தனியார் சட்டக் கல்லூரித் தடைச்சட்டம் தேவையா?

By கே.சந்துரு

தமிழகத்தில் புதிய தனியார் சட்டக் கல்லூரிகளைத் தடுப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்குப் படிப்படியாக அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்குக் கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும், பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் நலிவுற்ற பிரிவினர்களுக்குத் தனியாரால் தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாததாலும் தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பதைக் கடந்த கால அனுபவங்கள் வெளிப் படுத்துவதாலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சட்டக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவதற்கோ, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கோ அதிகாரம் உள்ளதா என்பதே கேள்விக்குறி.

இந்தியாவிலுள்ள சட்டக் கல்லூரிகள்

புதிய சட்ட மசோதா கொண்டுவர திடீரென்று அரசு இப்படி ஒரு முடிவெடுத்ததற்கான உண்மையான காரணங்கள் என்ன? தமிழகத்தில் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், அம்பேத்கர் பல்கலைக்கழகம் நடத்திவரும் சிறப்புப் பள்ளி, ரங்கத்தில் தொடங்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளி தவிர, இரு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (சாஸ்திரா, சவீதா) நடத்திவரும் சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் நடத்தப்பட்டுவரும் தனியார் சட்டக் கல்லூரியும் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் 1,000-த்துக்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தப்பட்டுவருகின்றன. மாநிலவாரியாகச் சட்டக் கல்லூரி கள்:- உத்தரப் பிரதேசத்தில் 300, ராஜஸ்தானில் 200, டெல்லி மற்றும் கர்நாடகத்தில் தலா 100, மகாராஷ்டிரத்தில் 200, மத்தியப் பிரதேசத்தில் 125, ஆந்திரத்தில் 65, கேரளத்தில் 30 என்று பட்டியல் நீள்கிறது. இவற்றில் 800-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் தனியாரால் நடத்தப்பட்டுவருகின்றன. இது தவிர, 14 தேசிய சட்டப் பள்ளிகளில் அகில இந்திய திறனறித் தேர்வுகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறு கின்றன. தேசியப் பள்ளிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் இரண்டு லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப் படுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் நடத்தும் சட்டப் பள்ளியில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 45 லட்சம் என்பது நம்மை மலைக்க வைக்கிறது.

அடைக்கப்பட்ட வாய்ப்பு

அன்றைய சென்னை மாகாணத்தில் 1891-ல் சென்னை சட்டக் கல்லூரி துவங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், தமிழகத்தில் இருந்த ஒரே சட்டக் கல்லூரியாக அந்தக் கல்லூரி விளங்கியது. அன்றைக்கு இருந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பகுதி நேர ஆசிரியராக அந்தக் கல்லூரியில் பணியாற்றினர். பல மூத்த வழக்கறிஞர்கள் அந்தக் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவார்கள். சட்டக் கல்லூரியை, உயர் நீதிமன்றம் பக்கத்தில் வைத்ததே மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்றுதான். ஆனால், உயர் நீதிமன்றத்தையும் சட்டக் கல்லூரியையும் இணைக்கும் வாயிலை இன்று நிரந்தரமாகவே பூட்டிவிட்டார்கள்!

முழுநேர ஆசிரியர்களைக் கொண்டுதான் கல்வி புகட்ட வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்ட பின், பகுதி நேர ஆசிரியர்களைத் தவிர்த்ததால் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி கிடைப்பது நின்றுபோனது. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், இன்று நிரந்தர ஆசிரியர்கள் எட்டுப் பேர் மட்டுமே. மற்றவர்களெல்லாம் தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் தற்காலிக ஆசிரியர்களே. திறமையான சட்டக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள தோடு, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆசிரியர் தகுதி விதிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு நியமிக்கப்பட்டுவரும் ஆசிரியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

சுருங்கிய வரையறை

பல்கலைக்கழகங்களே புதிய கல்லூரிகள் தொடங்கு வதற்கு அரசிடம் முன்அனுமதியோ தடையின்மை சான்றிதழோ பெற அவசியமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு, சாஸ்திரா மற்றும் சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சட்டக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. உச்ச நீதிமன்றம், உயர்கல்வியின் ஒருங்கிணைப்பு மற்றும் தரநிர்ணயம்பற்றிய முழு அதிகாரம் மத்திய அரசுக்கும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கும் மட்டுமே உண்டென்றும், மாநில அரசும் அதனால் ஏற்படுத் தப்பட்ட பல்கலைக்கழகங்களும் தேர்வுகள் நடத்திப் பட்டங் கள் வழங்க மட்டுமே அதிகாரம் படைத்தவை என்றும் கூறிவிட்டதால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர் கல்விகளுக்கு மாநில அரசின் அதிகார வரையறை சுருங்கிவிட்டது.

சட்டக் கல்வி, சட்டக் கல்லூரிகளின் தரம், அவற்றின் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்திய பார் கவுன்சில் மட்டுமே முடிவெடுக்க முடியும். எம்.பி. வாஷி என்ற மும்பை வழக்கறிஞர் போட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தனியார் சட்டக் கல்லூரிகள் நடத்தும் உரிமை குடிமக்களுக்கு உண்டென்றும், சட்டத் தொழிலின் முக்கியம் கருதி, அப்படிப்பட்ட கல்லூரிகளுக்கும் மாநில அரசுகள் மானியத் தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவியென்பது அரசமைப்புச் சட்டத்தின் 39-A என்ற பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சட்டப் பணியாற்ற மேலும் பல வழக்கறிஞர்கள் தேவையென்றும் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை மக்களின் தேவைகளின் அடிப்படையில் அமைக் கப்பட வேண்டுமென்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்ட வடிவு-2010

நாடு முழுவதும் சீரழிந்துவரும் சட்டக் கல்வியைப் பற்றி கவலையுற்ற மத்திய அரசு, இந்திய பார் கவுன்சிலின் மேற்பார்வை அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டக் கல்வியின் தரத்தை, இன்றுள்ள சவால்களைச் சமாளிக்கும் வகையிலான புதிய சட்ட வடிவை 2010-ல் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. மேற்பார்வை அதிகாரம் கொண்ட உயர் மட்டக் குழுவை நியமிப்பதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பையும் போராட்டங்கள் மூலம் காட்டினர். ஒரு பக்கத்தில் சிறப்பான கல்வி பயில தேசிய சட்டப் பள்ளிகளும், மறுபக்கத்தில் தரம் குறைந்த சட்டப் பயிற்சியளிக்கும் நூற்றுக் கணக்கான சட்டக் கல்லூரிகளும் இங்கிருப்பதை நாம் காணலாம்.

2008 நவம்பரில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கள் பட்டப் பகலில் கத்தி கம்புகளுடன் மோதல், காவலர்கள் மௌனம் ஆகியவற்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோரின் ஈரக்குலைகள் நடுங்கின. காரணங்களை அறிய அரசு நியமித்த நீதிபதி சண்முகம் கமிஷன் ஜூன் 2009-ல் அறிக்கையைச் சமர்ப்பித்தது. பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அரசின் தனது நடவடிக்கைக் குறிப்பு, ஜூலை 2009-ல் அரசாணையாக வெளியிடப்பட்டது. கமிஷ னின் பரிந்துரை ஒன்று, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூன்றாகப் பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லியில் அமைக்க வேண்டும் என்பது. தற்போதுள்ள கல்லூரி வளாகமும் கிள்ளியூர் மாணவர் விடுதியும் பட்ட மேற்படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு சட்டத் தேர்வில் 36 சதவீதமே தேர்ச்சி பெற்றதைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிட்டது. 33 பேருக்குப் பதிலாக 18 முழுநேர ஆசிரியர்களும், 25 பேருக்குப் பதிலாக 14 பகுதி நேர ஆசிரியர்களும் பணிபுரிவதைக் குறிப்பிட்ட கமிஷன், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க உடனடியாகப் பரிந்துரைத்தது. ஆனால், இன்று வரை நீதிபதி சண்முகம் கமிஷனின் பரிந்துரைகளை அரசு நிறை வேற்றவில்லை.

முட்டுக்கட்டைகளும் வலுவற்ற வாதங்களும்

வன்னியர் கல்வி அறக்கட்டளை திண்டிவனத்தில் ‘சரஸ் வதி சட்டக் கல்லூரி’ என்ற பெயரிலும் செல்லையா கல்வி அறக்கட்டளை, திருவள்ளூரில் ‘ஐடியல் சட்டக் கல்லூரி’ என்ற பெயரிலும் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, அந்த அறக்கட்டளைகளின் மனுக்களைப் பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களி்ல் சட்டக் கல்லூரிகள் இல்லையென்பதும், அதற்கான தேவை இருக்கிறது என்பதும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அந்த உத்தரவின்படி செயல்படாததால், அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், வேலூரில் உள்ள வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அதனுடைய சென்னை வளாகத்தில் சட்டக் கல்லூரியின் தொடக்க விழாவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடத்திமுடித்துவிட்டது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான், தமிழக அரசு தனியார் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கும் முயற்சியைத் தடைசெய்யும் வகையில் சட்டம் இயற்ற முற்பட்டுள்ளது. 7 கோடி மக்கள்தொகை உள்ள மாநிலத்தில், பல மாவட்டங்களில் சட்டக் கல்லூரிகளே இல்லாத சூழ்நிலையில், தனியார் அமைப்புகள் சட்டக் கல்லூரிகளை ஏற்படுத்துவதை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும்? அரசமைப்புச் சட்டத்தில், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. தவிர, மாநிலத்தின் தேவையையும் அரசு கணக்கில் கொள்ளவில்லை. 11 நீதிபதிகள் அடங்கிய டி.எம்.ஏ.பை வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் கல்விக்கான முழுப் பொறுப்பும் அரசின் மீது சுமத்த முடியாது என்றும், உயர்கல்வி வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரலாம் என்றும் அதற்கான செலவினத்தையும் அதற்கு மேலும் நியாயமான வருவாயைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் தீர்ப்பளித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகம் என்பதால், அவை சட்டக் கல்லூரிகள் நிறுவ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது வலுவற்ற வாதம். 2 முதல் 45 லட்சம் வரை ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் சட்டம் பயிலும் இந்தியாவில், கட்டண வீதங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசே சட்டக் கல்லூரிகளை அமைக்கப்போவதாகக் கூறுவது திசைதிருப்பும் வேலை. அப்படிப்பட்ட நிலைப்பாடுள்ள அரசு 800-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், 700-க் கும் மேற்பட்ட கல்வியியல் நிறுவனங்களையும், நூற்றுக் கணக்கான செவிலியர் பள்ளிகளையும் கட்டுப்படுத்த எவ்வித சட்ட முயற்சியையும் இன்றுவரை மேற்கொள்ளாதது ஏன்?

- கே. சந்துரு, முன்னாள் நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்