கு மூச்சிரைத்தது. “இங்கே அரசுப் பள்ளிக்கூடங்கள் பிரமாதமாக இருக்கும். ஆனாலும், இங்குள்ள சமூகம் மாணவர்களுக்கு நாம் பள்ளிக்கூடங்களில் என்ன வசதியைக் கொடுக்கிறோம் என்பதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைப்பதில்லை. மாணவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதையும் ஆய்வுசெய்கிறது. சமீபத்தில் ஒரு செய்தி வாசித்தேன். அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் உள்ள வேறுபாடு சம்பந்தமான ஆய்வு முடிவு அது. பிரிட்டிஷ் அமைச்சரவை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்று ஒவ்வொரு துறையாக எடுத்துக்கொண்டு அவர்களில் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள், எத்தனை பேர் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் என்று ஆய்வுசெய்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படித்து வந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரிபாதியை நெருங்குகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை இங்கே குறைவு. அப்படியிருக்க அரசத் துறைகளில் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்களின் விகிதாச்சாரம் குறைய என்ன காரணம் என்று ஆய்வு நடப்பதாகச் சொல்கிறது அந்தச் செய்தி. இந்த அணுகுமுறை எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா? நீங்கள் இதையெல்லாம் எழுத வேண்டும்.”

கனதத மெளனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு விடைகொடுத்தார் பேராசிரியர். மழை கொட்டிக்கொண்டிருந்தது.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

(பயணிப்போம்...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்