காவிரியின் பிரதான வழிகளிலும், கொள்ளிடத்திலும் கரை கொள்ளாமல் ஓடுகிறது மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர். ஆனால், காலங்காலமாக அந்தத் தண்ணீரையே நம்பியிருக்கும் காவிரிப் படுகையின் ஒரு பகுதிக்கு இன்னும் உரிய தண்ணீர் சேரவில்லை. குறிப்பாக, காவிரியின் கடைமடைப் பகுதியான கீழத் தஞ்சைப் பகுதிகளுக்கு விவசாயத்துக்கான போதிய தண்ணீர் சென்று சேரவில்லை.
கீழத் தஞ்சை என வரையறுக்கப்படும் இந்தப் பகுதி திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ்ப் பகுதிகளை உள்ளடக்கியது. நெல் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் பகுதி இது.
வழக்கமாக, மேட்டூர் அணை திறந்து பத்து பதினைந்து நாட்களில் தண்ணீர் கடைமடையை எட்டிப்பார்த்துவிடும். இந்த ஆண்டில் ஒரு மாதத்துக்கு மேலாகியும் எட்டவில்லை. மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது அணையில் முழுக் கொள்ளளவில் நீர் இருந்தது. பின்னர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, காவிரியில் திறந்துவிடப்பட்டது.
பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கும் கல்லணையிலிருந்து முழுவதுமாகக் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. ஆக, இப்போதும் கடைமடைக்குத் தண்ணீர் ஏறவில்லை. கடைமடைப் பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் நீர் ஏறவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
தடுப்பணைகள் கட்டப்படுவதன் மூலம் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அனுபவிக்க வேண்டியவர்கள் கடைமடைக்காரர்கள். கர்நாடகத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் கொள்ளிடம் வழியாகக் கடலில் சென்று சேர்கிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொள்ளிடம் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் காவிரி/ கொள்ளிடத் தடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. பாசன ஆறுகளையும் வடிகால் ஆறுகளையும் அதனதன் போக்கில் பராமரிப்பதுதான் கடைமடை மக்களுக்குப் பாதுகாப்பு.
நம்மிடம் இருக்கும் குளங்களை முறையாகப் பராமரிப்பதுதான் நீர் மேலாண்மையின் முக்கியமான பகுதி. காவிரிப் படுகையின் மேற்குப் பகுதிகளைவிட, கடைமடைப் பகுதிகளில் குளங்கள் அதிகம். கடைமடைப் பகுதியில் உள்ள சிற்றூர்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கும். காவிரியின் நீர் வரத்து குறையத் தொடங்கும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீரைத் தேக்கினால் அடுத்த மே, ஜூன், ஜூலை பயன்பாட்டுக்குத் தாராளமாகத் தண்ணீர் இருக்கும்.
காவிரியின் வெள்ளம் கரை புரண்டாலும் சிக்கல், கடைமடைக்கே தண்ணீர் ஏறவில்லை என்றாலும் சிக்கல். இதனால்தான், கடைமடை விவசாயிகள் பேராசை கொள்வதில்லை. ஒருபோக விவசாயம் ஒரே பயிர் நெல் மட்டும்தான். மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்து ஜூன் மாதம் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தால் குறுவை, சம்பா என சாத்தியப்படும். இல்லையெனில் ஒரேபோகம் சம்பா. அதற்கும் சாத்தியமிருக்காது என்று தெரிந்தால் ‘தெளிச்சி’ விடுவார்கள் (தெளிச்சி என்பது நெல்விதைகளை வயல்களில் தெளித்துவிடுவது). ஆறுகளில் தண்ணீர் வந்தால் ஏற்றிக்கொள்ளலாம். இல்லையெனில் மழை பெய்து காப்பாற்றும்.
ஆனால், காவிரியின் உபரி நீரைத் தேக்குவதற்கான சாத்தியங்கள் கடைமடையில் இருப்பதை விரிவாக ஆராய வேண்டும். கடைமடையின் இறுதியில், அதாவது வடிகால் ஆறுகள் முகத்துவாரங்களோடு இணைவதற்கு முன்னர் மிகப் பெரிய சதுப்பு நில ஏரிகளை உருவாக்குகிறது. வெள்ள காலத்தில் நன்னீர் ஏரியாகவும், வெள்ளம் வடிய வடிய கடல்நீர் உள்புகுந்து உவர்நீர் ஏரியாகவும் மாறுகிறது.
இதை அளம் என்பார்கள். இதுவும் ஆறு மாதம்தான். பிறகு புல் பூண்டுகள் முளைக்காத தரிசு நிலம்தான். இந்த இடத்தில் கடல் நீர் உட்புகாத வகையில் தடுப்பணைகள் வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
காவிரி கடைமடைப் பகுதியின் தெற்கே பேராவூரணியிலிருந்தே இதைக் காணலாம். ஜாம்புவனோடை வடிகால் தில்லைவிளாக எரியைத் தொட்டுத்தான் கடலில் சேர்கிறது. அப்படியே கீழத் தஞ்சை கடலோர ஒன்றியங்கள் வழியாகப் பயணித்தால் ஒவ்வொரு பகுதியிலும் மிகப் பெரிய அளங்கள் உள்ளன. முத்துப்பேட்டை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், நாகப்பட்டிணம், காரைக்கால் என ஒவ்வொரு ஒன்றியத்திலும் இந்த அளங்களை முறைப்படுத்தினால் காவிரியின் உபரி நீரைத் தேக்க முடியும். இதன் மூலம் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தேவைக்கேற்ப பயன்படுத்துவது சாத்தியமாகும்.
இதனால், முகத்துவார ஆறுகளில் கடல்நீர் புகுவதும் தடுக்கப்படும். நன்னீர் மீன் வளர்ப்பு. உயிரினச் சூழல் மேம்படும். முக்கியமாக இந்த அளங்களை ஆக்கிரமித்து உருவாகியுள்ள இறால் வளர்ப்பு பண்ணைகளால் உருவாகும் சூழலியல் கேட்டையும் தடுக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டி கடைமடைப் பகுதிகளில் இன்றைக்கு எழுந்திருக்கும் கேள்வி - அரசு அறிவித்துள்ளபடி இந்த ஆண்டே தூர் வாரும் பணி தொடங்கப்படுமா அல்லது சமைக்கவும், துவைக்கவும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீருக்குக் குடம் தூக்க வேண்டுமா என்பதுதான்!
- தொடர்புக்கு: maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago