கடந்த ஆண்டு ஒக்கி புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் அடங்கவில்லை. தென்மேற்குக் கடற்கரையிலிருந்து 35-80 கடல்மைல் தொலைவில் கற்பனை செய்ய முடியாத கோரத்தை நிகழ்த்திச் சென்றுவிட்டது இந்தப் புயல். நடுக்கடல் புயல் மேலாண்மை குறித்த விழிப்புணர்வும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையும் இல்லாத அரசின் அலட்சியத்தால் விளைந்த கொடூரம் அது.
நவம்பர் 27 வரை காற்றுடன் கனமழை பெய்யும் என்றுதான் இந்திய வானியல் ஆய்வுமையம் அறிவித்திருந்தது. நவம்பர் 28 காலை 11.30-க்குத்தான் முதன்முதலாகப் புயல் அறிவிப்பை வெளியிட்டது. நவம்பர் 29-ல் குமரிமுனைக்குத் தெற்கே புயலின் முதல் தாக்குதல் நிகழ்ந்தது. தொடர்ந்து கொல்லம், கொச்சி கடற்பகுதிகளில் புயல் தாக்குதல் நிகழ்த்தியது. புயல் அறிவிப்புக்கும் முதல் தாக்குதலுக்கும் இடைப்பட்ட 18 மணிநேர இடைவெளியில் அரசுகள் நினைத்திருந்தால் ஆழ்கடலுக்குள் சென்றிருந்த மீனவர்களுக்குப் பல வழிகளில் செய்தியைக் கொண்டுசேர்த்திருக்கலாம். புயலடித்த மறுநாள், வானிலை இயல்பாகவே இருந்தது. புயல் மையம் நோ்க்கோட்டில் நகரவில்லை என்றாலும் வேகமாக நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்று பொருள். உடனடியாகக் கப்பற்படை முனைப்போடு களமிறங்கித் தேடல் நடத்தியிருந்தால், குறைந்தபட்சம் 200 மீனவர்களையாவது உயிரோடு கரைசேர்த்திருக்க முடியும்.
அலட்சியமும் அக்கறையின்மையும்
2004 சுனாமி அனுபவத்துக்குப் பிறகுதான் இந்தியா தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை (2005) இயற்றியது. இதைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை (2009), தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்ட (2016) ஆவணங்களைக் கொணர்ந்தது. எனினும், நடுக்கடல் புயல் தாக்குதல்களைக் கையாள தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார்நிலையில் இல்லை. மேலே குறிப்பிட்ட மூன்று ஆவணங்களிலும் நடுக்கடல் புயல் மேலாண்மை குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடு.
மகாராஷ்டிரத்தின் லாத்தூர் (1993), குஜராத்தின் பூஜ் (2001) நிலநடுக்கப் பேரிடர் அனுபவங்கள் குஜராத் அரசுக்குப் படிப்பினை ஆனது. 1999 ஒடிஷா புயல் அனுபவம் 2013 கோபால்பூர் புயலை எதிர்கொள்ள அந்த மாநிலத்துக்குக் கற்றுக்கொடுத்தது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒடிஷா இன்று புயல் பேரிடர் மேலாண்மையில் முன்வரிசையில் நிற்கிறது. ஆனால், தேசிய புயல் மேலாண்மைத் திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை. அதுமட்டுமல்ல, ஒக்கி பேரிடர் நிவாரணம் குறித்த உயர்நிலை விவாதத்தின்போது, “எல்லை தாண்டிப் போகும் மீனவர்களை நாங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று தமிழக வருவாய்த் துறை அதிகாரி கூறியது கடல் வாழ்க்கை குறித்த அக்கறையின்மையை வெளிப்படுத்தியது.
பன்னாட்டுக் கடல் விதிகளின்படி 600 கிலோமீட்டர் கடல்தொலைவு வரை இந்தியர்கள் மீன்பிடிக்கும் உரிமை உண்டு. லட்சத்தீவுகளின் மேற்கு எல்லையிலிருந்து மேற்காக இதே தொலைவு விதி செல்லுபடியாகும். இந்தியா தனது தனியுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதியை ஒட்டியுள்ள 150 கடல்மைல் பன்னாட்டுக் கடல் பரப்பைத் தனியுரிமை மண்டலமாக அங்கீகரிக்கும்படி 2011-ல் ஐநா கடல் சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. உலக உணவு வேளாண் கழகத்தின் பொறுப்பார்ந்த மீன்வள நடத்தை விதிகளை இந்திய அரசு இப்பின்னணியில் அணுக வேண்டும்.
கடலொட்டிய நாடுகள் தங்கள் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தின் மீன்வளங்களை அறுவடை செய்துவர தங்கள் நாட்டின் மீனவர்களை ஊக்குவிக்குமாறு மேற்சொன்ன ஆவணம் அறிவுறுத்துகிறது. 350 கடல்மைலுக்கு அப்பால் போகிற மீனவர்கள் தங்கள் நலனுக்காக, சொந்தப் பொறுப்பில் போனாலும் அந்த அறுவடைகளின் பலன் இந்தியாவுக்குத்தான் வந்துசேர்கிறது. ஐஎம்ஓ, டிஜி ஷிப்பிங், தமிழக மீன்வளத் துறை தரப்பில் இதற்குத் தடையேதும் இதுவரை விதிக்கவில்லை. ஆழ்கடல் விசைப்படகு மீனவர்களின் தனித்துவமான தொழிலின் பின்னணியில் அவர்களுக்கு படகு, தொழில்முறைகளில் சில விதிவிலக்குகளை அனுமதிக்க வேண்டும்.
பயிற்சியும் கருவிகளும் தேவை
“ஒரு புயல் வருகிறது என்றால் அது எங்கே, எப்படி உருவாகிறது என்பதைப் பருவநிலை ஆய்வு மையம்தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு, மூன்று மணி நேர இடைவெளியில் தற்காலச் செய்தி வந்துகொண்டிருக்கும். ஒக்கி புயலின்போது அரசு, மீனவர்களுக்கு அதைச் சொல்லவில்லை” என்கிறார் பன்னாட்டுத் துறைமுகங்களில் கரைபிடிக்கும் உரிமம் பெற்ற வணிகக் கப்பல் கேப்டன் தாமஸ் சூசை ஆன்றணி.
அந்தமான் ரேடியாவில் 10.30, 16.30 மணிகளுக்குத் தவறாமல் வானிலை செய்திவரும். இது ரேடியோ டெலிபோனில் (ஆர்.டி.) மட்டுமே கிடைக்கும், ‘வி.எச்.எஃப்’பில் கிடைக்காது. ஆழ்கடலுக்குப் போகும் மீனவர்களுக்கு ஆர்.டி. வசதி கொடுப்பதோடு, அவர்களின் பிரதேச மொழியில் வானிலைச் செய்தியைத் தொகுத்து வழங்கவும் எற்பாடு செய்ய வேண்டும்.
“உரிய பயிற்சிகளை நமது மீனவர்களுக்கு யாரும் வழங்கவில்லை. மீன்பிடி விசைப்படகுகளில் போதுமான உயிர்ப் பாதுகாப்புக் கருவிகளை வைத்துக்கொள்வதில் மீனவர்களும் அக்கறை காட்டுவதில்லை” என்கிறார் ஓய்வு பெற்ற மீன்பிடிக் கப்பல் ஸ்கிப்பர் மைக்கேல் நாயகம்.
விசைப்படகு மீனவர்கள் உயிர்க்காப்பு உடை, உயிர்க்காப்பு வளையம் எதையும் வைத்திருப்பதில்லை. முன்னெச்சரிக்கை பேணுவதில்லை. உயிர்க்காப்பு உடையில் சில அடிப்படைத் தகவல்களை அச்சிட்டிருப்பார்கள். கப்பலின் பெயர், எண், பதிந்துள்ள துறைமுகம் எல்லாம் அதில் இருக்கும். அணிந்திருக்கும் நபர் இறந்துவிட்டாலும் இந்த விவரங்கள் சடலத்தை அடையாளம் காண உதவும். ஆறேழு நாட்கள் ஒருவர் உயிர்மீந்து கிடக்க இந்த உடை போதுமானது. ஆனால், இவ்விஷயத்தில் போதுமான அக்கறையும் விழிப்புணர்வும் இல்லை. நடுக்கடல் பேரிடரில், விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவுவது கடல் பயணிகளின் தலையாய கடமை. ராணுவக் கப்பல்களைப் பொறுத்தவரை இதைவிட முக்கியமான கடமை வேறில்லை. ஆனால், நடுக்கடலில் கதியற்று மீனவர்கள் அபயக் குரல் எழுப்பினால், கடலோரக் காவல் படையினர் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
அரசு கைகொடுக்க வேண்டும்
“படகில் எஸ்.எஸ்.பி. ரேடியோ இருந்தால், எந்தத் தொலைவுக்கும், அலைவரிசைக்கும் செய்தி பரிமாறலாம். ரேடியோ நிலையங்களைத் தொடர்புகொள்ளலாம். விலை ஒன்றும் பெரிதாக இருக்காது. ஆழ்கடல் மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளில் எளிதாக நிறுவிவிடலாம். மீனவர்களின் உயிருக்கு மதிப்பளித்து இந்தக் கருவியைப் பயன்படுத்த உரிமம் வழங்க வேண்டும்” என்கிறார் மைக்கேல் நாயகம்.
கப்பல்களில் பயன்படுத்தும் ஜி.எம்டி.எஸ்.எஸ். கருவியை மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்த, கடுமையான சான்றளிப்பு முறைமைகள் உண்டு. ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காகக் கப்பல் போக்குவரத்துத் துறை சில விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டும். “கப்பல்களுக்குக் காப்பீடுதான் பலம். ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்கைக் கப்பலில் ஏற்றிச் செல்கிறோம்.
சரக்கு முழுவதும் இழப்பானாலும் காப்பீடு நிறுவனம் இழப்பீடு தரும். பாமர மீனவர்களுக்கு இது சாத்தியப்படாது. எல்லாப் படகுகளையும் அரசு காப்பீட்டு வளையத்தில் கொண்டுவர வேண்டும்” என்கிறார் சூசை ஆன்றணி. வேணாட்டு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் வளர்ச்சிப் போக்குகளுக்கு இசைவாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த தகவல்தொடர்பு, பாதுகாப்பு வசதிகளுடன் அவர்கள் தொலை கடல்களுக்குப் பயணித்து, அத்தனை அபாயங்களையும் கடந்து மதிப்புமிக்க அறுவடையைக் கரைசேர்க்கிறார்கள்.
ஆழ்கடல் மீன்பிடி முறையில் கைதேர்ந்த வேணாட்டு மீனவர்கள், புதுத் தெம்போடும் முழுப் பாதுகாப்போடும் மீண்டும் கடலுக்குள் போக வேண்டும். அதற்கு அரசு உதவ வேண்டும்!
- வறீதையா கான்ஸ்தந்தின்,
பேராசிரியர், கடல் சூழலியல் -
வள அரசியல் ஆய்வாளர்,
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago