அன்றாடம் இரவு தூங்கச்செல்வது சவாலான ஒரு காரியமாகிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் விழும் பகல்கள், ரம்மியமான வானிலை, பிடித்தமான குளிர், புதுப்புது மனிதர்கள் - அனுபவங்கள், பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. ஒவ்வொருநாளும் அதன் அடர்த்தியின் சுமை அதிகமானபடி இருந்தது. இரவில் வீதியில் படர்ந்திருந்த மஞ்சள் விளக்கொளி வேறொரு காலகட்டத்துக்கு, வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை வேறொரு வெளியோடு பிணைத்திருந்தது.
அன்றைய தினம் இரவு முழுவதுமாகவே உறங்கவில்லை. ஜன்னலின் வழியே விடியலின் கிரணங்களை எதிர்நோக்கியிருந்தேன். அதிகாலையில் முதல் கீற்று தென்பட்டபோது, ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி கண்ணாடியைத் திறக்கிறேன். உள்ளே குத்தீட்டிகள்போல பாயும் குளிர்க்காற்று. தேம்ஸ் நதி நோக்கி அது அழைத்தது.
அந்த அதிகாலையில் நீளமான கருநீல கோட் அணிந்த ஒரு முதிய தம்பதி என் கார் நிறுத்தப்பட்ட இடத்தில், பாலத்தின் கைப்பிடியைப் பற்றி ஓடி விரையும் தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அதிகாலை நேர தேம்ஸ் சூழல் ஒரு ஓவியம்போல இருந்தது. ஆமாம், ஓவியத்துக்குள் நுழைவது மாதிரிதான் அது இருந்தது.
சுமார் அரை மணி நேரம் இருக்கும். அந்தத் தம்பதி புறப்பட்டனர். பெரியவர் என்னைக் கடந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “தேம்ஸைத் தெரிந்துகொள்ள அருங்காட்சியகம் செல்லுங்கள். அங்குள்ள பொருட்கள் தேம்ஸை மட்டும் அல்லாது மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார்.
அன்று பகலில் ஹெலனைச் சந்தித்தபோது இதைச் சொன்னேன். தேம்ஸுக்குள் அவர் அழைத்துச்சென்றார். தேம்ஸிலிருந்து கண்டெடுத்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கிறார்கள். நதி அடித்துக்கொண்டுவந்த, நதியில் வீசப்பட்ட, கைவிடப்பட்ட, தொலைத்த பொருட்கள். நதியைத் தூர் வாரும்போதும், பாலங்கள் கட்டுமானத்தின்போதும் நதிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் கண்டெடுத்த பொருட்கள். லண்டன் உருவாவதற்கு முந்தைய புதிய கற்காலத்திலிருந்து, கிட்டத்தட்ட ஐயாயிரம் வருஷ வரலாற்றுக் கதைகளை அவை தமக்குள் வைத்திருக்கின்றன.
இங்கிலாந்தின் நீளமான நதி தேம்ஸ். ஆக்ஸ்போர்டு, ரீடிங், விண்ட்ஸர் வழியாக 346 கி.மீ. நீளத்துக்குப் பாயும் தேம்ஸ் நன்னீராகப் பயணிக்கும் இடங்களும் உண்டு, கடல் நீர் அளவுக்கு உப்புநீராகப் பயணிக்கும் இடங்களும் உண்டு. சில இடங்களில் நதியில் இருபது அடி உயரம் அளவுக்கு அலைகள் எழுந்தடங்குகின்றன. “ஆயிரக்கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளில் அள்ளிக்கொண்ட நதி தேம்ஸ். மாபெரும் வரலாற்று சாட்சியம். ஜூலியஸ் சீஸர் இரண்டு முறை தேம்ஸ் வழியாகப் பயணித்திருக்கிறார். தேம்ஸ் நதிக்கரையில்தான் ஜான் மன்னரால் கொண்டுவரப்பட்ட ‘மாக்னா கார்ட்டா’ மகா சாசனம் கையெழுத்தானது.
பிரிட்டிஷ் வாழ்க்கையின் அளவுகோல் என்று தேம்ஸைச் சொல்லலாம். தேம்ஸ் நன்றாக இருந்தால் எங்கள் வாழ்க்கையும் தரமாக இருக்கிறது என்று அர்த்தம். தேம்ஸ் பொலிவிழந்தால் எங்கள் வாழ்க்கையும் நாசமாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சொல்லப்போனால், நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள்தான் நாம் வாழும் ஊரின் வாழ்க்கைத்தரத்துக்கும் நாம் வாழும் காலத்தின் மனப்போக்குக்கும் நேரடி சாட்சியம்” என்றார் ஹெலன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேம்ஸ் அடைந்துவந்திருக்கும் மாற்றங்களை பிரிட்டிஷார் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்கள். 1683-84-ல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தேம்ஸ் நதி பனியாக உறைந்திருக்கிறது. ‘தி க்ரேட் ஃப்ராஸ்ட்’ என்று அதை நினைவுகூர்கிறார்கள். 1814 பனிக்காலத்தில் இதேபோல நதி மீண்டும் உறைந்திருக்கிறது. ஆனால், இம்முறை ஐந்தாவது நாளில் அது உருகி ஓடியிருக்கிறது.
1858 கோடைக்காலத்தில், தேம்ஸில் கலந்த கழிவுநீர் கடும் நாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமயத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தையே இந்தக் காரணத்தால் ஒத்திவைக்க வேண்டியிருந்ததாம். அப்போது உருவான விவாதமே, 1865-ல் ஜோஸப் பாஸல்கேட் லண்டன் சாக்கடைத் திட்டத்தை உருவாக்க வழிவகுத்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த லண்டனுக்கும் ஜீவாதாரமாகவும் வடிகாலாகவும் தேம்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட நதி, இடையில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு உயிரற்று இருந்திருக்கிறது. வீடுகளிலிருந்து, வணிக நிறுவனங்களிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நதிக்குள் சென்றிருக்கிறது. குப்பைகளும் கழிவுகளும் நதியில் கலந்தன.
“லண்டன் மாநகரின் அடையாளங்களில் ஒன்றான தேம்ஸ் நதி உயிரியல்ரீதியாக செத்தேவிட்டது” என்று பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. “மிக மோசமாக நிர்வகிக்கப்படும் சாக்கடையாகிவிட்டது தேம்ஸ்” என்றும், “லண்டன் பாலத்துக்கு மேலும் கீழும் பல மைல்களுக்கு ஆக்சிஜனே இல்லை” என்றும் எழுதியிருக்கிறது ‘கார்டியன்’.
தூய்மையான நீரில் மட்டுமே ஜீவித்திருக்கக்கூடியதும் தேம்ஸின் அடையாளங்களில் ஒன்றானதுமான சால்மன் மீன்கள் ஒருகாலகட்டம் நெடுகிலும் தேம்ஸிலிருந்து அற்றுப்போயிருக்கின்றன. 1833-க்குப் பிறகு ஒரு நீண்ட காலத்துக்கு தேம்ஸில் சால்மன் மீன்களே இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட தேம்ஸ் எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகவே இருந்திருக்கிறது.
நதியை மீட்டெடுக்கும் தீவிரமான முயற்சிகளுக்குப் பின், 1974-ல் ஒரு சால்மன் மீன் தேம்ஸில் தென்பட்டிருக்கிறது. பிறகு, உயிரினங்கள் பெருகியிருக்கின்றன. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களோடு, கடல் பன்றிகள், நீர் நாய்கள், ஓங்கல்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் தேம்ஸில் இருக்கின்றன. திமிங்கலங்கள்கூட எப்போதாவது தென்படுகின்றன என்கிறார்கள்.
தேம்ஸ் மட்டும் அல்ல; பிரிட்டனின் பெரும்பாலான நதிகள் தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் சாக்கடைத் தோற்றத்துக்குச் சென்றே இன்று மெல்ல மேம்பட்ட நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. மெர்சிசைடு - கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் பாயும் மெர்சி நதி, நியூகேசல் பகுதியில் பாயும் டைன் நதி என்று முக்கிய நதிகள் பலவும் புது வாழ்க்கையைப் பெற்றிருக்கின்றன.
இந்த மாற்றத்தைப் பற்றி ஹெலனிடம் கேட்டேன். “இன்றும்கூட பிரிட்டனில் பாயும் ஆறுகளில் நான்கில் ஒரு பகுதி நதி நீர் மட்டுமே தரமானதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான்கில் இரு பகுதி நீரின் தரம் பரவாயில்லை என்று சொல்லத்தக்க நிலையிலும் ஒரு பகுதி நீரின் நிலை மோசம் என்றும் சொல்கிறார்கள். முக்கியமான மாற்றம், சூழலைக் கெடுக்கும் நிலக்கரி, ரசாயனப் புகை, சாம்பல் தூள்களை வெளியேற்றும் பழைய பாணி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
நதியையும் நதிக்கரையையும் பராமரிக்கும் அமைப்பு தன்னாட்சியுடன் செயல்படுகிறது. வீடுகள், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், குப்பைகளைச் சுத்திகரிக்கவும் நதிகளில் இவை கலக்காமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நீர்நிலைகள் பாதுகாப்பு சமூகக் கடமை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
எனக்கு மேலும் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. மக்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையிலான உறவில் அங்கு ஒரு நெருக்கம் இருப்பதாகத் தோன்றியது. லண்டனில் பல இடங்களில் செந்நிற நரிகளைப் பார்க்க முடிந்தது. சில இடங்களில் நடைபாதைகளில் அவை மனிதர்களோடு மனிதர்களாக நடந்து கடந்ததையும், கடப்பவர்கள் தரும் உணவை அமர்ந்து சாப்பிடுவதையும் பார்த்தேன். பூங்காக்களில் திரியும் மான்கள் நகர வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்டவையாகத் தெரிந்தன.
மக்களும் நரிகளையோ, மான்களையோ கண்டால் அஞ்சவில்லை, அவற்றை விரட்டவில்லை. சிரித்தபடி, அவற்றுடன் விளையாடியபடி கடந்தனர். மனிதர்களுக்கானது மட்டும் இல்லை நகரம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதுபோல இருந்தது அவர்களுடைய செயல்பாடு. மேலும், மேற்கத்திய நாடுகளின் இன்றைய சூழல் மேம்பாடு அவர்களுடைய அரசியலுணர்வோடும், ஜனநாயக மதிப்பீடுகளோடும் பிணைக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது.
ஹெலன், “இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு” என்றார். “பொதுவாக, கிராமப்புற நரிகளைவிட லண்டன் நகர்ப்புற நரிகள் துணிச்சலானவை” என்றவர், “ஒருமுறை நாடாளுமன்றத்திலேயே நுழைந்த ஒரு நரி, அலமாரியில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாலும் இதையெல்லாம் விரும்பவே செய்கின்றனர். கூர்ந்து கவனித்தால் பாதையை சகஜமாகக் கடக்கும் பல ஜீவராசிகளை நீங்கள் பார்க்க முடியும்” என்றார்.
“பிரிட்டன் நதிகள் இன்று கடந்தகாலத்தில் இல்லாத வேறொரு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றன. எங்கும் நிறைந்துவரும் பிளாஸ்டிக் கழிவுதான் அது. ஆண்டுதோறும் கழிவுநீர்ப் பாதையிலிருந்து 25,000 டன் அளவுக்குக் குப்பைகள் வாரப்படுகின்றன. இப்போது பிளாஸ்டிக் பிரச்சினையிலும்கூட உயிரினங்கள் எப்படியெல்லாம் வதைபடுகின்றன என்பதை விவரித்துதான் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க முற்படுகிறது அரசாங்கம்” என்றார்.
பிரிட்டனின் கிராமங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. “ஆமாம், நீங்கள் அவசியம் கிராமப்புற பிரிட்டனைப் பார்க்க வேண்டும். உங்கள் கிராமங்களிலிருந்து எங்கள் கிராமங்கள் வேறுபட்டவை என்றாலும், கிராமங்கள் வெறிச்சோடுவதை இங்கும் தவிர்க்கவே முடியவில்லை.
நம் பாதையில் பெரிய கோளாறு இருப்பதையும் நாம் தோற்றுக்கொண்டே இருப்பதையும் நம்முடைய கிராமங்கள்தான் நமக்குச் சொல்கின்றன” என்றார். “நம்முடைய நகர்ப்புற வாழ்க்கை தரமாக இருக்க வேண்டும் என்றால்கூட கிராமத்தைப் பற்றிய புரிதலினூடாகவே அது சாத்தியம். நாமோ கிராமத்துக்கு வெளியிலிருந்து கிராமங்களைக் கையாள முனைகிறோம்” என்றேன் நான்.
(வெள்ளிதோறும் பயணிப்போம்…)
- தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
37 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago