காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார். மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர். அந்த வீடுகளின் மாதிரியை சென்னையில் தட்சண்சித்ராவில் அவர் உருவாக்கினார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திப்பிராஜ புரம், மெலட்டூர், செம்மங்குடி, கோனேரிராஜபுரம், விசலூர், தேதியூர், விஷ்ணுபுரம் போன்ற 18 வாத்திமா அக்கிரஹாரங்களிலும், உடையாளுர் போன்ற ஊர்களின் அக்கிரஹாரங்களிலும் இவ்வகையான வீடுகள் பழமை மாறாத அழகுடன் இன்றும் தோற்றம் கொள்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும், அகமதாபாத், கோவா போன்ற இடங்களிலிருந்தும் பிரபல கட்டிடக் கலை நிபுணர்கள் பழமை வாய்ந்த இவ்வூர்களில் உள்ள இவ்வகையான வீடுகளின் அழகைப் பார்ப்பதற் கென்றே வருகிறார்கள்.
இந்த ஊர்களில், குழந்தைகள் வீட்டின் முன்புற ஆளோடியில் கூடி விளையாடுவது இன்றும் கண் கொள்ளாக் காட்சி. இருபுறத் திண்ணைகளிலும், பெரியவர்கள் அமர்ந்து பேசி மகிழ்கின்றனர். முற்றத்துக்கு நேரடியாக அழைத்துச் செல்கிறது நடைபாதையான ரேழி. திறந்த வெளியான முற்றமோ, சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் மற்றும் காற்று, வெயில் போன்றவற்றை வீட்டின் உள்ளே அனுபவிக்கச் செய்கிறது. மற்றும், வீட்டுக்கு வேண்டிய வற்றல், வடாம், மிளகாய் வற்றல் போன்றவற்றைப் பெண்கள் முற்றத்திலேயே காய வைக்கின்றனர். முற்றத்தைச் சுற்றி நான்கு புறத்திலும் தாழ்வாரங்கள். கோடை வெயிலின்போது காற்று உள்ளே சென்று தாழ்வாரத்தை இதமாக உணர வைக்கிறது. மழைக் காலத்திலோ தாழ்வாரத்தில் தண்ணீர் படாமல் சாய்ந்த ஓடுகளின் வழியாக முற்றத்தில் மட்டும் மழை கொட்டித் தீர்க்கிறது.
வீட்டின் நடுவே விருந்தினர்கள் அமரும் கூடம். அதன் அருகே ஆடும் ஊஞ்சல். வீட்டின் இரண்டாம் கட்டிலோ, வீட்டுக்குத் தேவையான விறகு, ராட்டி போன்றவை வைப்பதற்கான மேல் தளங்கள். வேண்டாத பொருட்களைத் தாங்குவதற்கென்றே நிற்கும் பரண். கொல்லையிலோ தொழுவத்தில் வைக்கோல், புற் களைத் தின்று அசைபோட்டுக்கொண்டிருக்கின்றன பசுமாடுகள். இம்மாடுகள் கறக்கும் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் காபி அருந்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான காபி அருந்துவதற்காக, காபிக் கொட்டையை வறுத்து எந்திரத்தில் அரைத்து விருந்தினரை உபசரிக்கும் விதமே அலாதியானது.
கொல்லையில் உருளைச் சக்கரத்தில் வாளியுடன் தண்ணீர் இறைப்பதற்கான கேணியின் அழகே அழகு. 15 அடி ஆழத்திலேயே தெளிந்த தண்ணீரை இந்தக் கேணியில் பார்த்துவிடலாம். தோட்டத்திலோ வீட்டு பூஜைக்கான புஷ்ப மரங்கள், மற்றும் மா, பலா, வாழை மரங்கள் போன்றவற்றுடன் எப்போதும் மெலிதான காற்று அங்கு சிலுசிலுக்கும். நாட்டு ஓடுகளால் சாய்வாக வேயப்பட்டு விதவிதமான அழகைக் கொண்ட இந்த வீடுகள் கோடை, மழைக் காலங்களில் வீட்டின் உள்ளே இதம் தரும் விதத்தில் இருப்பதை இன்றும் நாம் இந்த ஊர்களில் காணலாம்.
- தேனுகா,கலை விமர்சகர்,
தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago