அரசியல் களத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் அன்புவழி மனமாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்பியவர் காந்தி. அதற்காக அவர் பரிந்துரைத்ததுதான் அறங்காவலர் கொள்கை. அறங்காவலர் கொள்கையை முதலாளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காந்தி விரும்பினார். தனியார் கையிலிருக்கின்ற செல்வத்தையும் அதனைச் சார்ந்து கிடைக்கின்ற செல்வத்தையும் அரசின் கைகளுக்கு மாற்றுவதால் மட்டும் நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடாது, தனியார் முதலாளித்துவத்துக்குப் பதிலாக அரசு முதலாளித்துவம் தோன்றுகின்ற இடர்ப்பாடுதான் அதிகரிக்கும் என்று கருதினார் காந்தி. அதற்காக, முதலாளிகள் மனமிரங்கி வரும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. மனமாற்றத்துக்கான சூழலை உருவாக்க அறப்போராட்டங்களைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காந்தி நினைத்தபடி முதலாளிகள் தாங்களாகவே முன்வந்து அறங்காவலர் கொள்கையைப் பின்பற்றுவார்களா? நடைமுறையில் அது சாத்தியம்தானா என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. அறங்காவலர் கொள்கை என்பது நிறைவேற முடியாத பெருங்கனவு அல்ல, சாத்தியம்தான் என்று நிரூபித்திருக்கிறது டாடா குழுமம். காந்தியின் அறங்காவலர் கொள்கையை சுவீகரித்துக்கொண்டார் ஜேஆர்டி டாடா. காந்திக்கும் அவருக்குமான நட்பு, 1909-ல் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தி சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய காலத்தில் முகிழ்த்தது. அப்போராட்டத்தை ஆதரித்து எழுதிய கடிதத்தோடு ரூ.25,000 பணத்தையும் அனுப்பிவைத்தார் ஜேஆர்டி டாடா. காந்தியின் போராட்டங்களுக்குத் தொடர்ச்சியாக அவர் நிதியுதவி அனுப்பிவைத்தார்.
1925-ல் முதன்முதலாக ஜாம்ஷெட்பூருக்கு வருகை தந்தார் காந்தி. அப்போது தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட காந்தி பேசுகிறார், “முதலும் உழைப்பும் ஒன்றுக்கொன்று இணையாகவும் துணையாகவும் இருக்க வேண்டும். அவை ஒற்றுமையாகவும் இசைந்தும் வாழ்கின்ற பெரிய குடும்பமாக இருக்கும். முதலாளிகள், தொழிலாளர்களின் பொருள்சார் நலத்தை மட்டுமல்ல; அறஞ்சார் நலத்தையும் கட்டிக்காக்க வேண்டும். அவர்கள் தொழிலாளர்களின் நலக்காவலர்களாக இருக்க வேண்டும்.” (யங் இந்தியா, ஆகஸ்ட் 20, 1925).
தொழிலாளர்களுடனேயே தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார் காந்தி. எனினும் ஜேஆர்டி டாடாவுடனான நட்பை அது பாதிக்காது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். ஆனாலும்கூட நட்புக்காக ஜேஆர்டி டாடாவை அப்படியே காந்தி ஆதரித்துவிடவும் இல்லை. இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக தொழில் நலனுக்காக இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் பயணிக்கும் தொழிலதிபர்களை விமர்சிக்கவே செய்தார். அப்படி விமர்சிக்கப்பட்டவர்களில் ஜேஆர்டி டாடாவும் ஒருவர்.
ஜாம்ஷெட்பூரில் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவிய நல்லுறவைக் கண்டு காந்திக்குத் திருப்தி இருந்தது. அறங்காவலர் கொள்கையைப் பற்றி ஜேஆர்டி டாடா எந்தச் சித்தாந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதுபற்றிய காந்தியின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடவும் இல்லை. 1942-ல் காந்தி உருவாக்கிய அறங்காவலர் செயல்திட்டத்தின் மீது ஜேஆர்டி டாடாவுக்கு கருத்து மாறுபாடுகளும் இருந்தன. ஜாம்ஷெட்ஜி தொழிற்சாலையைத் தொடங்கியபோதே அறங்காவலர் கொள்கையின் கூறுகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதை ஜேஆர்டி டாடா தனது காலத்தில் மேலும் செழுமைப்படுத்தினார். அதற்கு காந்தி ஓர் ஆதார சக்தியாக இருந்தார்.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனது நிறுவனத்தில் அறங்காவலர் கொள்கையைச் செயல்படுத்திக் காட்டினார் ஜேஆர்டி டாடா. அவருக்குரிய பங்குகளை அறக்கட்டளைகளாக மாற்றினார். அந்த அறக்கட்டளைகளின் வாயிலாக மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி என்று பல துறைகளுக்கும் நிதியுதவிகளைச் செய்தார். அவர் தொடங்கி வைத்த சமூக நல உதவித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கான நிறுவனக் கட்டமைப்பையும் உருவாக்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் பின்பு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இந்தியத் தொழில்துறையில் மட்டுமல்ல; தொழிலாளர் நலன் பாதுகாப்பிலும் ஜேஆர்டி டாடா ஒரு முன்னோடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago