டாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?

By சமஸ்

எந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு பேட்டியில் ரத்தன் டாடாவிடம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோது ரத்தன் டாடா சொன்னார், “அவர்கள் வியாபாரிகள், நாங்கள் தொழிலதிபர்கள்.”

சராசரி இந்தியக் குடும்பம் ஒன்றுக்கு அறிமுகமாவதுபோலவே எனக்கும் டாடா நிறுவனம் பொருட்கள் வாயிலாகவே அறிமுகமானது. பலசரக்குக் கடையில், டாடா நிறுவனம் தயாரிக்கும் டீ தூளுக்குப் பதிலாக வேறு ஒரு நிறுவன டீ தூளை வாங்கி வந்த ஒருநாளில், வீட்டில் டாடா நிறுவனத்தின் மகாத்மியங்கள் எனக்குச் சொல்லப்பட்டன. அந்தக் கதையை தாத்தா இப்படி முடித்தார். “டாடா நுழையாத இடமே கிடையாது. ஆனா, எவ்வளவு வரும்படி வரும்னாலும் பீடி, சிகரெட்,சாராய விற்பனையில் நீ டாடாவைப் பார்க்க முடியாது. ஏன்னா, டாடாவுக்குன்னு அறம் சார்ந்த ஒரு கொள்கை இருக்கு!”

உலகமயமாக்கலை இந்தியா வரித்துக்கொண்டு, பழைய கட்டுமானங்கள், மதிப்பீடுகள் எல்லாம் நொறுங்குபடும் ஒரு காலகட்டத்தில் நான் கல்லூரிக்குப் படிக்கச் சென்றேன். கண் எதிரே சிறு தொழில்கள் தடதடவென்று விழுந்தன. வீடு  தேடி வந்து, அரிசி அளந்து கொடுத்துச் சென்ற அரிசிக்காரர்கள், காய்கறிக்காரர்கள், எண்ணெய் வண்டிக்காரர்கள் எல்லாம் அடுத்தடுத்து காணாமல் போய்க்கொண்டிருந்தார்கள். பெருநிறுவனங்கள், பெருமுதலாளிகள் என்கிற வார்த்தைகள் எல்லாம் அப்போதுதான் எனக்கு அறிமுகமாயின. பெருநிறுவனங்கள் தொடர்பில் படிக்கக் கிடைக்கும் செய்திகள் பலவும் கடுமையான கோபத்தையும் கொந்தளிப்பையும் உண்டாக்கும். விதிவிலக்கு: டாடாக்கள்.

ஏனையோர்போல பல்லடுக்கு மாளிகைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, பல நூறு கோடிகளில் பிள்ளைகள் திருமணத்தை நடத்துகிறார்கள் என்றோ டாடாக்களைப் பற்றி நான் படித்தது இல்லை. ஆனால், தனக்கு என்று சொந்த வீடு வேண்டாம் என்று சொல்லி வாடகை வீட்டில் ஜேஆர்டி டாடா வாழ்ந்ததைப் படித்திருக்கிறேன். காந்திக்கும் அவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை, அந்த உறவு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் படித்திருக்கிறேன். பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம் போன்ற ஒரு உயர்கல்வி நிறுவனத்தை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையைப் படித்திருக்கிறேன். “இந்தியா ஒரு பொருளாதார அதிசக்தியாக வேண்டும் என்று நான் விரும்பவில்லை; மாறாக, இந்தியா ஒரு மகிழ்ச்சி மிக்க நாடாக வேண்டும் என்பதே என் விருப்பம்!” என்ற வார்த்தைகள் ஒரு தொழிலதிபரிடமிருந்து வரும் என்றால், அவரை யாரால் நிராகரிக்க முடியும்?

டாடாக்கள் தங்கள் நிறுவனத்தினூடாகவே இந்தியத் தொழில் துறையையும் கட்டி அமைத்தார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. கூடவே இன்னொன்றையும் செய்கிறார்கள் இன்றளவும். தொழில் துறையில் புதிதாக இறங்கும் ஒவ்வொருவருக்குமான சமூகப் பொறுப்புக்கு முன் பாதையையும் அமைக்கிறார்கள். ஒருவர் தன்னுடைய பயணத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கியிருக்கலாம்; ஏதோ ஒருகட்டத்தில் இலக்கு பொது நன்மையோடு ஒன்றிணைகையில் அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.

ஜொராஸ்டிரிய சமூகத்தின் புரோகித குடும்பத்தைச் சேர்ந்த ஜாம்ஷெட்ஜி டாடாவின் தந்தை, ஈரானில் படுகொலைகளிலிருந்து தப்பி, கப்பல் ஏறி இந்தியாவுக்கு அகதியாகப் புகலிடம் தேடி வந்தவர்களில் ஒருவர். டாடா குடும்பத்தின் வியாபார வரலாற்றை அபின் வியாபாரத்திலிருந்தும் தொடங்கலாம். அந்நாட்களில் பிரிட்டிஷ் அரசு சட்டபூர்வமாக இத்தொழிலை அனுமதித்தது என்றாலும், மறைமுகமாக அது சீனா மீதான ஒரு தாக்குதலாகவே இருந்தது. ஜாம்ஷெட்ஜியின் கனவு இவற்றிலெல்லாம் விடுபட்டு வெளியில் பறந்தது. அந்தக் கனவிலிருந்துதான் இந்தியாவின் முதல் ஜவுளி ஆலை, முதல் உருக்காலை, முதல் கப்பல் நிறுவனம், முதல் சுதேசி நட்சத்திர விடுதி யாவும் பிறந்தன.

ஜாம்ஷெட்ஜிக்கு மூன்று பெரும் கனவுகள் இருந்தன. 1. உருக்காலை, 2. மின்னுற்பத்தி நிலையம், 3. பல்கலைக்கழகம். முதல் இரண்டு கனவுகள் வணிகத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம். மூன்றாவது நோக்கம் திட்டவட்டமாக லாபத்துக்கு வெளியே இருந்தது, அந்நாட்களில்.

இந்தியாவின் முதல் விமான நிறுவனம், இந்தியாவின் முதல் வங்கி, இந்தியாவின் முதல் காப்பீட்டு நிறுவனம், இந்தியாவின் முதல் மோட்டார் நிறுவனம் என்று டாடாவின் புகழை நீட்டிக்கொண்டே போகலாம். நிறுவனங்கள் அல்ல; தன் நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் விழுமியங்களில் டாடாக்கள் காட்டிவரும் அக்கறையே அவர்களைப் பேசுவதற்கான முக்கியமான காரணமாகிறது.

ஆலையில் பணிபுரியும் பெண்களுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும், அந்தக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி அளிக்கவும் 1886-லேயே ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்த நிறுவனம் டாடா. தொழிலாளர்கள் தரப்பில் கேட்காமலேயே, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை தன்னுடைய ஆலையில் அமலாக்கினார் ஜாம்ஷெட்ஜி. இந்தியாவிலேயே அப்போதுதான் முதல் முறையாக அத்திட்டம் அமலாக்கப்பட்டது. 1907-ல் உருவான ‘டாடா ஸ்டீல்’ நிறுவனம்தான் இந்தியா கண்ட முதல் இரும்பு-உருக்கு நிறுவனம். 1912-ல் எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை அமலாக்கியது டாடா. பிரிட்டனிலேயே ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் தொழிலாளர்களை வேலை வாங்கலாம் என்று சட்டம் இருந்த நாட்கள் அவை.

சமூகத்தின் சொத்தான வளங்களைக் கையாள்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் கணிசமான பகுதியை அறக்கட்டளை வாயிலாக சமூகத்துக்கே திரும்பக் கொடுக்கிறது; டாடாவின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அது தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சமூகப் பணிகள் உலகமயமாக்கல் யுகத்திலும் நீடிக்கின்றன. நவீனமயமாக்கலின் விளைவாக டாடா உருக்கு நிறுவனத்தில் 32,000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழல் உருவானபோது, உலகில் இதுவரை எந்த நிறுவனமும் அளித்திராத அளவுக்கு வேலையை விடுவதற்கான சலுகைகளை டாடா நிர்வாகம் அளித்தது. அவர்கள் வேறு வேலைக்குச் சென்றாலும் அவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டும் வரையில் நிறுவனத்தில் வாங்கிய கடைசி ஊதியத்தைத் தொடர்ந்து வழங்க ஒப்பந்தம் செய்து அதை அப்படியே கடைப்பிடித்தது.

சூழியல் தளத்தில் தொழில் நிறுவனங்களுக்கே உரிய விமர்சனங்களுக்கு டாடாக்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால், அவர்கள் கூடுமானவரை முகங்கொடுக்கிறார்கள். இன்னும் லட்சியவாதத்தின் ஒரு துளியை எங்கோ ஒரு மூலையில் உயிரோடு வைத்திருக்கிறார்கள். சமூகத்திடமிருந்து நாம் பெறுவதை சமூகத்துக்குத் திருப்பித் தருவதே தார்மிகம் என்பதை மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்