கஜா பேரிடர்: எப்படி உதவலாம்?

By ஆர்.ஷாஜஹான்

எந்தவொரு பேரிடரிலும் ஏற்படும் பாதிப்புகள் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இதுபோன்ற தருணங்களில் அரசு செய்ய வேண்டிய வேலைகளும், தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய வேலைகளும் ஏராளமானவை. செல்பேசிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவும் குடிநீர் விநியோகம் செய்யவும் மின்சாரம் அவசியம் என்பதால், மின் விநியோகம் தடையின்றிக் கிடைக்க விழுந்த கம்பங்கள் சரி செய்யப்பட வேண்டும். கம்பங்கள் சரிசெய்ய சாலையின் தடைகளை முதலில் சரி செய்ய வேண்டும். அதற்கு இயந்திரங்கள் தேவை. இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த விஷயங்களை எல்லாம் ஓர் அரசு முன்னரே ஊகித்து செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாத காரணத்தால்தான், புதுக்கோட்டை போன்ற மாவட்டத் தலைநகர்களிலேயே இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை, தகவல் தொடர்பும் இல்லை.

தற்போது, அண்டை மாநிலங்களிலிருந்தும் பணியாளர்களை வரவழைத்து கம்பங்களைச் சரி செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. ஆயினும் எல்லா இடங்களுக்கும் மின்சாரம் கிடைக்க இன்னும் 10-15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று தெரிகிறது. சாலை வசதி இல்லாதபோது, முகாம்களில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளோ குடிநீரோ அனுப்ப இயலாது. தகவல் தொடர்பு இல்லாதபோது எங்கே என்ன உதவிகள் தேவை என்ற தகவல்களும் கிடைக்காது. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் ஒருகாலத்தில் வானொலி இருந்தது போல இப்போது ஜெனரேட்டர்கள் இருக்க வேண்டும். மொத்தமாக மின்வெட்டு ஏற்பட்டாலும் அவசரகாலத் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படாமல், பாதிப்புகள் குறித்த செய்திகள் உடனே வெளியே தெரியச் செய்ய முடியும். குறைந்தபட்சம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இழப்புகள், பாதிப்புகள் பற்றிய செய்திகள் நிவாரணப் பணியில் இருக்கும் தன்னார்வலர்கள் மூலமாகவே வெளியில் தெரியவருகின்றன. ஆரம்பத்தில் பாதிப்பின் செய்திகள் தெரியாமல் சுணக்கமாக இருந்த பொதுமக்கள் அதை உணர்ந்துகொண்ட பின்னர், நன்கொடைகளையும் பொருட்களையும் அளித்துவருகிறார்கள். இப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் நம்மால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே அனுப்புவதுதான். ஒவ்வொரு ஊரிலும் தன்னார்வலர்கள் முனைப்பாகக் களமிறங்கியிருக்கிறார்கள். மெழுகுவர்த்திகள், கொசுவிரட்டிகள், தார்பாலின்கள், போர்வைகள், பாய்கள், ஆடைகள், பிஸ்கட் மற்றும் ரொட்டி பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், குடிநீர், அத்தியாவசிய அவசர மருந்துகள் போன்ற பொருட்களைத் திரட்டிக் கொண்டுசெல்கிறார்கள். பல கிராமங்களில் உணவுக்கும் வழியில்லாத நிலைமை இருப்பதால், உணவுகளை சமைத்து எடுத்துச் சென்று தருகிறார்கள். சில கிராமங்களில் அங்கேயே சமைத்து உணவு வழங்குகிறார்கள்.

2015 டிசம்பர் வெள்ளம், 2016 வெள்ளம், 2017 வர்தா புயல் என அண்மையில் மூன்று மிகப்பெரும் இடர்களை சந்தித்தும்கூட நாம் நிவாரண நடவடிக்கைகளை எப்படி திட்டமிட்டுச் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. நானும் பங்கேற்கிற எங்கள் குழு கேரள வெள்ளத்தின்போது சுமார் ஒரு மாதம் மிகக் கடுமையாக களத்தில் வேலை செய்தது. இப்போதும் எங்கள் குழுவினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் தீவிரமாகக் களத்தில் வேலை செய்கிறார்கள் என்றாலும், எல்லாருமே உதிரிகளாகவே செயல்பட்டு வருகிறோம். பேரிடர் நேரங்களில் களத்தில் இறங்கி திட்டமிட்ட முறையில் பணியாற்றக்கூடிய படை நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் தன்னார்வலர்களைக் கொண்ட ஓர் அமைப்பை நிறுவுவது குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அந்த அமைப்பு அமைய வேண்டும். உறுப்பினர்களுக்குப் பேரிடர் நேரப் பணிகள் குறித்து அடிப்படைப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

தன்னார்வலர்களும் பொதுமக்களும் செய்யக்கூடிய இந்த உதவிகள் எல்லாமே தற்காலிக, அத்தியாவசிய உதவிகள் மட்டுமே. இப்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார, வாழ்வாதார இழப்பு. அரசு மட்டுமே அதைச் சரிசெய்ய முடியும்!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர். தொடர்புக்கு: shahjahanr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்