நீதித் துறைக்கு வழிகாட்டும் இலக்கியங்களின் பட்டியலில் விவிலியத்துக்குப் பிரதான இடமுண்டு. “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும், பாரபாஸையா அல்லது யேசுவையா?” என்ற ஆளுநர் பிலாத்துவின் கேள்வி காலங்களைக் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பாரபாஸ்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். தண்டனை பெறுபவர்களை இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிடக் கூடாது என்றாலும் அவர்கள் நிச்சயம் பாரபாஸ்கள் அல்ல.
இந்திய அரசியல் சட்டம், நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி நிர்வாகத்தின் தலைமையை ஏற்றிருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் சில நீதித் துறை அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குற்றச் செயல்களுக்காக நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கவும் நிறுத்திவைக்கவும் குறைக்கவுமான அதிகாரம் அதில் ஒன்று.
அரசியல் சட்டக் கூறு 72-ன்படி குடியரசுத் தலைவரும், கூறு 161-ன்படி மாநில ஆளுநர்களும் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கும்கூட மன்னிப்பு வழங்க முடியும். ஆளுநர்கள் மரண தண்டனை தவிர்த்த மற்ற தண்டனைகளை மன்னிக்கவும் குறைக்கவும் மட்டுமே அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இந்த நிர்வாக அதிகாரங்களைக் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது. நிர்வாகத் துறையின் தனிச் சிறப்பான அதிகாரம் அது.
இந்தச் சட்டக் கூறுகளின் நோக்கம் நீதித் துறை முடிவுகளில் ஏதேனும் பிழைகள் நிகழ்ந்தாலும்கூட அதை நேர்செய்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான். குற்றவியல் சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க முடியும். சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில், ஒரு குற்றச்செயல் நிரூபிக்கப்படும்போது தண்டனையின் அளவை முடிவுசெய்யும் அதிகாரமே நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி மனிதாபிமானப் பார்வையோடு நிர்வாகம் முடிவெடுக்கலாம். அரசியல் காரணங்களுக்காகவும்கூட அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சட்டங்களைக் காட்டிலும் நீதியே முக்கியமானது என்பதே இந்த தனிச்சிறப்பான அதிகாரத்தின் அடிப்படை.
இவருக்கு ஏன் மன்னிப்பு வழங்கினீர்கள், அவருக்கு ஏன் வழங்கவில்லை என்று ஆளுநரின் மன்னிப்பு அதிகாரத்தை நீதிமன்றங்கள் உட்பட யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், நீதி மற்றும் நிர்வாகத் துறை சார்ந்த எந்தவொரு நடவடிக்கையிலும் சட்டத்தின் முன்னால் அனைவரையும் சமமாகவே நடத்த வேண்டும் என்ற இயற்கை நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின்படி அதுவொரு அடிப்படை உரிமையாகவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தின் கூறு ஒன்றின் வாயிலாக அதிகாரத்தைக் கையிலெடுக்கும் குடியரசுத் தலைவரோ ஆளுநரோ அதே சட்டத்தின் இன்னொரு கூறு வலியுறுத்தும் இயற்கை நீதியையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
விடுதலையின் கேள்வி
அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் பாரபட்சமின்றி கையாளப்படுகிறதா என்ற கேள்வி இன்றைக்கு பொதுவெளியின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்டிய வழக்கில் 2000-ல் ஜெயலலிதா கைதுசெய்யப்பட்டார். அப்போது கோவை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பயணித்த பஸ் தர்மபுரியில் எரிக்கப்பட்டது. மூன்று மாணவிகள் தீயில் கருகி, பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன், நெஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2016-ல் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவித்துவந்த அந்த மூவரும் தற்போது தண்டனைக் குறைப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்கக் கோரும் கோப்பு ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்டு மீண்டும் தமிழக அரசின் பரிந்துரையில் அவர்களது தண்டனைக்காலம் குறைக்கப்பட்டிருக்கிறது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தண்டனைக் குறைப்பு மிகவும் ரகசியமாக வைத்திருந்து திடுதிப்பென்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதால் கடும் சந்தேகங்கள் எழுகின்றன. இதேவேளையில், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று காத்திருக்கும் சிறைவாசிகளும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்பு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு ஏறக்குறைய 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரும் ஆளுநரின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். தமிழக அரசே அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், ஆளுநரின் பரிசீலனையில் இன்னும் அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக காத்திருக்கிறது.
யாருடைய பொறுப்பு?
ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முடியும்வரை அனுவிக்க வேண்டியது என்றுதான் சட்டங்கள் சொல்கிறது. ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைச் சட்ட ரீதியாக கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான். ஆனால், மாநில அரசு அனுப்பும் கோப்புகளுக்குச் செவிசாய்க்கும் ஆளுநர், அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது முடிவெடுப்பதை ஏன் தள்ளிப்போட வேண்டும்? எழுவர் விடுதலையைக் குறித்தும் அவர் விரைந்து பரிசீலிக்க வேண்டும். மீண்டும் விவிலிய வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
‘இந்த மனுஷனுடைய சாவுக்கு நான் பொறுப்பாளி கிடையாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, கூட்டத்தார்முன் தன் கைகளைக் கழுவினார் பிலாத்து’. அன்று ஆளுநர் அல்ல, மக்களே முடிவெடுத்தார்கள். எனவே இன்றைக்கு முடிவுகளை எடுக்கும் ஆளுநர்கள் அதுபோல கைகழுவிவிட்டுப் போக முடியாது. அந்தப் பொறுப்பு முழுவதும் அவர்களையே சாரும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago