சங்கீத சர்ச்சை: இசைக்கு மதம் உண்டா?

By வியெஸ்வீ

ஆரம்பப் புள்ளி, பாடகர் ஓ.எஸ்.அருண். ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற பெயரில் ஆகஸ்ட் 25-ம் தேதி  ‘பல நூற்றாண்டுகளைக் கடந்த காலத்தால் அழியாத கிறிஸ்துவ கீர்த்தனைகள் ஓ.எஸ்.அருணின் உள்ளம் உருக்கும் குரலில்’ என்ற போஸ்டர், சமூக ஊடகங்களில் வெளியானது. உடனே கொதித்தெழுந்தார்கள் இந்துமதப் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் ‘கலாச்சார தாதாக்கள்’. ‘கிறித்துவ அமைப்புக்காக என்னமா பாடப்போச்சு’ என்று அருணை வசை பாடினார்கள். ‘பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யறதா?’ என்று தூற்றினார்கள்.

நமக்கேன் வம்பு என்று குடும்ப நிர்ப்பந்தங்களைக் காரணமாகச் சொல்லி கச்சேரியை ரத்துசெய்வதாக அறிவித்தார் ஓ.எஸ்.அருண். நியாயமாக அத்துடன் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை, மேலும் விஸ்வரூபம் எடுத்தது. ‘இப்போது ரத்துசெய்வது இருக்கட்டும்.. அந்தக் கச்சேரியை முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?’ என்று பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டு பாடகரைக் காய்ச்சி எடுத்தார்கள், சமூக வலைதளப் போராளிகள். இப்படியொரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்ததுபோல் நிறையப் பேர் களத்தில் குதித்து தர்ம அடி கொடுத்தார்கள்.

அருணுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றின் பதிவு சமூக வலைதளங்கள் சிலவற்றில் பதிவானது. மறுமுனையில், கோயமுத்தூரிலிருந்து ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்எஸ்)  தலைவர் ராமநாதன். 25-ம் தேதி கச்சேரியைப் பற்றிக் கேட்கிறார்.

‘‘இந்து சனாதன தர்மம், எல்லா மதங்களையும் சமமா பாவிக்கணும்னு சொல்லியிருக்கு...’’ என்கிறார் ஓ.எஸ்.அருண்.

‘‘ஒரு இந்துவா இருந்துண்டு கிறிஸ்துவப் பாடல்களைப் பாடறது எந்த விதத்துல நியாயம்?’’ என்று கேட்கிறார் ராமநாதன்.

‘‘அந்தக் கச்சேரியை கேன்சல் பண்ணியாச்சே.. சமூகம் அதுக்கு அங்கீகாரம் கொடுக்கலேன்னு தெரிஞ்சவுடனே அதை ரத்துசெய்துட்டேன்...’’

‘‘சமூக அங்கீகாரம் இருக்கட்டும்... உங்க மனசாட்சிப்படி நீங்க செயல்பட வேண்டாமா? ‘நான் ராஜாவைப் பாட மாட்டேன்.. ராமனை மட்டும்தான் பாடுவேன்’னு சொன்ன தியாகராஜரோட பாடல்களை வெச்சு நீங்க எல்லாம் வியாபாரம் பண்றீங்க... பணம் சம்பாதிக்க எங்கே வேணும்னாலும் பாடுவீங்களா?’’

‘‘இல்லீங்க... இந்தக் கச்சேரியை நான் இலவசமாத்தான் பாடறதா இருந்தேன்.’’

உரையாடல் தொடர்கிறது. தன்னுடைய ‘ஆலாபனா’ அறக்கட்டளை மூலம், தான் செய்துவரும் சமூக சேவைகளை விளக்குகிறார் அருண். பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மாதிரியானவர்கள் கிறிஸ்துவப் பாடல்கள் பாடிவருவதையும் குறிப்பிடுகிறார்.

‘‘ஓ... அப்போ அவங்க எல்லோரையும் கூப்பிட்டுக் கண்டிச்சுட்டு வர்றேன்...’’

‘‘டி.எம்.கிருஷ்ணா பெரிய பாடகர்... அவர் சர்ச்சுக்குள்ளே போய்ப் பாடியிருக்கிறார்...’’

‘‘அந்தப் பொறுக்கியோட நம்பர் கொடுங்க... அவன்கிட்டே பேசறேன்... அவன் கச்சேரி எங்கேயும் நடக்கவிடாம செய்துடறேன்...’’

புல்லுருவி, பச்சோந்தி என்று அடைமொழிகள் வேறு! இப்படி அநாகரிகமாகவும், மரியாதை இல்லாமலும் பேசக்கூடிய ஒருவர், சனாதன சேவா என்று பெயர்கொண்ட சங்கத்துக்குத் தலைவராக இருப்பதை என்னவென்பது? சமூக வலைதளங்களில் காரசாரமான, நீண்ட பதிவுகளின் மூலம் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தவர்கள் ஒருபுறமிருக்க, கர்னாடக இசைக் கலைஞர்களில் ஒரு சிலர் தங்கள் தரப்பை முன்வைத்ததையும் பார்க்க முடிந்தது.

எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பாடியதாகவும், இதனால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காகத் தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார் நித்யஸ்ரீ. இவரை ஃபேஸ்புக்கில் ஒருவர் கேவலமாக விமர்சனம் செய்திருந்தது பண்பாடற்ற நிலையின் உச்சம்!

‘சமான எவரு பிரபு...’ என்று எப்போதோ சங்கராபரணம் ராகத்தில் நித்யஸ்ரீ பாடியிருப்பதை, தியாகராஜரின் கரகரப்ரியா ராக கீர்த்தனையை (ராமநீசமான..) வார்த்தை மாற்றிப் பாடிவிட்டதாக ஒரு சிலர் எழுதியது உளறலின் உச்சம்.

‘கலைஞர்களைச் சிலுவையில் அறையாதீர்கள்...’ என்று தன் பதிவினை ஆரம்பித்திருந்தார் சித்ரவீணை ரவிகிரண். 1900-களில் உஸ்தாது அப்துல் கரீம்கான் என்பவர் ‘ராமநீ சமானம் எவரு’ பாடலைப் பாடியிருப்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் இவர். தவிர, விஸ்கான்சின் சேம்பர் இசைக் குழுவுடன் நிகழ்ந்த தனது சமீபத்தியக் கூட்டு முயற்சியில் 45 கிறிஸ்துவ / யூதர் சமூகத்தினர் சிவன் மீதும், பார்வதி மீதும் இயற்றப்பட்ட பாடல்களை இசைத்ததையும், அவற்றை 45,000 ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்ததையும் குறிப்பிட்டிருந்தார். இதற்கும் வீடியோ ஆதாரம் பதிவிட்டிருந்தார்.

‘‘வேற்று மதத்தினர் யாராவது நமது கர்னாடக இசைப் பாடல்களைப் பாடுகிறார்களா?’’ என்றும் ‘நாலும் தெரிந்த’ சிலர் கேட்பதற்கு ரவிகிரணனின் பதிலடி சரியான சாட்டையடி!

பல வருடங்களுக்கு முன்பு ஏ.மோஸஸ் என்பவரின் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்கும் தமிழ் கிறிஸ்துவப் பாடலை யூ-டியூபில் தேடிப் பிடித்துக் கேட்டேன்.

‘என் விளக்கு சுடர்விட்டு

எரியச் செய்கின்றீர்

என் வாழ்வை அகல் விளக்காய்

இறைவா மாற்றினீர்

புனிதம் மிகுந்த

உமது பெயரை

நானும் புகழ்ந்து பாடுவேன்..

போற்றி இறைவா

போற்றி என்று

நாளும் போற்றிப் பாடுவேன்...’

இந்தக் கவிதை வரிகளில் எந்த ஒரு மதக் கடவுளையும் குறிப்பிட்டுப் பாடுவதாக இல்லை என்று யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

சென்னை டிசம்பர் இசை விழாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வயலின் மேதை டி.என்.கிருஷ்ணனின் கச்சேரி நடப்பதும், அதில் நடுவே அவர் கிறிஸ்துவப் பண்டிகைக்கே உரித்தான ‘ஜிங்கிள் பெல்ஸ்’ பாடலை வாசிப்பதும் நினைவுக்கு வந்தது.

இன்னும் சற்றுப் பின்னோக்கிப் பயணிப்போம்...

தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் ஆட்சியில் அரண்மனைக் கவிஞராக இருந்தவர் வேதநாயகம் சாஸ்திரி (1774-1864). இவர் 133 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 500 பாடல்கள் வரை புனைந்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே கர்நாடக ராகங்களில் தனது கிறிஸ்துவப் பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது வரலாறு.

அதேபோல், சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்று அறியப்பட்ட மாயவரம் வேதநாயகம் பிள்ளை (1826 - 1889), ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற முதல் நவீன தமிழ் நாவலை எழுதியவர். பாடல்கள் பலவும் எழுதியவர். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’ என்று தலைப்பிட்டுத் தனது பாடல்களைத் தொகுத்தவர். இவரது பாடல்கள் இன்றும் கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டுவருகின்றன. ‘மானம் பெரிதா... வருமானம் பெரிதா’ என்ற இவரது பாடல் தியாகராஜரின் ‘நிதிசால சுகமா’ ஸ்டைலில் அமையப் பெற்றது.

இந்த சர்ச்சைகள், எதிர்பார்த்ததுபோலவே பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அறச் சீற்றம் கொள்ளவைத்தது. யாரும், எங்கும், எதையும் பாடலாம் என்பது அவரது கட்சி. வர்க்க சாதி பேதமின்றி அனைவரும் அதைக் கேட்க வேண்டும் என்று வாதிட்டு வருபவர் அவர். சக இசைக் கலைஞர்கள் பலரின் மீதும் புழுதி வாரித் தூற்றியதை வன்மையாகக் கண்டித்த கிருஷ்ணா, ‘‘இனி நான் மாதம் ஒரு முறை கிறிஸ்துவ, இஸ்லாமியப் பாடல் பாடப்போகிறேன்...’’ என்று ‘யார் என்ன செய்யறாங்க பார்த்துடலாம்' என்கிற தொனியில் கூறியிருக்கிறார். சொன்னதைச் செய்தும் காட்டக் கூடியவர் இவர்!

ஆக, என்ன கவி யார் பாடினாலும் அதில் விஞ்சி நிற்பது இறை உணர்வு மட்டுமே. ராமனையும் கிருஷ்ணனையும் பாடிய வாயால் இயேசுவையும் அல்லாவையும் பாடினால் நாக்கு அழுகிவிடாது. மேலும், கலைஞனுக்கும் இறைவனுக்கும் குறுக்கே நிற்க எவருக்கும் அதிகாரம் இல்லை!

- வீயெஸ்வி, மூத்த பத்திரிகையாளர், இசை விமர்சகர், தொடர்புக்கு: vsv1946@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்