மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் தமிழில் தேர்வெழுத மறுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய மாணவர்களின் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியிருக்கிறார்கள். சமீபத்திய இந்நிகழ்வுகள் தமிழகத்தில் உயர்கல்வியின் நிலைமை எத்தனை மோசமடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்.
ஆங்கிலவழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மனோன்மணியம் பல்கலைக்கழகத் துணைவேந்தர். தமிழ்வழியில் படிப்பவர்கள் தமிழில் தேர்வெழுத எந்தத் தடையுமில்லை. ஆனால், கல்லூரிகள் தமிழ்வழிக் கல்விக்கு அரசிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தால் அரசு அனுமதி கொடுத்திருக்கும் என்றும் அவர் விளக்கமளிக்கிறார். துரதிருஷ்டவசமாக, கல்லூரித் தேர்வுகளை நடத்தி சான்றிதழ் கொடுப்பது மட்டும்தான் பல்கலைக்கழகத்தின் வேலை என்பதுபோல அவரின் பதில் அமைந்திருக்கிறது.
மாணவர்களின் பின்னணி
அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்விக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் மாணவர்களை ஆங்கிலத்தை நோக்கித் தள்ளும் முயற்சி இது என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மறுபக்கம், ஆங்கிலவழிக் கல்வியில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது. கற்பிக்கப்படும் பாடம், மாணவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதைக் காட்டிலும் ஆங்கிலவழிக் கல்விக்கு நேர்மையாக இருந்தாக வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் கடமை உணர்ச்சியை என்னவென்பது?
தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து முதல் தலைமுறையாகக் கல்லூரி வளாகத்துக்குள் காலடி எடுத்துவைப்பவர்கள். குறிப்பாக, தமிழகத்தின் சிறுநகரங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளால்தான் கிராமப்புற மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பே உருவாகியிருக்கிறது. கல்விக் கட்டணம் செலுத்துவதற்கும்கூட வாய்ப்பில்லாமல் உதவித்தொகைகளை எதிர்பார்த்து தங்களது கல்விப் பயணத்தைத் தொடரும் இந்த மாணவர்களின் கனவுகளை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பும் ஆணைகளும் தகர்த்திருக்கின்றன.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தான் வகுப்பெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல்கலைக்கழக நிர்வாகம், அந்த ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்தபடி முறையான ஊதியத்தை வழங்குவதற்கு ஏன் தயாராக இருப்பதில்லை? அவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த ஏன் தயாராக இல்லை? வெளிப்படையாகத் தேர்வுகளை நடத்திப் பேராசிரியர்களைப் பணிநியமனம் செய்வதற்கு ஏன் தயாராக இல்லை?
யாருடைய தவறு?
தமிழ்வழிக் கல்வியில் வகுப்புகள் நடத்த கல்லூரிகள் தயாராக இல்லை என்றால் அது கல்லூரிகளின் தவறா, பல்கலைக்கழகங்களின் தவறா? ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய பாடத்திட்டத்தையும் பாடநூல்களையும் தயாரிக்க வேண்டியது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு அல்லவா? பாடங்களைத் தமிழிலேயே படிக்க விரும்பினாலும் அதற்கான பாடநூல்கள் இல்லை என்பதால்தானே கல்லூரிகள் ஆங்கிலவழிக் கல்வியை நோக்கித் தள்ளப்படுகின்றன!
கலை, அறிவியல் துறைகளின் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேவையான பாடநூல்களைத் தாய்மொழியிலேயே உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. ‘தமிழால் முடியும்’ என்ற முழக்கத்தோடு தமிழகத்தின் முன்னாள் கல்வித் துறை அமைச்சர் சி.சுப்பிரமணியத்தால் தொடங்கப்பட்ட அந்தக் கல்வி இயக்கம் அண்ணா, மு.கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சிக்காலங்களில் தொய்வின்றி நடந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தமிழில் நேரடியாகப் புத்தகங்களை எழுதியதோடு ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார்கள். 90-களுக்குப் பிறகு அந்தப் பணி தொடரவில்லை. பல்கலைக்கழகங்களின் நூல் வெளியீட்டுப் பிரிவுகளும் பாடநூல்களையும் ஆய்வுநூல்களையும் வெளியிட வேண்டிய தங்களது கடமையை மறந்துவிட்டன. தற்போது பல்கலைக்கழகங்களிலிருந்து பெயரளவில் வெளியிடப்படும் ஒருசில புத்தகங்களின் தரமும் தகுதியும் மெச்சத்தகுந்தவை அல்ல.
தமிழகத்தின் பல்கலைக்கழகங்களும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழில் நேரடியாகவும் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கின்றன. முப்பது ஆண்டு காலமாகத் தடைப்பட்டு கிடக்கும் அந்தப் பணியை எந்தப் பல்கலைக்கழகமும் முன்வந்து நகர்த்திச்செல்ல தயாராக இல்லை. ஆனால், கடந்தகாலத்தின் அந்தக் கனவை நெஞ்சில் சுமந்தபடி உழைக்கும் பேராசிரியர்கள் இன்னும் நம்மோடு இருக்கிறார்கள் என்பது ஆறுதல். பல்கலைக்கழகங்களின் வெளியீட்டுத் துறைகள் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு நபராகவே தொடரும் பேராசிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் மொழி வாழ்கிறது.
தமிழில் நூல்கள் வேண்டும்
காலத்தின் தேவைக்கேற்ப புதிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுவருகின்றன. ஆனாலும், அவற்றுக்கான பாடநூல்களைத் தமிழில் உருவாக்கும் பணிகளைப் பல்கலைக்கழகங்கள் கையிலெடுக்கவில்லை. பொறியியல் பாடங்களை ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்திலேயே தேர்வெழுதி வேலை கிடைக்காமல் நிற்கும் லட்சக் கணக்கான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தமிழ்வழிக் கல்வி என்றால் இடஒதுக்கீட்டுச் சலுகை கிடைக்கும் என்பதால் அவர்களில் சிலர் தொலைநிலைக் கல்வியில் தமிழ் படிக்கவும் செய்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். இனி, பல்கலைக்கழகப் பட்டங்களால் வேலைவாய்ப்புக்கு உறுதி சொல்ல முடியாது. குறைந்தபட்சம், மாணவர்களின் துறைசார்ந்த அறிவை விசாலப்படுத்தும் கடமையைச் செய்வதற்கேனும் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.
கிராமப்புறங்களிலிருந்து தட்டுத்தடுமாறி வாழ்வியல் தடைகளைக் கடந்து உயர்கல்வியில் அடியெடுத்துவைக்கும் மாணவர்களைக் கைதூக்கி விடும் காரியத்தைத்தான் அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வகுப்பறையில் மறந்தும் தமிழ் பேசக் கூடாது என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? கல்வியின் அடித்தளத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாம லேயே அல்லது அறிந்துகொள்ள விரும்பாமலேயே அதிகாரத்தின் உச்சத்திலிருந்து பார்க்கும் பார்வை அல்லவா இது!
உயர்கல்வி என்ற தேரை ஊர்கூடித்தான் இழுக்க வேண்டும். மாறாக, ‘தேரை இழுத்துவாருங்கள்... எத்தனை அடி நகர்ந்திருக்கிறது என்று அளந்துசொல்கிறோம்’ என்று சொல்வதா பல்கலைக்கழகத்தின் கடமை?
-செல்வ புவியரசன்
puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago