என்.ராமதுரை: மாணவர்களுக்கு மட்டுமில்லை; ஊடகவியல் துறைக்கும் ஆசான்!
தமிழகத்தில் அறிவியல் கட்டுரைகளை எளிதாகவும் சுவையாகவும் எழுதுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெ.நா.அப்புஸ்வாமியில் தொடங்கும் அந்த வரிசையில் என்.ராமதுரைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அவர் எழுதும் கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எளிதாகக் கூறும் உதாரணங்கள்தான். ‘ஒரு காக்கை இப்போது கிழக்கிலிருந்து மேற்காகப் பறக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்…’ என்று அன்றாட வாழ்க்கையிலிருந்தே உதாரணத்தைக் கையாண்டு, தான் சொல்ல வந்ததை விளக்கிவிடுவார்.
பள்ளி, கல்லூரிகளில் தமிழ் அறிவியல் புத்தகங்களைப் படிக்கும்போது சில பாடங்கள் வெகு எளிதாகப் புரியும். சில பாடங்கள் கடுமையாகச் சோதிக்கும். காரணம், அதன் மொழிநடைதான். என்.ராமதுரை தான் எழுதும் அறிவியல் கட்டுரைகளில் கலைச் சொற்களுக்குத் தமிழில் சரியான வார்த்தைகளை வெகு இயல்பாகவும் எளிதாகவும் பயன்படுத்துவார். ஒருவகையில், மாணவர்களோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் அவர். மாணவர்களுக்கு மட்டுமில்லை, தினமணி நாளிதழில் அவரோடு பணியாற்றிய இளம் பத்திரிகையாளர்களுக்கு அவர் ஓர் ஆசானாகத்தான் இருந்தார்.
நள்ளிரவு பள்ளிக்கூடம்
பத்திரிகை அலுவலகங்களில் பணியாற்றுவோர் இரவுப் பணி முடித்ததும் வீட்டுக்குப் புறப்படும் முன் கொஞ்ச நேரம் அரட்டைக் கச்சேரி நடத்துவது ஒரு வழக்கம். பத்திரிகைப் பணி முடியத் தாமதமாகிவிடும் சில சமயங்களில் அலுவலகத்திலேயே இரவு தங்கிவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட நாட்களில் பெரும்பாலான நாட்கள் விடிய விடியப் பேசுவோம்.
எல்லோரும் ஒரே வயதினர் அல்ல. கல்லூரியில் முதுகலைப் பட்டம் மட்டுமே முடித்துவிட்டு, பத்திரிகையாளனாக வேலைசெய்யப் பயிற்சி ஏதும் இல்லாமல் வரும் இளைஞர்களைத் தயார்படுத்த இயற்கையாக அமைந்த ஏற்பாடு அது என்றே இப்போது தோன்றுகிறது.
நான் ‘தினமணி’யில் பணியாற்றுகையில் ராமதுரை எனக்கு மூத்த சகா. “கோபப்படக் கூடாது, பதறக் கூடாது, சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்படக் கூடாது; வாசிப்பு ரொம்ப முக்கியம்” என்பதுதான் இளம் பத்திரிகையாளர்களுக்கு ராமதுரை திரும்பத் திரும்பச் சொல்லும் பாடம். தேர்ந்த வாசகர் அவர். எனக்கு நினைவு தெரிய பையில் புத்தகம் இல்லாமல் நான் அவரைப் பார்த்ததே இல்லை.
பத்திரிகை ஆசிரியர் இலாகாவில் பணியாற்றுவது, அதுவும் செய்திகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது சள்ளை பிடித்த வேலை. செய்தியாசிரியராக இருப்பவருக்கு வருடாந்திர சவால் என்றால், அது பட்ஜெட் தாக்கல் நாள்தான். அந்நாளில் - அதாவது மத்திய வரவு-செலவு அறிக்கையைத் தாக்கல் செய்யும் நேரத்தை காலைக்கு மாற்றுவதற்கு முன்னால் - பத்திரிகைகளுக்கு, அதுவும் காலை பத்திரிகைகளுக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டுவிடும்.
நிதியமைச்சர்கள் ‘பார்ட்-ஏ’ என்ற பகுதியில் கதையளப்பதால் அது இதிகாசம்போல நீண்டுகொண்டே போகும். எல்லோரும் பெரிதும் எதிர்பார்க்கும் வருமான வரி விலக்கு வரம்பு, வரி விதிப்புகள், வரி விலக்குகள் ‘பார்ட்-பி’யில்தான் வரும். அதற்குள் கேட்டுக்கேட்டு காது பழுதாகி, வானொலியின் கரகரப்புக் குரலுக்கும் டெலிபிரிண்டரில் வரும் டிக்கருக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பது கண்டு வியர்த்துப்போகும். இதையெல்லாம் முன்கூட்டியே ஊகித்து, யார் எதைக் கையாள்வது என்று பேசி முடிவெடுத்துச் செயல்படுத்துவார்கள். அம்மாதிரியான தருணங்களில் ராமதுரை மிக அபாரமான திறனை வெளிப்படுத்துவார். எது புதிய விஷயம், எது மக்களுக்குச் சொல்லப்பட வேண்டியது என்பதை நுட்பமாகக் கண்டறிந்து அதைச் செய்தியாக்குவார்.
சட்ட மன்ற மற்றும் மக்களவைப் பொதுத் தேர்தல்கள், தலைவர்கள் மரணம், விபத்து, வெளிநாட்டுடன் போர் என்று விதவிதமான செய்திகளைத் தரும்போது ராமதுரை போன்ற செய்தி ஆசிரியர்கள் காட்டிய பொறுமையும் விவேகமும் என்னைப் போன்ற எத்தனையோ இளையோருக்கு அந்நாட்களில் செய்முறை விளக்கம்போலவே இருந்தன.
எப்போதும் கற்றுக்கொள்
பத்திரிகையாளர் என்பவர் எப்போதும் கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும் என்பதும் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டேயிருப்பவராக இருக்க வேண்டும் என்பதும் ராமதுரையின் எண்ணம். அவர் அப்படித்தான் இருந்தார். பல பத்திரிகைகளில் பணியாற்றியவர், செய்தியாசிரியராக இருந்தவர், அறிவியல் எழுத்தில் முன்னோடி. இப்படியான பின்புலங்கள் இருந்தாலும், கடைசிக் காலம் வரை கட்டுரை எழுதுகையில், சம்பந்தப்பட்ட பத்திரிகையாசிரியர் என்னென்ன மாதிரியான மாற்றங்களைக் கோருகிறாரோ அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வதில் தயக்கமே இல்லாமல் செயல்பட்டவர் ராமதுரை. “வாசகருக்கு இது புரியும் இல்லையா... சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா... ஏனென்றால், வாசகருக்காகத்தான் நாம் எழுதுகிறோம். பத்திரிகைக்குப் பத்திரிகை வாசகர்கள் வேறுபடுவார்கள்” என்று சொல்வார்.
மாற்றங்களால் மாறியவர்
ஆரம்பத்தில் கையால் எழுதிக்கொண்டிருந்தவர், கணினி வந்ததும் அதில் தட்டச்சு பழகினார். பின்னர், தனக்கென்று வலைப்பூ வைத்துக்கொண்டு இணையத்திலும் எழுதினார். ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஒரு முக்கியமான செயற்கைக்கோளை ஏவப்போகிறார்கள் என்றால், அதற்கு சில நாட்களுக்கு முன்னரே கட்டுரையைத் தயாராக வைத்திருப்பார் ராமதுரை.
இறுதிக் காலத்தில் உடல் ஒத்துழைக்காத சூழலிலும்கூட எழுதினார் - கட்டுரைத் தயாரிப்புக்காகத் தீவிரமாக வாசித்தார். “நம்மகிட்ட இருக்கிறதைச் சமூகத்துக்குக் கொடுத்துடணும்; எதையும் எடுத்துக்கிட்டுப் போகப்போறதில்லையே! எவ்வளவு கொடுத்துட்டுப் போயிருக்கான் பாருங்க” என்பார் கையில் இருக்கும் புத்தகத்தைச் சுட்டிக்காட்டியபடி.
இவ்வளவு பெருமைகளைக் கொண்ட ராமதுரையைத் தமிழ்நாடு அரசும் தமிழகக் கல்வித் துறையும் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டன என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும். ராமதுரை மட்டுமல்ல, அறிவியல் எழுத்தாளர்கள் பலரும் இன்னமும் வெளியுலகம் அறியா திறமைசாலிகளாகவும் அங்கீகரிக்கப்படாமலும் பயன்படுத்திக்கொள்ளப்படாமலும் இருக்கின்றனர்.
பாடநூல் தயாரிப்புகளில் அவர்களுக்கும் சரியாசனம் தந்து, ஆலோசனைகளைக் கேட்டிருந்தாலோ, பொறுப்பு கொடுத்திருந்தாலோ கல்வித் துறைக்குப் பெரும் பலன் கிடைத்திருக்கும்.
ராமதுரை மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் இன்னும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை. நிச்சயம் அவர் தனியாகச் சென்றிருக்க மாட்டார். கையில் புத்தகம் இல்லாமல் அவரால் எங்கும் செல்ல முடியாது. அவர் வாசிப்பையும் எழுத்தையும்கூட யாராலும் தடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரே இழப்பு என்னவென்றால், இனி அவர் எழுதும் கட்டுரைகள்தான் நம் கைக்கு வராது!
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago