சாதி விலக்கம் செய்யப்பட்டார் காந்தி

By ஆசை

“காந்தி, நாங்கள் எல்லோரும் உன் தந்தையின் நண்பர்கள். மேலும், உன் மேல் அக்கறை கொண்டவர்கள். நம் சாதி கட்டமைப்பைப் பற்றி உனக்குத் தெரியும். இங்கிலாந்தில் நீ இறைச்சி சாப்பிட வேண்டியிருக்கும் என்றும் மது அருந்த வேண்டியிருக்கும் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம். அது மட்டுமல்லாமல், நீ கடல் கடந்து வேறு செல்ல வேண்டியிருக்கும். இவை அனைத்தும் நமது சாதிக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானவை என்பதை நீ அறிய வேண்டும். ஆகவே, உனது முடிவை நீ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் ஆணையிடுகிறோம், இல்லையெனில், கடுமையான தண்டனைக்கு நீ உட்படுத்தப்படுவாய்... என்ன சொல்கிறாய்?” என்று சாதித் தலைவர் அதிகாரமாகக் கேட்கும்போது, 18 வயது இளைஞர் காந்தியால் என்ன சொல்லிவிட முடியும் என்றே அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நினைத்திருப்பார்கள்.

காந்தி பேச எழுந்தார். ஒரு முறை அங்கு கூடி இருந்தவர்களைப் பார்த்தார். ஒரு ‘சிறுவன்’ பிரிட்டன் படிக்கப்போவது என்பது அவ்வளவு ஒரு மோசமான செயலா என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். எனினும், காந்தி எந்த மாதிரி சமூகத்திலிருந்து தோன்றினார் என்பதைத் தெரிந்திருப்பவர்களுக்கு அந்த எதிர்ப்பில் எந்த ஆச்சரியமும் தோன்றியிருக்காது.

1887-ல் காந்தி மெட்ரிகுலேஷன் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றுத் தேர்வாகியிருந்தார். கத்தியவார் பகுதியில் தேர்வெழுதிய 3,000 பேரில் 823 பேர்தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சிபெற்றவர்களுள் தரவரிசைப்படி காந்தியின் இடம் 404. பொது அளவீட்டின்படி அவருடைய மதிப்பெண் சுமார்தான் என்றாலும், காந்தியின் குடும்பத்தைப் பொறுத்தவரை அவர்தான் அப்போதே அதிகம் படித்திருந்தவர்.

அதே பெருமிதத்தில் 1888-ல் பாவ்நகரில் உள்ள சாமல்தாஸ் கல்லூரியில் பட்டப் படிப்புக்காக காந்தி சேர்கிறார். சேர்ந்து நான்கைந்து மாதங்களிலேயே வந்த தேர்வில் காந்தி மோசமாகவே மதிப்பெண் பெற்றார். அம்மா, மனைவி போன்றோர் நினைப்பும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

கோடை விடுமுறைக்கு காந்தி தனது வீட்டுக்கு வந்திருந்தபோது அங்கே விருந்தினராக வந்திருந்த மாவ்ஜி தவே என்ற பிராமணர் கூறிய யோசனை, கொஞ்ச நாளில் தன்னை சாதிச் சங்கத்தினருக்கு மத்தியில் கொண்டுவந்து நிறுத்திவிடும் என்பதை காந்தி எதிர்பார்த்திருக்க மாட்டார்தான்.

“பி.ஏ., படித்து முடிக்கவே நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பு படித்தால் இதில் இரண்டு ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்றுவிடலாம். ஊருக்குத் திரும்பினால் காந்தி படித்த படிப்புக்கு போர்பந்தரில் திவான் பதவியைக்கூடக் கேட்டு வாங்கிவிட முடியுமே” என்று மாவ்ஜி தவே கூறிய யோசனை எப்படியோ காந்திக்குள் மந்திர உச்சாடனம்போல் இறங்கிவிட்டது. திவான் பதவி என்பதெல்லாம் அவர் மனதில் நிற்கவில்லை. பிரிட்டன் போக வேண்டும் என்பது மட்டும் மூளைக்குள் குடைய ஆரம்பித்தது.

காந்தி, தனது அண்ணன் லஷ்மிதாஸை இணங்கவைத்துவிட்டார். லண்டனுக்குப் போய்ப் படிப்பதற்கு ரொம்பவும் செலவு பிடிக்கும் என்பதால், போர்பந்தர் சமஸ்தானத்தின் உதவியை நாடினார். அங்கு அவருக்கு உதவி மறுக்கப்பட்டது. காந்தி மேல் என்ன மாதிரி நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரியவில்லை, அவருடைய அண்ணன்தான் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட சாமான்களை அடகுவைத்துப் பணத்துக்கு ஏற்பாடு செய்தார். காந்தி பின்னாளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் பெற்ற புகழைப் பார்ப்பதற்கு லஷ்மிதாஸ் (1860-1914) உயிரோடு இருந்திருந்தார் எனில், தன்னுடைய முடிவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் காந்தி.

தாய் புத்லிபாய்தான் விடாப்பிடியாக இருந்தார். ‘லண்டனுக்குப் போனால் இறைச்சி உண்ணவும் மது அருந்தவும் கெட்ட சகவாசம் ஏற்படவும் வாய்ப்பு’ இருக்கிறது என்று அஞ்சினார். ஆகையால், “புலால் உண்ண மாட்டேன்; மது அருந்த மாட்டேன்; மனைவிக்குத் துரோகம் இழைக்க மாட்டேன்” என்ற மூன்று வாக்குறுதிகளைக் கொடுத்து, தனது தாயாரையும் சமாதானப்படுத்திவிட்டார். சித்தப்பா முதலான உறவினர்கள்தான் காந்திக்கும் காந்தியின் அண்ணனுக்கும் ரொம்பவும் குடைச்சல் கொடுத்துவிட்டார்கள்.

காந்தி பிரிட்டன் செல்வார் எனில், அவர்தான் ‘கத்தியவாரிலிருந்து பிரிட்டன் செல்லும் முதல் பனியா’ என்று புகழ்பெறுவார். நமக்கு அது புகழாகத் தெரியலாம். ஆனால், அந்த பனியா சமூகத்தைப் பொறுத்தவரை அதில் புகழ் ஏதும் இல்லை, பாவம்தான் இருந்தது; அதாவது சாதியை மீறிய பாவம்.

இந்தப் பின்னணியில்தான், காந்தியை பிரிட்டன் செல்ல விடாமல் தங்கள் சாதிக் கட்டுமானத்தின் மூலம் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், சாதிப் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைப் பருவத்திலிருந்து வழக்கமாக எல்லாவற்றுக்கும் அஞ்சிக்கொண்டிருந்த காந்தி, அன்று மிகுந்த துணிச்சலோடு அந்தக் கூட்டத்தை எதிர்கொள்வதென்றே வந்திருந்தார்.

தன்னை நோக்கி சாதித் தலைவர் கேள்வியை வீசியதும் பதில் சொல்ல எழுந்தார் காந்தி. “பிரிட்டன் செல்வது நம் மதத்துக்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேல்படிப்பு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப் பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்” என்றார்.

அப்படியும் அந்த சாதித் தலைவர் விடவில்லை “அங்கே நமது சாதி, மதச் சம்பிரதாயங்களையெல்லாம் கடைப்பிடித்து நடப்பது சாத்தியமே அல்ல. எங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறாய்? பிரிட்டன் போவதென்ற முடிவை மாற்றிக்கொள்கிறாயா? இல்லை, சாதிக் கட்டளையை நீ மீறி நடக்கப்போகிறாயா” என்று முன்னிலும் அழுத்திக் கேட்கிறார்.

காந்தியும் முன்னிலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார், “இவ்விஷயத்தில் சாதி தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”

அதற்குப் பிறகு சாதிப் பஞ்சாயத்து சும்மா இருக்குமா? “இன்று முதல் இப்பையனை நம் சாதியிலிருந்து விலக்கம் செய்கிறோம். இவனுக்கு யார் உதவிசெய்தாலும், இவனை வழியனுப்ப யார் துறைமுகத்துக்குச் சென்றாலும், அவர் ஒரு ரூபாய் நான்கணா அபராதம் விதிக்கப்படுவார்!”

ஆச்சாரமான பனியா குடும்பத்தில், வைஷ்ணவ மரபில், சாதிக் கட்டுமானங்கள் இறுக்கிப் பிடிக்கும் சூழலில் பிறந்த காந்தி, இங்கிலாந்துக்கு 18 வயதில் கப்பலேறும்போது இந்தியாவை விட்டு மட்டுமல்ல, சாதியை விட்டும்தான் கப்பலேறுகிறார். மறுபடியும் இந்தியாவுக்கு வரும் காந்தி ஒருபோதும் தன் சாதிக்குத் திரும்பவேயில்லை.

(காந்தியைப் பேசுவோம்…)

-ஆசை

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்