முத்துசாமி பூட்டிய வண்டி

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற சாதனைச் சிறுகதைக் கலைஞர்களின் கதைகளைக் காதுகளும் சேர்ந்து வாசிக்க முடியும். நேரடியாகப் பேசிப் பழகாதவர்களும் தங்கள் ஆக்கங்களின் வழியாகக் கேட்கும்படியாகத் தங்கள் குரலைக் கேட்க வைத்தவர்கள் அவர்கள். ந.முத்துசாமியின் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகளிலும் அவர் குரல் ஆகிருதியுடன் ஒலிக்கிறது. அவர் உருவாக்கிய நடிகர்கள் அவர் குரலாகவே ஒலிப்பதைப் பார்க்க முடியும்.

மௌனிக்கான கிராமிய பதில் என்று ந.முத்துசாமியைச் சொல்ல முடியும். மௌனியைப் போலவே இருபத்துச் சொச்சம் கதைகளே எழுதியிருந்தாலும், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சாதனைகள் என்று சொல்லக்கூடிய சிறுகதைகளை எழுதியவர்களில் ஒருவர் முத்துசாமி. உள் அங்கங்கள் அனைத்தும் இணைத்துப் பூட்டப்பட்ட அழகிய மனோரதங்கள் என்று அவரது சிறுகதைகளைச் சொல்ல முடியும்.

ந.முத்துசாமியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘செம்பனார்கோவில் போவது எப்படி?’ கதையில், பண்ணையார் உட்கார்ந்திருக்கும் ‘ஊஞ்சல்’தான் அவரது விவரணையை வர்ணிப்பதற்கான உருவகம். இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே, பழமைக்கும் புதுமைக்கும் இடையே, பழக்கத்துக்கும் விடுபடுவதற்கும் இடையே, உறைதலுக்கும் இயக்கத்துக்கும் இடையே, பொதுமொழிக்கும் மனமொழிக்கும் இடையே ஆடும் ஊஞ்சலாக அவரது கதைகள் அமைகின்றன.

அவர் சிறுகதையில் ஒரு இடத்தை திசைகள், மரங்கள், மூலைகள், குளங்கள் கொண்டு துல்லியமாக வர்ணிப்பதையொட்டி துல்லியமான வரைபடத்தைத் தயாரித்துவிட முடியும். ‘நடப்பு’ சிறுகதையில் கிணற்றுக்குள் குழந்தைப் பருவத்தில் விழுந்து தப்பிக்கும் கதை சொல்லியின் ஞாபகமாகக் கதை விரிகிறது. முதல் முறை விழுந்த கிணறு தலையீடு உடையது. அந்தக் கிணற்றை விவரிக்கும்போது, குறுக்குப்பாலம், சகடை, தேய்ந்து தேய்ந்து ஒரே உறை போன்று தோற்றமளிக்கும் உறைகள், சிலந்தி வலை, குருவிக்கூடு, காகம் எச்சம் போட்டு உள்ளே முளைத்திருக்கும் செடி என வர்ணனை சென்று அந்தக் கிணற்றை எல்லாப் பாகங்களும் இணைந்து இயங்கும் ஒரு இயந்திரமாக ந.முத்துசாமி மாற்றிவிடுகிறார்.

ஒரு கிராமத்தை விவரிக்கும்போதும் சரி; அங்குள்ள வெவ்வேறு குடிகள், சமூகத்தினர், தொழில் பிரிவினர், சாதியினர், தெருக்கள் எல்லாவற்றையும் ஆரக்கால்களாக்கி ஒரு சக்கரமாகத் தன் கதையைச் சுழலவிடுகிறார். தீண்டுதலில் ஆரம்பித்து தீண்டாமை தொடங்கும் எல்லைகளையும் இணைக்கிறார். ஊரும் சேரியும் பிரியும் புள்ளியை பாஞ்சாலியில் கூர்மையாகச் சித்திரிக்கிறார். “ரெண்டும், ரெண்டு தீவுகளா வயல்களுக்கு இடையிலே, ஒரே ஒரு வயலாலே பிரிக்கப்பட்டு, ஒரு வரப்பாலே சேர்க்கப்பட்டு கிழக்கே இருக்கு.”

பேச்சுக்கும் பேசாததற்கும் இடையில் இருக்கும் மனமூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். பழக்கம், இயந்திரத்தனம் மற்றும் மரபின் பெயரால் மாறும் காலத்துக்கு முன் அர்த்தமற்றுப்போன நடைமுறைகளைப் பரிசீலித்தவை முத்துசாமியின் கதைகள். மனிதன், விலங்கு, அன்றாடம் புழங்கும் பொருட்களுக்குள் வந்துவிடும் இசைவையும் இணக்கத்தையும் அபூர்வமான நிலையிலிருந்து அவரது கதைகள் பார்த்தன. கிணற்று ராட்டையில் இருக்கும் கயிறு பழகிப் பழகி, கிணற்றுக்குள் விழுந்து தப்பிக்கும் குழந்தையைக்கூடக் காயப்படுத்தாத மிருதுவை அடைந்துவிடுகிறது. தொழுவத்துக்குள் கதைசொல்லியிடம் மாடுகள் சிரிக்கின்றன; ‘ம்’ என்று சொல்லி எழுகின்றன. ‘ஹேஹே’ என்று சொல்லி மாட்டுடன் அவன் ஓடும்போது மனிதன் விலங்குக்குப் பக்கத்தில் போய்விடுகிறான்.

சாதிப் பிரிவினையால் மனிதர்களுக்கிடையே எல்லைகள் வரையறுக்கப்பட்ட கிராமத்தில், சாதி குழம்பி முயங்கும் நிலைமைகளையும் தேர்ந்த கதைகளாக்கியுள்ளார் முத்துசாமி. உயிரபாயம் நிலவும் சூழ்நிலைகள், கோயில் திருவிழா, நிகழ்த்துக்கலைச் சடங்குகள் போன்றவற்றில் அந்தப் பிரிவினைகள் முற்றிலும் தளர்ந்துவிடுகின்றன. ஒட்டுமொத்த மக்களின் படைப்பூக்கம், சக்தி, அறிவு ஆகியவை அங்கே கலந்து உறவாடுகின்றன. முரட்டு மாடுகளால் தறிகெட்டுப் போன வண்டியிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படும் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ கதையில் அப்படி சாதி குழம்பிப்போகிறது. “அங்கு ஜாதி குழம்பிப்போய்விட்டது. எல்லா ஜாதிக்காரர்களும் அடுப்பங்கரைக்கு வந்துவிட்டார்கள். பெரிய விபத்து நேர்ந்த நேரத்தில் ஜாதி என்னடா என்று அவர்கள் கேட்டிருப்பார்கள். பெரியப்பாவே கேட்டிருப்பார். ஆசிரியருமான அவருக்கு இப்படிக் கேட்பது சுலபம்.”

பாஞ்சாலி கதையில் உடுக்கு, எக்காளம் தொடங்கி பறை வரை அத்தனையும் வெவ்வேறு சமயத்தில் தனது மொத்த சக்தியையும் வெளிப்படுத்துகின்றன. பாஞ்சாலி அம்மன் ஊர்வலத்தில் தீவட்டிக்கு அக்ரகாரம் தொடங்கி சேரிவரை துணி போகிறது.

“இருட்டை விரட்ட எல்லாரும் உதவின சந்தோஷத்துல இருப்பாங்க” என்று சொல்லும் குரல், முத்துசாமியின் கனவாகத்தான் இருக்க வேண்டும்.

எல்லாத் தரப்பு மக்களின் ஆற்றலும் படைப்பூக்கமும் இணையும் இடத்தின் மீதான ஈடுபாடுதான் ந.முத்துசாமியை, அவர் சாதித்த துறையான சிறுகதையிலிருந்து கூத்து மற்றும் நவீன நாடகத்தை நோக்கித் திருப்பியிருக்க வேண்டும். நடை, ஓட்டம், பாய்ச்சல் என்ற நிலைகளைக் கொண்ட அவரது ஆகிருதிக்கு உடலுடன் சேர்ந்து நிகழும் நாடகம் பொருத்தமான ஊடகமாகப் பட்டது ஆச்சரியமானதல்ல.

நிலம், கால்நடைகள் சார்ந்த வேளாண்மை வாழ்க்கையின் முடிவையும் புதிய தொழில், பொருளியல் சார்ந்து கிராமத்திலும் அரும்பும் முதலாளித்துவம் சார்ந்த வாழ்வை எழுதியவர் அவர். அன்று பூட்டிய வண்டியை அவர் அழகாகச் சித்திரித்திருந்தாலும் அந்த வண்டிக்கான உபயோகம் அருகிவருவதை எந்தப் பச்சாதாபமும் அனுதாபமும் இல்லாமல் அவர் புறநிலையில் சித்திரித்தவர்.

ரஷ்ய மெய்ஞானி குர்ஜிப்பின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், இயந்திரத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில், உணர்வுபூர்வமான குதிரை வழிநடத்திக்கொண்டிருக்கும் வண்டியாக நமது வாழ்க்கையைச் சித்திரித்திருக்கிறார். குர்ஜிப் சொல்வதைப் போல பிரக்ஞைபூர்வமான நம்பிக்கை கொண்ட புதிய வாழ்க்கையை நோக்கி அவர் கண்ட கனவுதான் அவர் படைத்திருக்கும் சிறுகதைகள், நாடகங்கள், பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள் சார்ந்து அவரது தேடல்கள் என்பதாகவும் பார்க்க முடியும். உலகத்தின் அத்தனை நிறங்களையும் பேதங்களையும் உள்ளடக்கியது ந.முத்துசாமி படைத்த புஞ்சை.

புஞ்சையிலிருந்து விடுபட்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய முத்துசாமி, தன்னுடைய மொழியில் எப்படி வரவேற்றிருப்பார்? “புது வண்டிய தயார் செஞ்சுட வேண்டியதுதான். அதுதான் நம்மோட பொறுப்பு. பழைய வண்டியோட உபயோகம் முடிஞ்சுபோச்சு!”

- ஷங்கரராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்