எங்கே போகிறது இலங்கை அரசியல்?

By ஜூரி

உள்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைகுலைத்திருக்கிறது என்பதைத் தாண்டி, சர்வதேசத்தின் கவனத்தையும் திசை திருப்பியிருக்கிறது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சமீபத்திய நகர்வு. கூட்டணியிலிருந்த பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதோடு, அவருக்குப் பதிலாக அரசியல் எதிரி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கியும் இருக்கிறார். “சட்டப்படி இது செல்லும்; செல்லாது” என்கிற விவாதங்களைக் கடந்து, பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் இரு தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டிருக்கிறது. எப்படியும் இலங்கை அரசு ஸ்தம்பித்திருக்கிறது. இலங்கையில் என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும்?

கடந்து வந்த பாதை

ராஜபக்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்தவர் என்பதோடு, அவருடைய அமைச்சரவையிலும் இருந்தவர் சிறிசேனா. அதிரடி நடவடிக்கையாக ராஜபக்சவை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதோடு, 2015 தேர்தலுக்குப் பின்னர் ‘தேசிய அரசு’ என்ற பெயரில் எதிர்க்கட்சியான ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கூட்டணி அரசை நிறுவினார் சிறிசேனா. இந்தத் தலைகீழ் மாற்றங்கள் அவ்வளவுக்கும் மைய நோக்கமாக இருந்தது ராஜபக்சவை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றுவது. ராஜபக்சவின் அரசியலும் முடிவுக்கு வந்துவிட்டதுபோலவே தெரிந்தது.

ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் சிறிசேனாவுக்கும் ரனிலுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் தோன்றின. விளைவாக பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியாகவே சந்தித்தன. இந்த இரு கட்சிகளைத் தாண்டி தேர்தலில் மூன்றாவது முனையில் இருந்தது ராஜபக்ச தொடங்கிய பொதுஜன பெரமுனா. ஆச்சர்யமூட்டும் வகையில் தேர்தலில் அதிக இடங்களை அது வென்றது. தோல்விக்கான காரணம் குறித்து சிறிசேனா, ரனில் இருவரின் கட்சிகளும் தங்களுக்குள் பரஸ்பரம் குற்றம்சாட்டிவந்தன. இதனிடையே ரனில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரனில் அதில் வென்றார்.

சிறிசேனாவைக் கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வந்தது. இந்தச் சதியில் ரனில் பெயரும் இந்திய உளவுத் துறையின் பெயரும் உச்சரிக்கப்பட்டன. பின்னர் மறுக்கப்பட்டன. அடுத்த சில நாட்களிலேயே பிரதமர் பதவியிலிருந்து ரனில் நீக்கப்பட்டு, ராஜபக்ச அமர்த்தப்படும் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேனா. இந்தியா - ரனில் இடையிலான  நெருக்கம் சிறிசேனாவுக்குப் பிடிக்கவில்லை என்றும், ரனிலுக்கு நெருக்கடியை உண்டாக்கவே சீனாவுக்கு நெருக்கமான ராஜபக்சவுடன் கை கோர்க்கிறார் என்றும்கூட செய்திகள் வெளியாயின.

என்ன நடக்கலாம்?

இலங்கையின் சமீபத்திய அரசியலமைப்புப்படி பிரதமர் பதவியில் இருப்பவரை, அதிபர் தன் அதிகாரத்தில் நீக்கிவிட முடியாது. பிரதமராக இருப்பவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தாலோ, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பிரதமர் இழந்துவிட்டாலோதான் புதிய பிரதமரை அதிபர் நியமிக்க முடியும். ஆனால், ‘நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர் என்று தான் நம்பும் ஒருவரை அதிபர் நியமிக்கலாம்’ என்ற சட்டப் பிரிவை சிறிசேனா பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ச, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ரனில் தரப்பில் 106 பேர் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இதில் முக்கியப் பங்காற்றும் என்று தோன்றுகிறது. இலங்கையில் கட்சித்தாவல் தடைச் சட்டமும் கிடையாது என்பதால், ரனில் கட்சியை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ச கட்சி ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ராஜபக்ச கை ஓங்குவதற்கான சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்