லண்டன் நகருக்கு வெளியே டாக்ஸி பயணப்பட்டபோது வீடுகளின் அடர்த்தி குறைந்து, மரங்களின் அடர்த்தி அதிகமானது. குளிரைப் பொருட்படுத்தாது கார் கண்ணாடியை இறக்கச் சொன்னேன். தாவரங்களின் மணம் காருக்குள் சீறிக்கொண்டு வந்தது. ஏற்ற இறக்கம் மிக்க சாலையில் வண்டி பாய்ந்தது. ராஜ் தங்கியிருந்த வெம்ப்ளி - பிரஸ்டன் பகுதியே முன்பு கிராமப்புறமாக இருந்தது என்று அவர் சொன்னார்.
“பிரிட்டிஷார் நினைவுகளில் வெம்ப்ளி இன்னமும் பெரிய பெரிய மரங்கள், நீரோடைகள், மர அறுவை ஆலைகள், பண்ணை வீடுகள் பொதிந்த படிமம்.
1934-ல் இதை நகரமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். நிர்வாகரீதியாக இன்று லண்டனின் ஒரு பகுதியாக இது ஆகிவிட்டாலும், மிச்சமிருக்கும் கிராமத்தன்மையை இன்னமும் நீங்கள் உணர முடியும்.”
ராஜ் வீட்டின் முன் கார் நின்றது. கீழே இரண்டு, மேலே இரண்டு என்று நான்கு வீடுகள் சேர்ந்தமைந்த வீடாக அது இருந்தது. ஒரு படுக்கையறை, குளியலறை, இரு குடும்பங்களுக்குப் பொதுவான சமையலறையைக் கொண்ட ராஜ் வீட்டின் வாடகை இந்திய மதிப்பில் எழுபத்தைந்தாயிரம் ரூபாய். புத்தகங்களால் வீட்டை நிறைத்திருந்தார். சுந்தர ராமசாமியால் இலக்கியம் நோக்கி உள்ளிழுக்கப்பட்டவர்களில் ஒருவர் ராஜ் – முழுப் பெயர் ராஜகோபால். ‘க’ என்று ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பேச்சுவாக்கில் இதையெல்லாம் கடந்துவிட்டு உணவைத் தயாரிக்கலானார்.
நல்ல சாண்ட்விச், ஒரு முழு நீளக் கோப்பையில் பால் கொடுத்தார். “இங்கே பால், காய் – கனிகள் விலை மலிவு. ஏனையவற்றுடன் ஒப்பிடும்போது. உள்நாட்டு உற்பத்தியும் உண்டு என்றாலும், ஐரோப்பாவிலிருந்து வருவது அதிகம்.”
‘‘மேற்கில் இயற்கை வேளாண்மைக் கருத்தாக்கம் எந்த அளவில் இருக்கிறது?”
“தீவிரமான விவாதங்கள் போகின்றன. இயற்கை வேளாண் பொருட்களுக்கு கிராக்கியும் தனிச் சந்தையும் உருவாகியிருக்கிறது. இன்னொருபுறம் விலங்குகளைக் கொல்லாமல் நாமாகவே இறைச்சியை உற்பத்திசெய்ய முடியுமா எனும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.”
“அதாவது, சைவ அசைவம்… ஹாஹ்ஹா….”
பேச்சு சுவாரஸ்யம் வீட்டிலேயே முடக்கிவிட்டது. காலையில் சீக்கிரமாகவே புறப்பட்டோம். ரயில் அல்லது பஸ்ஸில் மட்டுமே பயணம் என்று முடிவெடுத்தோம். “வெம்ப்ளி இன்றைக்கு ஒரு குட்டி இந்தியா என்று சொல்லலாம். இங்கே வசிப்பவர்களில் சரிபாதியினர் இந்தியர்கள். சொல்லப்போனால், ஆங்கிலேயர்கள் வெறும் ஐந்து சதம்கூட இருக்க மாட்டார்கள். ஆசியர்கள்தான் பெரும்பான்மையினர். ஆப்பிரிக்கர்களும் கணிசமாக இருக்கின்றனர்.”
பிரஸ்டன் ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு குஜராத்தி உணவு விடுதியில் டீ வாங்கிக் கொடுத்தார். அவர்களுடன் கொஞ்சம் உரையாடினோம்.
முப்பதாண்டுகளுக்கு முன் குஜராத்தி தம்பதியால் தொடங்கப்பட்ட அந்த உணவு விடுதி, இன்று அந்தத் தம்பதி, அவர்களுடைய பொறியியல் பட்டதாரி மகன், மேலும் ஐந்தாறு பேருக்கு வேலை அளிக்கும் களமாக இருந்தது. “இந்தியாவில் வாழ்வதற்குப் பெரிய வழிகள் இல்லாமல், ஆப்பிரிக்கா சென்றோம். அங்கே வேலை செய்து சம்பாதித்த பணத்துடன் இங்கே வந்து இந்தக் கடையைத் தொடங்கினோம். ஐந்தாண்டுகளுக்கு ஓரிரு முறை குஜராத் செல்வதுண்டு. உறவுகள் எல்லாம் அங்கே இருந்தாலும், இனி இந்தியா திரும்பும் நினைப்பெல்லாம் இல்லை” என்று அந்தப் பெண்மணி சொன்னார்.
இளைஞன் – அந்தப் பெண்மணியின் மகன் சமீபத்தில் குஜராத் சென்று திரும்பியிருந்தான். தனக்கு விவரம் தெரிய இப்போதுதான் இந்தியா சென்றுவந்ததாகச் சொன்னான். இந்திய அனுபவம் எப்படியிருந்தது என்று கேட்டேன். “பயங்கரம். தட்பவெப்ப நிலை, உணவு, மக்களின் பழக்கவழக்கம், மக்களை அரசு நடத்தும் விதம் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. நான் உங்கள் நாட்டைப் பற்றி இப்படிச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும்” என்றான் - அவன் பிரிட்டிஷ் பிரஜை.
பேச்சு அரசியல் நோக்கி நகர்ந்தது. இப்போது அவன் அப்படியே மாறினான். பிரதமர் மோடி மீது அபாரமான மரியாதை அவனுக்கு இருந்தது. “இந்தியா ஒரு மிகப் பெரிய சக்தி; மக்கள் ஊழல்வாதிகள். அதிகாரிகள் மோசம். பாஜகவும் ஒழிசல் கட்சி. யார் துணையும் இல்லாததால், மோடியால் மாற்றங்களை உண்டாக்க முடியவில்லை; மோடி ஒரு உலகத் தலைவர்” என்றான். இன்னும் சில வாரங்களில் மோடி லண்டன் வரவிருந்தார். மோடி பங்கேற்கும் கூட்டம் தொடர்பில் ஆர்வமாகப் பேசினான். பிரிட்டனில் வாழும் பஞ்சாபிகள், தமிழர்கள், ஏனைய இந்தியச் சமூகங்கள் இடையே ஏதும் பிணைப்பு இருக்கிறதா என்று கேட்டேன். குஜராத்தி சம்மேளனத்தைத் தாண்டி அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தமிழ்நாடு சம்பந்தமாக அவன் அறிந்திருந்த ஒரே சொல் ரஜினி. நாங்கள் விடைபெற்றோம்.
“புலம்பெயர் இந்தியச் சமூகங்களின் இன்றைய மனநிலையை உணர்ந்துகொள்ள நீங்கள் இந்த இளைஞனைச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அவனைப் பொறுத்த அளவில் குஜராத், குஜராத்திகள் வழியே அவனுக்குத் தெரிவதுதான் இந்தியா. குஜராத்திகளுக்கு அடுத்து, இங்குள்ள பெரும்பான்மை இந்தியச் சமூகம் பஞ்சாபி சமூகம். பிராந்தியரீதியாக இரு சமூகங்களும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பவர்களும்கூட. ஆனால், பாகிஸ்தான் பஞ்சாபிகளுக்கு, இந்திய பஞ்சாபிகளுடன் உள்ள உறவுகூட குஜராத்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் இடையே கிடையாது.”
“நம் தமிழர்களும் அப்படித்தானே?”
“உண்மைதான். ஆனால், நான் சொல்வதில் வேறு அரசியலும் உண்டு. இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினரில் மூன்றில் ஒருவர் குஜராத்தி. பிரிட்டனில் உள்ள இந்தியச் சமூகத்தினரில் சரிபாதியினர் குஜராத்திகள். இந்தியப் பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கு குஜராத்திகளுடையது என்பது உங்களுக்குத் தெரியும். பிரிட்டனிலும் இந்திய முதலீட்டில் குஜராத்திகளுக்குப் பெரிய பங்குண்டு. அவர்கள் தங்களுக்கான அரசியல் ஒன்றை இங்கே உருவாக்க நினைக்கிறார்கள். மோடியை சரியான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். இந்தியன் டயாஸ்பரா என்ற பெயரில் இன்றைக்கு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் நடந்துகொண்டிருக்கும் எல்லா ஆட்டங்களுக்கும் பின்சக்தி குஜராத்தி லாபிதான். 2016-ல் இங்கே வெம்ப்ளி மைதானத்தில் மோடி பங்கேற்ற பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் குஜராத்தி தொழிலதிபர் மனோஜ் லட்வா. பிரச்சினை என்னவென்றால், இவர்களின் வெளி அடையாளம் மூவர்ணக் கொடி என்றாலும், அரசியல் ஒட்டுமொத்த இந்தியச் சமூகங்களை உள்ளடக்கியது அல்ல.”
“கேள்விப்பட்டேன். இப்போதைய காமன்வெல்த் லாபியில்கூட மனோஜ் லட்வாவுக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்று சொன்னார்கள்.”
“இங்கே மட்டும் அல்ல; இங்கிருந்தபடியே இந்தியாவிலும் தங்களுக்கான அரசியல் தளத்தை நிறுவ நினைக்கிறார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குஜராத் வங்கிகளில் உள்ள பத்தில் ஒரு பங்கு பணம் - ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வெளிநாடுவாழ் குஜராத்திகளுடையது. ஒருபோதும் திரும்பாத ஊரின் அரசியலை இங்கிருந்து தீர்மானிக்க விரும்புகிறார்கள். குஜராத்திகள் மட்டும் அல்ல; இந்தியாவுக்கு வெளியே வாழும் ஒவ்வொரு சமூகமும் இன்று இந்தியாவில் இதைச் செய்ய முற்படுகிறார்கள்.”
“இந்தியச் சமூகங்கள் இங்கே ஒரு குடையின் கீழ் திரள்வது சாத்தியம் இல்லையா?”
“ம்ஹூம். தமிழர்களிடையே இங்கே எவ்வளவு பிளவுகள் உண்டு தெரியுமா? ஏனைய இந்தியச் சமூகங்களுடனும் உறவு கிடையாது. தமிழ் பேசுவோர் இடையிலும், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற பெரிய பிளவு உண்டு. அந்தந்தப் பிரிவுகளுக்குள்ளும் சாதிப் பிளவுகள் தனியே உண்டு.”
ரயில் நிலையத்தை வந்தடைந்திருந்தோம். ரயில் நிலைய பெஞ்சுகளைப் பார்த்தேன். நான்கு பேர் அமரக்கூடிய ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு இருக்கை இயலாதாருக்காக ஒதுக்கப்பட்டு, அதில் சின்ன அளவில் அறிவிப்பு பொதிக்கப்பட்டிருந்தது. ஏதேனும் உதவி தேவைப்படின், நடைமேடையில் நின்றிருந்தபடியே ரயில் நிலைய மேலாளரைத் தொடர்புகொள்ள தகவல் தொடர்புக் கருவிகள் நடைமேடையில் நிறுவப்பட்டிருந்தன. “உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட, ரயில் நிலைய மேலாளரை நீங்கள் அணுகலாம். ஒரு பேட்ஜ் கொடுப்பார்கள். அதை அணிந்துகொண்டால் ரயிலில் நீங்கள் நிற்க வேண்டியிருக்காது. உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து இடம்கொடுப்பார்கள்.”
“இதையெல்லாம் செய்ய நிதி ஒரு விஷயம் அல்ல; சக மனிதர் மீதான அக்கறை மட்டுமே வேண்டியிருக்கிறது, இல்லையா?”
ரயிலில் பெரிய கூட்டம் இருந்தது. பெரும்பாலானோர் கைகளில் புத்தகம் இருந்தது. ஒரு பெண் தன்னுடைய கணவரை ஒரு குழந்தைபோல மார்பில் சாய்த்து தூங்கச் செய்துகொண்டிருந்தாள். ஒரு இளம்பெண் கையில் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தபடி கடந்தாள். குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வலியுறுத்தியது அந்தப் பிரசுரம். பிரிட்டனில் நீங்கள் யாரை வேலைக்கு அமர்த்தினாலும், ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்ச ஊதியம் என்று அரசு நிர்ணயித்திருக்கும் தொகைக்குக் குறைவில்லாத ஊதியத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். 2018 கணக்குப்படி லண்டனில் ஒரு மணி நேர குறைந்தபட்ச வாழ்வூதியம் 8.75 பவுண்டு – கிட்டத்தட்ட 850 ரூபாய். ஊதியத்தைக் குறைத்தால் அது குற்றம். நான் உற்சாகமானேன்.
“ராஜ் குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயம் இங்கே எப்படி வேலை செய்கிறது?”
“பிரிட்டிஷ் அதிகாரிகளே உங்களுக்கு இதுபற்றி நிறையச் சொல்லியிருப்பார்களே...”
“ஆமாம், கேட்டேன். கடந்த கால் நூற்றாண்டில் பிரிட்டன் மக்களிடையே பெருவரவேற்பு பெற்றிருக்கும் திட்டம் இது என்று சொன்னார்கள். சில குறைபாடுகள் இருந்தாலும் ஏழை - பணக்காரர் வேறுபாட்டுணர்வைக் குறைப்பதில் இது ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என்று என்னுடைய தோழி ஹெலன் சொன்னார்.”
“ஆமாம், முதலாளித்துவ நாடு என்றாலும், தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் இவற்றிலெல்லாம் இங்கே பெரிய அக்கறை காட்டுவார்கள்.”
“எனினும், ஒட்டுமொத்த ஐரோப்பாவுடன் ஒப்பிட பிரிட்டன் கொஞ்சம் கீழேதான் இல்லையா? ஜெர்மனியில்
2015-லேயே மணிக்கு 8.5 யூரோ குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவு.”
“உண்மை. ஜெர்மனி அந்த முடிவை எடுத்தபோது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அதிர்ந்தது. ஐரோப்பா முழுவதும் ஒரே விதமான குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயத்தைக் கொண்டுவரலாம் என்றுகூடப் பேசப்பட்டது.”
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரும்பான்மையினர் இன்று குறைந்தபட்ச வாழ்வூதியம் உயர்த்தப்படுவதை ஆதரிக்கின்றனர். எல்லா நாடுகளிலுமே செலாவணியின் மதிப்பு குறைந்துவருகிறது. வெளியே ஊதியம் உயர்த்தப்படுவதுபோலத் தெரிந்தாலும் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டேவருகிறது என்பதுதான் உண்மை. அத்துடன் எல்லா நாடுகளிலுமே மக்களுக்குக் கல்வி, சுகாதாரச் செலவுகள் பெரும் சவாலாக உருவெடுத்துவருகின்றன. ஊதியம் உயராவிட்டால் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து, சமூக அமைதி கெடும் என்ற எண்ணம் வளர்ந்த நாடுகள் முழுவதுமே பரவுகிறது.
பொருளாதாரரீதியாக முன்பு குறைந்தபட்ச வாழ்வூதியத்துக்கு எதிராகப் பல்வேறு தர்க்கங்கள் பேசப்பட்டன. இன்று அந்தக் குரல்களும் மாறுகின்றன. தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாகக் கொடுக்கப்படும் தொகையின் பெரும் பகுதி செலவுசெய்யப்படுவதால், அது பொருளாதாரச் சுழற்சியை வேகப்படுத்துகிறது. மிச்சப்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் சேமிப்பும்கூட அரசுசார் வங்கிகள், சேமிப்புப் பத்திரங்கள், வீடுகளில் முதலீடுசெய்யப்படுவதால், சமூகத்துக்கு அது திரும்புகிறது. எல்லாவற்றுக்கும் மேல் மக்களின் அடிப்படையான தேவைகள் இதன் மூலம் பூர்த்திசெய்யப்படுவதால், சமூக அமைதியை அது உத்தரவாதப்படுத்துகிறது என்கிற வாதங்கள் வலுவடைகின்றன.
“வீட்டு வாடகை, உள்ளாட்சி அமைப்புகளின் வரிகள், மின் கட்டணம், சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவு இவையெல்லாம் மட்டும் அல்லாமல், ஒரு ஊழியர் குடும்பத்துடன் மாதம் ஒரு வெளியூர் சிற்றுலாவுக்கேனும் சென்று வர முடியுமா? கிறிஸ்துமஸ், பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களிலேனும் விருந்து கொடுக்க முடியுமா? வாரம் ஒரு நாடகத்துக்கோ, சினிமாவுக்கோ சென்று வர முடியுமா? இதையெல்லாமும் யோசித்து ஊதியத்தை நிர்ணயிங்கள் என்று அரசே சொல்கிறது.”
“லண்டனில் வீட்டு வாடகை எப்படி?”
“நம்மூர்போலத்தான். தேர்ந்தெடுக்கும் பகுதியைப் பொறுத்தது. லண்டன் பெருநகரப் பகுதியில் ஒரு படுக்கையறை அடுக்ககத்துக்கே 1000 பவுண்டுகள் – நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் ஆகும். இரு படுக்கையறை என்றால், 1200 பவுண்டுகள். லண்டனுக்கு வெளியே கொஞ்சம் குறைவு. தென்கிழக்கு அல்லது தென்மேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் மேலும் குறைவு. ஆனால், அங்கே போய் வருவது சிரமம்.”
“அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது எப்படியான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்?”
“நிறைய ஏமாற்றுபவர்களும் உண்டு என்பதால், கடுமையான அபராதத்தை வசூலிப்பார்கள். அதாவது, நீங்கள் ஒருவரை ஏமாற்றினால், ஒட்டுமொத்த ஊழியர்களின் சம்பளம் எவ்வளவோ அதுபோல இருநூறு சதம் வரை அபராதம். கடந்த வருடம் மட்டும் 140 லட்சம் பவுண்டுகள் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அரசைத் தாண்டியும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சமூகத்தில் ஒவ்வொரு தரப்பிலும் இதை அக்கறையோடு பார்ப்பார்கள். உதாரணமாக, குறைந்தபட்ச வாழ்வூதியத்தை வழங்க மறுத்த நிறுவனங்கள் மீதான அபராதத்தைக் கடுமையாக உயர்த்த வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுப்பவர்களில் பிஷப் ஜஸ்டின் வெல்பியும் ஒருவர். ஏமாற்றும் நிறுவனங்களை ஊடகங்கள் அசிங்கப்படுத்திவிடும். நாட்டின் எல்லா பெரிய தொழில் நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தின் தலைமை அதிகாரி வாங்கும் ஊதிய விகிதத்துக்கும் கடைநிலை ஊழியர் வாங்கும் ஊதிய விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை வெளியிட வேண்டும். இது குறைக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஒலிக்கின்றன.”
நான் இந்தியா திரும்பிய பிறகு, ‘தி கார்டியன்’ செய்தித்தாளை எனக்கு அனுப்பியிருந்தார் ராஜ். விம்பிள்டனில், உணவகப் பிரிவில் இரவில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குப் பகலில் கொடுக்கும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக அல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக பகல் ஊதியம் வழங்கப்படுவதைப் பெரிய செய்தியாக்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நாறடித்திருந்தது அந்த நாளிதழ்.
நான் தேவயானி கோபர்கடே விவகாரத்தை ராஜிடம் நினைவுபடுத்தினேன். இந்திய தூதரக அதிகாரி அவர். 2013-ல் அமெரிக்காவில், தன்னுடைய வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை அளிக்காததால், கைதுசெய்யப்பட்டார். இந்திய அரசும் ஊடகங்களும் கொந்தளித்தன. “ஒரு தூதரக அதிகாரிக்கான அந்தஸ்தை அளிக்காமல், கையில் விலங்கு போட்டு எப்படி ஒரு இந்திய அதிகாரியை அமெரிக்கா கைதுசெய்யலாம்?” என்பதே இந்தியத் தார்மிகமாக வெளிப்பட்டது. ஒரு பெரிய இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி தன் வீட்டில் சொற்ப சம்பளத்துக்கு உள்ள பெண்ணிடம் சுரண்டலில் ஈடுபட்டதாக யாருமே அந்த விஷயத்தை அணுகவில்லை. “பொருளாதாரத்தில் அமெரிக்காவாகவோ, பிரிட்டனாகவோ ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நம்மவர்களிடம் இருக்கிறது. ஆனால், விழுமியங்களில் ஆண்டானடிமை நிலையிலேயே நீடிப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்,”
இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதை ரயில் ஜன்னல் வழியே சுட்டினார் ராஜ். “நாம் போக வேண்டிய தொலைவு நீண்டு கிடக்கிறது” என்றேன் நான்.
(பயணிப்போம்…)
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago