தமிழ்த் திரைப்படங்களுக்கென ஓர் ஆவணக்காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. திரைத் துறையினரில் மிகச் சிலர், திரைப்படச் செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் எனச் சிறிய குழுவினரால் தொடர்ந்து எழுப்பப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை!
இயக்குநர் பாலு மகேந்திரா, தனது திரைப்படங்களிலேயே ‘வீடு’, ‘சந்தியாராகம்’ ஆகிய இரண்டு படங்கள்தான் ஓர் படைப்பாளி எனும் வகையில் தனக்கு நிறைவைத் தந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், அவ்விரு படங்களின் படச்சுருள்களை நீண்ட நாட்கள் கழித்து எடுத்துப் பார்க்கையில், அவை சருகுகளைப் போல் உதிர்ந்து கிடந்ததைக் கண்டு பெருந்துயருக்கு ஆளானதைப் பதிவுசெய்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக ஆவணக்காப்பகத்துக்கான கோரிக்கையை அவர் தன் வாழ்நாளின் இறுதி வரையிலும் முன்வைத்துக்கொண்டே இருந்தார்.
மேற்கத்திய நாடுகளில்தான் ‘ஃபிலிம் நெகடிவ்கள்’ தயாரிக்கப்பட்டன. அங்குள்ள குளிர்ந்த தட்ப வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதத்துக்கு ஏற்றார்போல அவை வடிவமைக்கப்பட்டன. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு அவை ஏற்புடையதாக இல்லை. காற்றின் ஈரப்பதம் அதிகமாகும்போது, ஃபிலிமால் அதைக் கிரகித்துக்கொள்ள முடியாது. ஃபிலிம் நெகட்டிவின் மூலப்பொருட்களான சில்வர் நைட்ரேட்டும், அமோனியமும் வேதி வினைபுரிந்து, ஃபிலிமை சீர்குலைத்துவிடும். இதுகுறித்த தெளிவின்மையால் நாம் பல நூறு திரைப்படங்களை இழந்திருக்கிறோம்.
அழியும் தறுவாயில் திரைப்படங்கள்
தென்னிந்தியாவின் முதல் மௌனப் படமான ‘கீசகவதம்’ (1916), தமிழ்-தெலுங்கு மொழிகளின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ (1931) போன்ற முன்னோடித் திரைப்பட முயற்சிகளின் பிரதிகள் நமக்குக் கிடைக்கவில்லை. “1931 – 1950 வரையிலும் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்களின் பிரதிகள் ஒன்றுகூட இல்லாமல் அழிந்துபோய்விட்டன” என்கிறார், திரைப்படச் செயல்பாட்டாளர் ‘நிழல்’ திருநாவுக்கரசு.
‘‘மலேசியாவில் உள்ள ‘கொலம்பியா பிக்சர்ஸ்’ எனும் திரைப்பட விநியோக நிறுவனம், தான் விநியோகித்த படங்களின் பிரதிகளைப் பாதுகாத்து வைத்திருந்தது. இன்றைக்கு நாம் காண்கிற கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களில் பெரும்பாலானவை அந்நிறுவனத்தின் மூலம் நமக்குக் கிடைத்தவைதான். 1935-ல் வெளிவந்த ‘பட்டினத்தார்’ திரைப்படத்தின் பிரதி அந்நிறுவனத்திடமிருந்துதான் கிடைத்தது. 1950 வரையிலும் குளிரூட்டப்பட்ட ‘லேப்’ வசதி சென்னையில் இல்லை. அதன் பிறகுகூட ஏவி.எம், பிரசாத் போன்ற பெரிய திரைப்பட நிறுவனங்களால் மட்டுமே லேப் அமைத்துத் தங்களது படங்களைப் பாதுகாக்க முடிந்தது. சிறிய நிறுவனங்களுக்கு அது சாத்தியமாகவில்லை என்பதைவிட, அதற்கான தேவையை யாரும் உணரவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். பெரிய நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் உரிமம் பெற்று வைத்திருந்த திரைப்படங்களே இன்றைக்கு டிஜிட்டல் வடிவம் கண்டிருக்கின்றன. டிஜிட்டல் வடிவில் மாற்றப்படாமல் 3,000-க்கும் அதிகமான திரைப்படங்கள் அழியும் தறுவாயில் இருக்கின்றன’’ என்கிறார் திருநாவுக்கரசு.
புணே ஆவணக் காப்பகம்
சில மாதங்களுக்கு முன் புணே திரைப்பட ஆவணக்காப்பகத்துக்குச் சென்றிருந்தேன். அதுதான் இந்தியாவில் திரைப்பட ஆவணக் காப்பகத்துக்கான முன்மாதிரி. இந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் உலகத் திரைப்படங்களும் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. திரைப்பட ஆய்வாளர்கள், பொதுமக்கள் என்று யாரும், குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தி அங்குள்ள திரைப்படங்களைப் பார்க்க முடியும். அதன் நூலகத்தில் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட திரைப்படம் குறித்தான ஆய்வு, விமர்சனம் மற்றும் திரைக்கதை நூல்களும், திரை இதழ்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. சத்யஜித் ராய், ரித்விக் கட்டக், ஷ்யாம் பெனகல், சாந்தாராம் போன்ற இந்திய திரைச் சிற்பிகளின் திரைப்படங்கள் குறித்த முக்கியக் கட்டுரைத் தொகுப்புகள், இந்தியத் திரைப்படங்களைப் பற்றிய தகவல் திரட்டு என அங்குள்ள சேகரிப்புகள் ஆச்சரியப்படுத்தின. திரைப்படங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்து, இப்பணிகள் மேற்கோள்ளப்படுவதை உணர முடிந்தது.
எனக்குத் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைக்கப்பட வேண்டிய ஆவணக் காப்பகத்தை, தனியொரு மனிதராக உருவாக்கியவர் அவர். இசையின் மீது கொண்டிருந்த ஈர்ப்பால் தனது பள்ளிக்காலத்தில் கிராமபோன் ரிக்கார்டுகளை வாங்கியதில் தொடங்கியது அவரது சேகரிப்பு. காலப்போக்கில் கிராமபோன், லாங்ப்ளே, எக்ஸ்டண்டட் ப்ளே ரிக்கார்டுகளோடு திரைப்பட சுவரொட்டிகள், திரைப்படக் காட்சிகளின் புகைப்படங்கள், பாட்டுப் புத்தகங்கள், திரை இதழ்கள் முதலியவற்றைச் சேகரித்துவந்திருக்கிறார். அவர் சேகரித்து வைத்திருப்பனவற்றின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். தனது இல்லத்திலேயே இதற்கென ஒரு தளத்தை ஒதுக்கிப் பாதுகாத்துவருகிறார்.
ஒரு தனிமனிதச் செயல்பாடே இவ்வளவு வீரியத்துடன் இருக்கையில், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பை உணராததுதான் துயரம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆவணக்காப்பகம் அமைப்பதற்கான வரைவு அனுப்பப்பட்டது. அதைச் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த முன்னகர்வும் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தியாவில் புணே, திருவனந்தபுரம், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஆவணக் காப்பகங்கள் இயங்கிவருகின்றன. மாநில அரசின் முன்னெடுப்புக்குப் பின்னரே மத்திய அரசின் ஆவணக்காப்பக அமைச்சகம் அதற்குப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்.
தேங்கிக்கிடக்கும் திட்டம்
தமிழ்நாட்டில் திரைப்பட ஆவணக்காப்பகம் அமைப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக, தனியார் நிறுவனங்களின் வசம் இருக்கும் படங்களைப் பெற்று அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்ற வேண்டியது முக்கியப் பணி. இதன் மூலம் எஞ்சியிருக்கும் திரைப்படங்களையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும். நல்ல விலை கொடுக்க முன்வந்தால், கிடைக்கப் பெறாத அரிய திரைப்படங்களின் பிரதிகள்கூட கிடைக்கலாம். அந்தத் திரைப்படங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புணே திரைப்பட ஆவணக்காப்பகத்துக்காக ஆரம்பகாலத் திரைப்படங்களைத் தேடித்தேடிச் சேகரித்த பி.கே.நாயரை முன்னுதாரணமாகக் கொண்டு பழைய தமிழ்ப் படங்களைச் சேகரித்துத் தர தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்.
இறுதியாக, ஏன் திரைப்படங்களைப் பாதுகாக்க வேண்டும்? நமது கலை வடிவங்களிலேயே, ஒவ்வொரு காலகட்டத்தையும் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பவை திரைப்படங்கள்தான். 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னைக்கும் தற்போதைய சென்னைக்குமான வேறுபாட்டைக் காட்சிபூர்வமாக உணர வேண்டுமெனில், திரைப்படங்களே அதற்கான ஆதாரம். 80-களில் வெளியான திரைப்படங்களில் காட்டப்பட்ட சில ஏரி, குளங்கள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதற்குத் திரைப்படங்களே சாட்சியாக விளங்குகின்றன. திரைப்படத்தை வணிகநோக்கில் அணுகாமல், ஒவ்வொரு காலகட்டத்தின் ஆவணம் என்ற உணர்வுடன் அணுகுவதே இன்றைய தேவை.
- கி.ச.திலீபன், பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: kisadhileepan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago